Thursday, February 3, 2022

காலத்தை வென்றவன்

காலத்தை வென்றவன் 
நீ.. 
காவியமானவன் 
நீ..


'டாக்டர், எப்படி சொல்றீங்க நான் உயிருடன் இல்லை என்று?' - ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வந்த டாக்டரை கேட்கிறேன்.

'இதோ உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். பேசுகிறேன். உங்களை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்'

டாக்டர் என் இருக்கையை  பார்த்துக்கொண்டிருந்தார், பேசவில்லை. அவர் பேசியதாக நினைத்துக்கொண்டு, அவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.

நான் உயிருடன் இருப்பதை அவருக்கு புரிய வைக்க வேண்டும். விபத்தில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நான் அமர்ந்திருக்கும் இருக்கையில், என் மீதே யாரோ அமர்கிறார்கள். ஒன்றும் புரியவில்லை. மெதுவாக வெளியே வருகிறேன்.

ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வரும் என் உடலைப்பார்க்கிறேன்.

யார் யாரோ,  என் உடலைப்பார்த்து அழுகிறார்கள். எல்லாரும் பனிமூட்டத்தின் இடையில்  இருப்பது போல் தோன்றுகிறார்கள்.

செத்துத்தான் போய்விட்டேன் போலிருக்கிறது.

அப்படியானால், இப்பொழுது நான் யார்?

உயிர் - வெறும் ஆன்மா.

உடலில் இருக்கும்வரை என்னால் உணர முடியாத ஆன்மா.

இந்நாள் வரைக்கும், ஏன் என்னால் உயிர் இருப்பதை அறிந்து அதன் தன்மையை உணர்ந்து  கொள்ள முடியவில்லை. 

அது எல்லோருக்கும் சாத்தியமில்லை.

ஏன் சாத்தியமில்லை?

உயிர் உடலில் இருக்கும்வரை அதனை மூன்று வகையான  இருள் சூழ்ந்திருக்கிறது.

பரிந்துபார் முதற்பாழில் பூதபூதம் புரியாதவன்தான் வாதியாவான் 
எரிந்துபாரண்டன்பாழ்தேதிட்டாக்க லெட்டெட்டு மறுபத்துநாலாஞ் சித்தன்
முரிந்துபார் மூணாம்பாழ்   புக்கினாக்கால் மூச்சான வாதுபது பிரந்ததானம் 
கரிந்துபார் நால்பரிஞ்ச போகுவிடங்கண்டால் எமனடுங்கிப்போவான் இடம்காட்டிடாமே.

                                                                                                                           - 142 போகர் 7000

1. பஞ்ச பூதங்கள் என சொல்லப்படும், நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் இவற்றால் ஆன உடலில் உள்ள ஐம்புலன்களின் தன்மைதான்  முதல் இருட்டு.

- இதனை புரிந்து கொள்ள இயலாதவர்கள் கண்டதைப்பேசித் திரிவார்கள்.

2. அறிவு நிலை. கற்று, கேட்டு, அறிந்து, உணர்ந்து, விவாதித்து பெற்ற  அறிவு நிலை இரண்டாம் இருள் நிலை. அறிவே இருளாக மாறிவிட்டது ஆன்மீகத்தில்.

- 64 கலைகள் கற்றிருந்தாலும் அவற்றை எரித்துவிட்டால் சித்தர் நிலை எய்தலாம்.

3. காற்று. சுவாசத்தின் போது உள்ளிழுக்கும் காற்றானது பத்து வகைகளாக பிரிக்கப்பட்டு, உடலில் உள்ள அனைத்து சிற்றறைகளுக்கும் சீராக சென்றிருப்பது  மூன்றாம் பாழ். 

- காற்று  உடலில் சமனத்தன்மை அற்றிருப்பதே அனைத்து உடல் உபாதைகளுக்கும் பிரதான காரணம். 

இம்மூன்று இருட்டினையும் உடலில் உயிர் உள்ளபோதே கடக்க முடிந்தால், அதுவே உயிர் இருக்கும் நிலையை அறிய செய்துவிடும். எமனையும் வெல்ல முடியும்.

முதல் இரண்டு இருட்டு நிலையை நாம் தியானத்தின் மூலம் கடக்க முடியும் என்றால், காற்றான  மூன்றாம் இருளை பிராணாயாமப் பயிற்சியினால் வெல்ல முடியும்.

காற்று என்றால் என்னவென்று பார்ப்போம்.

கால் - காற்று 

பாம்பறியுமாம் பாம்பின் கால். 

பாம்புக்கு காது என்று தனியாக அங்கம் இல்லை. கண்ணே காதாக செயல்படுகிறது. அதனால் பாம்பிற்கு  இன்னொரு பெயர் கட்செவி.  

ஒரு பாம்பின் சீறும் மூச்சுக்காற்றை மற்றொரு பாம்பு அறிந்து கொள்ளும் என்பதே பாம்பறியுமாம் பாம்பின் கால்.

காலன்  - காற்றை ஆள்பவன், எமன்.

மனிதனுக்கு அளவிடப்பட்ட காற்றின் அளவு முடிந்தவுடன், உடலில் இருந்து உயிரை எடுத்துக்கொள்பவன்.

கால காலன் - காற்றினுள் காற்றாய் இருப்பவன், இறைவன்.

மனித மூச்சினில் பிராணனாய் இருந்து உயிர்களுக்கு அருள்பவன்.

உள்நின்று ஒளிரும் உளவாய் பிராணனும் 
விண்நின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும் 
மண்நின்று இயங்கும் வாயுவுமாய் நிற்கும் 
கண்நின்று இயங்கும் கருத்தவன் தானே.

                                                                                                                    - திருமந்திரம் 3040

மண்ணிலே காற்றாய் நிற்பவன் இறைவன். அவ்விறைவனே கதிரவனாகவும், உடலுக்குள் இயங்கும் பிராணனாகவும் இருக்கிறான்.

காலம் - காற்றினை மூச்சாய் கொண்டு உயிர் மண்ணில் வாழும் நாட்கள்.

முப்பாழையும் ஒருவனால் தாண்டி சமாதி நிலைக்கு செல்ல முடியுமானால், அவனே  காலத்தை வென்றவன் ஆவான்.



No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...