Thursday, January 20, 2022

ஆதியும் நானும்

ஆதியும் நானும் 

மானிடர் ஆன்மா 
மரணம் எய்தாது 
மறுபடி பிறந்திருக்கும் 




"எனக்கு முன்னர் இரண்டு பாதைகள்.

ஒன்று இந்த கலி யுகத்தில் நிலைத்து வாழ்ந்திருப்பது. மற்றது, உடலை நீத்து காற்றில் ஜீவித்திருப்பது.

நான் மண்ணில் பிறப்பெடுத்ததன் கடமை முடிந்து விட்டதென்றெண்ணுகிறேன். நவபாஷாணத்தின் தன்மைகள், நன்மைகளை நான் போற்றி வணங்கும் முழுமுதல் ஆதி சித்தர் முருகப்பெருமானின் திருவுருவாக படைத்தாகிவிட்டது. ஏழு காண்டங்களில் நான் பெற்ற அனுபவத்தின் பலன்களை விளக்கிவிட்டேன்.

இந்த  பழனி மலையிலே, குமரனின் அருகிலே ஜீவசமாதி அடைவதே இப்பிறவியில் நான் பெற்ற பேறு." - போகரின் எண்ண ஓட்டம் இப்படியாக இருந்தது.

போகர் ஏழாயிரம் - 6971 

செல்கவென்றால் எந்தன்முறை பாடுபோலே ஜெகதலத்தில் சிலகாலம் நீரிருந்து 
புல்கவே வையகத்தைத் தான்மறந்து புகழான சமாதிமுகம் ஏவநன்று 
வில்கவே கலியுகத்தில் இருந்துமென்ன விட்டகுறை இருந்தாலும் என்னலாபம்
அல்லலது  நெடுநாளு மிருந்தால்தான் வப்பனே தேகமது மண்ணாய்ப்போமே.

                                                                                                               
"என்னைப்போல் நீங்களும் இந்த பூமியில் வாழ்ந்திருந்து, விரைவாக சமாதி நிலை எய்துவது நல்லது. வெற்றிகளை  ஈட்டினாலும், இன்னும் முடிக்க வேண்டிய கடமைகள் இருந்தாலும், நீண்ட நாட்கள் வாழ்ந்தாலும் அவை துன்பம் தரும் நாட்களாகத்தான் இருக்கும். ஒரு நாள் இந்த உடல் மண்ணாகிப்போகும்." - எனவே உடல் இருக்கும்போதே சமாதி நிலைக்கு செல்லுங்கள் என்று மக்களுக்கு போதிக்கிறார்.

சமாதி என்றால் என்ன?

ஆதியில் நம் உயிர் தோன்றிய நிலைக்கு சமமாக இருப்பது. 
இது எப்படி சாத்தியம்? வழி முறை என்னவென்று திருமூலர் விளக்குகிறார்.

திருமந்திரம்-534

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.
                                                                                                   

வாழ்வினை முறையாக வாழ்வதன் மூலம், எட்டு வகை  யோகத்தின் வழிமுறையை நாம் அறியலாம் :

            1. இயமம் 
            2. நியமம் 
            3. ஆசனங்கள் 
            4. பிராணாயாமம் 
            5. பிரத்தியாகாரம் 
            6. தாரணை 
            7. தியானம் 
            8. சமாதி 

மேற்சொன்ன வழிகளில் சமாதி நிலையை அடையலாம்.

இங்கே  இன்றியமையாத இரண்டு விஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒன்று மானிட  உடல். இரண்டாவது சமாதி.

உடலில்லையேல் சமாதி நிலை அடைய முடியாது. அது தேவர்களுக்கும் சாத்தியமில்லாதது. மனிதனல்லாத எந்த உயிரிக்கும்  சாத்தியமில்லாதது சமாதி நிலை.

டல் மட்டுமே மண்ணாகிப்போகும். ஆன்மாவுக்கு   அழிவில்லை.

மானிடர் ஆன்மா 
மரணம் எய்தாது  
மறுபடி பிறந்திருக்கும் 

ஆனால், மறுபிறப்பிலும் மனிதனாய் பிறக்க வேண்டும் என்ற கட்டாயம் அதற்கு இல்லை.

மனிதப்பிறப்பெடுத்துள்ள நாம் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

திருமந்திரம்-132 

பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி 
பெற்றார் உலகில் பிறவாப்  பெரும்பயன் 
பெற்றார்அம் மன்றில் பிரியாப் பெரும்பேறு 
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.
                                                                                       


சமாதி நிலையை அடையப்பெற்றவர்கள், ஆதி நிலையில் இருந்த உயிர் தன்மையை பிரிய மாட்டார்கள். மீண்டும் பிறக்க மாட்டார்கள். இறைவனின் ஆனந்த மன்றத்தில் என்றும் இணைந்திருப்பார்கள். உலக நடப்புகளில் இணைந்திருக்க மாட்டார்கள்.

*** *** ***












No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...