பேரவலம்
வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ..
'நீங்கள் அனுபவித்துக்கொண்டிருப்பது டீசர் மட்டுமே. முழுப்படம் காணத்தயாராகுங்கள்' - உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் உலக மக்களுக்கு கொரோனா தாக்குதல் பற்றி அறிவுறுத்திக்கொண்டிருந்தார்.
'செய் அல்லது செத்து மடி'- போய், வழக்கமான காரியங்களை 'செய், உடனே செத்து மடி' ஆகி விட்டது.
உலக முதன்மை வல்லரசு, அமெரிக்க நாட்டின் இறப்பு செய்திகளே இப்படி என்றால், ஈகுவடார் போன்ற நாடுகளில் இருந்து கசியும் செய்திகள் அதிபயங்கரமானவை, பெருந்தொற்றால் வந்த பேரவலம்.
மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயான மட்டே, வழிக்கேது துணை
தினையா மளவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்
தனை ஆளவென்றும் பரலோகம் சித்திக்கும் சாத்தியமே.
- பட்டினத்தடிகள் பொது 12
மனையாளும், மக்களும், சுற்றமும் கூட இனி இல்லை என்றாகிவிட்டது. பார்ப்பதற்கு அனுமதி கிடைத்தாலே பெரிய நிம்மதி என்றாகிவிட்டது.
வளத்துஇடை முற்றத்துஓர் மாநிலம் முற்றும்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடம்உடைந்தால் அவை ஓடென்று வைப்பர்
உடல்உடைந்தால் இறைப் போதும் வையாரே.
- திருமந்திரம் 158
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, நொடிப்பொழுதும் இறந்த உடலை வைத்திருக்க மாட்டார்கள் என்ற வாக்கு எப்படி மெய்ப்பட்டிருக்கிறது பாருங்கள்.
யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்குஒரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.
- திருமந்திரம் 252
சொர்கமான இந்த மண்ணை நரகமாக மாற்றிவிட்டோம் என்று இறைவனிடம் மன்னிப்பு கோரும் வண்ணம், வெற்றிலையை படைத்து மன்னிப்பு கேட்போம். நம்மை சார்ந்து வாழும் உயிரினங்களுக்கு ஒரு வாய் உணவாவது வழங்குவோம். அண்டை, அயலில் வாழும் திக்கற்ற மக்களுக்கு ஒரு கைப்பிடி அளவாவது உணவுப்பொருளை கொடுப்போம். நாமே திக்கற்றவர்களாக இருப்பின், நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி தேற்றுவோம்.
இனி, செய்வதற்கொன்றுமில்லை.
No comments:
Post a Comment