பணம் பெண் பாசம்
அத்தனை பழமும்
சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே
அத்தனை பழமும்
சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே
“காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” - கப்பல் நிறைய வணிகப்பொருட்களை கொண்டுசென்ற மகன் வெறும் நெல்மூட்டையை கொண்டுவந்திருக்கிறானே என்று சோதித்த பட்டினத்தடிகளின் கண்களில், விலை உயர்ந்த கற்கள் அதனுள் பொதிந்திருப்பதை மட்டும் பார்க்கவில்லை, கூடவே மகன் விட்டு சென்ற ஓலையையும் பார்த்து, படித்து உலக வாழ்வில் இருந்து விலகி, மனைவியை பிரிந்து சென்றாலும், பெற்ற தாயின் பாசத்தை விட முடியாமல் இறுதி சடங்குகளை, அனைவரையும் முறையாக அழைத்து செய்து முடித்தார்.
வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் - பால்தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் - பால்தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்
- பட்டினத்தார் பாடல் 200
பாடு பட்டு சேர்த்த பணத்தை விட முடிந்தது. கட்டிய மனைவியை பிரிய முடிந்தது. பெற்றெடுத்த அன்னைமேல் கொண்ட பாசத்தை மட்டும் உதறிவிட முடியவில்லை.
நம் கண் முன்னர், இறைவனின் வாரிசுகளாக தங்களை அடையாளப்படுத்தும், ஆன்மீக கடை விரித்திருக்கும் ஜக்கி, நித்தி, ராம்தேவ், ஆசாராம் இவர்களை போன்றவர்கள் எல்லாருமே சொத்து சேர்க்கும் சொத்தை பழங்கள்தான். இவர்களைப் போன்றோர், ஆதியில் சுயம்புவாய் தோன்றிய இறையை, ரத்தமும், சதையுமாக மனிதனாகவே உருவகப்படுத்தி, வம்சம் வளர உறவினை கொடுத்து, உடலை வளர்க்க உணவினை கொடுத்து, நடமாடும் கழிவகம் ஆக்கிய கதைகளே அறிவிற்சிறந்தோர் நாத்திகம் பேச வழி வகுத்திருக்கிறது.
இறையை அறிந்து அணுகும் முறையை, பதி-பசு-பாசம் என்று திருமந்திரத்தில் மிக எளிதாக காட்டி இருக்கிறார் திருமூலர். இந்த முறைப்படி நம் கோவில்கள் அமைந்திருப்பது இருப்பது, ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். பதி என்பது கருவறையில் உள்ள சிவலிங்கம்; பசு என்பது மூலவரை பார்த்து அமர்ந்திருக்கும் நந்தி. பாசம் என்பது நந்தியை தொடர்ந்து பின்புறமிருக்கும் பலிபீடம்.
நம் உடலில் உள்ள உயிராகிய பசு, பதியாகிய இறையை அடைய விரும்பினால், தன்னை கட்டி இருக்கும் பாசமாகிய பற்றை விலக்க வேண்டும்.
பதிபசு பாசம் பயில்வியா நித்தம்
பதிபசு பாசம் பயில்வோர்க்கு ஆறாக்கி
பதிபசு பாசத்தைப் பற்றுஅற நீக்கும்
பதிபசு பாசம் பயில நிலாவே.
- திருமந்திரம் 2412
இடையறாது இறைநிலை தியானம் பயில்வோர்க்கு, பற்றினை அறுத்து, இறைவனை அடையும் வழிதனை தியானம் காட்டும்.
பாசத்தை வேரறுக்கும் பசு, பதியை சென்றடையும்.