காற்றுக்கென்ன வேலி
காற்றுக்கென்ன வேலி
முப்பது வயது கூட நிரம்பவில்லை. சென்ற வருடம் சென்னை ஆணழகன் பட்டம் பெற்றவர். உடலை பராமரிப்பதில் அதீத ஆர்வம் உள்ளவர். அவரது திடீர் மறைவு ஒரு அதிர்ச்சி செய்தியை விட்டு செல்லுகிறது.
உடலை கவனித்தால் மட்டும் போதாது. உடலை சார்ந்திருக்கும் உயிரையும் சமமாக கவனிக்க வேண்டும் என்ற செய்திதான் அது.
உடம்பு அழிந்தால் கூடவே உயிரும் அழிந்து விடுகிறது. இந்த உண்மை பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு கூட தெரியும். உடலை ஆரோக்கியமாக வைக்க உடற்பயிற்சி வகுப்புகளை வைக்கும் பள்ளி கால அட்டவணை உயிர்ப்பயிற்சிக்கென்று எதுவும் வைக்கவில்லை. உடலும், உயிரும் இணைந்து ஆரோக்கியமாக செயல்பட்டால்தான் மனிதனின் வாழ்வு சிறப்படைய முடியும்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர் என்னும் திருமூலர் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்கிறார். உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடலை வளர்த்தேன் என்னும் அவர் அந்த உபாயம் திடம்பட மெய்ஞ்ஞானம் சேர வேண்டும் என்கிறார்.
திருமந்திரம் 724
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.
உடலை வளர்ப்பதற்கு மெய்ஞ்ஞானம் சேருவதா?
நமக்கு தெரிந்தது உடலை வளர்க்க நல்ல சத்தான உணவு மற்றும் சீரான உடல் உழைப்பு, உடல் பயிற்சிதான் தேவை. அதென்ன மெய்ஞ்ஞானம்?
கொஞ்சம் ஆழமாக பாடலைப்புரிந்து கொள்ள வேண்டும். உயிர் வளர்த்தேனே என்னும்போது, உயிரை வளர்ப்பதன் மூலம் உடம்பை வளர்த்தேன் என்கிறார்.
உயிரை வளர்க்கும் உபாயம்தான் மெய்ஞ்ஞானம் சேருவது.
அந்த உபாயம்தான் காற்றைக் கொண்டு உயிரை உடலுடன் கட்டுவது.
காற்றிற்கு வேலி போட்டு எதையும் கட்ட முடியுமா? அல்லது எதையும் சுமக்க முடியுமா?
அனைத்து அறிவியல் விதிகளை மீறியதுதானே இயற்கை. காற்றிற்கு வேலி போட்டு உயிரையும் கட்டலாம், பூமியையும் சுமக்கலாம்.
மூச்சு நின்னா போச்சு உசுரு, அது சரி. அதெப்படி பூமிய சொமக்கும்னு யோசிக்கிறீங்களா?
இப்ப நீங்க, சந்திரயான் கூட நிலவுக்கு போய் இறங்குனீங்கன்னு வச்சுக்குங்க. அங்கிருந்து பூமியப் பாருங்க.
பூமியை சுத்தி என்ன இருக்குது?
காத்துதானே?
அப்ப, காத்துதானே பூமிய சொமக்குது?
சரி இப்ப, உசுர எப்படி காத்து கட்டி வச்சிருக்குன்னு பாப்போம்.
ஒரு மனிதன் எவ்வளவு நேரம் சாப்பாடில்லாமல் உயிரோடு இருக்க முடியும். சமீபத்தில், நிலநடுக்க இடிபாடுகளுக்கிடையே சிக்கிய ஒரு மனிதனை 48 நாட்கள் கழித்து உயிரோடு காப்பாற்றியிருக்கிறார்கள்.
ஆனால், மூச்சு விடாமல் ஒருவரால் ஒன்றிரண்டு நிமிடம் இருப்பது கூட கடினம். அப்படிப்பட்ட மூச்சை பற்றி சற்று யோசித்து பார்ப்போம்.
நாம் சுவாசிக்கும் காற்றானது, பத்து வகையாக பிரிந்து உடல் இயங்க காரணியாக இருக்கிறது. அதை தச வாயுக்கள் என்று பெயரிட்டு வைத்திருக்கிறார்கள். அதில் குறிப்பாக பிராணன், அபானன் என்னும் இரண்டு வாயுக்களை மட்டும் எடுத்துக்கொள்வோம். இந்த இரண்டு வாயுக்கள் உயிரை கட்டி வைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
சுவாசத்தின் போது இரு மூக்கு துவாரங்களில் காற்று உடலுக்குள் செல்கிறது. இடது மூக்கு வழியாக செல்லும் காற்று இடைகலை அல்லது சந்திரகலை, குளிர்ச்சியானது. வலது மூக்கு வழியாக செல்லும் காற்று பிங்கலை அல்லது சூரியகலை ஆகும். இது சூடானது. சந்திரகலை மூச்சு வலது கால் பெருவிரல் சென்றடையும். சூரியகலை மூச்சு இடது கால் பெருவிரல் சென்றடையும். இவை இரண்டும் சந்திக்கும் மையப்புள்ளியே சுழுமுனை நாடி அல்லது அக்னி நாடி ஆகும். இந்த இடத்தையே, உயிரின் மையப்புள்ளியான மூலாதாரம் என்றும் சொல்வார்கள்.
அக்னி நாடியில்தான் மேல்நோக்கி செல்லும் தன்மையுடைய பிராணனும், கீழ்நோக்கி செல்லும் தன்மையுடைய அபானனும் சந்திக்கின்றன. இவ்விரு வாயுக்களையும் சுழுமுனை நாடி வழியாக சுழு முனைக்கு கொண்டு செல்ல வேண்டும். உடம்பு அழியாதிருக்க, காற்றைக்கொண்டு உயிரைக் கட்டி வைக்கும் முறை இது.
சந்திரகலை, சூரியகலை மூச்சை திருமூலர் மூன்று மடக்கு உடைப்பாம்பு இரண்டு எட்டுள என்கிறார். அதாவது, உள்ளிழுத்தல், உள்நிறுத்தல், வெளியேற்றுதல் என்ற மூன்று நிலைகளை கொண்ட மூன்று மடக்குள்ள, எட்டு அங்குலம் நீளமுள்ள இரண்டு பாம்புகள் என்கிறார்.
இந்த இரண்டு பாம்புகள் தரும் பிராணன், அபானன் என்னும் வாயுக்களை பன்னிரண்டு அங்குலம் மேலேற்றி நெற்றியில் உள்ள சுழுமுனைக்கு கொண்டு செல்ல இயந்திரம் ஒன்றிருக்கிறது, அதன் பெயர் சுழுமுனை நாடி என்பதை, ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம்தான் என்று சொல்கிறார்.
கீழ்முகமாக இவ்விரு வாயுக்களையும் செல்ல விடாமல் அக்னிநாடியில் கட்டி மேலே கொண்டுசெல்ல வேண்டும் என்பதை, நான்றவிழ் முட்டை இரண்டையுங் கட்டியிட்டு, இயந்திரம் மூலம் பன்னிரண்டு அங்குலம் மேலேற்றி சுழுமுனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்விரு வாயுக்களை மேலேற்றுவதற்கான வழிமுறைதான் தியானம்.
இவ்வாறு தியானத்தின் மூலம் மெய்ஞ்ஞானம் அடைபவரின் உடம்புக்கு அழிவு கிடையாது என்பதை, ஊன்றி இருக்க உடம்பு அழியாதே என்கிறார்.
திருமந்திரம் 728
மூன்று மடக்குஉடைப் பாம்புஇரண்டு எட்டுள
ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம்தான்
நான்றவிழ் முட்டை இரண்டையுங் கட்டியிட்டு
ஊன்றி இருக்க உடம்புஅழி யாதே.
*** *** ***
No comments:
Post a Comment