இயற்கைப்பேருண்மை
இருக்குறதெல்லாம் பொதுவாய்ப்போனால்
பதுக்குற வேலையும் இருக்காது
ஒதுக்குற வேலையும் இருக்காது
இருக்குறதெல்லாம் பொதுவாய்ப்போனால்
பதுக்குற வேலையும் இருக்காது
ஒதுக்குற வேலையும் இருக்காது
'கலி யுகம் முடியும் நேரம் வந்துவிட்டதா? உலகம் அழிந்து விடுமா?'
இந்த கேள்வி எல்லோருடைய மனதிலும் இன்றைக்கு பதிலில்லாமல் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
சிறு சிறு கிராமங்களும் தங்கள் எல்லைகளை மூடி, மனிதர்களை மூடிய கதவிற்குப்பின்னால் ஒளிந்து கொள்ள சொல்லிவிட்டது.
இயற்கையை வாழ்வாதாரமாக கொண்ட, புதிய மனிதப்பண்புகள் கொண்ட உயிரினம் தோன்றுவதற்கான எல்லா முன்நிகழ்வுகளும் பூமியில் நடக்க ஆரம்பித்து விட்டது. அது மனிதனாகவே இருக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது.
இறைவனால் படைக்கப்பட்ட உலகம் அழியாது; தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளும். அணுவினுக்கழிவில்லை என்னும் கோட்பாடுதான் இது. அணுவை பிளந்தாலோ, இணைத்தாலோ புதிய அணுக்கள் தோன்றுமே தவிர அழியாது.
Matter can neither be created nor destroyed - The first law of thermodynamics.
பதினெட்டாம் நூற்றாண்டிலேயே, ஜொனாதன் ஸ்விப்ட் எழுதிய [கல்லிவர்ஸ் ட்ராவல்ஸ்] நான்காம் புதினத்தில் குதிரைகள் மனித குணத்தோடு, இயற்கையோடு இணைந்த வாழ்க்கையின் அருமையை எழுதி உள்ளார்.
அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் மனிதன் ஆடிய ஆட்டத்திற்கு சம்மட்டி அடி மட்டுமல்ல, மனித இனமே மரபணு மாற்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. ஆறாம் அறிவை அப்படியே அடித்து சாய்த்து மனிதன் ஐந்தறிவுடன் வாழும் காலம் வெகு விரைவில் என்பது அப்பட்டமாக நம் கண் முன்னே தெரிகிறது.
வான எல்லைகளை சொந்தம் கொண்டோம். நெருப்பு சக்தியை விற்று காசாக்கினோம். நீரினை வியாபாரமாக்கினோம். நிலத்தை நாமே ஆண்டனுபவிக்க அளந்து, சந்ததி சந்ததியாக சொத்தெழுதி வைத்தோம். காற்றினை கையகப்படுத்துமுன் இயற்கை முந்திக்கொண்டு விட்டது.
பூமியெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காற்றினை சுவாசிக்க முடியாத அளவிற்கு பெருந்தொற்றை பெற்றிருக்கிறோம். பஞ்சபூதங்களை மிக சாதாரணமாக எண்ணினோம், அதற்கான பரிசு கிடைத்துவிட்டது.
புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப் பட்டார்களும் அன்பிலர் ஆனார்
கொடை இல்லை கோள்இல்லை கொண்டாட்டம் இல்லை
நடைஇல்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே.
- திருமந்திரம் 209
கிழிந்து போன புடவை போலானது மனித வாழ்வு. உற்றார்களும், உறவினர்களும் அன்பு செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள். கொடுத்துதவுபவர்கள் யாருமில்லை. ஐம்புலன்கள் சரியாக இயங்காமல் மனம் நோய் கொண்டுவிட்டது. எந்த மனமகிழ்வு தரும் கொண்டாட்டங்கள் இல்லை. இதுநாள் வரை, கட்டி காத்து வந்த பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் என்ற நடைமுறை மாறி, பூமியில் வாழுகின்றவர்கள் தன்மை மாறி விடும்.