Thursday, March 23, 2023

ரகசியம் பரம ரகசியம்

ரகசியம் பரம ரகசியம் 

திருமந்திரம் கற்போம் 



ரகசியம் பரம ரகசியம்  
இது நமக்குள்
இருப்பது அவசியம் 

'மண்ணில் உயிர்ப்பெடுத்த மறுகணமே அன்னை மடி அறியும் பரம ரகசியம் யார் சொல்லி தந்தார் கன்றினுக்கு? 

மனிதனாய் பிறந்ததனால், பிறவியின்  திசையறியாமல் தத்தளிக்கும் எனக்கு அருள் செய்வாய்' -  என்று வேண்டி நின்ற எனக்கு, கீழ்க்கண்ட அத்தியாயம் படிக்க உத்திரவு கிடைத்தது.

'முந்தைய, ஜன்மங்களிலுள்ள  நல்வினைகளால் நாம் இவ்வுடம்பைப் பெற்று இருக்கிறோம். பக்தியையும், விடுதலையையும் இவ்வுதவியை கொண்டு பெறுவது தகுதியுடையதாகும். எனவே, எப்போதும் நாம் சோம்பலின்றி இருக்க வேண்டும். நமது குறிக்கோளையும் நோக்கத்தையும் பெறுவதில் நாம் எப்போதும் விழிப்பாய்  இருக்க வேண்டும்.'
                                                                             -  ஸ்ரீ சாய் சத் சரித்திரம் 
 
இந்தப் பிறவி   அச்சம்  எனக்கு மட்டுமல்ல, மண்ணில் மனிதனாய் பிறந்து, தன்னுணர்வு எய்தப்பெற்ற பேரருளாளர்கள் மனதிலும் தோன்றியதில் ஆச்சர்யம் கொண்டேன். 

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பெண்டிர்  எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
என்செய்வேன்கச்சி ஏகம்ப நாதனே.
                                           - பட்டினத்தார் பாடல் 83

இதோ, திருமூலர் மனிதப்பிறவியின்,  பரம ரகசியத்தின் முடிச்சை அவிழ்க்கும் வழியை நமக்கு காட்டுகிறார்.

நான்பெற்ற  இன்பம் பெறுக இவ்வையகம் 
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் 
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் 
தான் பற்றப்பற்றத் தலைப்படும் தானே.
                                                                  - திருமந்திரம் 85

இலை மறை, காய் மறையாக மறைத்து வைக்கப்பட்டுள்ள விண்ணுலகம்  செல்லும் வழி அறிந்து கொண்டு, நான் அடையும் இன்பத்தை, உங்களுக்கும் சொல்கிறேன் கேளுங்கள் மனிதர்களே!
உடலின் உணர்வுகள் விழிப்பு நிலையில் இருக்க, 'நமக்ஷிவய' எனும் மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வாருங்கள். தானாகவே உங்கள் பிறப்பின் பரம ரகசியமான வானுலகு செல்லும் மார்க்கத்தை, முக்தியை  அறியத்தலைப்படுவீர்கள்.

உணர்வுறு மந்திரத்தை எப்படி, எவ்வளவு முறை சொல்ல வேண்டும் என்னும் ரகசியத்தையும்   கூறுகிறார்.

சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தாலுமேற்
சூக்கும மான வழியிடைக் காணலாம் 
சூக்கும மான வினையைக் கெடுக்கலாம் 
சூக்கும மான சிவனதா னந்தமே. 
                                                        - திருமந்திரம் 909  

இதில் ரகசியம் என்னவென்றால், 'க்ஷிவயநம'  என்னும் மந்திரத்தை விழிப்புணர்வு நிலையில் இருந்து எட்டாயிரம் முறை ஜெபிக்க வேண்டும். அப்படி ஜெபித்தால், ஒன்று,  தலையில்  உள்ள விண்ணுலகம்  செல்லும் ரகசிய வழியைக்காணலாம். இரண்டாவது ரகசியமாக  உன்னைத்தொடர்ந்து வரும் வினைப்பயனை அழித்து விடலாம். மூன்றாவது, உன்னுள் ரகசியமாக ஏகமாக இருக்கும் சிவானந்தத்தை நீயும் பெறலாம்.

முதல் பாடல் விளக்கத்தில் 'நமக்ஷிவய' என்று சொன்னேன். சூக்கும பாடல் விளக்கத்தில்  'க்ஷிவயநம' என்று சொன்னேன் என்று பார்க்கிறீர்களா?
'நமக்ஷிவய' என்பது உடலை மையமாக கொண்ட 'தூல பஞ்சாக்ஷரம்'.
'க்ஷிவயநம' என்பது சூக்கும பஞ்சாக்ஷரம்.

சிவனுடன் ஏகமாகி முக்தியடைய விரும்புபவர்கள் சொல்ல வேண்டிய பஞ்சாக்ஷரம், சூக்கும பஞ்சாக்ஷரம்  'க்ஷிவயநம'.

சூக்கும பஞ்சாக்ஷர மகிமையை சொல்கிறேன் கேளுங்கள்:

ஆணவ மலமும் திரோதமும் நீங்கும் பொருட்டுச் சூக்கும பஞ்சாக்ஷரத்தை ஜெபிக்க வேண்டும். அங்ஙனம் ஜெபித்தலினால் திரோதனா சத்தி மலத்தை நீக்கி அருட்சத்தியாய் மாறி நின்று பிரகாசிக்கும். பின்பு, அவ்வருள் தாரகமாக அதனில் அடங்கி அதுவேயாய்ச் சிவத்தோடு ஏகமாகும். சூக்கும பஞ்சாக்ஷர மகிமை இதுவாம்.

 

Wednesday, March 22, 2023

நான் ஏன் பிறந்தேன்?

நான் ஏன் பிறந்தேன்? 

திருமந்திரம் கற்போம்  

பாடல் 113


சித்தர் பெருமான் திருமூலர் மலரடி பணிந்து, அவரின்  ஆசிகளுடன் திருமந்திர பாடல்களில் நான் உணர்ந்ததை எழுத முற்படுகிறேன்.

பாடல்:

விண்ணின் றிழிந்து  வினைக்கீடாய் மெய்கொண்டு 
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் ருக்கியோ ரொப்பிலா ஆனந்தக் 
கண்ணின்று காட்டிக்  களிம்பு அறுத்தானே.  

                                                                              - திருமந்திரம் 113

மனித உடல் பிறப்பெடுக்கும் முறையை விளக்கும் பாடல் இது. முதலில் விண்ணின் என்ற வார்த்தையின் பொருளைப்பார்ப்போம்.

விண் என்பது ஆகாயம். ஆகாயத்தின் கூறுகள் மனித வாழ்வில் ஐந்து வித உணர்வுகளை கொண்டது.

1. காமம் 

2. குரோதம் 

3. லோபம் 

4. மதம் 

5. மாச்சரியம் 

காமம் என்பது அளவற்ற ஆசை. அது பொன்னாகட்டும், பொருளாகட்டும், பெண்ணாகட்டும், குடும்பமாகட்டும், ஆசை அளவு கடந்தால் அதனை காமம் என்று கூறலாம்.

குரோதம் என்பது மற்றவர்கள் மீது கொள்ளும் கோபம், வெகுண்டெழுதல், பழிவாங்குதல் போன்றவை ஆகும்.

லோபம் என்றால் சுய லாப நோக்கு. தனக்கு, தனக்கு என்று எதையும் ஒதுக்கி வைத்துக்கொள்வது. தன்னால்தான் எதுவும் நடக்கிறது என்றோ, தன்னை விட்டால் யாரும் செய்ய முடியாது என்ற சுயநலத்தன்மை.

மதம் என்பது நன்மையோ, தீமையோ ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு அதற்காக அலைவது. மதம் பிடித்து அலைகிறான் என்ற பேச்சினை கேட்கிறோமல்லவா.

மாச்சரியம் இது பொறாமை. எனக்கில்லையே, அவனுக்கு மட்டும்  அழகான மனைவி இருக்கிறாளே  என்ற ஆதங்கம். அவளுக்கு எவ்வளவு நீளமான கூந்தல் என்று பெண்கள் பெருமூச்செறிந்ததை பார்த்திருப்பீர்கள்.

இந்த ஆகாயத்தின் கூறுகள்தான் மனிதனின் அடிப்படை தன்மைகள். 

விண்ணின் றிழிந்து

இழிந்து, இந்த வார்த்தையை கவனித்தால், வானத்திலிருந்து வழிந்து என்ற பொருள் தருகிறது. வானத்திலிருந்து குதிக்கவில்லை, மெதுவாக தேன்  வழிவதைப்போல் வழிந்து வருகிறார்.

வினைக்கீடாய்

நீ பல பிறவிகளில் செய்த நல்வினை, தீவினைகளின் பலன்கள். 

ஜக்கி வாசுதேவ் ஒரு நேர்காணல் கேள்வி நேரத்தில் தவித்ததை சொல்லத்தான் வேண்டும்.

'மனிதன் தன்  முதல் பிறப்பில் எப்படி பாவமோ, புண்ணியமோ செய்திருக்க முடியும்? - இது பார்வையாளர் கேட்ட கேள்வி.

'இதை நெறைய பேர்கிட்ட கேட்டுட்டு என்கிட்ட கேக்குறீங்க. நல்ல கேள்வி..' - இப்படியாக மழுப்பல் பதில்தான் ஜக்கியிடம் இருந்து பெற முடிந்தது.

அதற்கான பதில் நம் சித்தர் பெருமானிடம் இருந்து வருவதைப்பாருங்கள்.

'பதியினைப் போல்பசு பாசம் அனாதி'

பதி - ஆதி இறைவன்  [பேரறிவு]

பசு - உயிரணு அல்லது ஜீவன்கள்  [சிற்றறிவு]

பாசம் - தளை அல்லது பற்று  [அறிவிலி]

இம்மூன்று நிலைகளுமே ஆதியில் தோன்றியவை. ஜீவன் ஒவ்வொறு பிறப்பிலும், அதனை  பற்றி நிற்கும் தளைகளால் நல்வினை, தீவினை என்ற செயல்களில் ஈடுபடுகிறது.

புல்லாகி, பூண்டாகி இறுதியில் மனிதனாகும் தன்  முதல் பிறப்பில்  பல்வேறு வினைகளை கடந்து வர வாய்ப்பிருக்கிறது. மீண்டும் மனிதனாக பிறப்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

மெய்கொண்டு 

உன்னுடைய இருவினைப்பயன்களுக்கேற்ப உடலினை கொண்டு வந்து தருகிறான்.

 தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து

தன்னுடைய குளிர்ந்த பாதங்களை ஜீவனின்  தலைக்கு காவலாக முதலில் வைக்கிறான்.

நாம் புரிந்து கொள்ள வேண்டிய சங்கதி ஒன்றிங்குண்டு. அதாவது ஒவ்வொரு மனிதனின் தலையின் உச்சியில் இறைவனின் தாள், அதாவது பாதம் இருக்கிறது.

கடவுள் வாழ்த்தில் திருவள்ளுவர்  இறைவனின் திருவடிகளை முழுமையாக போற்றுவதைப்பாருங்கள்:

கற்றதின் முழுப்பயன் -  'நற்றாள் தொழுவது'.

'மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்' - ஆயிரம் மலர்கள் மலரக்கூடிய உச்சந்தலையின் மேல் நிற்கும்  இறைவனின் மாண்புமிக்க தாள்கள்.

'தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்' - மனக்கவலை மாற்றும் மருந்து.

'அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்' - பிறவிப்பெருங்கடல் நீந்தலரிது.

'தாளை வணங்காத் தலை' - ஜடத்தை போன்று உணர்வற்றவர்கள்.

'இறைவன் அடிசேரா தார்' - பிறவிக்கடல் நீந்தார்.

உண்ணின் ருக்கியோ ரொப்பிலா ஆனந்தக் 
கண்ணின்று காட்டிக்  

ஒப்பற்ற பேரொளியுடன், பேரானந்தத்தையும் ஜீவனின் அகக்கண்களுக்கு காட்டினான் இறைவன்.

களிம்பு அறுத்தானே.

ஜீவனின் முந்தைய பிறவிகளின் நினைவுகளை மனதில் இருந்து அழித்து விட்டான். தன் ஜீவன் அனாதியானது என்றோ, முக்தியடையும் வரை பிறவிச்சுழலில் சிக்கியிருக்கும் என்றோ ஜீவனுக்கு தெரியாமல் மறைந்து நிற்கும்.

பலபிறவிகளில் பெற்ற அறிவு நுண்ணறிவாக ஜீவனின் கருவில் பதிவுகள் இருக்கும். அந்த அறிவின் பதிவினை அந்தக்கரணங்களான மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி என்னும் நான்கு நிலையிலிருந்தும் அகற்றி நிற்பான் இறைவன்.

***  ***  ***











Tuesday, March 14, 2023

சூது என்ன செய்யும்?

சூது என்ன செய்யும்? 



இது  பொறுப்பதில்லை - தம்பி  
எரிதழல் கொண்டு வா..
கதிரை வைத்திழந்தான்  - அண்ணன் 
கையை எரித்திடுவோம்..

பீமன் வெகுண்டெழுந்தான்.

தருமன் தலை குனிந்தான். தரும தேவதையும் தலை குனிந்தாள். 

அதர்மம் கர்ஜித்தது. 

தகாத வழியில்  துரியோதனன்  பெற்ற வெற்றியால்  பார்வையற்ற தந்தை  திருதராஷ்டிரனின் மனம் மகிழ்ந்தது. குலத்துக்கே குருவான  பீஷ்மர் தன்  கையாலாகாத்தனத்தை எண்ணி வெட்கினான். கவுரவ, பாண்டவ இளவரசர்களுக்கு  அத்தனை கலைகளிலும் பயிற்சி தந்த ஆச்சாரியர்கள் செய்வதறியாது வேதனையில்  மௌன சாட்சியாக நின்றார்கள்.

' துச்சாதனா, பாஞ்சாலியின் ஆடையை அகற்றி  என் தொடையில் அமர்த்து' - துரியோதனின் ஆணையை ஏற்று துகில் உரிந்தான் துச்சாதனன்.

பாஞ்சாலியின் தஞ்சக்குரல் கேட்டு கண்ணன் கை கொடுத்தான்.

'துரியோதனனின் குருதி பூசி கூந்தல் முடிப்பேன்' - சபதமேற்றாள் பாஞ்சாலி.

'என் கதையால் அவன் தொடையை அடித்து குருதி தருவேன்' - கண் சிவந்தான் பீமன்.  

மகாபாரதத்தின் ஆணி வேர் இந்த சூதாட்டம்.

பெண்ணாசை, பிள்ளையாசை மற்றும் பொருளாசை. 

மனிதனை அலைக்கழிக்கும் மூன்று பேராசைகளும் ஒருங்கே இந்த சூதில் அரங்கேறியது.

சூதாட்டத்தில் இறங்கியவர்களுக்கு காமம் கூட இரண்டாம்பட்சம் தான்.

திருமூலரும் தன் பங்கிற்கு சூதின் தீவிரத்தை விளக்குவதை பார்ப்போம்.

பெண்ணை சூது விளையாட்டிற்கு ஒப்பாக கூறுகிறார்.

'சூதொத்த மென்முலையாளும் நற்சூதனும்' - இந்த வரிகளில் கலவியின் போது  பெண்கள் சூதாட்டத்தைப் போன்றவர்கள். அதிலும் பல பாடல்களில் 'ஆயிழையார் ', மெல்லியல் மாதர்' என்று பல விதங்களில் பெண்களை குறிப்பிட்டவர், இந்த பாடலில் மட்டும் மென்முலையாளும் என்று கூறுகிறார். உறவு என்பதே ஒரு சூதாட்டம் போல. அதில் விளையாட்டு மைதானம் பெண் என்றால் சூதாட்டக்கருவி மென்முலைகள் என்கிறார்.

பரியங்க யோகம் மூலம் இறைவனை தலையில் தரிசிக்கலாம். அதிலும் ஒரே நேரத்தில், உறவில் பங்கேற்கும் தலைவனும், தலைவியும் இறைவனை தரிசிக்கும் கலையை விளக்கவே இப்பாடல்.

'போதத்தை உன்னவே போகாது வாயுவும்'  - கலவியின் போது ஆணும், பெண்ணும் புருவ நெற்றியில் நினைவை வைத்து இறைவனை போற்றி நினைக்கவேண்டும். இவ்வாறு செய்வதனால், காம வாயு எனப்படும் அபான வாயுவின் தன்மை  அடங்கி நிற்கும். 

இவ்வாறு காம வாயு அடங்கி நிற்பதனால்,

'மேகத்த வெள்ளியும் மீளும் வியாழத்தில்' - மேகத்தை போன்ற வெண்மையான ஆணின்  விந்து, பெண்ணின் சுரோணிதத்தில் சேராது ஆணின் உடலிலே தங்கி விடும். 

'தாதில் குழைந்து தலை கண்டவாறே' - தங்களுடைய கலவி இன்பத்தில், தலையில் இறைவனை தரிசிப்பார்கள்.

நான் சொல்ல வந்தது சூதின் தீமைகளைப்பற்றி.

இணைய வழி சூதாட்டத்தடை சட்டம்  பற்றி.

இந்திய பாராளுமன்றத்தில் மாநிலங்கள் தங்கள் நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறி விட்டது. 

தமிழ்நாடு அரசு  சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி, இரு முறையும்  ஒப்புதல் பெற முடியவில்லை. இப்பொழுது மூன்றாம் முறைக்கு தயார் ஆகிறார்கள்.

தீங்கென்று தெரிந்தும், எரிதழல் கொண்டுவா, என்று சமூக நீதியாளர்கள், அரசியல்வாதிகள்  பொங்காதது ஏன்? 

உண்மையில் நடந்தது என்ன?

யாருக்கும் தெரியாது. தெரியவும் விட மாட்டார்கள்.

ஏனென்றால், ' அரசியலில், இது சாதாரணமப்பா'.

ஆனால், இது மக்களுக்கு சாதா ரணமப்பா.

*** *** *** 

திருமந்திரம் 826

போதத்தை உன்னவே போகாது வாயுவும்
மேகத்த வெள்ளியும் மீளும் வியாழத்தில்
சூதொத்த மென்முலையாளும் நற்சூதனும்
தாதில் குழைந்து தலை கண்டவாறே.








கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...