பேரிடர்
துன்பம் வரும்
வேளையிலே சிரிங்க
என்று சொல்லி வச்சார்
வள்ளுவரு சரிங்க
துன்பம் வரும்
வேளையிலே சிரிங்க
என்று சொல்லி வச்சார்
வள்ளுவரு சரிங்க
'என்ன கொடுமை சரவணன்' - எதிர்த்த வீட்டு நண்பன் குமாரின் நெற்றியில் ஒட்டியிருந்த பேண்ட் எயிட்டை பார்த்து கிண்டலாக கேட்டான் சேகர்.
'ஒண்ணுமில்ல. போன வாரம் உனக்கு. இந்த வாரம் எனக்கு, வீட்டுல பூஜை. பொண்டாட்டிய பாத்து சிரிச்சிட்டே வீட்டுக்குள்ள போனேனா...'
'சரி'
' எதுக்கு செங்கொரங்கு இளிச்சிட்டே வர்றேன்னு கேட்டா. வள்ளுவர் வழி நிக்கிறேன்னு சொன்னேன். கையிலிருந்த தோசை திருப்பியாலெ நெத்தியிலே திருப்பிட்டா.'
'புரியிற மாதிரி சொல்லேண்டா. யாராவது வள்ளுவர் வழி நிக்கிறதுக்கு அடிப்பாங்களா'
'துன்பம் வரும் வேளையிலே சிரிங்கன்னு வள்ளுவர் சொல்லி இருக்கார். அதனாலதான் சிரிச்சேன்னு, அவளை பாத்துட்டே சொன்னதுதான் தெரியும்'
சேகர் சிரிச்சிட்டே திரும்பி பார்த்தான். அவர்கள் பேசியதை ஒட்டு கேட்டுக்கொண்டிருந்த அவன் மனைவி சரளா, எதிரில்.
'செத்தாண்டா சேகரு..'
'கடவுள் இருக்கான் குமாரு. ஓடிரு.'
எல்லாம் லாக் டௌன் பரிதாபங்கள்.
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
- திருக்குறள் 621
ஒரு காரியத்தை செய்யத் துணியும் போது இடற்கண் எனும் தடைகள் வருவது இயற்கை. அதனை எதிர்த்து, எள்ளி நகையாடி அழித்து காரியத்தை சாதிக்க வேண்டும். காரியம் வெற்றி அடையும்போது அடையும் இன்பத்திற்கு ஈடானது ஒன்றுமில்லை.
புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமா
மகிழநின்று ஆதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கு ஒரு கல்பசு ஆமே.
- திருமந்திரம் 308
உயிரில் எழும் எண்ணங்களின் ஆதார சொரூபமான ஆதி இறையை . எண்ணி போற்றுவோர்க்கு வாழ்வின் பற்று கோலாய் இருப்பான். இல்லை என்றெண்ணி இகழ்வோர்க்கு எண்ணங்கள் பற்று கோல் அற்ற முல்லைக்கொடி போல், வாழ்க்கை துன்பத்தில் தவிக்கும். உணர்வு மகிழ்வுடன் ஆதி இறையை உணரமாட்டார்க்கு, அவருள் உறையும் உயிர், ஒரு கல்லாலான பசுவைப்போல் வாழ்வின் பலன் ஏதும் தராது.