பழம் நீயப்பா - ஞானப்
பழம் நீயப்பா - தமிழ்
ஞானப் பழம் நீயப்பா!
கண் முன்னே அற்புதம்.
ஒன்பது வகையான அரிய மூலிகை. ஒவ்வொன்றும் ஒரு வகையான விஷத்தன்மை கொண்டது. முறையாக கட்டி சேர்த்ததில் உருவான நவ பாஷாண சிலை; அது தருவதோ உடல் ஆரோக்கியத்திற்கான அருமருந்து. உலக அதிசயங்களில் ஒன்றாகி இருக்கும், சிலையின் அருமை தெரிந்த மக்களிடம் கிடைத்திருந்தால். நம்மிடம் இருப்பதாலோ என்னவோ, லட்சக்கணக்கான கடவுள் சிலைகளில் இதுவும் ஒன்றாகி விட்டது.
இரவில் சிலைக்கு சாற்றப்படும் சந்தனக்காப்பு, சிலையில் கசியும் நீரில் நனைந்து, காலையில் உண்ணக்கூடிய தன்மையில் சந்தனப்பிரசாதமாக வழங்கப்படுகிறது. சிலைக்கு நடத்தப்படும் அபிஷேகங்களும், உடலுக்கு ஊக்கம் தரும் பிரசாத மருந்தாகவே அமைகிறது.
நண்பகல் 12 மணி.
உச்சிகால பூஜை வேளையில் பழனி முருகன் சன்னிதானத்தில், நிற்கிறேன்.
அடிவாரத்தில் இருந்து யானைப்பாதையில் ஏறிய எனக்கு களைப்போ, வலியோ எதுவும் தோன்றவில்லை. மாறாக, என்னை யாரோ கீழிருந்து, உச்சிவரை தூக்கிக்கொண்டு வந்த மாதிரி ஒரு உற்சாகம். எத்தனையோ முறை மலை ஏறி இருந்தாலும் இது புது அனுபவம் எனக்கு.
படிகளில் ஏறி வரலாம்.
படிகளிலோ, யானைப்பாதையிலோ எற இயலாதவர்கள் வின்ச் எனப்படும் மலை ரயிலிலோ, குடை தூக்கிகளிலோ வரலாம்.
படிக்கட்டில் ஏறும்போது, மொட்டை அடித்து வரும் பால முருகன்கள், பால வள்ளிகள் செய்யும் குறும்புகள் நம்மை அவர்களுடைய குதூகலத்தில் இணைத்துவிடும்.
மலைக்கோயில் புனரமைப்பு நடப்பதால், வழக்கமான ஆரம்பப்படிகள் அடைக்கப்பட்டு, மலையின் இடதுபுறமிருந்து ஏறும் படிகள் ஆரம்பிக்கிறது.
புனரமைப்பு தொழிலாளர்கள் இந்தியில் பேசிக்கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
தஞ்சை பெரிய கோயிலும் இப்படித்தான் கட்டி இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். பல்லாயிரக்கணக்கான போர்க்கைதிகளால் கட்டப்பட்டது பெருவுடையார் கோயில். உற்றார், உறவினர்களை துறந்து, தோல்வி மனப்பான்மையால் கட்டப்பட்டதாலோ என்னவோ, இன்றளவும் அது ராஜராஜனின் நினைவிடமாகவே அமைந்து விட்டது.
'ஹனுமான் கிதர் ஹை?'
'ஹே பாய். ஹே பாலாஜிக்கா மந்திர்மே.. பழனி சுப்ரமணிக்கா மந்திர். கணபதிக்கா படா பாய்'
வட நாட்டைப்பொறுத்த மட்டில், முருகன் என்ற கடவுளே அறிமுகம் இல்லாதவர். பிள்ளையாரின் அண்ணனாக அறியப்படும், மணமாகாத பிரம்மச்சாரி.
நம்ம மக்களும், கரசேவை செய்ய தங்க செங்கல் எடுத்து சென்று மதராஸிவாலாவாக வரிசையில் நின்று இப்படித்தான் பேசி இருப்பார்கள், ராமனைப்பற்றி. இன்றைக்கும், வட நாட்டினர்க்கு, இராவண வதம்தான் தீபாவளி.
மலைப்பாதை எங்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், இயற்கை உபாதையை கழிக்குமிடங்கள் என சுத்தமாகவே பராமரிக்கப்பட்டிருந்தது. இது பெரும்பாலான தென்னிந்திய கோயில்களில் இல்லாத வசதி.
தரும தரிசனம், பத்து ருபாய் கட்டணம், நூறு ருபாய் சிறப்பு கட்டணம் என தனித்தனி வரிசைகள். இவ்வளவு மக்கள் கூட்டம் வந்து செல்லும் ஒரு பொது இடத்தை சுத்தமாக பராமரிக்க இதுபோன்ற கட்டமைப்பு மிகவும் அவசியம் என்றே தோன்றியது.
'கண்ணெ மூடிண்டு நிக்காதீங்கோ. ஆண்டவனை கண்ணார தரிசிச்சு, சேவிச்சுக்கோங்கோ' - அப்படியே ஒவ்வொருவராக வெளியேற்றிக்கொண்டே சொன்னார் பூசாரி.
இந்த அதிசய சிலை போன்று இன்னொன்று இவ்வுலகில் கிடைக்க வாய்ப்பே இல்லை. போகர் சித்தர், செய்த மூன்று சிலைகளில் ஒன்று விஷமாகி அருகில் உள்ள மலைக்கோயிலில் உள்ளது. அதன் பிரசாதத்தை பறவைகள் கூட எடுத்துக்கொள்வதில்லை அதன் விஷத்தன்மையால். மற்றொன்று, பழனி சிலை காலம் முடிந்ததும் தோன்றும் என்று சொல்லிக்கொள்கிறார்கள். பழனி தேவஸ்தானமும் அதை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.
வெளிப்பிரகாரத்தில் வலப்புறம் இருக்கும் போகரின் ஜீவ சமாதியை தரிசித்துவிட்டு அமரும்போது மணி ஒன்று.
நீண்ட நாள் ஆசை. குறைந்தது ஒரு மணி நேரமாவது அவர் நினைவில், ஜீவ சமாதி மண்டபத்தில் அமர வேண்டுமென்று. அது இன்றுதான் சாத்தியமாகியது.
அவர் பூஜித்த மரகத லிங்கம் இன்றளவும் பக்தர்களின் இறை வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. மரகத லிங்கத்திற்கு நேர் கீழே போகரின் ஜீவ சமாதியான இடம். அங்கிருந்து, முருகனை பூஜித்து வர குகைப்பாதை உள்ளதாக கூறுகிறார்கள்.
சரியாக புரிகிறதோ இல்லையோ, போகரின் 7000 பாடல் தொகுப்பை [சப்த காண்டம்] படிக்கும் வழக்கம் எனக்கு. பாட்டின் பொருளுடன் புத்தகம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றெண்ணினேன்.
போகர் தன் சீனப்பயணத்தின் போது, பெண்களின் உறவால் சக்தியை இழந்திருந்த பொது, காலாங்கி நாதர் என்னும் சித்தர் அவருக்கு மீண்டும் தன்னிலை உணரச்செய்தார். போகரின் சீடராக இருந்த புலிப்பாணி சித்தர், போகருக்கு அவர் பெற்றிருந்த அனைத்து சக்திகளையும் மீண்டும் பெற்றிட சொல்லித்தந்தார்.
இன்றளவும் புலிப்பாணி சித்தரின் வழித்தோன்றல்கள்தான் போகரின் ஜீவ சமாதியை பராமரித்து வருகிறார்கள். அடிவாரத்தில், புலிப்பாணி சித்தரின் ஆசிரமமும் இருக்கிறது.
'ஆசிரமத்தில், சப்த காண்டம் புத்தகம் கிடைக்கும். அங்கே கேட்டு பாருங்க' - போகர் சமாதியில் இருந்த அடியவர் கூறினார்.
மனதில் ஒரு திருப்தி.
'புக்ஸ் எல்லாம் தீந்திருச்சு. கீழே அப்புச்சி புக் ஸ்டாலில் கேட்டு பாருங்க. இல்லன்னா, பஸ் ஸ்டாண்டில் ஒரு பழைய புக் ஸ்டால் இருக்கு. அவங்க கிட்ட கிடைக்கும்' - இது ஆசிரமத்தில் கிடைத்த பதில்.
பஸ் ஸ்டாண்டில், தேவஸ்தானத்தின் பஞ்சாமிர்த ஸ்டால் இருக்கு. அங்கே பஞ்சாமிர்தம் வாங்கிக்கலாம்.
திருப்பதிக்கு லட்டு, திருநெல்வேலிக்கு அல்வா மாதிரி பழனிக்கு பஞ்சாமிர்தம். மலை வாழைப்பழம், பேரீச்சம்பழம்,நாட்டு சர்க்கரை, ஏலம், நெய் சேர்த்த அமிர்தம். மலை ஏறும் களைப்பிற்கு ஒரு ஸ்பூன் போதும்; களைப்பை போக்கி விடும்.
'சார்.. இங்கே புக் ஸ்டால் எங்கே இருக்கு'
'பாருங்க, அந்த முக்கு கடை'
நான்கைந்து பேரிடம் இதே பதிலைப்பெற்று, பஸ் நுழைவு வாயில் அருகில் இருந்த புக் ஸ்டாலுக்கு போனால்,
'அந்த மாதிரி புக்ஸ் எல்லாம் சென்னையில் மட்டும் கிடைக்கும். நீங்க மதுரையிலும் தேடி பாக்கலாம்'.
போங்கடா நீங்களும், உங்க கடைகளும்.
பழநி.
மனிதன் எண்ணி பார்க்க முடியாத அதிசய சிலை உள்ள அற்புத ஸ்தலம்.
அதை படைத்தவரின் ஒப்புதல் வாக்குமூலமாக அவர் எழுதிய புத்தகம்.
எங்கேயோ, தமிழ் ஆராய்ச்சி நிலையங்களில் செம்மொழி ஆய்வு நடத்தலாம். ஆனால், என்னைப்போன்ற வெகு சாதாரண மக்களுக்கு இது போன்ற புத்தகங்கள் எட்டாக்கனியானால், முருகன் மாதிரி நாமும் கோபித்துக்கொண்டு மலைமேல் உட்கார்ந்து விடலாம்.
நமக்கு தோண்டி பார்த்து பெருமை கொள்ளவேண்டியது நிறைய இருக்கு, கீழடி மாதிரி. இருப்பதை ஆய்ந்து அதன் பலனை அனுபவிக்க தெரியாது. ஏனென்றால் நமக்குத்தான் முன்னோர் தமிழ் தெரியாதே!
ஆனாலும், தமிழன்டா..
பழநி:
சென்னையிலிருந்து சுமார் 500 கி.மீ. மதுரை அல்லது கோவையிலிருந்து 120 கி.மீ. மதுரை, கோவையில் விமான நிலையங்கள் உண்டு.
No comments:
Post a Comment