உயிர் உடல் உள்ளம்
நாம் கவனிக்க வேண்டிய இரண்டு முக்கிய செய்திகள் இங்கே இருக்கிறது.
1. உடலில் உயிரும், இயங்குவதற்கு தேவையான சக்தி இருந்தும், உடல் இயங்க தேவையான கட்டளைகள் உடலுக்கு சென்றடையவில்லை.
2. இறந்தவரின் அங்கங்கள் மாற்று உயிருள்ள உடல்களில் பொருத்தப்பட்டால் செயல்பட ஆரம்பிக்கிறது.
முதல் நிகழ்வில், மூளையிலிருந்து பெறப்படும் ஆணைகள் உடலில் செயல்படும் உறுப்புகளுக்கு [கர்மேந்திரியங்கள்] சென்றடையவில்லை. இந்த ஆணைகளை எடுத்து செல்லும் உள்ளம் [அந்தக்கரணங்கள்] இங்கே செயல்படும் நிலையில் இல்லை. இங்கே மூளைக்கும் உள்ளத்துக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதனால் உடலுடனும், உயிருடனும் மூளையால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இரண்டாம் நிலையில், மாற்று உடலின் உள்ளம் இடும் ஆணைகளை பெற்று இறந்தவரின் அங்கங்கள் செயல்படும் நிலைக்கு செல்கிறது. இங்கே மூளையின் ஆணைகளை ஏற்று உள்ளம், உடல், உயிர் மூன்றும் இணைந்து செயலாற்றுகிறது.
மேற்சொன்ன விளக்கத்திலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். உள்ளம் என்ற ஒன்று இல்லாவிட்டால் ஒன்றுமில்லை. உள்ளமே நம் அனைத்து உலக அனுபவ உணர்வுகளுக்கு பிரதானம்.
அதனால்தான் திருமூலர் உள்ளத்தை முதலில் வைக்கிறார். உள்ளம் பெருங்கோயில் என்கிறார். ஊனுடம்பு ஆலயம் என்று உடலை இரண்டாவதாக குறிப்பிடுகிறார். கோயிலுக்குள்ளே இருக்கும் ஆலயம் என்கிறார். உயிரைக்குறிப்பிடும்போது, தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம், கருவறைக்குள்ளே மையமாக இருந்து, கோயில் அனைத்துக்கும் மூலமாக நின்று செயலாற்றும் சிவலிங்கம் என்கிறார். கோயில் கோபுர வாசலை, வள்ளல் பிரானாற்கு வாய் கோபுர வாசல், மனித உடலில் உள்ள வாய் என்று குறிப்பிடுகிறார். உயிர், உடல், உள்ளம் மூன்றும் சேர்ந்து ஆற்ற வேண்டிய செயல்களுக்கு நுழைவு வாயிலாக வாய் இருக்கிறது. மனித உடலை அவனுக்கு விளங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு திருட்டுத்தனமாக இருந்து ஆட்டுவிக்கும் ஐந்து புலன்களை, கள்ளப்புலனைந்தும் காளா மணி விளக்கே, கோயிலில் மணி மற்றும் விளக்குகள் என்கிறார். அவன் குணாதிசயங்களை காட்டி கொடுத்துவிடும் என்றும் அறிகிறோம்.
மேலோட்டமாக பார்த்தால், நம்முடைய ஒவ்வொரு செயலும், நாமே செய்வது போல் தோன்றும் . ஆனால், ஒவ்வொரு செயலுக்கும் அடித்தளமாக இருப்பது புலன்கள். கோயிலின் மணி ஓசை கோயில் இருப்பிடத்தை காட்டிவிடும். எரியும் விளக்குகள் அங்குள்ள பொருட்களை தெளிவாக காட்டி நிற்கும். இப்படித்தான், மனிதனின் குணங்களை இந்தப்புலன்கள் அவனது நடவடிக்கைகளை கொண்டு காட்டி கொடுத்துவிடும்.
புலன்களில் உள்ள அறியும் ஆற்றலை இந்திரியங்கள் என்று குறிப்பிடுகிறோம். கண்களால் பார்க்கிறோம், வாயால் சுவைக்கிறோம் என்றால் பார்வை, சுவை என்பது அறியும் ஆற்றல். இந்த இந்திரியங்களுக்கு புறச்செயல்கள் மற்றும் அகச்செயல்களை அறியும் ஆற்றல் இருக்கிறது. ஆனால், தொடர்ந்து உடலுக்கு வெளியே நடக்கும் செயல்களிலேயே உள்ளம் நிலைத்திருக்கும்படி செய்து, உள்ளே இருக்கும் இறைநிலையை அறிய முடியாமல் செய்வதால் இவைகள் கள்ளப்புலன்கள் என்று சொல்லப்பட்டது.
திருமந்திரம் 1823
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானாற்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.
இங்கே மறைந்துள்ள இச்சா சக்தியின் தன்மையை நாம் புறந்தள்ளி விட்டு செல்லக்கூடாது.
புலன்களின் மூலம் பெறப்படும் செய்திகளை மனம் இச்சையாக மாற்றி மூளைக்கு எடுத்து செல்கிறது. இச்சையை செயல்படுத்தும் எண்ணங்களை மூளை முதலில் உயிருக்கு தெரிவிக்கிறது. இங்கே உயிருக்கு தன்முனைப்பு எதுவும் இல்லை. அதாவது இது தேவை, தேவை இல்லை என்று சொல்லும் தன்மை உயிருக்கு கிடையாது.
ஒவ்வொரு மனிதனின் குணத்திற்கு ஏற்ப இச்சா சக்தி இருக்கும். இச்சா மிகுந்திருந்தால் அது ஈஸ்வர நிலை. இச்சா சக்தி குறைந்திருக்கும், சுத்த வித்தை என்னும் நிலையிலோ, இச்சா சக்தி சமன நிலையில் இருக்கும் சதாசிவ நிலையிலோ புலன்களின் ஆளுமை குறைந்திருக்கும்.
இங்கிருந்து புறப்படும் எண்ணங்களே கர்மேந்திரியங்களை செயல்பட வைக்கிறது.
புலன்களை வெல்ல முடியாத நிலையில், புலன்களுக்கு அடிமையாகி, ஒருவன் செய்யும் காரியங்களே அவனது அடையாளமாக மாறிவிடுகிறது.
*** *** ***
Options ப்படையாக இருப்பது புலன்க
No comments:
Post a Comment