வயது ஏறிக்கொண்டே போகுது. உடலும் ஒத்துழைக்க மறுக்குது. இத்தனை வருடங்கள் என்ன செய்து கொண்டிருந்தோம்னு நெனச்சு பாத்தா சொல்லிக்கிற மாதிரி ஒண்ணும் இல்ல.
ஒரு நிலைக்குமேல் உடலின் வளர்ச்சி முடிந்து தேய்பிறையாகி விட்டது. அறிவு வளர்ச்சி என்னவோ அப்படியே நின்று விட்டது. உள்ளமும் அப்படியே உறைந்துவிட்டது.
'எவ்வளவு தடவ சொன்னாலும், தாத்தாவிற்கு வாட்சப்ல மெசேஜ் அனுப்ப வராது' - என் காது படவே பேரன், பேத்திகள் சொல்லி சிரிக்கிறார்கள்.
யோசிக்க, யோசிக்க ஒன்று மட்டும் தெளிவாக தெரியுது. நான் இதுவரை செய்த காரியங்களில் பாதிக்குமேல் அறிவற்ற செயல்களே. இதையே யாராவது, 'நானொரு முட்டாள்' என்று சொல்லி இருந்தால் அவர்கள்மேல் பாய்ந்திருப்பேன் அன்றைக்கு. ஆனால், இன்றைய நிலையோ யாரும் நமக்கு சொல்லி வழிகாட்டவில்லையே என்றே மனம் நினைக்குது.
குறைந்தபட்சம் படிப்பு என்று ஆரம்பித்த காலத்தில், 'அ' என்று அகரத்தில் ஆரம்பித்த தமிழையாவது ஒழுங்காக காற்றேனா என்றால் அதுவுமில்லை. தமிழ் ஐயா இலக்கணம் சொல்லி தரும்போது கொஞ்சம்கூட மண்டையில் ஏறவில்லை.
பரீட்சையில் செய்யுள் எழுதும்போது, காற்புள்ளி, அரைப்புள்ளி எல்லாம் சரியா வைக்கணும். இல்லைனா மதிப்பெண் கொறஞ்சிரும்னு சொன்னது பெரிய காரியமா தெரிஞ்சது.
'தமிழ்தானே, படிக்காமல் பரீட்சை எழுதலாம்னு நெனச்சா பெயில் ஆயிருவீங்க' - தமிழாசிரியரின் அறிவுரை எல்லாம் காற்றில் பறக்க விட்டாச்சு. தட்டுத்தடுமாறி பாஸ் மார்க் வாங்கி படிப்பையும் முடிச்சாச்சு.
சரியாக கற்றிருந்தால், தமிழில் உள்ள பொக்கிஷங்களை என்றோ கண்டடைந்திருக்கலாம். அறிவியல் இன்னும் காண முடியாத உண்மைகளை அக்கு வேறு, ஆணி வேறாக பிரித்து வழங்கி இருக்கும் தமிழ் பாடல்களை வாழ்க்கை முறையாக கொண்டிருந்திருக்கலாம்.
தமிழ் கற்க ஆரம்பித்தேன், அறுபதை தொட்ட நிலையில்.
திருமந்திர மாலை. முதல் பந்திலேயே சிக்ஸர்.
திருமந்திர மாலையின் அடிப்படை கணிதம் என்று சொல்வதைவிட, எண்ணும், எழுத்தும் பின்னிய எண்ணெழுத்தியல் என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.
'ப க வ த' என்ற நான்கெழுத்துக்கள்தான் அடிப்படை. ஐம்பத்தியொரு அக்ஷரங்களை, எண்களால் கோர்த்து முன்னூறு பாடல்களில் திருமந்திர மாலையாக தந்திருக்கிறார் திருமூலர்.
இதுவே தொடக்கமாக திருமந்திரம் படிக்க ஆரம்பித்தேன். இங்கேதான் உலகக்கோப்பை சதம் அடிக்க ஆரம்பித்தேன்.
வயது என்பது வெறும் எண்தான். மாறா இளமையுடன் முதுமையை எதிர் கொள்ளும் கலையை கண்டறிந்தேன்.
இதோ, திருமந்திர அமுதக்கடலில் ஒரு துளி.
காற்றினை சுவாசித்து, அதனை வசப்படுத்தி உள்ளே அடக்கினால், உடல் பழுத்து மூப்படைந்தாலும், தோற்றம் பளிங்கினைப்போல் ஆனாலும், பிஞ்சைப்போல் இளமையாக உடலின் தன்மை இருக்கும்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம், நல்ல குருவின் வழிகாட்டுதலுடன் பிராணாயாமம் கற்பதும், முறையாக பயிற்சி செய்வதும்தான்.
திருமந்திரம்-569
வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் தெளியக் குருவின் திருவருள் பெற்றால் வளியினும் வேட்ட அளியனும் ஆமே.
பிராணாயாமத்தின்போது பூரகம் எனப்படும் சுவாசக் காற்றினை உள்ளிழுத்து, கும்பகம் எனப்படும் சுவாசித்த காற்றினை குறிப்பிட்ட கால அளவில் உள்ளே நிறுத்த வேண்டும். இக்கலையில் நன்கு தேறிய குருவின் வழி முறையை பின்பற்றினால், காற்றினும் மெல்லிய உடலை விரும்பிப்பெறலாம்.
வயது ஏற ஏற அங்கங்கள் மூப்படைந்து, உடலே சுமையாகி விடும். அங்கங்கள் மூப்படைந்தாலும் இளமையாகவும், அங்கங்கள் சுமை இல்லாமலும் இருக்க என்னவொரு எளிய தமிழ் காட்டும் வழி!
மின்னலிடை வரும் தேனும்பாலும் கன்னலிதழ் தரும் அந்திவேளை கலந்திடும் வெள்ளியும் வியாழத்தில் வாழ்த்திடும் திங்களும் செவ்வாயில்.
பொருள்:
மின்னலைப்போல், கண்கள் கூசும் அழகுடைய உன் இடை, பால் கொடுக்கும் செம்புகளை சுமந்து கொண்டிருக்கிறது. மேலும் அது தேன் ஊறும் சுனையை தாங்கி நிற்கிறது. தேனுடன் பால் கலந்து கரும்பு சாறு போல் கொடுக்கும் உன் இதழ்களில் நான் பருகும் மாலை மயங்கும் வேளை அது. உன்னுடன் இணைந்த உறவில், வெள்ளியை போன்ற வெண்மையான என் உயிரணுக்கள், உறவின் உச்சத்தில் உன்னுடைய செம்மையான சுரோணிதத்தில் கலந்திருக்கும். முழு மதியைப்போல் அழகுடைய பெண்ணே, உறவின் மகிழ்வில் மயங்கி உன்னுடைய சிவந்த வாயில் என்னை வாழிய பல்லாண்டு என்று வாழ்த்துவாய்!
பெண்ணைப்போல் இன்பம் தரும் சொர்கமுமில்லை; பெண்ணைப்போல் துன்பம் தரும் நரகமுமில்லை.
உடலுக்குள் இரண்டு பறவைகள் உள்ளன. ஒன்று அறியாமையினால் 'இது இன்பம்', 'இது துன்பம்', 'இதை நான் அனுபவிக்கிறேன்' என்னும் ஜீவாத்மா. இன்பம், துன்பம் என்பது ஆணவ மலத்தின் வெளிப்பாடான கன்ம மலத்தின் கூறுகள்.
மற்றொறு பறவை அதற்கு சாட்சியாக அமர்ந்துகொண்டிருக்கும் பரமாத்மா.
எப்பொழுது ஜீவாத்மா, பரமாத்மாவின் தன்மையை உணர்ந்து அதனை நெருங்குகிறதோ, அப்பொழுதே அறியாமை அகன்று இன்ப, துன்ப வினை அற்றுவிடும்.
பரமாத்மா, ஜீவாத்மா மற்றும் பற்று என்னும் மூன்றும் ஆதியில் இருந்தவை. இவைகளுக்கு, மற்ற பொருட்கள், உயிர்களைப்போன்று தோற்றம் இல்லை. தோன்றிய எதுவும் மறைந்து விடுவது இயற்கை.
உடலில் இருக்கும் பசு, ஜீவாத்மா என்னும் பறவை, பற்றின் இன்ப துன்ப அறியாமையினால் பதியை, பரமாத்மாவை அணுகுவதில்லை. ஒருவேளை, பரமாத்மாவை அணுகினால், ஜீவாத்மாவும், பற்றும் [பாசம்] பரமாத்மாவுடன் கலந்துவிடும்.
உடலில் உயிர் இருக்கும்வரை மூச்சுக்காற்றின் மூலம் இறைக்கனல் உடலில் பாய்ந்துகொண்டே இருக்கும். இக்கனலே, உயிர்க்கனல் உடலின் சிற்றறைகளில் சேமித்து வைத்த சக்தியை எரிக்க உதவும் நெருப்பு பொறி ஆகும். இறைக்கனலின் தன்மையால் சக்தி எரிக்கப்பட்டு உடல் இயங்குவதற்கான ஆற்றல் கிடைக்கிறது.
திருமந்திரம் 117
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல் சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே. -
குவிக்கப்பட்ட சூரியக்கனல் பஞ்சை எரித்துவிடும். ஆனால், உடலை எப்பொழுதும் சுற்றிவரும் இறைக்கனல் உடலை எரிப்பதில்லை. [மாறாக உணவில் இருந்து சிற்றறையில் சேமிக்கப்பட்ட சத்தினை எரிக்கும் பொறியாக அமைகிறது.] இவ்விறைக்கனலின் தன்மையை உணர்ந்து கொண்டவர்களின் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள், சூரியக்கனல் குவியலின் முன்னர் இருக்கும் பஞ்சு எரிவதுபோல் எரிந்துவிடும்.
மேற்குறிப்பிட்ட இரு திருமந்திரப் பாடல்களிலும் ஒரு ஒற்றுமையை காணலாம்.
பதியணு கிற்பசு பாசம்நி லாவே.
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.
முதல் பாடலில் ஜீவாத்மா பற்று நீங்கி பரமாத்மாவை சேருதல். இரண்டாவது பாடல் பரமாத்மா முன்னர் மும்மலங்கள் அழிந்துவிடும்.
மும்மலங்கள் மறைந்த நிலையில், இன்ப துன்ப நிலை அகன்று, பேரின்ப நிலைக்குள் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலந்துவிடும்.