இயற்கை நுண்ணறிவு
கோவில் பெண் கொண்டது தெய்வம் கண் தந்தது'திரைப்பட பாடல் நிகழ்ச்சிக்கு, இரு நூற்றைம்பது டாலர் ரொம்ப அதிகம், என்று நிகழ்ச்சி உபயதாரர் கொடுத்த ஓசி டிக்கெட்டில் சிட்னி ஓபரா ஹவுசில் உட்கார்ந்து யோசித்து கொண்டிருந்த என்னை தூக்கிவாரிப்போட்டது, சபரி மலை சன்னிதானத்தில் தேவகானம் ஒலிக்கும் குரலுக்கு சொந்தக்காரரான யேசுதாஸ் அவர்கள் நிகழ்ச்சியில் பாடிய முதல் பாடல்.'
'விழியே கதை எழுது.. கண்ணீரில் எழுதாதே..'
என்னுடைய கல்லூரி நாட்களில், அன்றைய காலகட்டத்திற்கு , மிகவும் அழுத்தமான காதல் சோகப்பாடல் அது . கேட்டு உருகாத நாளில்லை. இன்றும்கூட கேட்கும்போது இனம் புரியாத இனிய குறுகுறுப்பு. ஒருதலைக் காதல் தோல்வி யாருக்குத்தான் இல்லை.
கவியரசர் கண்ணதாசனின் இந்த பாடலில் வரும் 'கோயில் பெண் கொண்டது, தெய்வம் கண் தந்தது' - பொருள் உணர எவ்வளவோ நாட்கள் தலைப்பட்டிருக்கிறேன்; திருமந்திரத்தில் எனக்கு விளக்கம் கிடைக்கும் என எண்ணிப்பார்த்ததில்லை.
திருமந்திரம்-1823
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானாற்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.
மனிதனின் உடலே ஆலயமாகவும், உள்ளம் ஆலயம் தாங்கிய கோயிலாகவும்,
கோபுரத்தின் வாசலாக வாய், ஜீவாத்மாவே சிவலிங்கமாகவும், அழகிய ஒளி விளக்குகளாக ஐம்புலன்களும் அமைந்துள்ளன.
இந்திரியங்களின் ஆற்றலால் புலன்கள் அகமும், புறமும் அறியும் தன்மை உள்ளன ஐம்புலன்கள். ஆனால், புற உலகை மட்டுமே காட்டி மனிதனை வழிநடத்துவதால் ஐம்புலன்கள் கள்ளப்புலன்கள் எனப்பட்டன.
திருமந்திரம்-119
நெறிஅறி யாதுற்ற நீராழமும் போல
அறிவு அறிவுள்ளே அழிந்தது போல
குறி அறி விப்பான் குருபரன் ஆமே.
கள்ளத்தனம் புரியும் ஐம்புலன்கள் வழியாக அறிவு செல்லும்போதும், ஆழம் அறியாமல் நீரில் இறங்கி தத்தளிக்கும் போதும், இப்பிறவியில் பெற்ற அறிவே, அறிவை அழிக்கும் அஹங்காரமாக மாறும்போது, பல பிறவிகளில் நாம் செய்த நல்வினைப்பயனால், நமக்கு நல் வழி கட்டுவது அந்த இறைவனே ஆகும்.
இந்த நல்வழிப்பயனாலே நாம் முற்பிறவிகளில் பெற்ற கல்வி, அனுபவ அறிவு ஏழு பிறவிகளிலும் தொடர்ந்து வரும்.
திருக்குறள் 398
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.
கெழுமையும் ஏமாப் புடைத்து.
தொடர்ந்து வரும் பிறவிகளில், தான் முந்தைய பிறவிகளில் கற்ற கல்வி அறிவினை அவனுடைய நுண்ணறிவு அறிவிக்கும்.
திருக்குறள் 373
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்
எவ்வளவு அரிதான நுண்ணிய அறிவு வழங்கும் நூல்களை கற்றிருந்தாலும், உண்மை அறிவு என்று அறியப்படும், முந்தைய பிறவிகளில் பெற்றிருந்த நுண்ணறிவு எனப்படும் இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.
நுண்ணறிவை பெற, இறைவனின் அருளாசி நமக்கு வேண்டும்.
*** *** ***