Wednesday, February 9, 2022

ஒன்றும் ஒன்றும் ஒன்று

ஒன்றும் ஒன்றும் ஒன்று 

நீ தருவாயோ நான் தருவேனோ 
யார் தந்த போதும் 
நீயும் நானும் வேறல்ல..

    


கலப்பினத்தமிழ் 

கலப்பின மாடுகள் அதிக பால் தருமே தவிர, நாட்டு பசுக்களிடம் இருந்து கிடைக்கும் பாலில் உள்ள உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஊட்ட சத்துகள் இருக்காது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நாம் அனைவரும் பகிர்ந்து கொண்ட செய்தி இது.

இதே வழியில்,  படிப்படியாக நம் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்து, தமிழர்களை வட்டாரத்தமிழ்வாசிகளாக்கி விட்டார்கள்.

கோவைத்தமிழ், மதுரைத்தமிழ், நெல்லைத்தமிழ், சென்னைத்தமிழ் மற்றும் வெளி நாடுகளைப்பொறுத்த மட்டில் நாட்டுக்கொரு வட்டார வழக்கு.

இதில் சென்னைத்தமிழ் அந்த மண்வாசனை உள்ளவர்களுக்கு மட்டும் எளிது.

'சார்.. தியாகராஜ பாகவதர் காலத்திய படங்களில் பேசுற தமிழ் சுத்தமா புரியாது'

'மனோகரா படத்தில் கண்ணாம்பா சூப்பரா வசனம் பேசுவாங்க. ஆனா, எனக்குதான் ஒண்ணுமே புரியாது'

' எண்பது, தொண்ணூறுகளில் வந்த படங்கள் ஓரளவு புரியுது. எல்லாம் பாட்டுக்காக பாப்போம்'

'அப்பா.. பாட்ட மாத்துங்க. ஒரே அழுகை அழுகையா வருது, இந்த பாட்ட கேட்டா' - இது புதிய தலைமுறை.

இப்ப எல்லாம்,  'ஊ சொல்றியா மாமா.. ஊ ஊ சொல்றியா மாமா' -  இதுதான் தமிழில் டாப் டக்கர் பாட்டு.

வழக்குத்தமிழில் பேசும்போது  பாதிக்குமேல் ஆங்கிலத்தில் பேசினாலோ அல்லது எழுதும்போது ஆங்கிலம் கலந்து எழுதினாலோ மட்டுமே சொல்ல வந்த  கருத்தை எளிதில் சொல்ல  முடிகிறது.

ரொம்ப காலமா இதே சிந்தனை. எங்கே, நம்மை கலப்பினத்தமிழுக்கு மாற்றினார்கள் என்று.

எனக்கு மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கிலம் அறிமுகம், அதாவது ஒன்பதாவது வயதில். இது அரை நூற்றாண்டிற்கு முந்தைய நிலை. இன்றைக்கு, கருவில் உள்ள குழந்தைக்கு, பள்ளியில் முதல் மாணவனாக வர பயிற்சி. சொல்லவே வேண்டாம், இவர்கள்தான்,  தமிழுக்கு ஆதரவு தந்து தமிழில் படிக்க வைப்பார்கள் என்று.

எனக்கு இலக்கணம், செய்யுள் பாடங்கள் சொல்லி தந்தார்கள். உரை நடையிலும், செய்யுள்களிலும் வரும் இலக்கண மரபுகளை அறிமுகப்படுத்தி இருந்தார்கள். தமிழ் கற்பதற்கான ஆர்வம் ஏற்பட வழி இருந்தது.

இரண்டாம் வகுப்பு செல்லும்போது, என்னால் 'கன்னித்தீவு' படிக்க முடிந்தது.

என்னுடைய இந்த எழுத்துக்கள் எல்லாம் அன்றைக்கு எனக்கு கிடைத்த தமிழ் ஆசிரியர்களின் ஆசீர்வாதமே. எழுத்துப்பிழைகளை தவிர்க்க முடிவதும் எனக்கு கிடைத்த வரமே.

நான் பெற்ற பெரும்பாக்கியம், திருமந்திரம் போன்ற தெய்வத்திருமறைதனை, என் அறிவுநிலைக்கு ஏற்ப புரிந்து எழுத முடிவது.

திருமந்திரம் என்பது ஒவ்வொருவரின் அறிவு நிலைக்கு ஏற்ப பொருள் கொடுக்கும் அற்புதமான தமிழ்ப்புதையல். இதனை படிக்கவோ, புரிந்து கொள்ள எண்ணுவதோ, புரிந்து மற்றவர்களுக்கு சொல்வதோ அவரவர் பூர்வ ஜென்ம புண்ணியமே.

இதோ ஒரு எடுத்துக்காட்டு:

'நான் யார்?' என்று எண்ணும்போது, உடல் மற்றும் உயிர் என்பது நான் என்னும் இரண்டான உண்மை. உடலோடு உயிரும், உயிரோடு உடலும் ஒன்றி இருப்பதைக்கண்டு, இவை இரண்டும் ஒன்றுதான் என்று அறிகிறேன். நான் உடல்  என்ற நினைவில் உள்ள மனதினை, மலராக உயிருக்கு சமர்ப்பித்தால், உடலும், உயிரும் ஒன்றென்று ஆகிவிடும்.

தான்என்று  அவன்என்று இரண்டாகும் தத்துவம் 
தான்என்று  அவன்என்று இரண்டும் தனிற்கண்டு 
தான்என்று  பூவை அவன்அடி சாத்தினால் 
நான்என்ற  அவன்என்கை நல்லது ஒன்றன்றே.  

                                                                                       - திருமந்திரம் 1607

இப்ப பாருங்க ஒன்றும், ஒன்றும் ஒன்றாகிவிட்டது.

கவியரசர் கண்ணதாசன் எதை எண்ணி இந்த திரைப்பாடலை எழுதினாரோ தெரியாது. உடலுக்கும், உயிருக்குமான பாடலாக  பார்த்தால் அப்படியே ஒன்றுடன் ஒன்றாகி ஒன்றிவிட்டது. 

உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல.

மேலும் படிக்க..

No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...