Wednesday, July 22, 2020

எனக்குள் இருவன்

எனக்குள் இருவன்  

இப்போ 
இல்லாட்டி 
எப்போ?



காணொளி:

'கொஞ்ச அடங்கி, சிவனேன்னு உக்காருங்க போதும்'

காசி, ஹரித்வார் யாத்திரை போகணும், இப்ப இல்லாட்டி எப்பன்னு கேட்ட, வேலையிலிருந்து  ஓய்வு பெற்று, சற்று உடல் நலக்குறைவாய் இருந்த  தந்தையை  அடக்கினாள்  பூஜா.

மனதிற்குள் ஒரே புகைச்சல். கண்ணுக்கு புலப்படாத, இலக்கற்ற  எதிரிகளை துரத்தி துரத்தியே வாழ்க்கை முடிந்து விட்டிருந்தது சம்பத்திற்கு. இயல்பாக  துளிர்விட்டு வளர்ந்து நிற்கும் இறை நம்பிக்கை, தெய்வ வழிபாட்டு புத்தகங்களை, ஓய்வு நாட்களில்  படிக்கலாம் என்றால் ஒரே ஒரு பாட்டின் பொருள் கூட புரியவில்லை. தமிழகத்தில் பிறந்து, கற்று, வாழ்வின் இறுதி அங்கத்தில், ஓய்வின் முதல் அத்தியாயமே விளங்கவில்லை.

'சார், எல்லாம் தமிழ் பாடல் புத்தகங்கள்தான். விளக்கவுரையுடன் மிக சில புத்தகங்களே கிடைக்கும்' - விஜயா  பதிப்பகம் விற்பனைப்பெண் சொன்னாள், சம்பத்தின், 'தமிழ் இலக்கிய  பாடல் புத்தகங்கள் விளக்கவுரையுடன் கிடைக்குமா?' என்ற கேள்விக்கு.

வேலைக்கு சேர்ந்த நாட்களில் ஆரம்பித்திருக்க வேண்டும்; தமிழில் உள்ள நல்ல புத்தகங்களை தேடி சேர்த்திருக்க வேண்டும், அப்பொழுது கேட்டிருக்க வேண்டும், இப்போ இல்லாட்டி எப்ப? என்று. 

அள்ள அள்ளக் குறையாத அமிர்தப் பொக்கிஷங்கள், நம் சித்தர்கள் நமக்கு அருளிச்  சென்றுள்ள ஞான விளக்குகள். வாழ் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஞான ஒளியை நம்முள் ஏற்றிருந்தால், ஓய்வு நாட்களில் இறை சிந்தனையே நம்மை மோக்ஷ நிலைக்கு கொண்டு சென்று விடும்.

நான் என்று எண்ணி இருப்பது எனக்குள் இருக்கும் ஜீவாத்மா மற்றும் பரமாத்மா. நம்முடலில் வெப்பமாக, விந்துவாக  ஜீவாத்மாவும்; வாயுவாக, நாதமாக  பரமாத்மாவும்  உடலுக்குள்  ஆதாரமாய் வீற்றிருக்கிறார்கள்.


தானென்ற சூக்ஷமடா விந்து நாதம்
தனை அறிந்து நாதமுடன் விந்து சேர்ந்து
கோவனன்ற குருவருளால் அங்குதித்து
கொண்டெழுந்த மடபதியை என்ன சொல்வேன்
ஊனென்ற மடபதிக்கு உறுதியான
உண்மையுள்ள அக்கினி யும் வாய்வுங் கூடி
தேனென்ற ஜீவாத்மா பரமாத்மாவாய்ச்
சென்றிருந்து ஆதாரம் ஆனார்பாரே.
                                                        - சௌமிய சாகரம் 23
 
அந்த நாதத்திற்கும், விந்துவிற்கும் ஆதி முதலானவன் நம் தமிழ் கடவுள் முருகன். வேதங்களிலுள்ள மந்திரத்தின் வடிவானவன் முருக வேள். 

நாத விந்துக லாதீ நமோநம 
வேத மந்த்ரசொ ரூபா நமோநம 
ஞானபண்டித சாமீ  நமோநம.. வெகு கோடி
                                                                      - திருப்புகழ் 170

இதனையே திருமூலர், சூரிய வெப்பத்தில் கடல் நீரில் உள்ள உப்பு வெளி வருவதும், அதே நீரில் கரைந்த ஒன்றாவது போல், ஜீவாத்மா பரமாத்மவுக்குள் அடங்கி,  இருமையும் ஒருமையாக  உடலுக்குள்  இருக்கிறது  என்கிறார்.


அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால் 
உப்பெனப் பேர்பெற்று உருச்செய்த அவ்வுரு 
அப்பினில் கூடியது ஒன்றாகு மாறுபோல்
செப்பினில் சீவன் சிவத்துள் அடங்குமே.
                                                                  - திருமந்திரம் 136




Saturday, July 18, 2020

தமிழ் கடவுள்

தமிழ் கடவுள் 

உள்ளம் உருகுதையா 
முருகா 
உன்னடி காண்கையிலே 




காணொளி:

உள்ளம் உருகுதய்யா..

சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா..




'இது அதர்மம்'  -  குருக்ஷேத்திர தர்ம யுத்தத்தில், யாராலும் எளிதில் பிளக்க இயலாத எதிரியின்  சக்கர வியூகத்தை உடைத்து உள் நுழைந்து,  எதிரிகளை தன் போர்த்திறனால் துவம்சம் செய்து கொண்டிருந்த தன்னை, நாலா புறமும் இருந்து யுத்த தர்மத்தை மீறி தாக்கும் கௌரவப்  படையினரை நோக்கி கர்ஜித்தான் அபிமன்யு.

கலியுக அபிமன்யுக்கள் இன்றும் கதறிக்கொண்டிருக்கிறார்கள், 'இது அதர்மம்' என்று.

 இவர்களின் ஒரே ஆயுதம் கடவுள்

இல்லையென்று ஒரு சாரார் அடுத்தவருக்கு புத்தி சொல்ல எடுத்துக்கொண்ட ஆயுதம், கவச  அவமதிப்பு.
இருக்கிறதென்று கூறுவோர்கள் எடுத்துக்கொண்ட 
ஆயுதமோ சிலைக்கு காவி பூச்சு. இடையில் மறக்கடிக்கப்படுவது என்னவோ  பெருந்தொற்றின் 
மனிதகுலத்தின் பேரழிவு.

சொந்தமாக கற்றுணர்ந்து அறிவு பெற பொறுமையில்லாத இவர்கள் அடுத்தவர் உண்ட  எச்சில் இலையில்  இருந்த உணவின் சுவையை விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதை அஹங்காரம் என்று சொல்கிறார் அகத்தியர். மனித உடலினின்று இயங்கும் முப்பத்தாறு பிரதம தத்துவங்களில் புத்தி நிலையும் ஒன்று. இது நான்கு தத்துவங்களாக விரிந்து, மனம், புத்தி, அஹங்காரம்  மற்றும் சித்தி என்று நிலை கொள்கிறது.
மனம் ஓரளவிற்கு கல்வி, கேள்வியில் தேர்ச்சி பெற்றதும், 
அடுத்த நிலையான அகங்காரத்தை பற்றி கொள்கிறது.

கேளப்பா புலத்தியமா ரிஷியேஐயா
கிருபையுள்ள கரணம் அந்தக்கரணந் தன்னை
கோளடா  இல்லாத மனம் தானொன்று
கூர்மையுடன் நின்றிலங்கும் புத்தி ஒன்று
தேரடா ஆங்காரம் ஆனதொன்று
சிவ சிவா சுத்த மென்ற சித்தமொன்று
ஆளடா கரணமென்ற கரணம் நான்கும்
அப்பனே அறிந்துகொண்டு வாற்றுமம் பாரே.
                                              -  அகத்தியரின் சௌமிய சாகரம்  32

நான்காம் நிலையான சித்தியை அடையும் வழியை நம் முன்னோர்கள் விட்டு சென்றதை, இவ்வகை போராட்டங்களினால் அநியாயமாக இழப்பதோடல்லாமல் அடுத்த தலைமுறையினரையும் தெம்பிழக்க செய்கிறோம்.

திருமூலர் வெகு நிறைவாக இதை தெளிவாக்குகிறார்.

கற்ற பசுக்கள் கதறித் திரியினும் 
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் 
முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போதும்  
மற்றைப் பசுக்கள் வரள் பசுதானே.
                                                   - திருமந்திரம் 2015

ஒரு பக்கம் வேதம், மந்திரங்கள், பல்வகை சமய சடங்குளை கற்றவர்கள் எவ்வளவுதான் கற்றதை மட்டும் கத்திக்  கதறினாலும்,  இன்னொரு பக்கம் கும்பலாக கூட்டம் கூடி எதிர்ப்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு முட்டி மோதினாலும், முற்றும் உணர்ந்து சித்தி நிலை அடைந்தவர்கள் வழங்கும்  இறையருளே  போதுமானது. ஏனையோர்கள் எல்லாம் சமுதாயத்திற்கு உருப்படியாக ஏதும் வழங்க முடியாத வறட்டு மாடுகளே!

முருகனின் பேரருள் கந்த சஷ்டி கவசமே,  இன்றைய 
பெருந்தொற்றுக்கு கவசம். தன்னை இழிவுபடுத்த எடுத்துக்கொண்ட ஆயுதம் கொண்டே இன்று தமிழகம் முழுவதும் உயிர்பெற்று முழங்க வைத்த முருகனின்  கவசத்தை நீங்களும் ஒருமுறை  வீட்டில் ஒலிக்க விட்டு கேட்டு பாருங்கள்:



 

Saturday, June 27, 2020

எமதர்பார்

எமதர்பார் 



ஒரு தவறு செய்தால்
அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும்
விட மாட்டேன்


காணொளி:
https://www.youtube.com/watch?v=Mu9oQL3d31A

வார்டு கவுன்சிலரைக்கண்டால் பயம். அவன் கொடி கட்டி செல்லும் காரைக் கண்டால் பயம். அடைமொழி இல்லாமல் பேரை சொல்லவும்  பயம். பேரோடு 'சார்' சொல்லாவிட்டால் பயம். புதிதாக சேர்ந்திருக்கும்  'ஜி' சொல்லாமல் விட்டாலும்  பயம். அரசு அதிகாரிகளை கண்டால் பயம். இவர்களை மொய்க்கும் காவலரைக் கண்டால் பயம். அவர்கள் கையில் உள்ள லத்தியை கண்டால் அதிக  பயம். காவல் நிலையம் என்னும் கொலைக்களம் சென்றால்,  எமனையே நேரில்  கண்ட  பயம்.

இதுதான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் சாதாரண குடி மக்களின் நிலை. அரசியலமைப்பு சட்டத்தில், படிக்காதவன் வயது வரம்பின்றி, அரசாளலாம், நூற்றி முப்பது கோடி மக்களின்   நலன் சார்ந்த முடிவை எடுக்கலாம்.

உண்மை அறிவு என்று சொல்லக்கூடிய நுண்ணறிவும், நுண்ணிய நூல் பல கற்று பெறக்கூடிய அறிவும், அனுபவத்தால் பெற்ற அறிவும், நல்வழி காட்டி நின்ற குருவின் வழி அறிவும், உலக நிகழ்வு அறிவும் கொண்ட தலைவன் ஒருவனே நம்மை காக்க முடியும்.

'கம்ப ராமாயணத்தை வழங்கிய சேக்கிழார்', 'யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே'- போன்ற அற்புத அறிவு  வாய்க்கப்பெற்றவர்களை தலைவர்களாக பெற என்ன தவம் செய்தாளோ தமிழன்னை!

கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனின் காலன்  மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான்  கொல்என்பான்
நல்லாரைக்காண காலன் நணுகநில் லானே.
                                                                             - திருமந்திரம் 238

படிப்பறிவற்ற மக்களாட்சி செய்யும் அரசியல்வாதியும், அவன் ஆணைக்கு அடிபணிந்து பணிபுரியும் காவலர்களும், மக்களின் உயிரை தன்  பாசக்கயிற்றால் எடுக்கும் எமனுக்கு ஒப்பானவர்கள். ஆனாலும், படிப்பறிவற்ற அரசியல்வாதியைவிட எமன் மிகவும் நல்லவன். ஏனென்றால், படிப்பறிவற்ற அரசியல்வாதி ஆராய்ந்து மக்களுக்கு நல்லது செய்ய மாட்டான்,  மக்களின் உண்மை நிலை ஆராயாமல் கொன்று குவிக்க சொல்வான். ஆனால், எமனோ நல்லவர்களை கண்டமட்டில், அவர்தம்  அருகில்கூட  சென்று நிற்க மாட்டான்.

Saturday, June 6, 2020

பரமரகசியம்

பரமரகசியம் 


ரகசியம் பரமரகசியம் 
இது நமக்குள் 
இருப்பது அவசியம்


 



'மண்ணில் உயிர்ப்பெடுத்த மறுகணமே அன்னை மடி அறியும் பரம ரகசியம் யார் சொல்லி தந்தார் கன்றினுக்கு? மனிதனாய் பிறந்ததனால், பிறவியின்  திசையறியாமல் தத்தளிக்கும் எனக்கு அருள் செய்வாய்' -  என்று வேண்டி நின்ற எனக்கு, கீழ்க்கண்ட அத்தியாயம் படிக்க உத்திரவு கிடைத்தது.

'முந்தைய, ஜன்மங்களிலுள்ள  நல்வினைகளால் நாம் இவ்வுடம்பைப் பெற்று இருக்கிறோம். பக்தியையும், விடுதலையையும் இவ்வுதவியை கொண்டு பெறுவது தகுதியுடையதாகும். எனவே, எப்போதும் நாம் சோம்பலின்றி இருக்க வேண்டும். நமது குறிக்கோளையும் நோக்கத்தையும் பெறுவதில் நாம் எப்போதும் விழிப்பாய்  இருக்க வேண்டும்.'

                                                                             -  ஸ்ரீ சாய் சத் சரித்திரம் 
 
இதே கேள்வி எனக்கு மட்டுமல்ல, மண்ணில் மனிதனாய் பிறந்து, தன்னுணர்வு எய்தப்பெற்ற பேரருளாளர்கள் மனதிலும் தோன்றியதில் ஆச்சர்யம் கொண்டேன். 

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பெண்டிர்  எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
என்செய்வேன்கச்சி ஏகம்ப நாதனே.

                                                                       - பட்டினத்தார் பாடல் 83

இதோ, திருமூலர் மனிதப்பிறவியின்,  பரம ரகசியத்தின் முடிச்சை அவிழ்க்கும் வழியை நமக்கு காட்டுகிறார்.

நான்பெற்ற  இன்பம் பெறுக இவ்வையகம் 
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் 
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் 
தான் பற்றப்பற்றத் தலைப்படும் தானே.

                                                                       - திருமந்திரம் 85

இலை மறை, காய் மறையாக மறைத்து வைக்கப்பட்டுள்ள விண்ணுலகம்  செல்லும் வழி நான் அறிந்து கொண்டு, அடையும் இன்பத்தை, உங்களுக்கும் சொல்கிறேன் கேளுங்கள் மனிதர்களே!
உடலின் உணர்வுகள் விழிப்பு நிலையில் இருக்க, 'ஓம் நமக்ஷிவய' எனும் மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வாருங்கள். தானாகவே உங்கள் பிறப்பின் பரம ரகசியம் அறியத்தலைப்படுவீர்கள்.   




Saturday, May 23, 2020

பிராணாயாமம்

பிராணாயாமம்

நானொரு முட்டாளுங்க 
ரொம்ப நல்லாப்படிச்சவங்க 
நாலுபேரு சொன்னாங்க 
நானொரு முட்டாளுங்க





படிக்க:


'ஒண்ணு சொல்றேன் நல்லா கேட்டுக்குங்க. நம்ம மக்கள் இருக்குற அவசரத்துல எது சொன்னாலும் நேரம் இல்லைனு சொல்லிட்டு ஓடிட்டே இருப்பாங்க. நல்ல வேளை, ஆண்டவன் மூச்சு விட்றத அனிச்சை செயலா வெச்சான். இல்லன்னா ஏகப்பட்ட பேர் மூச்சுவிட நேரமில்லைனு சொல்லி அவன்கிட்டயே போய் சேந்திருப்பான்' - நித்தியின் அட்டகாசமான சிரிப்பொலிக்கிடையே வந்த வாக்குதான் இது.

பிராணாயாமம் செய்வது எப்படி ?

வாமத்தால் ஈரெட்டு மாத்திரை பூரித்தே 
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக் 
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டு 
ஓமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.                                                                                                                                                          - திருமந்திரம் 573

பொருள் விளக்கம்:
இடது மூக்கின் வழியாக பதினாறு மாத்திரை அளவு காற்றை உள்ளிழுத்து, உள்ளிழுத்த காற்றை அறுபத்தி நான்கு மாத்திரை அளவு மூச்சடக்கி உள்நிறுத்தி, முப்பத்திரண்டு மாத்திரை அளவு வலது மூக்கின் வழியாக வெளியே விடவேண்டும்.

ஒரு மாத்திரை  கால அளவு என்பது  கண்ணிமைக்கும் நேரம்.


பிராணாயாமத்தின்போது சொல்ல வேண்டிய மந்திரம் என்ன?

பாரப்பா பிராணாய வகைதான் ஐந்தும்
பத்தியுடன் சொல்லுகிறேன் பதிவாய்க்கேளு
நேரப்பா ரேசக பூரகமுங் கும்பகம்
நிசமான சவுபீசம் நிர்ப்பீசம் ஐந்து
காரப்பா குருவருளால் கண்டு தேறி
கருணையுடன் பிராணாயாமக் கருவைக்கண்டு
தேரப்பா தேறி மனந் தெளிவாய் நின்று
சிவ சிவா சிவயோகத் தீர்க்க மைந்தா.
                                                             - அகத்தியரின் சௌமிய சாகரம்  251

பொருள் விளக்கம்:
மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல், உள்நிறுத்தல் மற்றும் வெளியேற்றுதல் என மூன்று செயல்கள் நடை பெறுகின்றது. 

காற்றை உள்ளிழுத்து, உள்நிறுத்தும் வேளையில் - ' ஓம் நமக்ஷிவய' என்றும் 
உள்நிறுத்தலில் இருந்து வெளியேற்றும் வேளையில் - 'க்ஷிவயநம ஓம்' என்றும் மந்திரத்தை மனதில் சொல்ல வேண்டும்.

இவைகளே பிராணாயாம வகைகள் ஐந்து ஆகும்.

மந்திரம் [மந் + திரம்] என்பது மனதினை ஸ்திரமாக்கும் அக்ஷரங்கள். 
மொழியில் உள்ள எழுத்துக்கள் வேறு, அக்ஷரங்கள் வேறு.  மொழியின் வாதத்தால், 'நமக்ஷிவய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தின் மகத்துவத்தை  நாம் இழந்துவிடக்கூடாது.     

உரைக்கவே ரேசகந்தான் விடுவ தாகு
    மோங்கியதோர்  பூரகந்தா னுள்ளே வாங்கல்
தரைக்கவே கும்பகந்தம் பித்தி  ருத்தல்
    தாங்கியதோ  ருந்பீச மந்திரத்தி லூடல்
விரைக்கவே நிர்ப்பீச மந்திரத்தை விட்டு
   வெளியிலே பூரித்தல் மெதுவி லேதான்
அரைக்கவே யஞ்சு விதம்  பிராணாயாமம்
அசையாம லாசனத்தி லிருத்திப் பாரே.                           
                                                                                               - போகரின் ஏழாயிரம் பாடல்கள்  311

பொருள் விளக்கம்:
போகரும், அகத்தியரின் கருத்தை அப்படியே வழி மொழிகிறார்.

பிராணாயாமம் உள்ளே என்ன செய்கிறது?

குரு: அப்பொழுது ஜீவன் ஈஸ்வரனோடு ஐக்கியமாயிற்று. இதற்கே 'ஜீவா ஈஸ்வரோரைக்கியம்' என்று சொல்லப்படுகிறது. ஜீவன் ஈஸ்வரனோடு ஐக்கியமானால் என்னவாகும்?

சிஷ்யன்: மோக்ஷமாகும்.

குரு: இதற்கேதான் பிராணனையும், அபானனையும் ஐக்கியப்படுத்துவதென்று சொல்லுவது. பிராணன் நம்முடைய உள்ளில் இருக்கிறது. அபானன் வெளியில் போகிறது. அப்படி வெளியில் போகின்ற அபானனை, வெளியில் போகவிடாமல் பிராணனுடன் சேர்த்து உள்ளிலேயே ஒரே கதியாய் நடத்துவதற்குத்தான் 'பிராணாயாமாம் என்று சொல்லுவது. பிராணாயாமம் என்றால் பிராணனை ஆயாமம் செய்கிறது. ஆயாமம் செய்கிறதென்றால் தடுத்து நிறுத்துகிறது அல்லது நேரே கொண்டு போகின்றது.
                                                                                                                 - சிவானந்த யோகியின் சித்த யோகம் 
பொருள் விளக்கம்:
நாம் உள்ளிழுக்கும் காற்று பத்து வாயுக்களாக மாறி நாடிகளை புத்துயிர் பெறச்செய்கிறது.
பிராணயாம பயிற்சியின்போது  நம் உயிர்நிலையான குண்டலினியை, இறை சக்தியுடன் இணைக்கும் வேலையை  செய்கிறது. 

பிராணாயாமம் செய்வதால் உண்டாகும் பலன்கள் என்ன?

இட்டது அவ்வீடு இளகாது இரேசித்துப் 
புட்டிப் படத்தச  நாடியும் பூரித்துக் 
கொட்டிப் பிராணன் அபானனும் கும்பித்து  
நட்டம் இருக்க நமன்இல்லை தானே.
                                                                                                               - திருமந்திரம் 574

பொருள் விளக்கம்:
பத்து நாடியும் உயிர்ப்புடன் இருக்க, எமன் உயிரை எடுத்து விடுவானோ என்ற கொரோனா பயம்,  பிராணாயாமம் செய்வோர்க்கு இல்லை.



Wednesday, May 20, 2020

ஜெனரல் டையர்

ஜெனரல் டையர் 

கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு
கலயங்கள் வாடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி









பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை.

காலையில் வீட்டில் உண்ண  உணவில்லாமல், பள்ளியில் வழங்கும் மதிய உணவுக்காக, நண்பகல் வரை காத்திருந்து, தட்டில் போடப்பட்ட ஓட்ஸ் உப்புமா, அதற்கு சுடுநீரில் கலக்கிய பருப்புப்பொடி தேவாமிர்தமாக தெரிந்தது முருகனுக்கு, வாய் மட்டும் முணுமுணுத்தது, உண்ணுமுன் சொல்லும் திருக்குறளை.

ஒரு மக்களின் முதல்வர் ஆரம்பித்து வைத்த, மதிய உணவு திட்டத்தை, இன்னொரு மக்கள் திலகம் விரிவாக்கம் செய்கிறார், இளமையில் வறுமையின் கொடுமையை  உணர்ந்த ஏழைப்பங்காளர்கள்.

ஒரு மைதானத்துக்குள் பூட்டி, மனித உயிர்கள் என்ற இரக்கமின்றி, மிருகங்களை சுடுவதுபோல் சுட்டுத்தள்ளிய ஜாலியன்வாலாபாக்  நிகழ்வில்கூட, வினாடி நேரத்தில் உயிர் பிரிந்திருக்கும்.

ஆயிரக்கணக்கான மைல் தூரம், குழந்தைகளை சுமந்து, உண்ண உணவும், நீருமின்றி, காவலர்களுக்கு அஞ்சி, அடிவாங்கி பாரம் சுமக்கும் எனதருமை இந்தியக்குடிமக்களே, பேய்க்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறீர்கள். தப்பித்தவறி, உயிரோடு ஊர் போய் சேர்ந்தாலும், உங்களை வாழ விட மாட்டார்கள் இந்த ஜெனரல் டையர்கள். கொன்றொழிக்காமல் ஓய மாட்டார்கள். வாழும்வரை நரகம்தான்.

'நெஞ்சு பொறுக்குதில்லையே'

இருபது லட்சம் கோடி பேரிடர் விநியோகம், மும்மடங்கு விமான கட்டணம் பெற்று பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு விமான சேவை, அமெரிக்காவிற்கே மருந்து ஏற்றுமதி,  சீனாவில் உள்ள உலக வர்த்தக நிறுவனங்கள் நம் நாட்டிற்கு - சற்றேறக்குறைய வல்லரசு நாடாகிவிட்டது இந்தியா.

உண்மையில், கேள்வி கேட்க நாதியற்றவர்கள்,  தேசிய நெடுஞ்சாலை எங்கும்  சிதறிக்கிடக்க, இந்தியாவே ஒரு ஜாலியன்வாலாபாக் ஆகிவிட்டது.

நாம் ஒன்றே, ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். அடுத்த தேர்தலுக்கு அச்சாரமாக வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. நாம் தானமாக வழங்கும் வாக்கை எப்படி வழங்கக்கூடாது என்றும், வழங்கினால் என்ன ஆகும் என்று சாபமே கொடுக்கிறார்  திருமூலர்.

மண்மலை யத்தனை மாதனம்  ஈயினும்
அண்ணல் இவனென் றஞ்சலி யத்தனாய்
எண்ணி யிறைஞ்சாதார்க் கீந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.
                                                                                                      - திருமந்திரம் 506

மண்வாழ் உயிர்கள் அனைத்தும் இறைவன் என்றெண்ணி வாழாதார்க்கு, பூமியையும், மலையையும் தானமாக வாக்காக கொடுத்தால், கொடுத்தவனும், பெற்றவனும் ஏழுவகை நரகங்களிலும் விழுந்துழல்வார்கள்.







Sunday, May 17, 2020

பணம் பெண் பாசம்

பணம் பெண் பாசம் 

அத்தனை பழமும்
சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே





“காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” - கப்பல் நிறைய வணிகப்பொருட்களை கொண்டுசென்ற மகன் வெறும் நெல்மூட்டையை கொண்டுவந்திருக்கிறானே என்று சோதித்த பட்டினத்தடிகளின் கண்களில், விலை உயர்ந்த கற்கள் அதனுள் பொதிந்திருப்பதை மட்டும் பார்க்கவில்லை, கூடவே மகன் விட்டு சென்ற ஓலையையும் பார்த்து, படித்து உலக வாழ்வில் இருந்து விலகி, மனைவியை பிரிந்து சென்றாலும், பெற்ற தாயின் பாசத்தை விட முடியாமல் இறுதி சடங்குகளை, அனைவரையும் முறையாக அழைத்து  செய்து முடித்தார்.
வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் - பால்தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்
                                                                                      - பட்டினத்தார் பாடல் 200

பாடு பட்டு சேர்த்த பணத்தை விட முடிந்தது. கட்டிய மனைவியை பிரிய முடிந்தது. பெற்றெடுத்த அன்னைமேல் கொண்ட  பாசத்தை மட்டும் உதறிவிட முடியவில்லை.

நம் கண் முன்னர், இறைவனின் வாரிசுகளாக தங்களை அடையாளப்படுத்தும், ஆன்மீக கடை விரித்திருக்கும் ஜக்கி, நித்தி, ராம்தேவ், ஆசாராம் இவர்களை போன்றவர்கள் எல்லாருமே சொத்து சேர்க்கும் சொத்தை பழங்கள்தான். இவர்களைப்  போன்றோர், ஆதியில் சுயம்புவாய் தோன்றிய இறையை, ரத்தமும், சதையுமாக மனிதனாகவே உருவகப்படுத்தி, வம்சம் வளர உறவினை கொடுத்து, உடலை வளர்க்க உணவினை கொடுத்து, நடமாடும் கழிவகம்  ஆக்கிய கதைகளே அறிவிற்சிறந்தோர் நாத்திகம் பேச வழி வகுத்திருக்கிறது.

இறையை அறிந்து அணுகும் முறையை, பதி-பசு-பாசம்  என்று திருமந்திரத்தில்  மிக எளிதாக காட்டி இருக்கிறார் திருமூலர். இந்த முறைப்படி நம் கோவில்கள் அமைந்திருப்பது இருப்பது, ஆச்சர்யத்திலும்  ஆச்சர்யம். பதி என்பது கருவறையில் உள்ள சிவலிங்கம்; பசு என்பது மூலவரை பார்த்து அமர்ந்திருக்கும் நந்தி. பாசம் என்பது நந்தியை தொடர்ந்து பின்புறமிருக்கும் பலிபீடம்.

நம் உடலில் உள்ள உயிராகிய பசு, பதியாகிய இறையை அடைய விரும்பினால், தன்னை கட்டி இருக்கும் பாசமாகிய பற்றை விலக்க வேண்டும்.

பதிபசு பாசம் பயில்வியா நித்தம் 
பதிபசு பாசம் பயில்வோர்க்கு ஆறாக்கி 
பதிபசு பாசத்தைப் பற்றுஅற நீக்கும் 
பதிபசு பாசம் பயில நிலாவே. 
                                                                                                - திருமந்திரம் 2412

இடையறாது இறைநிலை தியானம் பயில்வோர்க்கு, பற்றினை அறுத்து, இறைவனை அடையும் வழிதனை தியானம் காட்டும். 

பாசத்தை வேரறுக்கும் பசு, பதியை சென்றடையும்.










கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...