Wednesday, July 26, 2023

காமம் உயிரின் ஒட்டுண்ணி

காமம் உயிரின் ஒட்டுண்ணி



காமம்.

காமம் என்ற புத்தகத்தின் முதல் அத்தியாயம் பெண்.

இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருகண் 
நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து.

                                                                             - திருக்குறள் 1091

காண்போரை அப்படியே விழுங்கி உண்ணக்கூடிய கண்களையுடைய இவள் பார்வையில் இரண்டு செயல்களை நடத்திக்காட்டும் நோக்கம் உள்ளது. ஒன்று  அவளைக் கண்ட தலைவனை  காம நோய்க்குள்ளாக்குவது. மற்றொன்று    காம நோய்க்கு உள்ளான தலைவனுக்கு   மருந்தாக அமைந்து அவனது காம நோயைத் தீர்ப்பது.

மொத்தத்தில் காமம் என்றால் பெண், பெண் சார்ந்த உணர்வுகள், உறவுகள். பெண்ணிடம் பெரும் இன்பம். 

இவை  மட்டும்தானா காமம் என்பதன் பொருள்?

இல்லை. நிச்சயமாக இல்லை.

காமம் என்றால் இச்சா சக்தி. ஒன்றின்மேல் இச்சை, அது பெண்ணின் மீது கொள்ளும் காதலாக இருக்கலாம், குழந்தையின் மேல் வைக்கும் பாசமாக இருக்கலாம், மனை, மாடு என்று பொருட்களின் மீது கொள்ளும் பற்றாக இருக்கலாம்.

இந்த இச்சா சக்தி உயிரோடு கலந்து இருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை மனிதனை தொடர்ந்து இயங்க செய்யும் பேரியக்க இச்சா சக்தியே காமம்.

நின்ற பராசத்தி நீள்பரன் தன்னோடு 
நின்றறி ஞானமும் இச்சையு மாய்நிற்கும் 
நின்றறியும் கிரி யாசத்தி நண்ணவே 
மன்றன  வற்றுள் மருவிடுந் தானே.

                                                                          - திருமந்திரம் 1136

சிவத்தை தன்னுள் கவர்ந்திருக்கும்  சக்தி, ஞானமும் இச்சையுமாக இயங்குவாள். இங்கு உருவாகும் கிரியா சக்தி என்னும் ஆக்க செயல்கள் உடலின்  அனைத்து செயல்களுக்கும் ஆதாரமாக இருக்கும். 

இச்சை சார்ந்த காமம், கிரியா சக்தியால் செயலாக உருவாகும் நிலை இது.

காமம் எவ்வாறு மனிதனிடம் உண்டாகிறது?  ஒருவருக்கொருவர் எப்படி  மாறுபடுகிறது என்று இனி பார்க்கலாம்.

மண்ணில் உடலெடுத்த புத்தன், இயேசு, காந்தி போன்ற மஹான்களும்கூட  காமத்திலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள் அல்ல.  நாம் புனிதமாக கொண்டாடும் அத்தனை குருமார்களும், ஏன்?  சித்தர்களும்கூட   இந்த இயற்கை  விதிக்குள் அடங்கியவர்களே.

இந்த  இயற்கை விதியை சற்று கூர்ந்து கவனிப்போம்.

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் 
பதியினைப் போல்பசு பாசம் அனாதி 
பதியினைச் சென்று  அணுகாப் பசுபாசம் 
பதிஅணுகில் பசு பாசம் நிலாவே.

                                                           - திருமந்திரம் 115

இப்பாடலில், பதி என்பது ஆதியில் தோன்றிய இறையைக் குறிக்கும். பசு என்பது மண்ணில் பிறக்கும் உயிரினை சுட்டுகிறது. பாசம் என்பது உயிரினை கட்டி வைத்திருக்கும் தளையை, அதாவது காமத்தை குறிக்கிறது.

இங்கே, இறை தனியாகவும், உயிரும் காமமும் இணையாக  காட்டப்படுகிறது. இம்மூன்றும் ஆதியில் சுயம்புவாக தோன்றியவைகள். உயிர், காமத்தின் பிடியில்  கட்டுண்டு இறையை சென்றடைய முற்படுவதில்லை. ஒருவேளை, முயற்சி செய்து இறையை சென்றடைந்தால், உயிரும் காமமும் இறையுடன் கலந்துவிடும்.

உயிரும் காமமும் இணைந்து பயணிப்பவை. ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை. உடலில் உயிர் உள்ளவரை காமமும் அதனுள் கரைந்திருக்கும்.

இன்னொரு கோணத்திலிருந்தும் இந்த உண்மையை நாம் உறுதி செய்து கொள்ளலாம். உயிர்கள் மண்ணில் தனக்கான உடலில்  பிறப்பெடுக்கும்வரை ஆகாயத்தில்  இருக்கின்றது. 

பஞ்ச பூதங்களில் ஒன்றான, ஆகாயம்  உயிர்களுக்கு வழங்கும் குணங்கள் ஐந்து. அவை முறையே, 1. காமம் 2. குரோதம் 3. லோபம் 4. மதம் 5. மாச்சரியம்  என்பவை ஆகும். எனவே, உயிர்கள் வானத்திலிருந்து மண்ணில் பிறக்கும்போது இந்த ஐந்து குணங்களையும் தன்னோடு இணைத்துக்கொண்டே வருகிறது.

இதையே, திருமந்திரப்பாடல் 113 உறுதி செய்கிறது.

விண்ணின்று இழிந்து வினைக்குஈடாய் மெய்கொண்டு 
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து 
உண்ணின்று உருக்கிஓர் ஒப்பிலா ஆனந்தக்  
கண்நின்றுக்  காட்டி களிம்புஅறுத் தானே.

வானத்திலிருந்து உயிரை கொண்டுவரும் இறைவன், அந்த உயிரின் விதிக்கேற்ப உடலைத்தருகிறான். அந்த உடலுக்கு தன்னுடைய குளிர்ச்சியான  பாதங்களை தலை உச்சியில் வைத்து, உடலுக்குள் பேரொளியாய் திகழ்கிறான். முந்தைய பிறவிகளின் நினைவுகளை  அடியோடு அழித்தும்  விடுகிறான்.

உயிரோடு காமம் கலந்திருக்கும் உண்மையை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டுமானால், நாம் சுத்த தத்துவங்கள் எனப்படும் சிவ தத்துவங்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சிவ தத்துவங்கள் உயிரையும், உயிரை இணைக்கும் இச்சா  சக்தியையும் மிக விரிவாக நமக்கு எடுத்துரைக்கிறது.

சிவ தத்துவங்கள் ஐந்தும் உயிரில் ஒன்றியிருப்பவை. அவை முறையே, நாதம், விந்து, சுத்த வித்தை, ஈஸ்வரம் மற்றும் சதாசிவம்.

நாதம் என்பதை, ஞானமாக, ஓம் என்னும் பிரணவ ஒலியாக கொள்ளலாம். விந்து என்பதை கிரியா சக்தியாக ஒளியாக கொள்ளலாம்.  கிரியா சக்தி எப்பொழுதும் இச்சா சக்தியுடன் இணைந்து இயங்குகிறது. 

இந்த இச்சா சக்திதான், காமமாக வெளிப்படுகிறது.

ஞானம் மிகுந்து  கிரியா சக்தி குறைந்திருப்பது சுத்த வித்தை. கிரியா சக்தி மிக்கிருப்பது  ஈஸ்வரம். இரண்டும் சம நிலையில்  இருப்பது  சதாசிவம்.

காமம் உடலில் தானாக இயங்காது. அதன் அடிப்படை ஆசை. ஆசையின் அஸ்திவாரம் பாசம் அல்லது பொருட்கள். ஆசை காமத்தின் தூண்டுகோல். பெண்ணின் மீது ஆசை. பெற்ற பிள்ளைகளின் மீது ஆசை. மனை, மாடு என பொருட்களின் மீது ஆசை. ஆசையின் கிரியாஊக்கி ஐம்புலன்கள்.

ஆசை காமத்தின் தூண்டுகோல் எனில் ஆசை எவ்வாறு உண்டாகிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 

ஐம்புலன்களின் வேலையே அதுதானே என்கிறீர்களா?  சரிதான்.

ஐம்புலன்களின் மூலம் பெறப்படும் செய்திகள் ஆசையாக மாறுவதையும் கவனிக்கவேண்டும். 

கண்ணெதிரே ஒரு அழகிய பெண் தோன்றுகிறாள்.

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும் 
ஒண்தொடி கண்ணே உள.

                                                                                           - திருக்குறள் 1101

அவளைக் கண்களால் கண்டு மகிழவும், அவள் பேசுவதை காதால் கேட்டு கிறங்கவும், அவள் அதரங்களை சுவைத்தறியவும், அவளை மூச்சுக்காற்றால் முகர்ந்து உயிரை உயிர்ப்படைய செய்யவும்  மேலும் அணைத்து உறவில் உடல் சுகம் பெறவும் என ஐம்புலன்களும் அனுபவிக்கும் இன்பம், கவர்ந்திழுக்கும்  குணங்கள் பெண்ணிடமே உள்ளது.

பெண்ணைக்கண்டவுடன் முதலில், புலனுணர்வுகள்  அவளைக்கண்ட செய்தியை உயிருக்கு அனுப்புகிறது. செய்தி ஆசையாக மாறி காம நிலைக்கு எடுத்து செல்கிறது. 

குறிப்பு: காமத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது. இரு பாலினமும் காமத்தை சமமாகவே  எதிர்கொள்கிறது.

இது எவ்வாறு ஒரு மனிதனிடம் நிகழ்கிறது?

கண்கள் பார்த்தவுடன், கண்களின் பொறிவாயிலாக செயல்படும் நாடிகள் இந்த செய்தியை மனதிற்கு கொண்டு செல்கிறது. வலது கண் வாயிலாக  புருடன் என்னும் நாடியும், இடது கண் வாயிலாக  காந்தாரி என்னும் நாடியும் உள்ளது. நாடி என்றால் செய்தியை கடத்திச்செல்லும் கடத்தி என்று வைத்துக்கொள்ளவும்.

மனம் அவள் அழகானவள் என்ற செய்தியை உயிருக்கு தெரிவித்தவுடன், அவளை அடையும்  ஆசை உண்டாகிறது. இடையில் மாயை என்னும் தத்துவம் இருக்கிறது. ஆசை என்னும் மயக்க நிலையில் உள்ள உயிர், மாயை இடை நிற்பதைக்கூட அறியாமல்  ஒதுக்கித்தள்ளி விடுகிறது.

இந்த ஆசையே காமத்தின் ஆணி வேர். 

இங்கே செயல்படுவது, இச்சா சக்தி மிக்கு ஞான சக்தி குறைந்த ஈஸ்வர நிலை. பொதுவாக சாதாரண மக்கள் எனப்படும் நாமெல்லோரும் ஈஸ்வர நிலையில் இருப்பவர்களே.

ஆசை காமமாக மாறி, செயல்படும் நிலைக்கு செல்வது அவரவர் குணாதிசயத்தை பொறுத்தது. ராஜஸ  குணம், சாத்வீக குணம் மற்றும் தாமஸ  குணம் என்னும் மூன்று குணத்திற்கு ஏற்ப காமம் செயல்படும். காலம், நியதி என்ற வித்யா தத்துவங்கள் இவர்களின் குணத்திற்கேற்ப காமத்தை முன்னிறுத்தும்.

பெண்ணைப்பார்த்தவுடன் உயிருக்கு செய்தி சொன்ன மனதிற்கு, கட்டளை வருகிறது காமத்திடமிருந்து, 'அவளை அடைய வேண்டும்' என்று.

மீண்டும் ஒருமுறை நிலைமையை சீர்தூக்கி பார்க்கும் வாய்ப்பு மனதிற்கு கிடைக்கிறது. மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி என நான்கு நிலைகளில் செயல்படும் மனம், காமம் என்று வந்துவிட்டால் உடனடி செயல்பாட்டில் இறங்கிவிடுகிறது. இங்கே அறிவு நிலை மங்கி விடுகிறது.

மனதிலிருந்து பிறக்கும் ஆணை, ஞானேந்திரியங்கள் எனப்படும், மெய், வாய், கண், மூக்கு, தோல்-க்கு சென்றடையும். கூடவே கர்மேந்திரியங்கள் எனப்படும் கால்கள், கைகள், வாய், கருவாய், எருவாய் செயல்பட ஆணைகள் சென்றடையும்.

மேலே, விளக்கியதிலிருந்து காமத்தை வென்றவர் யாருமில்லை, வெல்லப்போகிறவர் யாருமில்லை  என்ற இயற்கை விதி புரிந்திருக்கும் என எண்ணுகிறேன்.

இதில், ஆச்சர்யம் என்னவென்றால் யாரெல்லாம் கிரியா சக்தியை விழித்தெழச்செய்து ஆக்கபூர்வமாக செயலாக்கம் நடத்துகிறார்களோ, அவர்களுக்கு அதே அளவான இச்சா சக்தி எனும் காம உணர்வும்  இருக்கும். காமத்தை கட்டுக்குள் வைத்திருப்பதும், கட்டவிழ்த்துவிடுவதும்  அவர்களின் பிறப்பின் குணாதிசயமே அன்றி வேறல்ல.

அப்படியானால், காமம் இல்லாமலே இருக்க முடியாதா என்ற கேள்வி வருகிறது. ஆமாம், காமம் இல்லாமல் இருந்தால் அது ஜடப்பொருளுக்கு சமம். யாரும் ஜடமாக இருப்பதை விரும்ப மாட்டார்கள் மண்ணில் உயிரோடு இருக்கும்வரை. 

ஆனால், காமத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

அதற்கு மீண்டும் சிவ தத்துவத்தை நினைவு கொள்வோம்.

ஞானம் அதிகமாகவும் கிரியா சக்தி குறைவு நிலை சுத்த வித்தை. ஞானம் குறைவாகவும் கிரியா சக்தி அதிகமாகவும் உள்ள நிலை ஈஸ்வரம். இரண்டும் சமமாக உள்ள நிலை சதாசிவம்.

 கிரியா சக்தியின் அளவை குறைப்பதன் மூலம் நாம் காமத்தின் வெளிப்பாட்டை கட்டுக்குள் கொண்டுவரலாம். அதாவது, எந்த ஊக்கம் தரும் செயலோ, முயற்சியோ செய்யாமல் இருந்தால் போதும், கிரியா சக்தியின் அளவு குறைந்துவிடும்.  இது இம்மாதிரியான எதிர்மறை விளைவுகளையே உண்டுபண்ணும்.

இது சரியான வழி அல்ல.

சரியான வழி ஞான சக்தியை அதிகரிப்பதுதான். 

ஞானம் என்னும் சிவ சக்தி, உடலைப்பொருத்த மட்டில் உயிர் அல்லது பிராணன் என்றாகிறது. நாம், பிராண சக்தியை அதிகரிப்பதன் மூலம் காமத்தின் தன்மையை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

எனக்கு தெரிந்த வரையில், முறையாக பிராணாயாமம் செய்வது ஒரு வழி என்றால் இரண்டாவது வழி காயகல்ப பயிற்சி. முறையான குருவிடம் பயிற்சி பெறுவதன் மூலம் இது நம் அனைவருக்கும் சாத்தியமே.

*** *** ***

பின் குறிப்பு: தமிழில் ஆர்வம் உள்ளவர்கள், திருக்குறள், திருமந்திரம் மற்றும் சித்தர் பாடல்கள் மூலம் நம் பிறப்பின் பொருளறிய ஆர்வம் இருப்பின், தமிழ் குடில் என்னும் முகநூல் குழுவில் இணையலாம்.









 

 


Friday, July 7, 2023

ஊடல் கொண்ட பெண்மை


ஊடல் கொண்ட பெண்மை 




திருக்குறள்: 1287

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் 
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

பொங்கி வரும் காட்டாற்று வெள்ளத்தில் குதிக்கும் ஒருவர், எப்படியும் வெள்ளத்திலிருந்து மீண்டு வரும் வழியை அறிந்து வெள்ளத்தில் குதிப்பார்.

அவ்வண்ணமே,

தலைவன் முன்னிலையில், எப்படியும் தன்னுடைய ஊடல் பொய்த்து விடும்,  என்று தெரிந்தும், தலைவி ஏன் ஊடல் கொள்ள வேண்டும்?

 

Sunday, May 14, 2023

எம். ஜி. ஆர். நற்சான்றிதழ்

 எம். ஜி. ஆர். நற்சான்றிதழ் 


M. G. Ramachandran                                                                                                        




                                                                                                                                                                 Phone: 85999

                                                                                                                                                                 160, LLOYDS ROAD,                                                                                                                                                                                   ROYAPETTAH, MADRAS-14.

 

                                                                                                                                                 முகாம்: பழனி                                                                                                                                                                                          நாள்: 8.3.58.

https://app.heygen.com/share/a4f038a01cbc48458d222e59e07340cb

பழனித் தண்டபாணி வைத்திய சாலையின் உரிமையாளர் தோழர். இராசகோபால் அவர்களின் மருத்துவத்திறமையை அறிந்தேன்.

அவருடைய மருத்துவத்தால், பயனடைந்த மக்களின் நற்சான்றுகளையும், புகைப்படங்களையும் கண்டு மகிழ்ந்தேன்.

திராவிடத்திலும், வெளி நாடுகளிலும், தமிழ் மக்களுக்கு, இவர் ஆற்றும்பணி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்...

அன்பன்,

எம். ஜி. இராமச்சந்திரன் 

8.3.58


Wednesday, May 3, 2023

அறிவன அறிவது அறிவு

அறிவன அறிவது அறிவு 


கருவறை.

கும்மிருட்டு. கண்ணுக்கு ஏதும் தெரியவில்லை. 

ஆராதனை நடக்கிறது. தீப ஒளி மூலவர் மேல் படுகிறது.

தீப ஒளியில் மூலவர் உருவமும் அதன்மேல் படரும் ஒளியும் தெரிகிறது.

முன்னர் இருட்டில் ஒளிந்திருந்த மூலவர் உருவம், இப்பொழுது உருவத்தை வெளிச்சத்தில்  பார்க்கும்போது தெரிகிறது. ஒளிதான் உருவத்தை காட்டுகிறதென்றாலும் ஒளி இருப்பதை  நாம் உணர்வதில்லை. நாம் ஒளியை உணரும் பட்சத்தில், அனைத்தும் ஒளியாக தெரிகிறது. மூலவர் தன்மேல் ஒளி படர்ந்து நிற்க ஒளியாக நிற்கிறான்.

திருமந்திரம் 2681

ஒளியை அறியில்  உருவும் ஒளியும் 
ஒளியும் உருவம் அறியில் உருவாம் 
ஒளியின் உருவம் அறியில் ஒளியே 
ஒளியும் உருக உடன் இருந்தானே.

நாத வடிவான சிவனைப் பற்றி நிற்கும் வெண்சுடரொளியாய் நிற்கும் சக்தியை அறிந்து கொண்டால் சிவமும் சக்தியும் ஒன்றெனத்தெரியும். ஒளிக்குள் ஒளிந்திருப்பது சிவம் என்றும் தெரியும். அப்படி இல்லாமல், வெறும் ஒளியான சக்தியை மட்டும் பார்த்தால் சக்தி மட்டும் தெரியும். ஆனால், அந்த ஒளிக்குள் உறைந்த உருவமாக சிவன் எப்பொழுதும் இருக்கிறான். 

அறிவுக்கு சவால் விடும் மாய நிலைதான் ஒன்றிருந்தால் ஒன்றில்லை. ஒன்றுக்குள் அனைத்தும் ஒன்றி நிற்கிறது.

*** *** ***

ஏறுவதற்கு கடினமான மலைப்பாதை. 

மனதில் வைராக்கியம் ஒன்றே துணையாக ஏறிக்கொண்டிருக்கிறேன். 

பயணத்தின் முடிவில் ஒரு பத்து அல்லது பதினைந்து வினாடிகள் மட்டும் அவனை தரிசிக்க முடியும். அந்த நேரத்திலும் வழக்கம்போல் கண்ணைமூடி அவனை தரிசிப்பதால், ஓரிரு வினாடிகளே ஊனக்கண்களுக்கு அகப்படுவான் அவன். பதினான்கு மணி நேரம் தொடர் மலையேற்றத்தின் களைப்பை போக்கும் சக்தி உண்டென்று உணர்ந்து கொள்கிறேன்.

என் உடலோ, உடலைப்பற்றி நிற்கும் உயிரோ  அவன் எனக்குள்ளே இருக்கிறான் என்று உணர்வதில்லை.

இதே உணர்வுதான், ஆன்மீகப் பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும்.

ஒவ்வொரு திருமந்திரப்பாடலை படிக்கும்போதும், இது யாராலோ, யாருக்காகவோ  எழுதப்பட்டது என்று நம் அறிவு தள்ளி வைக்கிறது. நம் உடலையும், உயிரையும் மையமாக வைத்து எழுதிய பாடல்களை நாமே அறிந்து கொண்டு, நடைமுறைப்படுத்தி பார்க்கலாமே  என்று தோன்றுவதில்லை.

ஆன்மீக புத்தகங்களை படிப்பதும், கோயிலுக்கு செல்வதும், பூஜைகளை செய்வதும் யாரையோ திருப்திபடுத்த என்று எண்ணிக்கொண்டு செய்கிறோம். நமக்குள் இருக்கும் இறை உணர்வை வளர்க்க இது உதவினாலும், நமக்குள்ளேயே அந்த இறைவன் உறைகிறான் என்றறியும் வரையில் செயற்கையான ஆன்மீகம் எந்த வகையிலும் நம் முன்னேற்றத்திற்கு உதவாது.

பூஜாரி இருபத்து நான்கு மணி நேரமும் கருவறைக்குள் இருப்பதனால், இறைவனுக்கு மிக நெருக்கமானவன், வேண்டப்பட்டவன் என்று  பொருள் கிடையாது. அதே நேரம், தினம் தினம் குறைந்தது பன்னிரண்டு மணி நேரம் வீட்டிற்காக உழைக்கும் பெண்ணின் ஐந்து நிமிட பூஜைக்கு அந்நியமானவனும்  அல்ல இறைவன்.

அறிவன அறிவது அறிவு.

திருமந்திரம் 1789

அவனும் அவனும் அவனை அறியார் 
அவனை அறியில் அறிவானும் இல்லை 
அவனும் அவனும் அவனை அறியில் 
அவனும் அவனும் அவன் இவனாமே. 

உடலும், உயிரும் தன்னுள் இருப்பது  சிவன்  என  அறிவதில்லை. தன்னுள் இருப்பது சிவனென அறிந்துகொண்டால் சிவனென தனியாக ஒன்றுமில்லை. உடலும், உயிரும் சிவனை அறிந்ததும் சிவமாகவே மாறி நிற்பார்கள்.  

*** *** ***




Tuesday, April 11, 2023

பூஜ்யத்திற்குள்ளே ராஜ்யம்

பூஜ்யத்திற்குள்ளே  ராஜ்யம் 



வெள்ளியங்கிரி மலை

'கொஞ்ச அடக்கி வாசிங்க. இதுவரைக்கும் போயிட்டு வந்தது போதும்.' - இல்லத்தரசியிடம் போட்ட விண்ணப்பம் முதலில் ரிஜெக்டட்.

'பத்திரமா போயிட்டு வா, அப்பா.' - இளவரசியின் அப்ரூவல்.

எப்படியோ 'அப்படி இப்படி' சொல்லி ஹோம் மினிஸ்டர் கிட்டயும் பெர்மிஷன் வாங்கி இந்த முறையும் வெற்றிகரமாக வெள்ளியங்கிரி மலை போயிட்டு வந்தாச்சு.

ஏப்ரல் 6-ம் தேதி, பங்குனி பௌர்ணமிக்கு  மறுநாள், மாலை ஏழு மணிக்கு துவங்கிய பயணம் அடுத்தநாள் நண்பகல் பன்னிரண்டு மணிக்கு நிறைவு பெற்றது. நான்-ஸ்டாப் பதினேழு மணி நேர மராத்தான் மலையேற்றம்.

'மலை ஏறிட்டு வந்துட்டேன்டா.. இதுதான் கடைசி. இனிமேல் ஏற மாட்டேன்.'

'நீ இப்படித்தான் போன முறையும் சொன்னே.' - தம்பியின் பதில்.

மழையில் சிக்கிய மலைப்பாதை, கொஞ்ச நஞ்சம் இருந்த மண்ணையும் அரிப்பில்  விட்டுவிட்டு  வெறும் கற்குவியல்களாக கிடக்கிறது. ஆறாவது மலை மட்டும் கொஞ்சம் நடக்கிறமாதிரி பாதை. மற்றதெல்லாம் கற்குவியல்கள். கைகளும், கால்களுடன் சேர்ந்து தவழ்ந்து செல்ல வேண்டியதுதான். 

புனிதமான மலை. வெறுங்காலில்தான் ஏறவேண்டும் என்ற கொள்கையெல்லாம் இங்கே செல்லுபடியாகாது. ஏழாவது மலையில் இறைவனை தரிசிக்கும்போதுகூட கால்செருப்பு ஒரு தடையில்லை. கூடவே முடிஞ்சா knee cap போட்டுக்கணும்.

'குமாரு, இன்னும் கொஞ்ச தூரம்தான் வெள்ளை விநாயகர் வந்துரும். அதுக்கப்புறம் ப்ளைன்ஸ். சைக்கிள் ஓட்டலாம்னா பாத்துக்கோயேன்' - முதல் முறை மலை ஏறும் நண்பன் கேட்ட 'இன்னும் எவ்வளவு ஏறணும்?' என்ற கேள்விக்கு பதில் சொன்னான்  நண்பன்.

அவர்கள் நின்றிருந்த இடமோ  முதல் மலையில் அரை மலை கூட தேறாது.

'இப்படி  சொல்லித்தாண்டா போன வருஷம் என்னயும்  கூட்டிட்டு போனாங்க. இந்த வருஷமும் வர்றேன்னா பாத்துக்கோ. அடுத்த வருஷம் நீயும் வருவே.' - நம்பிக்கையுடன் சொன்னான்.

'அது சரி. ஏன்டா வயிறு புல்லா  சாப்பிட வேண்டாம்னு சொன்னே?'

'சாப்பிட்டிருந்தா.. இந்நேரம் உனக்கு வாந்தி வந்திருக்கும். இல்லே அவசரம்னா  காட்டுக்குள்ளேதான் போகணும். டேஞ்சர். அதான் அளவா திங்க சொன்னேன்.'

'அதல்லாம, வழி முழுக்க தற்காலிக கடைகள் இருக்கு. பசிக்கு தேவையானது கிடைக்கும். சுக்கு காப்பி, கம்மங்கூழ், மூலிகை சூப், ஆரஞ்சு மிட்டாய், தர்ப்பூசணி, மேகி.. இப்படி நிறைய.'

'நல்ல ஆரோக்கியமான உடல் நிலை இருந்தா, மலை ஏற ஆறு மணி நேரம், இறங்க ஆறு மணி நேரம். இதுதான் கணக்கு.' - வனத்துறை காப்பாளர் 'எவ்வளவு நேரம் ஆகும்?' என்று கேட்ட மலையேறிக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

'இங்கே பாருடா.. இப்ப மணி பதினொன்ரை. கொஞ்சம் வேகமா போனோம்னா சாமி கும்பிட்டுட்டு  ஒரு மணிக்கெல்லாம் அடிவாரம் வந்துரலாம்.'  நண்பர்கள்  இப்பொழுதுதான் முதல் முறையாக முதல் மலையே ஏற ஆரம்பித்திருக்கிறார்கள்.

'காந்திபுரம் பஸ் ஒரு மணிக்கு அடிவாரத்துல இருந்து இருக்கு. இங்கிருந்து சுமார் முப்பத்தஞ்சு கிலோமீட்டர் இருக்கும். சீக்கிரம் போய் காஞ்சிபுரம் பஸ் புடிச்சிரலாம்.' - நம்பிக்கையுடன் சொன்னான் நண்பன்.

'நல்ல வேளை. பிரகாஷ் வரல. வந்திருந்தா அவனுக்கு தனியா இருபத்தஞ்சு லிட்டர் தண்ணி கேன் சுமக்கணும்.'

'ஏண்டா தண்ணி சுமக்கணும். ஆளுக்கொரு பாட்டில் இருந்தா போதும்.'

'ரெண்டாவது மலை முடியிற இடத்துல ஒரு சுனை இருக்கு. இன்னும் கொஞ்சம் மேல போன கைதட்டி சுனை இருக்கு. ஆறாவது மலை, ஏழாவது மலையிலும் தண்ணி புடிச்சிக்கலாம்.'

ஈஷா யோகா மையத்தில் ஆதியோகியை  பார்த்துவிட்டு, அப்படியே வெள்ளியங்கிரி மலை ஏற்றம் செய்யலாம்  என்று நிறைய பேர் வருகிறார்கள். 

இளைஞர்களாக இருப்பதால் மூங்கில் குச்சி எடுத்து செல்வதை இளமைக்கு சவாலாக  நினைக்கக்கூடாது. கையில் குச்சி, இரண்டு கால்கள், இரண்டு கைகள் போதாமல் நிறைய இடங்களில் தூக்கிவிட இன்னும் இரண்டு கைகள் தேவைப்படும், நினைவில் கொள்ளுங்கள்.

'சார்.. இந்த முறை நிறைய டோலி சர்வீஸ். மக்கள் கூட்டம் அதிகமாயிருச்சு.'

'போயிருச்சுங்க. கீழ கொண்டு வந்து சேக்கணும்' - டோலி தூக்கிகள்  சொல்லிக்கொண்டே  மலை ஏறினார்கள். 

உடலில் உள்ள அத்தனை நோய்களையும் கண்டறிந்து சொல்லி விடும் இந்த மலை ஏற்றம்; சில சமயங்களில் மோட்சமும் கிடைத்துவிடும். இதற்குமேல் உடலில் சக்தியில்லை என்னும் பட்சத்தில் ஒரே தீர்வு டோலி சேவைதான். உயிர் இறையடி சேர்ந்துவிட்டாலும் டோலிதான்.

'மலை ஏறுவது ஒருவகையில் வைராக்கியம். ஆனால், இறங்குவதற்கு அரசு  ரோப்-கார் வசதி செய்து தரலாம். மலம்புழாவில் பாருங்கள், அருமையாக இருக்கிறது ரோப்-கார் சவாரி. நல்ல கூட்டமும் வரும். அதே சமயம் நல்ல வருமானமும் இருக்கும்.'

இதையும் கவனத்தில் வச்சுக்குங்க.

'ஏறும்போதும், இறங்கும்போதும் புஷ் புஷ்ன்னு மூக்கிலும் வாயிலும் மூச்சு விட வேண்டாம்.'

'முடிஞ்ச அளவுக்கு மூக்கில் மூச்சு விடுங்க.. வாயில் மூச்சு விட்டா தொண்டைக்குழி வரைக்கும் எரிச்சல் எடுக்கும். காப்பிகூட குடிக்க முடியாது'

நண்பரிடம் விளக்கி கொண்டிருந்தார் ஒருவர்.

'அன்னிக்கு ஆறாவது மலையில் நின்னுட்டிருந்தேன். சட சடன்னு மழை. விடாம ஒரு ரெண்டு மணி நேரம்.'

'எங்கேயும் ஒதுங்க முடியாது. ஏழாவது மலை ஏறிக்கொண்டிருந்தவர்களிடமிருந்து ஒரே அலறல் சப்தம். சப்த நாடியும் ஒடுங்கிருச்சு. நெறைய பேர் செத்து போயிட்டாங்க' 

'மழை நின்னதும் என்ன வேகத்தில் கீழே இறங்கினோம்னே தெரியாது. உயிர் பயம்னா என்னன்னு அன்னிக்குத்தான் புரிஞ்சது'

'பாரஸ்ட் டிபார்ட்மென்ட் இந்த மாதிரி சமயத்தில்,  எந்த நிமிஷமும் மலை ஏற்றத்தை நிறுத்திருவாங்க. பாருங்க நெறைய வனத்துறை கேம்ப் போட்டுருக்காங்க.'

'புதுசா மலை ஏற பிளான் பண்றவங்க அனுமதி உண்டா இல்லையான்னு தெரிஞ்சிட்டு வரலாம். அதுக்கு வாட்ஸாப் 70921 44676 நம்பரில் 

கேட்டீங்கன்னா சொல்வாங்க. நானும் கேட்டுட்டுதான் 6-ம் தேதி மலை ஏறினேன்.'

இந்த முறை அடிவாரத்திலிருந்தே வனத்துறை ஆதிக்கம்தான். மேலே பூசாரிகூட வனத்துறை சீருடையில் இருந்தவர்தான் நெற்றியில் திருநீறு பூசிவிட்டு, திருநீறு பாக்கெட் கொடுத்தார். திருநீறு பாக்கெட் உபயம் கோவை, ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ். பாக்கெட்டில் வெள்ளியங்கிரி என்பதை வெள்ளிங்கிரி என்று அச்சடித்திருந்தார்கள்.

'மேல கோயில்ல போய் கொஞ்ச நேரம் படுத்திரலாம்.'

'தம்பீ.. நீங்க நெனைக்கிறமாதிரி கோயில் இல்ல இது. எப்படி இப்ப வரிசையா ஏறிட்டிருக்கோமோ, அப்படியே சாமி இருக்கிற குகை வாசலோட சாமிய  கும்பிட்டுட்டு  கீழே வரிசையா இறங்கிறணும்.'

'படுக்கணும்னா, திறந்த வெளியில்தான் படுக்கணும். புல்லிலோ, பாறையிலோ எங்கே வேணும்னாலும் படுக்கலாம். என்ன கொஞ்சம் பனி இருக்கும், குளிரும்.'

ஏழாவது மலை உச்சியில் நிறைய பக்தர்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். நிறைய பேர் ஸ்வெட்டர், பெட்ஷீட் கொண்டு வந்திருந்தார்கள். அவர்கள் அதிகாலை கேட்கும் டம்று முழக்கத்தையும், சூரியோதய நேரத்தில் இறைவனை தரிசிக்கவும்  காத்திருக்கிறார்கள்.

நான் சொன்னது ஒன்று கூட மிகைப்படுத்தி  சொல்லவில்லை. இனி வரும் சித்ரா பௌர்ணமி நாட்களில், ஏறப்போகிறவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கவே இப்பதிவு.

இது தேவையா?

இவ்வளவு கஷ்டப்பட்டு மலை ஏறத்தான் வேண்டுமா? இறைவன் அங்கே மட்டும்தான் இருக்கிறானா?

கேள்விகள் மனதில் எழுவது இயற்கையே..

கடப்பது கடினம் என்று தெரிந்தே எடுக்கும் முயற்சிகள் வெற்றியுடன் கடந்தபின் கிடைக்கும் திருப்திக்கு எது ஈடு?

அது மட்டுமா?

அடிவாரத்தில் முதல் படிக்கட்டில் கால் வைத்தவுடன் நம்மை பத்திரமாக பயணிக்க வைக்கும் சித்தர் பெருமக்களின் அருமையை வேறு எப்படித்தான் நாம் உணர முடியும்?

நாத வடிவான ஞான தலைவன், ஜோதி வடிவான சக்தி தலைவியை தன்னுள் கொண்டு, பேரின்பத்தை இயக்கமாக உணர்ந்திருக்கிறான். ஐம்புலன்களின் ஆதிக்கத்தை வென்றவன்  ஆறாதாரமாக உடலில் வியாபித்திருக்கிறான். பேரண்டமான ஏழுலகையும் ஆளும் அவன் அனைத்தும் தன்மயமாகி ஏதுமற்றவனாக பூஜ்யமாக  மலை உச்சியில் நிற்கிறான்..  

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான் குணர்ந்தான்  ஐந்து 
வென்றனன் ஆறு விரிந்தனன்  ஏழும்பர்ச்  
சென்றனன் தானிருந்தான் உணர்ந்தேட்டே.
 

                                                                                - திருமந்திரம் 

உங்கள் வெள்ளியங்கிரி மலைப்பயணம் இனிதே நிறைவேற வாழ்த்துகள்.

*** *** ***





  


Monday, April 10, 2023

தேன் நிலவு

தேன் நிலவு 


 

9 ஏப்ரல் 2023 செய்தி: 

அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில்.. பொங்கிய நெட்டிசன்கள்.


செய்தியை படிக்க எவ்வளவு ஆபாசமாக இருக்கிறது? அதுவும் பொது நிகழ்வில், ஒளிப்பதிவு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கையில், எப்படி இது சாத்தியம்? இதன் பின்புலம் என்னவாக இருக்கும்? எளிதில் இன்னொரு பாலியல் செய்தி என்று கடந்து போக முடியவில்லை.

எனக்கு திருமணமாகி நான்கைந்து வருடங்கள் கடந்திருக்கும். குழந்தைக்காக கோயில்கள், மருத்துவ மனைகள் என்று அலைந்து கொண்டிருந்த கால கட்டம் அது. மும்பையில் பணியில் இருந்த காலம். பொள்ளாச்சியில் இருந்து வந்த சக தோழர் ஒருவர் கோடி சுவாமிகள் என்ற அற்புத சித்தரைப்  பற்றி கூறினார்.

'எதுக்கும் ஒரு தடவை கோடி சாமியாரை பாத்துட்டு வாங்க. உங்க மாமியார் ஊரும் பொள்ளாச்சி தானே?'

'சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பொது மக்கள் தரிசனம் உண்டு.'

'இளையராஜா மாதம் தோறும் வந்து செல்கிறார்'

சரி, எப்படியும் ஒரு முறை பார்த்து வரலாம் என்று பொள்ளாச்சி சென்றபோது  கிளம்பினோம்.  சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள புரவிபாளையம் சென்றுவர  இந்த் சுசுகி பைக்கே  போதுமானதாக இருந்தது.

நல்ல கூட்டம். மேல்  மாடியில் சுவாமிகள் இருக்கிறார். ஒவ்வொருவராக அவர் பாதத்தை வணங்கி  சென்றார்கள். யாரும்   பேசவில்லை. அவரும் பேசவோ ஆசீர்வதிக்கவோ இல்லை.

அவருக்கு பருப்பு கிச்சடி சாதம் ஊட்டிக்கொண்டிருந்தார்கள். அவர் வாயில் போட்ட சாதத்தை கொடுத்தால் அது  அமிர்தம் போன்றது. வீசி விடாதீர்கள் என்று முதலிலேயே எச்சரித்திருந்தார்கள்.

இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அவர் பாதங்களை தொட்டு வணங்கினோம். எங்களுக்கு எதுவும் கொடுத்து தர்ம சங்கடத்தில் ஆழ்த்தவில்லை சுவாமிகள்.

அப்பொழுதைக்கு எங்களுக்கு அருவெறுப்பைத் தந்தது அந்த நடைமுறை.

இப்பொழுது திருமந்திரம் படிக்க ஆரம்பித்த பின்னர் அதில் சொல்லப்படும் ஆன்மீக கருத்துக்களை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.

திருமந்திரம் 1949

வற்ற அனலைக்  கொழுவி மறித்தேற்றி 
துற்ற சுழிஅனல் சொருகிச்  சுடர்உற்று 
முற்று  மதியத்து அமுதை முறைமுறை 
செற்று உண்பவரே  சிவயோகி யாரே,  

உடலில் உற்பத்தியாகும் விந்து கீழே  வழிந்தோடச் செய்யாமல் மேல் நோக்கி ஏற்றி, மூலக்கனலில்  வற்றுமாறு  செய்வார்கள். பின்னர் அதனை அக்னி நாடி வழியாக சுழி முனைக்கு  தியானத்தின் மூலம் ஒளிச்சுடராக கொண்டு செல்வார்கள். அவ்வாறு கொண்டு செல்வதனால் அங்கே மதி மண்டலத்தில் அமுதம் ஊற்றெடுக்கும். அவ்வமுதத்தை அண்ணாக்கின் வழியாக செறிவுடன் உண்பவர்கள் சிவ யோகிகள்.

உண்மையான சிவ யோகிகளுக்கு அமிர்தத்தை உண்பது சாத்தியமாகி இருக்கிறது. அவர்கள் அண்ணாக்கில் அமிர்தம் கசிந்து கொண்டிருக்கும் என்பதும் உண்மை என்றாகிறது.

தலாய் லாமாவோ, கோடி சுவாமிகளோ சிவ யோகி  வகையினர்   என்றெனக்கு தெரியாது. அவர்கள் நாக்கில் அமிர்தம் ஊறுமோ என்றும் தெரியாது.

தொடர்ந்து போலிகளையே பார்த்து பழகிப்போன நமக்கு, உண்மைக்கும் வேடத்திற்கும் வித்தியாசம் தெரிவதில்லை என்பது மட்டும் உண்மை. 

*** *** ***












Wednesday, April 5, 2023

காமமும் நாணும் உயிர் காவும்?

காமமும் நாணும் உயிர் காவும்? 


5 ஏப்ரல் 2023 செய்தி:

பெண்கள் கிளாமராக உடை அணிந்தால்.. சீண்டி விடுவீர்களா? பெயில் வழக்கில் விளாசிய கேரளா ஹைகோர்ட்!

அன்று முதல்  இன்றுவரை இதே கதை. 

காமம்.

இது தீராத நோய். இந்த தீராத நோய் பிறப்பிலிருந்தே வருகிறது. பன்னிரண்டு வயது வரை இல்லாத நோய், மெதுவாக வளர்பிறை போல் வளர்ந்து, வயதான காலத்தில்  தேய்கிறது. சிலருக்கு மனதின் எச்சங்களால் இறுதி மூச்சு வரை இந்நோய் தொடர்கிறது.

'ஒரு நெல் உமியை தூக்கும் வலிமை இருந்தால், அதனை  பெண்ணை சுகிப்பதில்தான் ஆணின் எண்ணம் இருக்கும்'. இது படைப்பின் அதிசயம் அல்லது ரகசியம். மஹாபாரதத்தில் பாண்டுவின் கதையை அறிந்திருப்பீர்கள். 'பெண்ணுடன் கலவியில் ஈடுபட்டால் தலை வெடித்து உயிர் போய்விடும்' - என்ற சாபம் இருப்பது தெரிந்தும் கலவியில் கலந்து இறந்தான் பாண்டு.

மேலே குறிப்பிட்ட இன்றைய செய்தியின் சீண்டல் நாயகனுக்கு வயது 74. அதிலும் ஒரு பெண் தலித் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். பெண் என்ற ஒரு தகுதிதான் முக்கியமே தவிர அது தலித் பெண்ணா, பருவம் அடையா சிறு பெண்ணா, கீழ் சாதியா, மேல் சாதியா  என்றெல்லாம் பேதம் பார்ப்பது கிடையாது ஆண்கள்.

ஆன்மீக ரீதியாக இதனை கொஞ்சம் ஆய்வு செய்து பார்ப்போம்.

காமம் என்பது தாயின் வயிற்றில் உயிர் உருவாகிய கணமே உடலுக்கு கிடைத்து விடுகிறது. 

இறைவன் உயிரை படைக்கையில், 

'விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு'  வருகிறார்.

ஆகாயத்திலிருந்து வந்ததால் முதலில் வானத்தின் ஐந்து பண்புகளான,
காமம், குரோதம், லோபம், மதம் மற்றும் மாச்சரியம் புது உடலுக்கு கிடைத்துவிடுகிறது.

காமம் இரு பாலாருக்கும் சமம். ஆனால், சிலருக்கு மட்டும் ஏன் காமம் நிலை தடுமாற வைக்கிறது?

இங்கே நாம் இறைவன் ஆதியில்  உலகில் தோன்றியதை  அறிய வேண்டியது அவசியமாகிறது.

'ஒன்றவன் தானே' என்று முதலில் ஒன்றாக தோன்றும்போது நாத வடிவாக தோன்றுகிறான். நாதத்தின் ஒலி ஓம் எனும் ஓங்காரம். இந்த ஓங்காரம் ஞானத்தை குறிக்கிறது.

'இரண்டவன் இன்னருள்' எனும்போது நாதத்தினுள்ளே, சக்தியாக ஒளி  தோன்றுகிறது. இந்த ஒளி கிரியா சக்தியான விந்துவை குறிக்கிறது.

'நின்றனன் மூன்றினுள்' - நாதமும் ஒளியாக நிற்கும் பெருஞ்ஜோதியில், இச்சா சக்தி என்னும் மாயையும் கலந்து நிற்கிறது.

இறையின் அம்சமே மானிடம் என்னும்போது, அவனிடம் இம்மூன்று குணங்களும் இயல்பாகவே அமைந்துவிடுகிறது.

காமத்தின் வீரியத்தை விந்துவும், இச்சா சக்தியுமே தீர்மானிக்கிறது. உடல் இனப்பெருக்கத்திற்கான பருவ நிலை எய்தியவுடன்  வித்தினை விளைவிக்க ஆரம்பிக்கிறது. தொடர்ந்து உற்பத்தி ஆகும் வித்து தானாக கழிவதும் உண்டு; இச்சா சக்தியின் உந்துதலால் தன்முனைப்பில் விரையமாவதும் உண்டு; தகுந்த எதிர் பாலினம் கிடைக்கும் போது இனப்பெருக்கம் நடப்பதும் உண்டு.

திருமந்திரம் 1954
காலம் கடந்தான் காண்விந்து செற்றவன்
காலம் கடந்தழிந்தான்  விந்து செற்றவன் 
காலங்களில்  விந்து செற்றுற்ற காரிகை 
காலின் கண் வந்த  கலப்பறியாரே.

விந்துவை வென்றவன் காலத்தை வென்று நீண்ட காலம் வாழலாம். விந்து வென்றால் விரைவில் அழிவு வந்து சேரும். விந்து வென்று பெண்ணின் இன்பம் அடைவோர், அவளிடம் இருந்து வரும் காம வாயுவானது, தன்னுடைய உயிர் வாயுவில் கலந்து அழிவு நிகழ்வதை அறிந்திருக்க மாட்டார்கள்.
 
காமத்தின்   சமன நிலை தடுமாறும்போதுதான் ஆகாயத்தின் மற்ற நான்கு குணங்களான  குரோதம், லோபம், மதம், மாச்சரியம்  முன் நிற்கின்றன.

விந்து மற்றும் இச்சா சக்தியின் உந்துதலால் அவன் அவளைத்தொட, விருப்பமற்ற அவள் குரோதத்துடன் கேரளா ஹைகோர்ட் வாசலில் நியாயம் தேடுகிறாள்.
 
திருக்குறள் 1163
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.

உடலின் உள்ளே காமமும், நாணமும் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு என் உயிரை காவு வாங்கிக்கொண்டிருக்கிறது. 

இனியும் இதை பொறுத்துக்கொள்ள மாட்டேன்.

பொறுத்துக்கொள்ள முடியலன்னா போ. ஏதாவது செய். எங்கேயாவது கை வை. கோர்ட், கேசுன்னு அலை. யார் வேண்டாம்னு சொன்னாங்க?


*** *** ***

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...