Friday, July 26, 2024

நீ தலைவண்டா

நீ தலைவண்டா


ஜூலை 21, 2024 குரு பூர்ணிமா.

நானும் கைலாசா நாடு எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன்.

அட.. கைலாசா நம்ம தமிழ்நாட்டுக்குள்ளும்  இருக்கிறது என்ற  அதிபரின் அதிரடி  அறிவிப்பால் ஒரு வினாடி திகைத்து போனேன். என்ன, அங்கே செல்ல கைலாசாவின் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.

திருவண்ணாமலையில் உள்ள  நித்யானந்தாவின் ஆசிரமம் கைலாசா நாட்டின் ஒரு பகுதி. இன்னும், அதிபர், பிரதமர் இருக்கும் தலைநகர் எங்கிருக்கிறது என்ற அறிவிப்பு  இல்லை.

உலகின் ஒரே இந்து நாடான கைலாசாவின் நாட்டின் பொருளாதாரம் நிதி உதவி மூலமே இயங்குகிறது. எந்த வரிவிதிப்பு இல்லை. காவல் துறையோ சிறைத்தண்டனையோ கிடையாது.

அருணாச்சலம் ராஜசேகரன் என்பதுதான் நித்யானந்தாவின் இயற்பெயர்.

'நானே ஒரு பொறம்போக்கு. ஏதோ கோயில் அன்னதான உண்டக்கஞ்சி வாங்கி சாப்டுட்டு சிவனே என்று இருந்தவனை இப்படி பண்ணிட்டாங்க' - நித்யானந்தாவின் சுய வாக்குமூலம்.

தடைக்கற்கள் வளர்ச்சிக்கான  படிக்கற்களானது, எப்படி என்று பார்க்கலாம். 

ஆன்மீக நாடான இந்தியாவில் உருவாகும் சாமியார் ஆசிரமங்கள் மிக அதிக   லாபமீட்டும் வணிக மையங்களாக திகழ்கின்றன. இங்கே ஆன்மீக சரக்குகள் நல்ல விலைக்கு விற்பனை ஆகின்றது. இருந்தாலும், இவர்கள் அரசியல்வாதிகளால், துரதிர்ஷ்டவசமாக இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள் .

அரசியலில் சின்னஞ்சிறு பதவிகள் கூட பல கோடி வருமானம் தரக்கூடிய தொழிலாக இருக்கிறது. அவர்களின் கண்ணுக்கு எளிதில் பணம் சேரக்கூடிய நித்யானந்தாவின்  ஆசிரமங்கள் அதன் சொத்துக்கள்  உறுத்திக்கொண்டே இருந்தது. 

நித்யானந்தாவை சர்ச்சையில் சிக்க வைத்து, ஆசிரமங்களை ஒழித்துக் கட்டி, சொத்துக்களை  வசப்படுத்தும் முயற்சிகள். அதில், அவர்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றாலும், நித்யானந்தாவின் பயணத்தை நிறுத்தி வைக்க முடியவில்லை.

ஆனானப்பட்ட ராவணேஷ்வரனையே பாலியல் வளையத்திற்குள் கொண்டு வந்து அவனது திறமையை கொச்சைப்படுத்த முடிந்ததென்றால், நித்யானந்தா எம்மாத்திரம்?

அழகுப்பெட்டகம் ரஞ்சிதா. சொல்லவா வேண்டும் பொறாமைத்  தீயின் வேகத்தை. நீதி தேவதை விழித்துக்கொண்டு நீதி தர நித்தியை தேடினால், நித்தி கம்பி நீட்டி விட்டான், ரஞ்சிதாவோடு.

இன்று நித்தியானந்தா அதிபர். ரஞ்சிதா பிரதமர்.

முகவரி மட்டும் கிடைத்தால் போதும் தமிழகமே கரை கடந்து கைலாசாவில்  கரை சேர்ந்து விட காத்திருக்கிறது, தலைவா.

ஒரு தனி மனிதனின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அடக்கு முறைகளில் இருந்து மீண்டு வரும் மன வலிமை, சமுதாய பெரு நோக்கு மற்றும் மகிழ்ச்சி என்று நித்தியானந்தாவின் வாழ்க்கை நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

பாதைகள் மாறினாலும்  அவனது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

'வலிமை என்பது ஒரு தலைவனுக்கு வலிகளை தாங்கும் தன்மை' - நித்யானந்தா 

நீ தலைவண்டா...

திருமந்திரம் - 171

ஈட்டிய தேன்பூ மணம் கண்டு இரதமும் 
கூட்டிக்  கொணர்ந்துஒரு கொம்பிடை வைத்திடும் 
ஓட்டியே துரத்திட்டு அதுவலியார் கொளக் 
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே. 

 மேலோட்டமாக பார்த்தால் மிகவும் எளிய பாடல்.

தேனீக்கள் மணமிக்க மலருக்கு மலர் சென்று சுவையான தேனை சேகரித்து மரத்தின் ஒரு கொம்பில் தேனடையில்  வைத்திருக்கும். அந்த தேனடை பார்வைக்கு எளிதாக தெரிவதால், தேனெடுப்பவர்கள் தேனீக்களை துரத்திவிட்டு, தேனை எடுத்து சென்று விடுவார்கள்.

பாடலில்  மறைந்துள்ள  பொருளை புரிந்து கொள்ள மிகவும் கடினமாக இருந்தது.

உயிர் மற்றும் செல்வம் நிலையாமை பற்றியது இப்பாடல்.

பணம், சொத்து  என்று செல்வத்தை தேடி வாழ்க்கை முழுதும் பணத்தை சேமிக்கிறோம்.  அது அதிகாரம்  மிக்கவர்கள் கண்ணில் படும்போது,  அதை நம்மிடமிருந்து  பலவந்தமாக பிடுங்கி எடுத்துக்கொள்வார்கள். அப்படித்தான் நம் உடலும். பெற்றோர்கள் குழந்தையை பேணிக்காப்பார்கள். ஒரு நாள், காலனின் கண் பட்டு இறப்பு நேர்ந்துவிடும்.

இவ்வளவு வலிகளைத்தாங்கி, 'நான் பூமியை விட்டு ஓடிவிடவில்லை. இங்குதான் இருக்கிறேன்' என்று அறைகூவல் விடும் நித்யானந்தா, ஆன்மீக  வரலாற்றில் இடம் பெரும் மாமனிதன். 

ஆன்மீகத்தில்  ஆரம்பித்த உன் வாழ்வு செல்வத்தின் வரவால் வலியார் கண் பட்டும் கலங்காமல்  இன்றைக்கும்  முன்னேறத்துடிக்கும் உன் ஆற்றல் தலைமைக்குரியதே.

நித்யானந்தாவின்  பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் ஓடி ஒளியும் அணுகுமுறை தவறாகப்படலாம். எனினும், பின்னொருநாளில் இவனை ஒரு சரித்திர நாயகனாக மக்கள் வரலாற்றில் படிப்பார்கள் என்பதுமட்டும் நிச்சயம்.

*** *** *** *** ***





 


 




Monday, July 22, 2024

வடவாக்கினி

வடவாக்கினி




உலகத்தின் அழிவு நீரினாலா அல்லது நெருப்பினாலா என்று தெரியாது. சிலர் நீரெழுந்து உலகெங்கும் நிறைத்து உயிர்களை அழித்துவிடும் என்கிறார்கள். மற்றவர்களோ நெருப்பே உலகை அழிக்கும் சக்தியாக இருக்கும் என்கிறார்கள். வடவாக்கினி என்பது பிரளய காலத்தில் நீரில் இருந்து எழுந்து வரும் உலகை அழிக்கும் நெருப்பு.

அது நீரோ, நெருப்போ தெரியாது. ஆனால், நிச்சயம் என்று ஒன்றுக்கு மட்டும் உலகை அழிக்கும் சக்தி  உண்டு. 

அதுதான் வயிற்றில் எரியும் நெருப்பு.

'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த  ஜகத்தினை அழித்திடுவோம்' - என்ற பாரதியின் முழக்கம் பசியின் கொடுமையை விளக்கும்.

உலகில் எது நிச்சயமோ இல்லையோ, வயிற்றுப்பசி நிச்சயம். மற்ற உயிரினங்கள் வயிற்றுக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் வாழ்வதாக தோன்றினாலும், வயிற்றுப்பசி என்பது மண்ணுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. அதையே கற்குழி என்கிறார் திருமூலர். கல்லாலான இக்குழியை அடைக்க  [தங்கத்தை என்பது] பொருளினை தேடுவார்கள். பொருட்களைக்கொண்டு யாராலும் அந்தக்குழியை அடைக்க  முடியாது. அடைக்கும்  அறிவை பெற்றவர்கள் முன்னர் அக்குழி ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலங்கள் நீங்கி   தானாக அடைபட்டுவிடும்.

திருமந்திரம் 

கற்குழி தூரக் கனகமும் தேடுவார் 
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது  
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.  

அந்த கற்குழியை தூர்க்கும் அறிவை பெற்றோர்  சிவயோகியார். அவர்கள் புருவ மத்தியில் ஊறும் அமிர்தத்தை உண்டு உயிர்த்திருப்பார்கள். இந்த அறிவை பெற்றவர்கள் வயிற்றுக்கு எந்த உணவும் தேவை இல்லை. அக்குழி தூர்க்கும்  வழி இதுதான்.

புருவ நெற்றியில் அமிர்த ஊற்றை  உண்டாக்கும் வழியையும் காட்டுகிறார் திருமூலர்.

கீழ் நோக்கி சென்று வெளியேறும் தன்மை கொண்ட சுக்கிலத்தை மறித்து மேல் நோக்கி செலுத்த  வேண்டும். மூலாதாரத்திலிருந்து எழும் அனலைத் தூண்டி விட்டு  சுக்கிலத்தை வற்ற செய்ய வேண்டும். வற்றி வாயு  நிலையில் உள்ள சுக்கிலத்தை சுழு  முனைக்கு  கொண்டு சேர்க்க வேண்டும். சுழு முனையில்  வாயு சுடரொளியாய் மாறி அமிர்த நிலைக்கு செல்லும். இவ்வாறு முழு நிலவாய் விளங்கும் புருவ நெற்றியில் ஊறும் அமிர்தத்தை  சிவ யோகியார்கள் தேவைக்கேற்ப உண்டு வாழ்வார்கள். இவர்களுக்கு வேறு உணவு தேவை இல்லை என்பது கருத்து.

திருமந்திரம் 

வற்ற அனலைக்  கொழுவி மறித்தேற்றி
துற்ற சுழிஅனல்  சொறுகிச் சுடர்உற்று
முற்ற மதியத்து அமுதை முறைமுறை 
செற்று உண்பார் சிவயோகி யோரே. 

இதுவே கற்குழியை தூர்க்கும் அறிவு.

*** *** ***




Tuesday, July 9, 2024

வேலியில்லா வெள்ளாமை

வேலியில்லா வெள்ளாமை


வேலியில்லா வெள்ளாமை 
வீடு வந்து சேருமா?

அறுபது வயது வாழ்ந்த மனிதன், சுமார்  இருபது வருடங்களை வெறும் தூக்கத்தில் மட்டும் கழித்திருப்பான்.

ஒரு சோதனை முயற்சியாக, ஐந்து மரண தண்டனை கைதிகளை தூங்காமல் இருந்தால் என்ன ஆகும் என்று சோதிக்க எண்ணினார்கள். அவர்கள் அறையில் நல்ல வெளிச்சம், மற்றபடி அனைத்து வசதிகளும். பத்து நாட்களில் விடுதலை என்ற ஒப்பந்தம் இருப்பதால் மகிழ்ச்சியாக ஒத்துக்கொண்ட கைதிகள், பத்து நாட்கள் முடிவில் ஒருவர் கூட உயிர் தப்பவில்லை. தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டும், அடுத்தவரை காயப்படுத்தியும் எல்லோரும் இறந்து விட்டிருந்தார்கள்.

உயிர் வாழ தூக்கம் எவ்வளவு அத்தியாவசியம் என்று இந்த சோதனை முடிவு நமக்கு காட்டுகிறது.

ஒரு அடிப்படைக்கேள்வி, தூக்கம் என்றால் என்ன? அது எவ்வாறு நிகழ்கிறது? 

படுக்கைக்கு சென்றதும், முதல் கட்டளை மனதிடமிருந்து, தூங்கு என்று. ஐம்புலன்கள் தங்கள் செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும். உடல் உறுப்புகள் எந்த வேலையும் செய்யாமல்  செயலற்று இருக்க வேண்டும். மூச்சுக்காற்று மட்டும் சீராக பிராண வாயுவை செலுத்தி உயிரை அலைக்கழிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உயிர், இறை நிலையின் தொடர்பில் இருக்க வேண்டும்.

தூக்கத்தின் போது, 

    1. மனம்  - உள்ளம் பெருங்கோயில் 

    2. புலன்கள் - கள்ளப்புலன்கள் காளா மணிவிளக்கு 

    3. உடல் - ஊனுடம்பு ஆலயம் 

    4. உயிர் -  சீவன் சிவலிங்கம் 

    5. இறை - வள்ளற்பிரானாற்கு வாய் கோபுர வாசல்

இவை ஐந்தும் அமைதி நிலையில், செயலற்ற நிலையில் செயல் படவேண்டும்.

திருமந்திரம் 

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் 
வள்ளற் பிரானாற்கு வாய்கோபுர வாசல் 
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் 
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே.

நிலையற்ற உடல், உள்ளம் மற்றும் ஐம்புலன்கள் ஓய்வு நிலைக்கு, செயலற்ற நிலைக்கு  செல்கிறது. நிலையான அழிவற்ற உயிர், உயிரைப்பற்றி இருக்கும்  இறை எப்பொழுதும்  செயல்பட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

இனி முக்கியமான விழிப்புணர்வு பகுதிக்கு செல்வோம்.

இந்த தருணத்தில் வாழ்வோம் என்பது விழிப்புணர்வு. இங்கேயும் இரண்டு  நிலைக்களன்கள். உடல், உள்ளம் மற்றும் புலன்களால் பெரும் அனுபவத்தை பெறுவது ஒன்று. இரண்டாவது உயிர் மற்றும் இறை பற்றிய விழிப்புணர்வு.

சாதாரண வாழ்க்கை வாழும் நாம்  இறை, உயிர் என்னும்  ஒரு விழிப்புணர்வு நிலை இருக்கிறது என்பதை  அறியாமல் இருக்கிறோம்.

உறங்கும் காலத்திலும், விழித்திருக்கும் வேளையிலும் நமக்கு அப்படி ஒன்று இருப்பதே தெரிவதில்லை.

பின்னர் எப்படிதான் அந்த விழிப்புணர்வு நிலைக்கு செல்வது என்று கேட்டால் திருமூலர் அதற்கொரு வழி காட்டுகிறார்.

உள்ளத்தால் உயிரினை உற்று அறியுங்கள். இறை உங்கள் உடலில் உறைந்திருப்பதை காணுங்கள் என்கிறார்.

இதற்காக நீங்கள் வேத, சாஸ்திர நூல்களை படிக்க வேண்டிய அவசியமில்லை. இறைவனையே எண்ணி, காதலால் கசிந்துருகவும் வேண்டாம்.  உயிர் மற்றும் இறையை உற்று அறியும் வண்ணம்  சமாதி கை கூடினால், உங்களுக்கு சாவும் வராது. புலனிச்சைகளை பூர்த்தி செய்ய அதன் கட்டளைகளை ஏற்காமல் மேற்படி உயிரையும், இறையையும் அறியும் விழிப்புணர்ச்சி உள்ளவர்கள், கோயில், குளம், காடு, மலை  என்று எங்கும் சுற்ற  வேண்டியதில்லை.

திருமந்திரம் 

ஓதலும் வேண்டாம் உயிர்க்குயி ருள்ளுற்றாற்
காதலும் வேண்டாமெய்க் காய மிடம்கண்டாற்
சாதலும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற்
போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே. 

தூக்கத்திற்கும் இந்தப்பாடலுக்கும் என்ன சம்மந்தம் என்றும் பார்க்கலாம்.

1. உள்ளம் -  உயிர்க்குயி ருள்ளுற்றாற்

2. புலன்கள் - புலன்வழி போகார்க்கே

3. உடல் - காய மிடம்

4. உயிர் - உயிர்

5. இறை - மெய்க் காய மிடம்கண்டாற்

உறக்கத்தின் போது உள்ளம், புலன்கள், உடல் செயலற்ற நிலைக்கு செல்கிறது என்று பார்த்தோம்.

விழிப்பின் போதும் உள்ளம், புலன்கள் மற்றும் உடல் செயலற்ற நிலைக்கு செல்ல வேண்டும். உள்ளத்தால் உயிரை உற்றறிந்த நிலையில் இறை நிலையை உணர்வதே சமாதி நிலை.

இவ்வாறாக சமாதி கைகூடினால் சாவும் உன்னை நெருங்காது என்கிறார் திருமூலர்.

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது.

உற்றறியா உயிரும் 
வேலியில்லா வெள்ளாமையும்   
வீடு போய்  சேராது.

*** *** *** *** ***








கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...