நல்ல நேரம்
ஆயிரம்தான் வாழ்வில் வரும்
நிம்மதி வருவதில்லை
நிம்மதி வருவதில்லை
'கோவிட்தான் வாழ்வில் வரும்
நிம்மதி வருவதில்லை'
அனிச்சையாக ரீமிக்ஸ் பண்ணி பாடி சந்தோசப்பட்டுக்கொண்ட சுந்தர், மிக சிறப்பாக தமிழாக்கம் செய்யப்பட்ட பட்டாம்பூச்சி நாவலில் மூழ்கி இருந்தான்.
'தனிமை சிறையில் அடைக்கப்பட்ட பட்டாம்பூச்சி, தன்னிலை மறக்காமல் இருக்க அந்த குறுகிய இருட்டறையில் தொடர்ந்து நடப்பதை வழக்கமாக்கிக்கொண்டான்.'
'சிறையில் இருந்து வெளியே வந்த பட்டாம்பூச்சிக்கு வெளிச்சத்தை பார்க்க முடியவில்லை. அறையில் நடந்த எட்டுகளுக்குமேல் கால் நடக்க மறுத்தது.'
'ஏங்க, எப்படி உங்களால மட்டும் சும்மாவே இருக்க முடியுது. சகிக்கல, ஆம்பள வீட்டுலயே முட்ட வச்சிட்டு இருக்கிறது. வாஷிங் மெஷின்ல இருக்கிற துணிய எடுத்து காயப்போடுங்க. கொஞ்சம் ஒடம்பு வளையட்டும்'- சித்ரா என்ற சித்ராங்கியின் சித்ரவதை தாங்க முடியவில்லை சுந்தருக்கு.
'கொரோனா வேணுமா சித்ரா வேணுமான்னு கேட்டா, என்னுடைய ஓட்டு கொரோனாவுக்கே'- முனகிட்டே துணி காயப்போட போனான் சுந்தர்.
கொரோனா லாக் டௌன். வேலை இல்லை. ரொம்ப நாளா படிக்கணும்னு இருந்த ஒரு நாவலை படிக்க விடமாட்டேங்குறாளே, ராக்ஷசி.
நாள் தவறாமல் காலை எழ வேண்டியது, எந்த வேலையும் செய்யாமல் மாலை வரை நாளை ஓட்ட வேண்டியது, மறுபடியும் தூங்க வேண்டியது. ஓய்வெடுத்து, ஓய்வெடுத்து ஓய்ந்து போய் மறுபடியும் ஓய்வெடுப்பது. இத்தகையவரைக்கண்டால் இறைவனும் கோபம் கொள்வான். இதிலிருந்து வெளியேறி தத்தம் வாழ்நாளின் கடமையை செய்ய நினைப்பவர்க்கு இன்பம் அருளுவான்.
காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலும் அவ்வீசன் சலவியன் ஆகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம் செய்தானே.
- திருமந்திரம் 182
No comments:
Post a Comment