Wednesday, May 3, 2023

அறிவன அறிவது அறிவு

அறிவன அறிவது அறிவு 


கருவறை.

கும்மிருட்டு. கண்ணுக்கு ஏதும் தெரியவில்லை. 

ஆராதனை நடக்கிறது. தீப ஒளி மூலவர் மேல் படுகிறது.

தீப ஒளியில் மூலவர் உருவமும் அதன்மேல் படரும் ஒளியும் தெரிகிறது.

முன்னர் இருட்டில் ஒளிந்திருந்த மூலவர் உருவம், இப்பொழுது உருவத்தை வெளிச்சத்தில்  பார்க்கும்போது தெரிகிறது. ஒளிதான் உருவத்தை காட்டுகிறதென்றாலும் ஒளி இருப்பதை  நாம் உணர்வதில்லை. நாம் ஒளியை உணரும் பட்சத்தில், அனைத்தும் ஒளியாக தெரிகிறது. மூலவர் தன்மேல் ஒளி படர்ந்து நிற்க ஒளியாக நிற்கிறான்.

திருமந்திரம் 2681

ஒளியை அறியில்  உருவும் ஒளியும் 
ஒளியும் உருவம் அறியில் உருவாம் 
ஒளியின் உருவம் அறியில் ஒளியே 
ஒளியும் உருக உடன் இருந்தானே.

நாத வடிவான சிவனைப் பற்றி நிற்கும் வெண்சுடரொளியாய் நிற்கும் சக்தியை அறிந்து கொண்டால் சிவமும் சக்தியும் ஒன்றெனத்தெரியும். ஒளிக்குள் ஒளிந்திருப்பது சிவம் என்றும் தெரியும். அப்படி இல்லாமல், வெறும் ஒளியான சக்தியை மட்டும் பார்த்தால் சக்தி மட்டும் தெரியும். ஆனால், அந்த ஒளிக்குள் உறைந்த உருவமாக சிவன் எப்பொழுதும் இருக்கிறான். 

அறிவுக்கு சவால் விடும் மாய நிலைதான் ஒன்றிருந்தால் ஒன்றில்லை. ஒன்றுக்குள் அனைத்தும் ஒன்றி நிற்கிறது.

*** *** ***

ஏறுவதற்கு கடினமான மலைப்பாதை. 

மனதில் வைராக்கியம் ஒன்றே துணையாக ஏறிக்கொண்டிருக்கிறேன். 

பயணத்தின் முடிவில் ஒரு பத்து அல்லது பதினைந்து வினாடிகள் மட்டும் அவனை தரிசிக்க முடியும். அந்த நேரத்திலும் வழக்கம்போல் கண்ணைமூடி அவனை தரிசிப்பதால், ஓரிரு வினாடிகளே ஊனக்கண்களுக்கு அகப்படுவான் அவன். பதினான்கு மணி நேரம் தொடர் மலையேற்றத்தின் களைப்பை போக்கும் சக்தி உண்டென்று உணர்ந்து கொள்கிறேன்.

என் உடலோ, உடலைப்பற்றி நிற்கும் உயிரோ  அவன் எனக்குள்ளே இருக்கிறான் என்று உணர்வதில்லை.

இதே உணர்வுதான், ஆன்மீகப் பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும்.

ஒவ்வொரு திருமந்திரப்பாடலை படிக்கும்போதும், இது யாராலோ, யாருக்காகவோ  எழுதப்பட்டது என்று நம் அறிவு தள்ளி வைக்கிறது. நம் உடலையும், உயிரையும் மையமாக வைத்து எழுதிய பாடல்களை நாமே அறிந்து கொண்டு, நடைமுறைப்படுத்தி பார்க்கலாமே  என்று தோன்றுவதில்லை.

ஆன்மீக புத்தகங்களை படிப்பதும், கோயிலுக்கு செல்வதும், பூஜைகளை செய்வதும் யாரையோ திருப்திபடுத்த என்று எண்ணிக்கொண்டு செய்கிறோம். நமக்குள் இருக்கும் இறை உணர்வை வளர்க்க இது உதவினாலும், நமக்குள்ளேயே அந்த இறைவன் உறைகிறான் என்றறியும் வரையில் செயற்கையான ஆன்மீகம் எந்த வகையிலும் நம் முன்னேற்றத்திற்கு உதவாது.

பூஜாரி இருபத்து நான்கு மணி நேரமும் கருவறைக்குள் இருப்பதனால், இறைவனுக்கு மிக நெருக்கமானவன், வேண்டப்பட்டவன் என்று  பொருள் கிடையாது. அதே நேரம், தினம் தினம் குறைந்தது பன்னிரண்டு மணி நேரம் வீட்டிற்காக உழைக்கும் பெண்ணின் ஐந்து நிமிட பூஜைக்கு அந்நியமானவனும்  அல்ல இறைவன்.

அறிவன அறிவது அறிவு.

திருமந்திரம் 1789

அவனும் அவனும் அவனை அறியார் 
அவனை அறியில் அறிவானும் இல்லை 
அவனும் அவனும் அவனை அறியில் 
அவனும் அவனும் அவன் இவனாமே. 

உடலும், உயிரும் தன்னுள் இருப்பது  சிவன்  என  அறிவதில்லை. தன்னுள் இருப்பது சிவனென அறிந்துகொண்டால் சிவனென தனியாக ஒன்றுமில்லை. உடலும், உயிரும் சிவனை அறிந்ததும் சிவமாகவே மாறி நிற்பார்கள்.  

*** *** ***




No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...