மலை முகடுகளில் பொழியும் மழை நீர் அருவியாக, ஆறாக மாறுகிறது என்று சொல்லி விடலாம். ஆனால் உள்ளத்துக்குள்ளே நுட்பமாக ஊறும் நீரைப்பற்றி சொல்லில் விவரிக்க முடியாது. இறைவன் என்னை கட்டி வைத்திருக்கும் இடத்தில் ஊறும் இந்த தெளிந்த ஆறுக்கு, மற்ற ஆறுகளைப்போல் நுரை இருக்காது, அழுக்கிருக்காது, கரைகளும் இருக்காது.
திருவள்ளுவரும் தன் முதல் குறளில் இதையே வலியுறுத்தி சொல்லுகிறார்.
ஓம் என்னும் நாதத்தின் முதல் எழுத்தான அகரம், உலகில் ஆதிபகவனுடன் முதலில் தோன்றியதாகும்.
திருக்குறள்
அகர முதல எழுத் தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.
இப்ப சொல்லுங்க. பாடல்கள் தரும் மொழி பெரிதா? அல்லது நாதம் என்னும் இசை பெரிதா?
சினிமா பாடல்கள் இசை அமைத்தவனின் உரிமை என்றால் பாட்டுக்களை எழுதியவனின் உரிமை எங்கே போகும்?
திரைப்படம் எடுத்தவன் ஒருவன் மொழியை பிழிந்தெடுத்தவன் கவிஞன் காற்றை சுரம்பிரித்தவன் இசைக்கலைஞன் குரலால் கட்டிப்போட்டவன் பாடகன் நடிப்பால் மயங்கவைத்தவன் நடிகன் யாருக்கு சொந்தமிந்த பாட்டு?
'நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்..' - இது யார் பாட்டு?
எம்ஜியார் பாட்டு.
எனக்கு தெரிந்ததெல்லாம் எம்ஜியார் பாட்டு, சிவாஜி பாட்டு, ரஜினி பாட்டு இப்படித்தான்.
*** *** ***
பாடலின் வரிகள் நரம்பை முறுக்கேற்றுகிறது. பின்னணிப்பாடகரின் குரல் காதுக்கு தேனாக பாய்கிறது. பாடி நடித்தவரின் அர்ப்பணிப்பு காலங்களை கடந்து நிற்கிறது. இசை அப்படியே உள்ளத்துக்குள் ஊடுருவி செல்கிறது.
என்னை யாரும் கவனிக்கவில்லை என்று பலவித குற்றங்களில் ஈடுபடுவார்கள். சிந்தித்து பார்த்தால் நம்மை ஒருவர் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருப்பது தெரியும். அவன் நம்முள்ளாகவே, நாமாகவே கரைந்து நமக்குள் இருக்கின்றான். அவ்வாறு இருப்பதை உணர்ந்தவர்கள் குற்றம் செய்வதில் இருந்து விலகி விடுவார்கள்.
ஏழு வித்தியா தத்துவங்களில், காலத்திற்கு அடுத்து வருவது நியதி என்னும் மாயா தத்துவம்.
'இதனையே நுகர்க, ஏனையவற்றை நுகரற்க' என வரையறுத்து நிறுத்துவது நியதி தத்துவமாகும். நியதி தத்துவம் அவரவர் செய்த வினையின் பயன்களை அவரவரே அனுபவிக்குமாறு நெறிப்படுத்தி நிற்பதாகும்.
கட்டு நிலையில் இறைவனது சத்தி தானே நேராக எதனையும் செய்யாது ஏதேனும் ஒரு கருவியைக் கொண்டு அதன் வழியாகவே செய்யும்.
நுகரத்தகாததை அனுபவிக்க எண்ணியதால் பேராசிரியை இன்று ஒரு தண்டனைக்குற்றவாளி.
இறைவனின் நீதி மன்றத்தில் அரசனுக்கும், ஆண்டிக்கும், சகலருக்கும் நியதி ஒன்றே!
ஓரிருவரின் நினைவலைகளில் நான் இருக்கலாம். அதுவும் நிச்சயமில்லை, அவர்கள் நினைவில் நான் இருப்பதால் மட்டும் ஆகப்போவதொன்றுமில்லை.
எனக்கோ நினைத்துப் பார்க்க யாருமில்லை, சந்தோசப்பட எதுவுமில்லை.
மீதமுள்ளவை நாட்களா.. வாரங்களா.. அல்லது மாதங்களா என்றும் தெரியவில்லை.
ஆனாலும், மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன்.
இனி சொத்து சேர்த்து வைக்க தேவை இல்லை. புகழ், பெருமை மற்றும் அதிகாரத்தை தேடிப்போகவும் அவசியமில்லை.
தேடிய வரை போதும். ஆடிய வரை அனுபவம்.
முழுமையான தேவை அமைதி.. அமைதி.. அமைதி மட்டுமே.
சமாதியில் கிட்டும் அமைதி மட்டுமே அடுத்து எனக்கு ஆனந்தத்தை கொடுக்கும்.
சிறிய சிறிய சந்தோஷத்திற்காக தெரிந்தே செய்த தவறுகள் தண்டனை தரலாம்; தெரியாமல் செய்தவை மன்னிக்கப்படலாம். எதையும் ஏற்றுக்கொள்ள மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன்.
இதுவரை செய்த நல்ல காரியங்கள் நிம்மதி தரலாம். அல்லது அடுத்த பிறவிக்கு வரவு வைக்கப்படலாம்.
என்னுடைய நல்வினை, தீவினை செயல்களின் படிமம் நிழல்போல் என் மீது படிந்திருக்கிறது. அது என்னை விட்டு எப்பொழுதும் அகல்வதில்லை.
ஒரு வினை நடந்தால், அதற்கான எதிர் வினை நடப்பது இயற்கை. அது எனக்கு மட்டும் நடக்காது என்று நான் நினைத்தால் அது அறிவீனம்.
இப்பிறவியில் நான் பெற்ற உடலில் இருந்து, ஒவ்வொரு நிகழ்வும் என்னுடைய முந்தைய பிறவிகளில் செய்த வினைகளின் எதிர்வினைகளால் நடப்பதுதான். இதை முழுமையாக நம்புகிறேன்; எண்ணிப் பெருமையும் கொள்கிறேன்.
இளமை கொல்லைப்புற வாசல் வழியாக வெளியேறி விட்டாலும் முதுமை இன்னும் வாசல் கதவை தட்டவில்லை. இதுவே மகிழ்ச்சியல்லாமல் வேறென்ன?
இள வயதில் செய்த அத்தனை வேலைகளும் இன்னும் சிறப்பாக, அனுபவ பதிவுகளோடு செய்ய முடிகிறது. வேறென்ன வேண்டும் எனக்கு?
சந்தோஷங்களை கடந்து நிற்கிறது மன மகிழ்ச்சி. மகிழ்ச்சியை தொடர்வது ஆனந்தம்தானே?
சந்தோஷமும், மகிழ்ச்சியும் சின்ன சின்ன இன்பங்களைத் தந்தது. ஆனந்தம் தருவது பேரின்பம்தானே.
அந்த பேரின்பம் சமாதியில்தானே கிடைக்கும்.
அந்த ஆனந்தத்தை பெறுவதற்காக மரணத்தை எதிர் கொள்ள வேண்டுமா என்ன?
தேவையில்லை.
மனம் எங்கே நிலை பெறுகிறதோ பிராணன் அங்கே நிலை பெறுகிறது. எண்ணங்கள் அடங்கிய நிலையில் மனம் சமாதி நிலைக்கு அழைத்து செல்கிறது. மனம் நிலை பெறாத போது எண்ணங்களின் வழியே பிராணனும் வெளியேறிவிடுகிறது. மனதுக்குள்ளே எண்ணங்களை செலுத்தி பிராணனை நிலை நிறுத்தி மகிழ்ந்திருப்போர்க்கு மனதுக்குள்ளேயே ஆனந்தம் பொங்கும்.
நீ நிஜம் என்று நினைக்கும் ஒவ்வொரு வினாடியும் காலதேவனால் கொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. வாழ்வில் காலத்தால் கிடைக்கும் அனுபவம் அனைத்துமே ஒரு நாள் ஒன்றுமே இல்லாமல் போய்விடக்கூடிய மாயை தான்.
நேற்று என்பது திரும்ப வராது. நாளை என்பது வரவே வராது.
''நாளை நான் புதிய உடை உடுத்தினால் சந்தோஷமாக இருப்பேன். அடுத்த வாரம் சம்பளம் போட்டால் சந்தோசம்தான். அவனிடமிருந்து சம்மதித்து பதில் வந்தால் மனம் குதூகலிக்கும். இந்தப் பரீட்சையில் தேர்வாகிவிட்டால் ஆயுளுக்கும் சந்தோசம்.'' - இப்படியாக ஆளுக்கொரு சந்தோஷ எதிர்பார்ப்புகள்.
நீங்கள் கேட்டது எல்லாம் நடந்ததுதானே. நீங்கள் சொன்ன சந்தோசம் மட்டும் எங்கே போனது? வந்த வேகத்தில் காணாமல் போனது எங்கே?
உங்கள் சந்தோசத்தை கரைத்தது யார்? வேறு யாருமல்ல காலம்.
காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது.
சந்தோஷத்திற்கான காரணிகளை அடுத்தவர் மேலோ அல்லது நாளைக்கு, நாளைக்கு என்று எதிர்பார்த்து காத்திருக்கும் உங்களுக்கு அந்த 'நாளை' வராமலேகூட போய்விடக் கூடும்.
நீ பிறந்ததும் துடிக்க ஆரம்பிக்கும் காலக்கடிகாரம் ஒரே ஒரு முறை நிற்கும்.
அப்பொழுது உங்கள் பெயர் போய் விடும். இந்த உடல்தான் நான் என்றிருந்த நிலை மாறிவிடும். ஊரெல்லாம் கூடி ஒப்பாரி வைத்து அழுவார்கள். உயிர் நீங்கிய அடுத்த கணமே உடலை பிணம் என்று சொல்வார்கள். மேளமடித்து, ஆட்டமாடி சுடுகாட்டிற்கு கொண்டு சென்று உடலை எரித்துவிடுவார்கள். ஆற்றங்கரையில் இறங்கி நீரில் மூழ்கி எழுவார்கள். நீ இந்த மண்ணில் அவர்களுடன் இருந்த நினைவையும் நீரோடு கரைத்துவிடுவார்கள்.
சமீப கால இளவயதினரின் மரணங்கள் சமுதாயத்திற்கு பெரிய சவாலை விட்டு செல்கிறது. மரணங்களுக்கான காரணம் என்னவென்று தெளிவாக யாராலும் சொல்ல முடியவில்லை. அவர்களின் குடும்பங்களில் இந்த மரணங்கள் விட்டு செல்லும் ரணங்கள் ஆற்றமுடியாதவையாக உள்ளது. பெருந்தொற்று விட்டு சென்ற காயங்களே இன்னும் ஆறாத நிலையில், அகால மரணங்கள் நிறைய குடும்பங்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
கடந்த வாரம், நடுத்தர வயதுடைய பெண், தன்னுடைய பதினோறாம் வகுப்பு படிக்கும் மகள், பத்தாம் வகுப்பு படிக்கும் மகனுடன் சென்னையிலிருந்து கோவை வந்து ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார். கடன் தொல்லையால் கணவன் குடும்பத்தை விட்டு சென்றதால், அபலையான பெண்ணிற்கு இரண்டு குழந்தைகளுடன் வாழ வழி தெரியவில்லை. கடன் தொல்லை வேறு.
என்னுடைய சிந்தனை எல்லாம், ரயிலில் பயணம் செய்யும்போது யாருமே இவர்களுடன் பேசவில்லையா? பசித்திருக்கும் மூவரின் நிலை புரியவில்லையா? என்பதுதான். எட்டு மணி நேர பயணத்தில் இவர்களை சுற்றி எத்தனை பேர் பயணித்திருப்பார்கள், உண்டிருப்பார்கள்.
பசியும், மரணமும் பொதுவானது. ஜாதி, மதம் பார்ப்பதில்லை. ஏழை, பணக்காரன் என்ற பேதமில்லை. ஆண்டிக்கும் பசிக்கும் அரசனுக்கும் பசிக்கும். பேதைக்கும் மரணமுண்டு ஞானிக்கும் மரணமுண்டு.
பசி ஆரம்பம்; மரணம் முடிவு.
பசி வேளையில், அனைவருடன் பகிர்ந்துண்ணுங்கள். வேண்டியவர், வேண்டாதவர் என்று பிரித்து பார்க்க வேண்டாம். பசித்து களைத்து வருபவர்களை பார்த்து அவர்கள் பசியாற உணவளித்து உண்ணுங்கள். மீதமான சமைத்த பொருட்களை வைத்திருந்து மீண்டும் மீண்டும் உண்ணாதீர்கள். உணவில் நாட்டம் இருப்பது இயற்கை. அதற்காக பொறுமையாக சுவைத்து உண்ணாமல் அவசர அவசரமாக உண்ணாதீர்கள். காகத்தை பாருங்கள், உறவுகளை அழைத்து உண்ணுகிறது, அவ்வாறே நீங்களும் உறவுகள், நண்பர்களுடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள். பசித்த பின், உண்ணும் நேரம் பார்த்து உண்ணுங்கள்.
யாரோ ஒருவர், அவர்களுடன் பேசி கொஞ்சம் உணவளித்து இருந்தால் அவர்கள் கோவையில் எப்படியாவது உயிர் பிழைத்திருக்கலாம்.
இறை நம்பிக்கையுடன், கடவுளின் படம் வைத்து வணங்கும், கோயில்களுக்கு எவ்வளவோ செய்கிறோம். அவை எதுவுமே இந்த மாதிரி நடமாடும் கோயில்களான, மனிதர்களுக்கு சென்றடைவதில்லை. ஆனால், வாழ வழி தெரியாமல் மயங்கி நிற்கும் நிராதரவான மனிதர்களுக்கு கொடுக்கும் ஆதரவும், பொருளும் நேரடியாக இறைவனையே சென்றடைகிறது.
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின் நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.
காலத்தால் அழியாத அற வாழ்வு வாழ வழி வகை காட்டி சென்ற திருமூலர் போன்ற சித்தர் பெருமக்களை போற்றி வணங்கி அவர்கள் காட்டிய வழியில் நடமாடும் கோயில்களான சக மனிதர்களுக்கு உதவி வாழ்வோம்.
உயிர்களை படைத்த இறைவனுக்கு உயிர் கொடுக்கும்(?) விழா பிராண பிரதிஷ்டா.
அயோத்தியில் இறைவனை குடி அமர்த்தி விட்டார்கள். இனி அவர் அங்கே இவர்கள் கொடுக்கும் உணவினை உண்டு குடித்தனம் செய்ய வேண்டியதுதான்.
வால்மீகியின் கதாநாயகன் ஒரு ஸ்த்ரீலோலன். புலால் உண்பவன். அரச குணமிக்கவன். வடமொழி காவியத்தை தமிழாக்கிய கம்பனின் கதாநாயகன் ஒரு ஏகபத்தினி விரதன். புலால் மறுப்பவன், அரசனை மிஞ்சிய தேவ புருஷன்.
ஆச்சர்யத்தை பார்த்தீர்களா, கெட்டவன் என்று சொன்ன காவிய நாயகனை வடமாநில மக்கள் கொண்டாடுகிறார்கள்.நல்லவன் என்று சொல்லிய நாயகனை தென் மாநில மக்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.
ராமனை விட்டுத்தள்ளுவோம். மனிதனாய் பிறப்பெடுத்த எவருமே இறைவனில்லை என்பதே நம் கோட்பாடு. அது கண்ணனானாலும், ஏசுவானாலும் அல்லது முஹம்மது நபி ஆனாலும் சரிதான்.
இறைவன் உண்டு என்று சொல்லும்போதே அதன் மறுபக்கமாக இல்லை என்ற பிரதிபலிப்பு உருவாகிவிடுகிறது. இல்லை என்று சொல்லும்போது உண்டு என்ற பொருள் உருவாகிவிடுகிறது. எனவே, இறைவன் இருக்கின்றானா, இல்லையா என்ற வாதம் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. உண்மையில் இந்த இரண்டு நிலையையும் தவிர்த்து ஆனந்தமயமாக வாழும் வழி அறிந்தால், இறைவன் உன்னுடன் அந்த இன்பத்தினூடே இருப்பான்.
திருக்களிற்றுப்படியார்
உண்டெனில் உண்டாகும் இல்லாமை; இல்லைஎனில் உண்டாகும்; ஆனமையின் ஓரிரண்டாம் - உண்டு இல்லை என்னும் இவைதவிர்ந்த இன்பத்தை எய்தும்வகை உன்னில் அவன் உன்னுடனே ஆம். 36
இறைவன் இருக்கின்றான் எனில் அவன் எங்கே வாழ்கிறான்? உன்னுடைய உள்ளம்தானே அவனுடைய வீடு, வேறு ஏதாவது இடத்தில் அவன் வசிக்கிறான் என்று சொல்ல முடியுமா? அவனுடைய வீடு உன்னுடைய உள்ளம்தான் என்று தெரிந்த பின்னரும் அவனை வெளியே வசிக்கும் ஆளாக எண்ணி அவனைத் தேடுகின்றாயே?
திருமந்திரம் - 2650
இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்குஇல்லை அவனுக்கும் வேறுஇல்லம் உண்டா அறியில்? அவனுக்கு அவன்இல்லம் என்றென்று அறிந்தும் அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே.