பேரழிவு
பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே..
பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே..
'அரசே, நம் நாட்டில் அதிகம் இருப்பது வைத்தியர்களே' - கிருஷ்ண தேவராயரின் சந்தேகத்திற்கு தெனாலி ராமன் தீர்க்கமான உடனடி பதில் அளித்தான்.
'ஆனால், அவர்கள் வைத்தியம் கற்றவர்களல்ல. தாங்கள் கண்டதையும், கேட்டதையும், தங்களின் அரைகுறை அனுபவத்தில் அறிந்து கொண்டதைக்கொண்டு எல்லா வித நோய்களுக்கும் உடனடி மருத்துவ தீர்வு சொல்லி விடுவார்கள்.'
மருத்துவம் கற்க மழலையர் பள்ளியில் ஆரம்பித்து, நீட் தேர்வு வரை கற்க வேண்டிய அவசியம் இல்லை இவர்களுக்கு.
அதே அறிவு நிலைதான் இயற்கை மற்றும் பரம்பொருளைப் பற்றியும்.
'மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்'
இந்த மண்ணுலகம் அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தம் என்று இந்த கோவிட்-19 பெருந்தொற்று உணர்த்திவிட்டது.
இயற்கையை கற்க, அதனை சொந்தம் கொண்டாடும் பற்றினை அழித்து, அதனுடன் இணைந்து வாழும் முறையை அறிந்து கொள்வது அவசியம்.
மாயை என்னும் பற்றினை அறுத்து, பரம்பொருளை அறிந்து உணர்ந்து கொள்ள முன்னோர்கள் கட்டிய மழலையர் பள்ளிகள்தான் கோவில்கள்.
பற்றறுக்க ஒரே வழி, பற்றற்றவனான பரம்பொருளின் பற்றினை பற்றுவதுதான் என்று சொல்லுகிறார் வள்ளுவர்.
பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
- திருக்குறள் 350
திருமூலர் அதற்கும் ஒருபடி மேலே சென்று, பிறவிப் பெருங்கடல் நீந்தி அந்த பரம்பொருளின் பாதங்களை அடையும் ஆசையையும் அழித்து, ஆனந்தமாய் வாழுங்கள் என்கிறார்.
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.
- திருமந்திரம் 2615