Tuesday, May 14, 2024

எனக்குள் இருவர்

எனக்குள் இருவர் 


 

'ஒரு நாள் தோனிக்கு கோயில் காட்டுவார்கள்'- சக கிரிக்கெட் விளையாட்டு வீரரின் பாராட்டு தோனிக்கு. 

'அங்கே அவர் சென்னையின்  கடவுளாக இருப்பார்'

மக்கள் குடியரசுத்தலைவர் என்பதோ மக்கள் திலகம் என்பதோ அவர்களின் சமுதாய பங்களிப்புக்கு  இயல்பாக  கிடைக்கும் தனி மரியாதை.

இவர்கள் மக்களின் மனதில் மாறாத அன்புடன் என்றும்  நினைவு கூறத்தக்க மானிட மாணிக்கங்கள்.

இந்த மன நிலையை ஒன்று,  தமிழ் மக்கள் எவ்வளவு மூடத்தனமாக இருக்கிறார்கள் என்று பேசலாம்; அல்லது,  அன்பை வெளிப்படுத்தும்  அவர்களின்  பண்பாட்டின்  வெளிப்பாடாகவும்  பார்க்கலாம்.

நிகழ்ச்சிகளை  பல காலமாக  திட்டமிட்டு, நுழைவு சீட்டுகளை பலமடங்கு விலைக்கு விற்று,  பல நிகழ்ச்சிகள்  ஊரே வெறுத்தொதுக்கும்படி  அரங்கேறும்   அதே சென்னையில்தான்,  ஜல்லிக்கட்டு போராட்டம் ஆரம்பித்தது. 

போராட்டத்திற்கு தலைவரோ,   அமைப்போ என்று எதுவும்  இல்லாமல், போராட்டம் பல மாவட்டங்களில் மட்டுமல்ல, பல மாநிலங்கள், பல நாடுகள் எனப்பரவி  வெற்றி ஈட்டி தந்ததை  நாம் யாரும் மறந்திருக்க முடியாது.

மக்களின் எழுச்சிக்கு முன்னால், சமுதாயமே ஒருங்கிணைந்து நின்றது  இந்த போராட்டத்தில்தான். 

இது தமிழ் மண்ணின் தனிக்குணம்.

இனி இங்கே பெறப்பட்ட மன உணர்வுகளை மட்டும்  பார்ப்போம்.

ஒன்றை தீவிரமாக விரும்பவோ, நம்பவோ செய்கிறோம். அதில், முழுமையாக செயல்படுவது மேல்மனம் மட்டுமே.  நம் வாழ்க்கை முழுவதும் மேல்மனத்தின் அரசாட்சியிலே முடிந்து விடுகிறது.

ஆழ்மனம் என்ற  ஒன்றுண்டு. அதன் இயல்பு நிலை ஆனந்தம். அதை அறிந்து கொள்ள நாம் அரிதாகவே முயல்கிறோம்.

இறை ஏற்பாளரானாலும் சரி, மறுப்பாளரானாலும் சரி அனைவருக்கும்  ஆழ்மனம் என்ற ஒன்றுண்டு. ஆழ்மனம் நம் ஆளுகைக்கு உட்பட்டதல்ல. 

ஆழ்மனமே  நம் உயிர். அதுவே ஆன்மா. அதுவே நம் ஜீவன்.

அதன் அளவைக்கூட திருமூலர் அறுதியிட்டு சொல்கிறார்.

திருமந்திரம் 2011

மேவிய சீவன் வடிவது சொல்லிடில் 
கோவின்மயிர் ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால் 
ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே. 

பசுவின் ஒரு ரோமத்தை முதலில் நூறாக கூறிடுங்கள். அதில் ஒன்றை எடுத்து, அதனை ஆயிரம் கூறாக வெட்டினால் அதில் கிடைக்கக்கூடிய ஒரு கூறு ஜீவனின் அளவாகும். 

அதாவது, பசுவின் ஒரு  ரோமத்தை  ஒரு லட்சம் பாகங்களாக வெட்டினால் அதில் கிடைக்கும் ஒரு பாகம் உயிரின் அளவு.

நீங்கள் கேட்கலாம், உயிரின் அளவைத்தெறிந்து ஆகப்போவது என்ன என்று. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

திருமந்திரம் 2008

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை 
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு 
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு 
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

அணுவுக்குள் அணுவாக அமர்ந்திருக்கும் இறைவன், அணுவுக்குள் பருப்பொருளாய் இருக்கும் கருமையத்தில்,  ஆயிரத்தில் ஒரு பாகமாக  இருக்கிறான். அணுவில் நுழைந்து மையத்தை அடையும் பயிற்சி உள்ளவர்கள், அங்கு உறையும் இறைவனை அடையலாம்.

உயிரின் அளவை சொன்ன திருமூலர், இறைவனின் அளவையும் சொல்லி விட்டார். 

உயிரும், இறையும்  உடலுக்குள், உனக்குள்ளே  இருப்பவை.

ஆழ்மனத்தை அடைவது சாத்தியம் என்று அஷ்டாங்க யோக வழி முறைகளையும் சொல்லுகிறது திருமந்திரம். சமாதி நிலையில், ஆழ்மனம் இறைவனுடன் ஐக்கியம் ஆகி ஆனந்த நிலைக்கு சென்றுவிடும்.

இனி  ஆன்மாவை அறிய முடியுமா, இறைவனை அடைய  முடியுமா  என்பதை  அவரவர் எடுக்கும்  ஆன்மீக முயற்சியே  தீர்மானிக்கும்.


*** *** *** *** ***








No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...