Tuesday, May 7, 2024

காலக்கணக்கு

காலக்கணக்கு 


அனுபவம் என்றால் என்ன? 

அனுபவத்தால் கிடைப்பதென்ன?

அனுபவிப்பவன், அனுபவிக்கப்படும் பொருள் எங்கு சென்றடைகிறது?

அனுபவமும் அவனே.. அனுபவிப்பவனும் அவனே.. அனுபவிக்கப்படும் பொருளும் அவனே..

இங்கே நீ ஒரு கருவி மட்டுமே.

லாப நஷ்டம் மட்டுமே, அனுபவித்ததற்கு கருவியாய் நின்ற உன் காலக்கணக்கில் சேர்கிறது. 

அனுபவிக்கும் கருவியாகிய உங்களுக்கு  ஒரு  கடமை மட்டும் இருக்கிறது. அனுபவிக்கும் பொருளையோ, காரியத்தையோ தேர்ந்தெடுக்கும் கடமை அது. சரியானதை தேர்ந்தெடுத்தால் நல்வினையாக உங்கள் காலக்கணக்கில் வரவு வைக்கப்படும். முறையற்றதை தேர்ந்தெடுத்தால் அது தீவினையாக செலவு வகையில்  சேர்ந்துவிடும்.

சித்திரகுப்தன் உங்கள் காலக்கணக்கை தணிக்கை செய்து உங்களுக்கு சேர வேண்டியதை கச்சிதமாக செய்து விடுவார்.

சின்ன அமில சோதனை மூலம்,  இப்பிறப்பில் உங்கள் காலக்கணக்கின்  நிலையை  தெரிந்து கொள்ளலாம்.

இந்த பிறவியில் உங்களுக்கு அமைந்த மனைவி, செல்வம், குழந்தைகள் என்று வருவது இரண்டாம் நிலையில். முதலில் வருவது உங்கள் உடல் மற்றும் உலக வாழ்வை அனுபவிப்பதற்கு தேவையான ஆரோக்கியம்.

ஒரு உதாரணத்திற்கு  உங்கள்  வாழ்க்கைத்துணையை எடுத்துக்கொள்ளுங்கள்.

வாழ்க்கைத்துணையுடன் வாழும் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

கண்ணிமைக்கும் ஒவ்வொரு வினாடியும் மகிழ்ச்சியை மனதில் கொண்டுவந்தால், காலக்கணக்கில் நிறைய சேமிப்புடையவர் நீங்கள். ஒரு முறை சுவாசித்து, மறுமுறை சுவாசிப்பதற்குள் அடி மேல்  அடி  விழுந்தால் இன்னும் உங்கள் காலக்கணக்கு நேர்ப்படவில்லை என்று அர்த்தம்.

இதைத்தான் சொர்கமும், நரகமும் நம் வசம் என்று சொல்வது.

திருமந்திரம்

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் 
மடக்கொடி யாரோடு மந்தணம் கொண்டார் 
இடப்பக்கமே  இறை நொந்தது  என்றார் 
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.

சுவையாக சமைத்து வைத்திருந்த உணவினை உண்டு முடித்தார். கொடி போன்ற இடையினைக் கொண்ட அழகிய மனைவியுடன் உறவும் கொண்டார். மார்பின் இடது பக்கம் கொஞ்சம் வலிக்கிறது என்று படுத்தார். படுத்தவர் அப்படியே உயிரிழந்தும் போனார். 

அறுசுவை உணவு உண்ட சந்தோசம், மனைவியுடன் இணைந்த இன்பம், இதயத்தில் ஏற்பட்ட வலியின் துயரம் அனைத்தும் அவர்  அனுபவித்தவை.

உடலை விட்டு உயிர் நீங்கியபின், அந்த அனுபவங்கள்  சென்றதெங்கே? 

மீண்டும், காலக்கணக்கை கணக்கிட்டுப்பாருங்கள். எப்படி கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்துப்பார்த்தாலும் ஒரே விடைதான் வரும்.

வாழ்வில் ஒவ்வொரு அடி  மேலே விழும்போதும், நான் சொன்னதை நினைத்துப்பாருங்கள், உங்கள் காலக்கணக்கு நேராகிக்கொண்டிருக்கிறது என்று. பலத்த அடி, தாங்க முடியாது என்று தற்கொலை போன்ற தவறான முடிவிற்கு செல்லக்கூடாது. நீங்கள் மட்டுமே அனுபவித்து தீர்க்க வேண்டிய கணக்கு இது. ஒருவேளை, தவறான முடிவை எடுக்கும் பட்சத்தில், அடுத்த பிறவியில் எங்கு விட்டு சென்றீர்களோ, அங்கிருந்தே அதை அனுபவித்து சரி செய்ய வேண்டி இருக்கும், ஜாக்கிரதை.

இதை நான் நகைச்சுவைக்காக சொல்லவில்லை. அந்த அடி, நீங்கள் அரிதில் பெற்ற செல்வமாக இருக்கலாம், வேலையாக இருக்கலாம் அல்லது பிள்ளைகளாக இருக்கலாம். முக்கியமாக உங்கள் ஆரோக்கியமாக கூட இருக்கலாம்.

இந்த அனுபவங்களையும், யார் நடத்திக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கே சொந்தம் என்று இறைவனுக்கே  அர்ப்பணித்து விடுங்கள்.

மனம் மென்மையாகும்  அனுபவத்தைப்பெறுவீர்கள்.

*** *** ***















No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...