தருமம் செய்யவும் விருப்பத்துடன். இதைத்தான் நமக்கு சொல்லி தந்தார்கள்.
ஆனால்,
அறம் என்றால் என்ன?
அறம் என்றால் என்ன? என்ற வினா எழுப்பினால் அதற்கு விடை காண்பது கடினமானது. அறம் என்ற சொல்லின் பொருள் என்ன? ‘அறு’ என்ற வினைச்சொல் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல். இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்னும் சொல்லிற்குப் பின்வருமாறு விளக்கம் கூறலாம்.
மேலும் படிக்க கீழ்கண்ட இணைய பக்கத்திற்கு செல்லவும்:
திருக்குறளில் உள்ள அறன் வலியுறுத்தல் [31-40] பாடல்கள், மேற்குறிப்பிட்ட பொருளுடன் விளங்கிக்கொள்ள சிறப்பாக உள்ளது.
அறவழியில் வாழ்பவனுக்கு, பொறாமை, பேராவல் அதாவது காமம், கோபம் கொண்டு வெகுண்டெழுதல் மற்றும் கடு மையான வார்த்தைகளை கொண்டு பேசுதல் அவன் அறவாழ்வின் எதிரிகளாகும்.
ஏனோ இந்த எண்ணம் மனதில், அம்மா இல்லாத உலகம் எப்படி இருக்கும்? என்னால் அதை தாங்கிக்கொண்டிருக்க முடியுமா?
என்னுடைய முழு உலகம் அம்மா மட்டுமே!
ஆனால், அம்மாவின் உலகம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறது.
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து காட்டிற்கு சென்று விறகு சேகரிக்கிறாள். மதிய உணவு சமையலின்போதே, நெசவு செய்வதற்கான துணை வேலைகளை செய்கிறாள். மதியமும், மாலையும் அடுத்தவர் வீட்டு நெசவு தொழிலுக்கு துணை வேலை செய்கிறாள். கூடவே, வீட்டில் இருக்கும் பால் தரும் எருமைக்கு தேவையான நீர், புல்லை கொடுக்கிறாள். வீட்டை சுத்தம் செய்வதில் இருந்து, தன்னுடைய ஏழு குழந்தைகளுக்கான தேவைகளை புரிந்து செய்கிறாள். எத்தனை மணிக்கு தூங்க செல்வாள் என்று எனக்கு தெரியாது.
கணவனின் ஆதரவில்லாமல், சரியான நிதி ஆதாரமில்லாமல், சொந்த வீடில்லாமல் இது எப்படி சாத்தியம்?
பால்யமணம் புரிந்து தனித்திருந்த பெரியம்மா எங்களுக்கு வீட்டை கொடுத்து, ஆதரவாக இருந்தது மலையளவு பலம் அப்போது.
பன்னிரண்டாவது வயதில், பழத்தோட்டம் பேருந்து நிறுத்தத்தில், என்னை அரசு விடுதியில் தங்கி படிக்க அனுப்பும்போது அம்மாவின் கண்களில் வழிந்தது கண்ணீர். இன்றைக்கு அந்த கண்ணீருக்கு ஆயிரம் பொருள் சொல்ல முடியும் என்னால். அன்றைக்கு, படிக்கத்தானே போகிறேன், எதற்கு அழணும் என்றே நினைத்தேன்.
அரசு விடுதி.
பிற்படுத்தப்பட்டோர் வரிசையில் போராடி எனக்கும் ஓரிடம் கிடைத்தது. படிப்பில் போராட வேண்டியதாக இல்லை. வகுப்பில் முதல் இடம் என்பது நான் முயற்சிகள் செய்யாமலே கிடைத்தது, ஆச்சர்யம். அதுவரை ஆறாம் வகுப்பு வரை நான் படித்த பள்ளியில், முதலிடம் பிடிக்க கடின முயற்சி தேவைப்பட்டது. இங்கோ, என்னுடன் படித்த மாணவர்கள், வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் அதிகமாக படிப்பை பற்றி அலட்டிக்கொள்ளவில்லை என்பதும் உண்மை.
ஆனால், அதிகம் போராட வேண்டி இருந்தது பசி இல்லாமல் இருப்பதற்கு. அதைவிட கொடுமை, சக மாணவர்களின் சகிக்க முடியாத பழக்க வழக்கங்கள். இரண்டும்கெட்டான் பருவத்தில் கொடுக்கப்பட்ட தகாத புத்தகங்கள். இயற்கையாக உடலில் ஏற்பட்ட வளர்ச்சியின் மாற்றங்கள்.
என் உலகம் அம்மாவை விட்டு தனியாக வளர ஆரம்பித்தது.
பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரி நாட்கள்.
மீண்டும் அம்மாவுடன்.
வறுமை தேவதையின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது வீடு. இரு சகோதரர்களின் சொற்ப வருமானம். அதுவும், வேலை நிறுத்தம், அது இதுவென்று முழுமையாக வீடு வந்து சேராது.
அம்மாவின் உழைப்பு நின்றபாடில்லை; கொஞ்சம் குறைந்திருந்தது. இயலாமையில் வரும் வார்த்தைகளின் வெப்பம் அதிகம் என்னை சுடும்.
எதற்கு எங்களை பெற்றாய்?
யாரும் தன் அம்மாவிடம் கேட்டுவிடக்கூடாத கேள்வி. கேட்டு விட்டேன். விவரமறிந்து கேட்டேனா அல்லது வெறுப்பின் உச்சியில் இருந்து கேட்டேனா தெரியாது. இன்றைக்கும் என்னை கூனிக்குறுக வைக்கிறது அந்த வார்த்தைகள்.
வேலையில்லாப்பட்டதாரி.
கல்லூரி முடித்து ஒன்றரை வருடங்கள். யார் எதை பேசினாலும், என்னை நோக்கியே பேசுவதாக அர்த்தம் வருகிறது. வாழ்க்கையே அர்த்தம் அற்றதாக தோன்றும்போது, உறவுகள் அனைத்தும் கசப்புதானே.
ஒரு வாரம் முழுக்க உண்ணா நோன்பு, உள்ளுக்குள் அழுதுகொண்டே. அம்மாவுக்கு தெரியும் நான் பண்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்று.
என் வெறுமைக்குள் அம்மாவும் அன்று.
வாழ்வில் வசந்தம் வரவும், வளரவும் செய்தது வங்கிப்பணி. இருபது ஆண்டுகள் ஓடி மறைந்தது.
மீண்டும் இருபது ஆண்டுகள் ஓடி மறைந்தது. ஞாயிற்று கிழமைகளில் அம்மாவுடன் மகிழ்வுடன்.
'எல்லாம் வெறுத்துவிட்டது, இந்த மீன் சாப்பிடுவதில் மட்டும் ஆசை இருக்கிறது.'
அம்மாவின் நினைவாக மீன் படையலிட்டு, அம்மாவை என் கண்கண்ட தெய்வமாக வணங்குகிறேன்.
[17-04-2018 என்னையும், மண்ணையும் விட்டு பிரிந்த அம்மாவின் நினைவாக]
மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள அத்துள்ளே வாழும் அரசரும் அஞ்சுள்ள அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன் மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.
- திருமந்திரம் 189
மத்தளம் போன்ற உடல் ஒன்றிருக்கிறது. அந்த மத்தளத்தை வாசிக்கும் தாளங்களாக இடது மற்றும் வலது சுவாசம் உள்ளது. அந்த உடலை ஐம்புலன்கள் அரசாட்சி செய்கின்றது. அரசராக உயிர் இருக்கிறது. அரசன் நீங்கி விட்டால், மண் வளர்த்த அந்த உடல் மண்ணிலே மறைந்துவிடுகிறது..
பிறந்ததொன்று நிலைப்பதில்லை. யாரும் இதில் விதி விலக்கில்லை.
காலை ஆறுமணி வாக்கில் பூங்காற்று வீசும். அதுவும் ஒரு ஐந்திலிருந்து பத்து நிமிடம் மட்டுமே. அதை தென்றல் என்று சொல்லி ஒதுக்கி விட முடியாது. அதனினும் மென்மை மற்றும் மேன்மையானது.
நடைப்பயிற்சியில் ஏற்படும் களைப்பை களைந்து உடனடி உற்சாகத்தை தரக்கூடியது. ஒவ்வொரு நாளும் இந்த அனுபவத்திற்காகவே காலை நடைப்பயிற்சியில் எனக்கு ஆர்வம் அதிகம்.
லேசாக வியர்த்திருக்கும் உடலுக்கு, அந்த காலை இளங்காற்று சுகமாக இருக்கும்.
உழைப்பில் ஈடுபடும்போதோ, வெளியில் வெப்பம் அதிகமானாலோ வியர்த்து, உடல் வியர்வையை வெளியேற்றுகிறது.
இது எதனால், எப்படி என்று பார்ப்போம்.
சாதாரணமாக உடலின் வெப்ப நிலை சற்றேறக்குறைய 98.6 F டிகிரி அல்லது 36.4 C டிகிரி அளவில் இருக்கும். இந்த உடலின் வெப்பத்தில் மாற்றம் ஏற்பட்டால் உடல் தன் வெப்ப சமனத்தன்மை பெறுவதற்கு சில காரியங்களை செய்யும். அவற்றில் ஒன்று வியர்வை.
அது தவறும் பட்சத்தில், அதிக வெப்ப நிலை என்பது காய்ச்சலாகவும், குறைந்த வெப்ப நிலை உடலில் ஜன்னியாகவும் அறிகிறோம்.
சரி, உடலின் வெப்பம், உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை சீராக எப்படி இருக்கிறது. வயிற்றில் [மணிப்பூரகம்] வெப்பம் உண்டாகிறதென்றால், உச்சந்தலைக்கோ, உள்ளங்காலுக்கோ செல்வதற்குள் குளிர்ந்து விடாதோ?
அவ்வண்ணமே, சூரியனில் உண்டாகும் வெப்பம், சூரியக்கதிர்களாக உறைபனிக்கும் மிகக்குறைந்த வெப்ப மண்டலத்தை கடந்தும் பூமிக்கு எப்படி வெப்பம் கொடுக்கிறது. விமானப்பயணத்தின்போது கவனித்திருக்கலாம், விமானம் உயரப்பறக்கும்போது, வெளி வெப்பநிலை மைனஸ் 50 டிகிரிக்கும் கீழே இருக்கும். இந்த வெப்ப நிலை உறைபனிக்கும் குறைவானது. இக்குளிர் வெளியை கடக்கும்போது குளிர்வடைந்த சூரியக்கதிர்கள், எப்படி வெப்பம் பெற்று பூமிக்கு வெப்பத்தை கொடுக்கிறது?
அவை எப்படி சாத்தியம் என்று பார்ப்போம்.
உடலில் உள்ள ஒவ்வொரு சிற்றறையும், சக்தியை எரிக்கும் கொதிகலனாக இருக்கிறது. சிற்றறையில் உள்ள சக்தியானது அங்கேயே எரிக்கப்படும்போது உடலுக்கு தேவையான வெப்பம் சமச்சீராக கிடைக்கிறது.
அதே போன்று, சூரியக்கதிர் பூமி மண்டலத்தை அடையும்பொழுது, புவிஈர்ப்பு காந்த மண்டலத்துடன் சேர்ந்து வேதி மாற்றம் பெற்று வெப்பத்தை கொடுக்கிறது. புவி ஈர்ப்பு அதிகம் உள்ள பூமத்திய ரேகை பிரதேசங்களில் வெப்பம் கூடுதலாக உள்ளது.
உயிர்கள் இந்த மண்ணில் வாழ மூன்று வகையான வெப்பம் உடலுக்கு தேவைப்படுகிறது. அவைகளை, உயிர்க்கனல், இறைக்கனல் மற்றும் புறக்கனல் எனப்பிரித்தறியலாம்.
1. உயிர்க்கனல்
உயிர்க்கனலை மூலக்கனல் என்றும் அறியலாம். மூலாதாரத்தில் இருந்து எழும் நெருப்பானது மணிப்பூரகத்தில் வெளிப்பட்டு நாம் உண்ணும் உணவை ஜீரணிக்க உதவுகிறது. மேலும் உணவில் இருந்து கிடைக்கும் ஏழு வகை சத்துக்களை உடலின் அதனதன் பகுதிகளுக்கு அனுப்பி வைக்க உந்துதலாகவும் இருக்கிறது.
மூலாதாரத்தில் நெருப்பை யார் வைத்தது?
வேயின் எழுங்கனல் போலஇம் மெய்எனும் கோயில் இருந்து குடிகொண்ட கோன்நந்தி தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும் தோயமதாய் எழும் சூரியன் ஆமே.
- திருமந்திரம் 116
மூங்கில்கள் உரசிக்கொள்ளும்போது நெருப்பு உண்டாகும். அவ்வண்ணமே மனித உடலில் ஜீவாத்மாவாக குடிகொண்டுள்ள பரமாத்மா, கடலில் இருந்து எழும் சூரியன் போல, தாயின் பரிவுடன் மும்மலங்களை அகற்றி, உயிர்க்கனலாக எழுகிறான்.
2. இறைக்கனல்
உடலில் உயிர் இருக்கும்வரை மூச்சுக்காற்றின் மூலம் இறைக்கனல் உடலில் பாய்ந்துகொண்டே இருக்கும். இக்கனலே, உயிர்க்கனல் உடலின் சிற்றறைகளில் சேமித்து வைத்த சக்தியை எரிக்க உதவும் நெருப்பு பொறி ஆகும். இறைக்கனலின் தன்மையால் சக்தி எரிக்கப்பட்டு உடல் இயங்குவதற்கான ஆற்றல் கிடைக்கிறது.
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல் சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.
- திருமந்திரம் 117
குவிக்கப்பட்ட சூரியக்கனல் பஞ்சை எரித்துவிடும். ஆனால், உடலை எப்பொழுதும் சுற்றிவரும் இறைக்கனல் உடலை எரிப்பதில்லை. [மாறாக உணவில் இருந்து சிற்றறையில் சேமிக்கப்பட்ட சத்தினை எரிக்கும் பொறியாக அமைகிறது.] இவ்விறைக்கனலின் தன்மையை உணர்ந்து கொண்டவர்களின் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள், சூரியக்கனல் குவியலின் முன்னர் இருக்கும் பஞ்சு எரிவதுபோல் எரிந்துவிடும்.
3. புறக்கனல்
புறக்கனல் என்பது சூரியனில் இருந்து பூமிக்கு கிடைக்கும் வெப்பம் ஆகும். இந்த வெப்பமானது, இடத்திற்கேற்பவும், காலத்திற்கேற்பவும் மாறுபடுகிறது.
நம் உடல் சூரிய வெப்ப நிலைக்கேற்ப தன்னைத்தானே சமச்சீர் நிலையில் வைத்துக்கொள்கிறது. வெளியில் வெப்பம் அதிகமானால், உடலில் உள்ள நீர் வியர்வையாக மாறி உடலை குளிர்விக்கிறது. அதே சமயம், குளிர் அதிகம் உள்ள காலத்தில், சிற்றறைகளில் உண்டாகும் வெப்பம் கூடுதலாகி உடலை வெப்பமாக வைத்துக்கொள்கிறது.
அங்கிமிகாமை வைத்தான் உலகு ஏழையும் எங்குமிகாமை வைத்தான் உடல் வைத்தான் தங்கிமிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம் பொங்கிமிகாமை வைத்தான் பொருள் தானுமே.
- திருமந்திரம் 87
ஏழுலகைப் படைத்த இறைவன் எங்கும் வெப்பத்தை தேவையான அளவு வைத்தான். அவ்வண்ணமே உடலைப்படைத்த இறைவன், அதிகமான வெப்பம் உடலில் தங்காமல் இருக்குமாறு பார்த்துக்கொண்டான். இவற்றின் பொருளை அறிந்துகொள்ள, தமிழ் சாத்திரம் என்னும் திருமந்திரத்தையும் தேவையான பொருள் தரும்படி அளவுடன் படைத்தருளினான்.
எப்படியாவது இந்த பாடலை புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என்னைத் தொற்றிக்கொண்டது.
தமிழ் பாட்டுதானே!
திருக்குறள், திருமந்திரம், போகர் பாடல்கள், பாம்பாட்டி சித்தர் பாடல்கள், சௌமிய சாகரம் படித்து ஓரளவிற்கு என்னுடைய அறிவுக்கு எட்டியவரை தமிழை புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன். அப்பப்ப புறநானூறு கூட படிக்கிறேன், ஆனால் LKG, UKG அளவுகூட புரிதல் இல்லை.
திரும்ப திரும்ப இந்த பாடலின் வரிகளை படித்த பின்புதான் தெரிந்தது. இது கற்காலத்திற்கு முற்பட்ட தமிழ் என்று. ஒருவேளை, குமரிக்கண்டம் கடலில் மூழ்காமல் போயிருந்தால் இந்த பாடலுக்கான அகராதி கிடைத்திருக்கலாம்.
அதுக்கு முந்தினதாம் இது:
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி!
புறப்பொருள் வெண்பா மாலை -ன்னு ஒரு இலக்கண நூல்; 9th CE! சங்கத் தமிழ்-ல்லாம் இல்ல.. ரொம்ப பிந்தி!
நன்றி: puliththiral blog
அரபி, ஆங்கிலம், நவீன தமிழ் மற்றும் இவைகளின் கலவை. கூடவே வட நாட்டின் ஹோலி பண்டிகை வேறு.
ஹலமிதி அபி வந்தாளே - அரபி + தமிழ்
ஹோலி ஹோலி பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி - ஹிந்தி + தமிழ்
ஓ க்யூட்டி நீ ஸ்வீட்டி உன் பியூட்டி அதில் மாட்டி - ஆங்கிலம் + தமிழ்
தமிழைத்தேடினேன்.
என் வயசுக்குள்ளே முதல் மழையா ஃபீல வச்சானே.
ரொம்பவுமே ஃபீல் ஆயிட்டேன், இந்த வரிகளை படிச்சதும். என்னமா எழுதி இருக்காங்க.
கவியரசு கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டையார் கோட்டை விட்டதை புடிச்சிட்டாங்க.
தமிழில் உள்ள 51 சிறப்பெழுத்துக்களை தவிர்த்து சுத்த தமிழில் எழுதுவோம் என்று தமிழில் எழுதும்போது நாம் எடுக்கும் முயற்சி என்ன? இப்படிப்பட்ட தமிழ் - ஆங்கிலம் - அரபி கலவையில் தமிழுக்கு சிறப்பு செய்யும் கூட்டம் என்ன?
இந்த சிறப்பெழுத்துக்கள் தமிழ் அல்ல என்று சொல்பவர்களால், இன்றைய தமிழக முதல்வரின் பெயரை தமிழில் எழுத முடியுமா, உச்சரிப்பு மாறாமல்.
முடியாது.
இந்த 51 தமிழின் சிறப்பெழுத்துக்கள் நம் உடலில் உள்ள ஆறு ஆதார சக்கரங்களில், தாமரை இதழ்களாக இருக்கிறது.
ஆறந்த முங்கூடி யாகும் உடம்பினிற் கூறிய வாதார மற்றுங் குறிக்கொண்மின் ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலாக ஊறிய வாதாரத் தோரெழுத் தாமே.
நீ தருவாயோ நான் தருவேனோ யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல..
கலப்பினத்தமிழ்
கலப்பின மாடுகள் அதிக பால் தருமே தவிர, நாட்டு பசுக்களிடம் இருந்து கிடைக்கும் பாலில் உள்ள உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஊட்ட சத்துகள் இருக்காது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நாம் அனைவரும் பகிர்ந்து கொண்ட செய்தி இது.
இதே வழியில், படிப்படியாக நம் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்து, தமிழர்களை வட்டாரத்தமிழ்வாசிகளாக்கி விட்டார்கள்.
கோவைத்தமிழ், மதுரைத்தமிழ், நெல்லைத்தமிழ், சென்னைத்தமிழ் மற்றும் வெளி நாடுகளைப்பொறுத்த மட்டில் நாட்டுக்கொரு வட்டார வழக்கு.
இதில் சென்னைத்தமிழ் அந்த மண்வாசனை உள்ளவர்களுக்கு மட்டும் எளிது.
'சார்.. தியாகராஜ பாகவதர் காலத்திய படங்களில் பேசுற தமிழ் சுத்தமா புரியாது'
'மனோகரா படத்தில் கண்ணாம்பா சூப்பரா வசனம் பேசுவாங்க. ஆனா, எனக்குதான் ஒண்ணுமே புரியாது'
' எண்பது, தொண்ணூறுகளில் வந்த படங்கள் ஓரளவு புரியுது. எல்லாம் பாட்டுக்காக பாப்போம்'
'அப்பா.. பாட்ட மாத்துங்க. ஒரே அழுகை அழுகையா வருது, இந்த பாட்ட கேட்டா' - இது புதிய தலைமுறை.
இப்ப எல்லாம், 'ஊ சொல்றியா மாமா.. ஊ ஊ சொல்றியா மாமா' - இதுதான் தமிழில் டாப் டக்கர் பாட்டு.
வழக்குத்தமிழில் பேசும்போது பாதிக்குமேல் ஆங்கிலத்தில் பேசினாலோ அல்லது எழுதும்போது ஆங்கிலம் கலந்து எழுதினாலோ மட்டுமே சொல்ல வந்த கருத்தை எளிதில் சொல்ல முடிகிறது.
ரொம்ப காலமா இதே சிந்தனை. எங்கே, நம்மை கலப்பினத்தமிழுக்கு மாற்றினார்கள் என்று.
எனக்கு மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கிலம் அறிமுகம், அதாவது ஒன்பதாவது வயதில். இது அரை நூற்றாண்டிற்கு முந்தைய நிலை. இன்றைக்கு, கருவில் உள்ள குழந்தைக்கு, பள்ளியில் முதல் மாணவனாக வர பயிற்சி. சொல்லவே வேண்டாம், இவர்கள்தான், தமிழுக்கு ஆதரவு தந்து தமிழில் படிக்க வைப்பார்கள் என்று.
எனக்கு இலக்கணம், செய்யுள் பாடங்கள் சொல்லி தந்தார்கள். உரை நடையிலும், செய்யுள்களிலும் வரும் இலக்கண மரபுகளை அறிமுகப்படுத்தி இருந்தார்கள். தமிழ் கற்பதற்கான ஆர்வம் ஏற்பட வழி இருந்தது.
இரண்டாம் வகுப்பு செல்லும்போது, என்னால் 'கன்னித்தீவு' படிக்க முடிந்தது.
என்னுடைய இந்த எழுத்துக்கள் எல்லாம் அன்றைக்கு எனக்கு கிடைத்த தமிழ் ஆசிரியர்களின் ஆசீர்வாதமே. எழுத்துப்பிழைகளை தவிர்க்க முடிவதும் எனக்கு கிடைத்த வரமே.
நான் பெற்ற பெரும்பாக்கியம், திருமந்திரம் போன்ற தெய்வத்திருமறைதனை, என் அறிவுநிலைக்கு ஏற்ப புரிந்து எழுத முடிவது.
திருமந்திரம் என்பது ஒவ்வொருவரின் அறிவு நிலைக்கு ஏற்ப பொருள் கொடுக்கும் அற்புதமான தமிழ்ப்புதையல். இதனை படிக்கவோ, புரிந்து கொள்ள எண்ணுவதோ, புரிந்து மற்றவர்களுக்கு சொல்வதோ அவரவர் பூர்வ ஜென்ம புண்ணியமே.
இதோ ஒரு எடுத்துக்காட்டு:
'நான் யார்?' என்று எண்ணும்போது, உடல் மற்றும் உயிர் என்பது நான் என்னும் இரண்டான உண்மை. உடலோடு உயிரும், உயிரோடு உடலும் ஒன்றி இருப்பதைக்கண்டு, இவை இரண்டும் ஒன்றுதான் என்று அறிகிறேன். நான் உடல் என்ற நினைவில் உள்ள மனதினை, மலராக உயிருக்கு சமர்ப்பித்தால், உடலும், உயிரும் ஒன்றென்று ஆகிவிடும்.
தான்என்று அவன்என்று இரண்டாகும் தத்துவம் தான்என்று அவன்என்று இரண்டும் தனிற்கண்டு தான்என்று பூவை அவன்அடி சாத்தினால் நான்என்ற அவன்என்கை நல்லது ஒன்றன்றே.
- திருமந்திரம் 1607
இப்ப பாருங்க ஒன்றும், ஒன்றும் ஒன்றாகிவிட்டது.
கவியரசர் கண்ணதாசன் எதை எண்ணி இந்த திரைப்பாடலை எழுதினாரோ தெரியாது. உடலுக்கும், உயிருக்குமான பாடலாக பார்த்தால் அப்படியே ஒன்றுடன் ஒன்றாகி ஒன்றிவிட்டது.
1. பஞ்ச பூதங்கள் என சொல்லப்படும், நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் இவற்றால் ஆன உடலில் உள்ள ஐம்புலன்களின் தன்மைதான் முதல் இருட்டு.
- இதனை புரிந்து கொள்ள இயலாதவர்கள் கண்டதைப்பேசித் திரிவார்கள்.
2. அறிவு நிலை. கற்று, கேட்டு, அறிந்து, உணர்ந்து, விவாதித்து பெற்ற அறிவு நிலை இரண்டாம் இருள் நிலை. அறிவே இருளாக மாறிவிட்டது ஆன்மீகத்தில்.
- 64 கலைகள் கற்றிருந்தாலும் அவற்றை எரித்துவிட்டால் சித்தர் நிலை எய்தலாம்.
3. காற்று. சுவாசத்தின் போது உள்ளிழுக்கும் காற்றானது பத்து வகைகளாக பிரிக்கப்பட்டு, உடலில் உள்ள அனைத்து சிற்றறைகளுக்கும் சீராக சென்றிருப்பது மூன்றாம் பாழ்.
- காற்று உடலில் சமனத்தன்மை அற்றிருப்பதே அனைத்து உடல் உபாதைகளுக்கும் பிரதான காரணம்.
இம்மூன்று இருட்டினையும் உடலில் உயிர் உள்ளபோதே கடக்க முடிந்தால், அதுவே உயிர் இருக்கும் நிலையை அறிய செய்துவிடும். எமனையும் வெல்ல முடியும்.
முதல் இரண்டு இருட்டு நிலையை நாம் தியானத்தின் மூலம் கடக்க முடியும் என்றால், காற்றான மூன்றாம் இருளை பிராணாயாமப் பயிற்சியினால் வெல்ல முடியும்.
காற்று என்றால் என்னவென்று பார்ப்போம்.
கால் - காற்று
பாம்பறியுமாம் பாம்பின் கால்.
பாம்புக்கு காது என்று தனியாக அங்கம் இல்லை. கண்ணே காதாக செயல்படுகிறது. அதனால் பாம்பிற்கு இன்னொரு பெயர் கட்செவி.
ஒரு பாம்பின் சீறும் மூச்சுக்காற்றை மற்றொரு பாம்பு அறிந்து கொள்ளும் என்பதே பாம்பறியுமாம் பாம்பின் கால்.
காலன் - காற்றை ஆள்பவன், எமன்.
மனிதனுக்கு அளவிடப்பட்ட காற்றின் அளவு முடிந்தவுடன், உடலில் இருந்து உயிரை எடுத்துக்கொள்பவன்.
கால காலன் - காற்றினுள் காற்றாய் இருப்பவன், இறைவன்.
மனித மூச்சினில் பிராணனாய் இருந்து உயிர்களுக்கு அருள்பவன்.
உள்நின்று ஒளிரும் உளவாய் பிராணனும் விண்நின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும் மண்நின்று இயங்கும் வாயுவுமாய் நிற்கும் கண்நின்று இயங்கும் கருத்தவன் தானே.
- திருமந்திரம் 3040
மண்ணிலே காற்றாய் நிற்பவன் இறைவன். அவ்விறைவனே கதிரவனாகவும், உடலுக்குள் இயங்கும் பிராணனாகவும் இருக்கிறான்.
காலம் - காற்றினை மூச்சாய் கொண்டு உயிர் மண்ணில் வாழும் நாட்கள்.
முப்பாழையும் ஒருவனால் தாண்டி சமாதி நிலைக்கு செல்ல முடியுமானால், அவனே காலத்தை வென்றவன் ஆவான்.
பழம் நீயப்பா - ஞானப் பழம் நீயப்பா - தமிழ் ஞானப் பழம் நீயப்பா!
கண் முன்னே அற்புதம்.
ஒன்பது வகையான அரிய மூலிகை. ஒவ்வொன்றும் ஒரு வகையான விஷத்தன்மை கொண்டது. முறையாக கட்டி சேர்த்ததில் உருவான நவ பாஷாண சிலை; அது தருவதோ உடல் ஆரோக்கியத்திற்கான அருமருந்து. உலக அதிசயங்களில் ஒன்றாகி இருக்கும், சிலையின் அருமை தெரிந்த மக்களிடம் கிடைத்திருந்தால். நம்மிடம் இருப்பதாலோ என்னவோ, லட்சக்கணக்கான கடவுள் சிலைகளில் இதுவும் ஒன்றாகி விட்டது.
இரவில் சிலைக்கு சாற்றப்படும் சந்தனக்காப்பு, சிலையில் கசியும் நீரில் நனைந்து, காலையில் உண்ணக்கூடிய தன்மையில் சந்தனப்பிரசாதமாக வழங்கப்படுகிறது. சிலைக்கு நடத்தப்படும் அபிஷேகங்களும், உடலுக்கு ஊக்கம் தரும் பிரசாத மருந்தாகவே அமைகிறது.
நண்பகல் 12 மணி.
உச்சிகால பூஜை வேளையில் பழனி முருகன் சன்னிதானத்தில், நிற்கிறேன்.
அடிவாரத்தில் இருந்து யானைப்பாதையில் ஏறிய எனக்கு களைப்போ, வலியோ எதுவும் தோன்றவில்லை. மாறாக, என்னை யாரோ கீழிருந்து, உச்சிவரை தூக்கிக்கொண்டு வந்த மாதிரி ஒரு உற்சாகம். எத்தனையோ முறை மலை ஏறி இருந்தாலும் இது புது அனுபவம் எனக்கு.
படிகளில் ஏறி வரலாம்.
படிகளிலோ, யானைப்பாதையிலோ எற இயலாதவர்கள் வின்ச் எனப்படும் மலை ரயிலிலோ, குடை தூக்கிகளிலோ வரலாம்.
படிக்கட்டில் ஏறும்போது, மொட்டை அடித்து வரும் பால முருகன்கள், பால வள்ளிகள் செய்யும் குறும்புகள் நம்மை அவர்களுடைய குதூகலத்தில் இணைத்துவிடும்.
மலைக்கோயில் புனரமைப்பு நடப்பதால், வழக்கமான ஆரம்பப்படிகள் அடைக்கப்பட்டு, மலையின் இடதுபுறமிருந்து ஏறும் படிகள் ஆரம்பிக்கிறது.
புனரமைப்பு தொழிலாளர்கள் இந்தியில் பேசிக்கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
தஞ்சை பெரிய கோயிலும் இப்படித்தான் கட்டி இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். பல்லாயிரக்கணக்கான போர்க்கைதிகளால் கட்டப்பட்டது பெருவுடையார் கோயில். உற்றார், உறவினர்களை துறந்து, தோல்வி மனப்பான்மையால் கட்டப்பட்டதாலோ என்னவோ, இன்றளவும் அது ராஜராஜனின் நினைவிடமாகவே அமைந்து விட்டது.
வட நாட்டைப்பொறுத்த மட்டில், முருகன் என்ற கடவுளே அறிமுகம் இல்லாதவர். பிள்ளையாரின் அண்ணனாக அறியப்படும், மணமாகாத பிரம்மச்சாரி.
நம்ம மக்களும், கரசேவை செய்ய தங்க செங்கல் எடுத்து சென்று மதராஸிவாலாவாக வரிசையில் நின்று இப்படித்தான் பேசி இருப்பார்கள், ராமனைப்பற்றி. இன்றைக்கும், வட நாட்டினர்க்கு, இராவண வதம்தான் தீபாவளி.
மலைப்பாதை எங்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், இயற்கை உபாதையை கழிக்குமிடங்கள் என சுத்தமாகவே பராமரிக்கப்பட்டிருந்தது. இது பெரும்பாலான தென்னிந்திய கோயில்களில் இல்லாத வசதி.
தரும தரிசனம், பத்து ருபாய் கட்டணம், நூறு ருபாய் சிறப்பு கட்டணம் என தனித்தனி வரிசைகள். இவ்வளவு மக்கள் கூட்டம் வந்து செல்லும் ஒரு பொது இடத்தை சுத்தமாக பராமரிக்க இதுபோன்ற கட்டமைப்பு மிகவும் அவசியம் என்றே தோன்றியது.
இந்த அதிசய சிலை போன்று இன்னொன்று இவ்வுலகில் கிடைக்க வாய்ப்பே இல்லை. போகர் சித்தர், செய்த மூன்று சிலைகளில் ஒன்று விஷமாகி அருகில் உள்ள மலைக்கோயிலில் உள்ளது. அதன் பிரசாதத்தை பறவைகள் கூட எடுத்துக்கொள்வதில்லை அதன் விஷத்தன்மையால். மற்றொன்று, பழனி சிலை காலம் முடிந்ததும் தோன்றும் என்று சொல்லிக்கொள்கிறார்கள். பழனி தேவஸ்தானமும் அதை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.
வெளிப்பிரகாரத்தில் வலப்புறம் இருக்கும் போகரின் ஜீவ சமாதியை தரிசித்துவிட்டு அமரும்போது மணி ஒன்று.
நீண்ட நாள் ஆசை. குறைந்தது ஒரு மணி நேரமாவது அவர் நினைவில், ஜீவ சமாதி மண்டபத்தில் அமர வேண்டுமென்று. அது இன்றுதான் சாத்தியமாகியது.
அவர் பூஜித்த மரகத லிங்கம் இன்றளவும் பக்தர்களின் இறை வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. மரகத லிங்கத்திற்கு நேர் கீழே போகரின் ஜீவ சமாதியான இடம். அங்கிருந்து, முருகனை பூஜித்து வர குகைப்பாதை உள்ளதாக கூறுகிறார்கள்.
சரியாக புரிகிறதோ இல்லையோ, போகரின் 7000 பாடல் தொகுப்பை [சப்த காண்டம்] படிக்கும் வழக்கம் எனக்கு. பாட்டின் பொருளுடன் புத்தகம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றெண்ணினேன்.
போகர் தன் சீனப்பயணத்தின் போது, பெண்களின் உறவால் சக்தியை இழந்திருந்த பொது, காலாங்கி நாதர் என்னும் சித்தர் அவருக்கு மீண்டும் தன்னிலை உணரச்செய்தார். போகரின் சீடராக இருந்த புலிப்பாணி சித்தர், போகருக்கு அவர் பெற்றிருந்த அனைத்து சக்திகளையும் மீண்டும் பெற்றிட சொல்லித்தந்தார்.
இன்றளவும் புலிப்பாணி சித்தரின் வழித்தோன்றல்கள்தான் போகரின் ஜீவ சமாதியை பராமரித்து வருகிறார்கள். அடிவாரத்தில், புலிப்பாணி சித்தரின் ஆசிரமமும் இருக்கிறது.
'ஆசிரமத்தில், சப்த காண்டம் புத்தகம் கிடைக்கும். அங்கே கேட்டு பாருங்க' - போகர் சமாதியில் இருந்த அடியவர் கூறினார்.
மனதில் ஒரு திருப்தி.
'புக்ஸ் எல்லாம் தீந்திருச்சு. கீழே அப்புச்சி புக் ஸ்டாலில் கேட்டு பாருங்க. இல்லன்னா, பஸ் ஸ்டாண்டில் ஒரு பழைய புக் ஸ்டால் இருக்கு. அவங்க கிட்ட கிடைக்கும்' - இது ஆசிரமத்தில் கிடைத்த பதில்.
பஸ் ஸ்டாண்டில், தேவஸ்தானத்தின் பஞ்சாமிர்த ஸ்டால் இருக்கு. அங்கே பஞ்சாமிர்தம் வாங்கிக்கலாம்.
திருப்பதிக்கு லட்டு, திருநெல்வேலிக்கு அல்வா மாதிரி பழனிக்கு பஞ்சாமிர்தம். மலை வாழைப்பழம், பேரீச்சம்பழம்,நாட்டு சர்க்கரை, ஏலம், நெய் சேர்த்த அமிர்தம். மலை ஏறும் களைப்பிற்கு ஒரு ஸ்பூன் போதும்; களைப்பை போக்கி விடும்.
'சார்.. இங்கே புக் ஸ்டால் எங்கே இருக்கு'
'பாருங்க, அந்த முக்கு கடை'
நான்கைந்து பேரிடம் இதே பதிலைப்பெற்று, பஸ் நுழைவு வாயில் அருகில் இருந்த புக் ஸ்டாலுக்கு போனால்,
'அந்த மாதிரி புக்ஸ் எல்லாம் சென்னையில் மட்டும் கிடைக்கும். நீங்க மதுரையிலும் தேடி பாக்கலாம்'.
போங்கடா நீங்களும், உங்க கடைகளும்.
பழநி.
மனிதன் எண்ணி பார்க்க முடியாத அதிசய சிலை உள்ள அற்புத ஸ்தலம்.
அதை படைத்தவரின் ஒப்புதல் வாக்குமூலமாக அவர் எழுதிய புத்தகம்.
எங்கேயோ, தமிழ் ஆராய்ச்சி நிலையங்களில் செம்மொழி ஆய்வு நடத்தலாம். ஆனால், என்னைப்போன்ற வெகு சாதாரண மக்களுக்கு இது போன்ற புத்தகங்கள் எட்டாக்கனியானால், முருகன் மாதிரி நாமும் கோபித்துக்கொண்டு மலைமேல் உட்கார்ந்து விடலாம்.
நமக்கு தோண்டி பார்த்து பெருமை கொள்ளவேண்டியது நிறைய இருக்கு, கீழடி மாதிரி. இருப்பதை ஆய்ந்து அதன் பலனை அனுபவிக்க தெரியாது. ஏனென்றால் நமக்குத்தான் முன்னோர் தமிழ் தெரியாதே!