Monday, June 20, 2022

நீரினுள் காற்றை ஒளித்தற்று

நீரினுள் காற்றை ஒளித்தற்று


வித்தின்றி முளை விடுமாறில்லை 

முன் குறிப்பு:

மிகுந்த  கவனத்துடன் உணரப்பட  வேண்டிய மனித உடல் மற்றும்  வாழ்வியல் உண்மை  பற்றி அறியப்போகிறோம். எள் முனையளவு  சிந்தனை மாறுபட்டு நின்றாலும்  விரசமாகி வீணாகி விடும், ஜாக்கிரதை. 

இதனை படிக்கும் வாய்ப்பை பெற்றவர்கள் நேரான சிந்தனையில் படிக்கவும்.

விதையை, அது விளைந்த மரத்திலே விதைக்கும் வித்தை இது.

விதையை பிறிதோரிடத்தில் விதைப்பதன் மூலம், இன்னொரு மரமாக வளர்ந்து பலன் தருகிறது. 

நம் சிந்தனைக்கான  ஒரு கருத்து. 

விதையை, அது  விளைந்த  மரத்தின் உள்ளே விதைக்க முடியுமா?

விதைக்க முடிந்தால் என்னவாகும்? 

வாருங்கள். திருமூலரின்  வழிகாட்டுதலை பார்ப்போம்.

முதலில் விதையின் தன்மையை அறிவோம்.

பொதுவாக விதைகள், முளைகட்டும் வித்தும்,  அதனை பாதுகாப்புடன் வைத்திருக்கும் சதைப்பற்றும் தோலுமாக இருக்கும். நெல் போன்ற வித்துக்களில் உமிப்பகுதி விதையை பத்திரப்படுத்துவதுடன்  முளை விடுவதற்கு உதவியாக இருக்கிறது. இரண்டும் பிரிக்கப்பட்டால், மீண்டும் முளைவிட்டு மரமாகும் வாய்ப்பில்லை. எனினும், வித்திலிருந்தே முளை பிறக்கிறது.

திருமந்திரம் - 1932

வித்தினில் அன்றிமுளை இல்லை அம்முளை 
வித்தினில் அன்றி வெளிப்படு மாறில்லை 
வித்தும் முளையும் உடனன்றி வேறல்ல 
அத்தன்மை யாகும் அரநெறி காணுமே.

                                                                                             

விதையும் முளையும் வேறு வேறல்ல. வித்தில்லாமல் முளை தோன்றி மரமாகாது. 

விதையே முளையாகி, செடியாகி, மரமாகிறது. பருவம் வந்ததும் தன்  இனம் பெருக்க மலராகி, காயாகி, கனியாகிறது. இனிமையான கனி தன்னுள்ளே விதையை தாங்கி வருகிறது.

இந்த இயற்கை விதி மனித விதைக்கும் பொருந்தும்.

மனித வித்தில் முளையாகும் தன்மையே, புதியதோர் பிறப்பினை உருவாக்கும்  அரநெறி என்று சொல்லக்கூடிய சிவ நெறி. சிவம் நாதமாக வித்தாக, சக்தி ஒளியாக  முளையாக உள்ளதாக நாம் புரிந்துக் கொள்வோம். 

ஒரு ஆல மரத்தின் விதை கடுகினும் சிறிதாக இருப்பதை பார்த்திருப்பீர்கள். அந்த சிறிய விதைதான் இன்னொரு ஆலமரமாக வளரப்போகிறது என்று தெரிந்தாலும், மனம் அதை முழுமையாக ஏற்க தயங்குகிறது. அதைவிட பல ஆயிரம் மடங்கு சிறிய அளவில்தான் மனித விதை இருக்கிறது.


***  *** ***

மின்னலிழை 

மனித வித்தின் அளவை திருமூலர் கணக்கிட்டு சொல்கிறார்.

பசுவின் மயிர் ஒன்றை குறுக்காக வெட்டி. அதனை ஒரு லட்சம் பாகமாக பகுத்தால் வரும் ஒரு பகுதியின் அளவே மனித வித்தின் அளவு.

 திருமந்திரம் - 2011

மேவிய சீவன் வடிவது சொல்லிடில் 
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு 
மேவிய கூறது ஆயிரம் ஆயினால் 
ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே.

                                           

எடுத்திருக்கும் அத்தனை பிறவிகளின் சரித்திரமும் அங்கே பதிந்திருக்கும். எடுக்கும் புது பிறவியிலும் அதன் தாக்கம் இருக்கும்.

வினாடிக்கு 1500 ஜீவ வித்துக்கள் மனித உடலில் உருவாகிறது என்று சொல்லும் அறிவியல், வெளியேறாத  ஜீவ வித்துக்கள் உடலிலே மீண்டும் கலந்துவிடும் என்கிறது. ஆனால், இது மீண்டும் உடலில் விதைக்கப்பட்டதாக கொள்ள முடியாது. ஏனெனில், இது பிறக்காத ஜீவ வித்துக்கள்.


***  ***  ***

விதையில்லாத மாங்கனியா? 

மனித வித்திலும் கனியும், விதையுமாக இரண்டு பரிமாணம் உள்ளது.

அன்ன வித்து, பிராண வித்து என இரண்டு அடுக்கை கொண்டது மனித விந்து.

 திருமந்திரம் - 1966

அன்னம் பிராணன் என்றுயார்க்கும் இருவிந்து
தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச் 
சொன்னமாம்  உருத்தோன்றும் எண் சித்தியாம் 
அன்னவர் எல்லாம் அழிவற  நின்றதே.

                                                            

தன்னுடைய உடலின் தேவையை அறிந்து அதற்கேற்ப உணவுண்டு, அன்னம், பிராணன் என்னும் இரு அடுக்கை கொண்ட வித்தினை வெற்றி கொள்ள முடிந்தவர்கள், தங்கத்தைப் போன்ற உடலும், அவர்தம் எண்ணங்கள் வெற்றி அடையப்பெற்று நீண்ட காலம் மண்ணில் வாழ்வார்கள்.

உண்ணும் உணவு அன்ன விந்துவை உடலில்  தொடர்ந்து உற்பத்தி செய்து வருகிறது. அதேபோல், உடலில் சேரும் பிராண சக்திக்கேற்ப பிராண விந்துவும் உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கிறது.


***  ***  ***

உயிர் வளர்த்தேனே 

நாம் உட்கொள்ளும் உணவு ஏழு வகையான தாதுக்களை உடலை சீராக வைத்துக்கொள்ள வழங்குகிறது. அதில் சக்தி [இரதம்], இரத்தம் மற்றும் சுக்கிலம் எனும் மூன்று தாதுக்கள் விந்துவை உற்பத்தி செய்கிறது. ஒரு புல்லின் நுனியில்  உள்ள பனியளவே  உருவாகும் இவ்விந்து நம் உடலில் கலந்திருக்கும்.

 திருமந்திரம் - 1934

இரதம் முதலான ஏழ்தாது  மூன்றில் 
உரிய தினத்தின் ஒரு புல்  பனிபோல் 
அரிய துளி  விந்துவாகும் ஏழ்மூன்றின் 
மருவிய விந்து வளரும் காயத்திலே.

                                            

வித்தினை அளவு முறை அறியாமல் வீணாக செலவிடும்போது, உடலின் பிராண சக்தி குறைந்து உடல்   தளர்ந்து போகிறது. அவ்வாறில்லாமல், வித்தின் தன்மை அறிந்து அதனை உடலிலே மீண்டும் விதைத்து வைத்துக்  கொள்வது உடலின்  உயிர் சக்தியை அதிகரிக்கும்.


***  ***  ***

வித்துவித்தான் தினை அறுப்பான்

விளைவு அறியாதவர்கள் வித்தினை வீணாக மோக இன்பத்திற்காக செலவு செய்பவர்கள். வித்தின் தன்மை உணர்ந்தவர்கள், இன்பத்திற்காக பெண்ணுடல் கலந்தாலும், வித்தினை கழிந்தோட செய்யாமல் ,  அதனை தன்  உடலிலே மீண்டும் விதைக்க முற்படுபவர்கள். இருவருமே வித்தினை செலவு செய்பவர்களாயினும், இரண்டாமவன் வித்தினை உடலில் விதைத்தவன் ஆகிறான்.

 திருமந்திரம் - 1964

வித்துக்குற்று உண்பான் விளைவு அறியாதவன் 
வித்துக்குற்று உண்ணாமல் வித்துச்சுட்டு உண்பவன் 
வித்துக்குற்று உண்பானில் வேறுஅலன் ஈற்றவன் 
வித்துக்குற்று உண்ணாமல் வித்துவித்தான் அன்றே.

                                                                          

ஆனால், உடலில் எப்படி விதைப்பது?

திருமந்திரம் - 1963

விந்துவும் நாதமும்மேவக் கனல் மூல 
வந்த அனல்மயிர் கால்தோறும் மன்னிடச் 
சிந்தனை மாறச் சிவம்அகம் ஆகவே 
விந்துவும் மாளும் மெய்க் காயத்தில் வித்திலே.
                                                                  

ஒளியும், ஒலியுமாக ஒன்றிணைந்த விந்துக்கனலும், மூலாக்னியில் வந்த கனலும் உடலில் அனைத்து உணர்வு மண்டலங்களில் படர்ந்து நிற்க, அகத்தின் விழிப்புணர்வு  முழுதும் சிவமாக மாறும்பொழுது, உடலில் சேமித்த வித்துவானது உடலில் உள்ள வித்தினுள் விதைக்கப்படுகிறது.

***  ***  ***

மோகம் கெட போகம் 

வித்தினை வீணடிக்காமல் உடலில் சேகரிப்பது என்பது ஒரு கலை.

பெண்ணுடன் தவிர்க்கமுடியாமல் மோகத்தினால் சேர்ந்தாலும், இன்ப உச்சத்தில் வித்தினை வெளியேற்றாமல் உறவு கொள்வார்கள் சிவ யோகிகள். இதுவே சிவ போகம் என்று அறியப்படுவது.

 திருமந்திரம் - 1960

யோகம் அவ்விந்து ஒழியா வகைபுணர்ந்து 
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்குஉறாப் 
போகம் சிவபோகம் போகிநற் போகமாம் 
மோகம் கெடமுயங்கார் மூடர் மாதர்க்கே.

                                                   

மோகத்தினால் பெண்ணுடன் சேர்பவர்கள் தன் உயிர் சக்தியை இழக்கும்  மூடர்கள். மோகத்தினால் பெண்ணுடன் சேர்ந்து, இரண்டு உடல்கள் கலந்தாலும், அதனை யோகமாக செய்யும் சிவ யோகிகள், தங்கள் உயிர் சக்தியை பெண்ணிடம் செலுத்தாமல் தன்னுடலிலே தக்க வைத்துக்கொள்வார்கள். 

தேனில் ஊறிய பலாச்சுழை. வாய் மணக்க சுவைத்து மென்று, பின்னர்  விழுங்கக்கூடாது என்றால் அது எப்படி சாத்தியம். சிவ யோகிகளுக்கு சாத்தியமாகி இருக்கிறது.

***  ***  ***

பரியங்க யோகம் 

சிவபோகத்தை அடைந்தவர்களின் அங்கம் , குதிரையின் பலத்துக்கு ஒத்திருக்கும். மோகம் கெட பெண்ணுடன் கலவியில் இருப்பதற்கு, பரியங்க யோகம் என்னும் கலையையும் விளக்குகிறார் திருமூலர். உடலுறவின் மூலம்  இறைவனையே தரிசிக்கும் வழியும் இதுதான்.

திருமந்திரம் - 826 

போதத்தை உன்னவே போகாது வாயுவும் 
மேகத்த வெள்ளியும் மீளும் வியாழத்தில் 
சூதொத்த மென் முலையாளும் நற்சூதனும் 
தாதில் குழைந்து தலை கண்டவாறே.

                                                                 

உறவின்போது தலைவனும், தலைவியும் மெய்ஞானத்தை உணர்வாக கொண்டு முயங்கவேண்டும். இந்த நிலையில் காம வாயுவான மேகத்தை போன்ற வெண்மையான  ஆணின் விந்து, பெண்ணின் சுரோணிதத்தில் கலக்காது  உடலிலே தங்கிவிடும். இவ்வண்ணம் சூதாட்ட கருவிபோல் மயக்கும் முலைகளை உடைய பெண்ணும், கலவிக்காக உடம்பை இயக்குகின்ற ஆணும் இறை நிலையை தலையில் தரிசிப்பர்.

***  ***  ***

வானீர் அமுதம் 

உறவின்போது உடலில் சேகரித்த விந்தின் பயன் என்ன? 

சேகரித்த வித்து வீணாக வெளியேறாமல், திசை மாற்றி, புருவ மத்தியாகிய சந்திர மண்டலத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். 

சேகரித்த  விந்துவை வற்றச்  செய்ய வேண்டும். மூலாதாரத்தில் இருந்து வெளிப்படும்  அனலில் விந்துவை வற்ற செய்து, சுழி முனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், புருவ மத்தியில் இருந்து அமுதம் பெருக்கெடுக்கும். சிவ யோகிகள் இதனையே உண்டு மகிழ்ந்திருப்பர்.

திருமந்திரம் - 1949

வற்ற அனலைக் கொழுவி மறித்தேற்றி 
துற்ற சுழிஅனல் சொருகிச்சுடர் உற்று 
முற்று மதியத்து அமுதை முறைமுறை 
செற்று உண்பவரே சிவயோகி யாரே.

                                          

சிவ யோகிகளுக்கு மட்டுமே சாத்தியமானது என்றால் இல்லற வாழ்வில் உள்ளவர்களுக்கு சாத்தியமில்லையா என்ற அச்சம் எழுவது இயல்பு. ஒன்றை நாம் தெளிவாக்கிக்கொள்ள வேண்டும். சிவ யோகி என்று தனியாக தகுதி நிலை ஆய்வுகள் இல்லை. எனவே, மேற்கண்ட முறையில் தன் இணையாளுடன் இன்பம் காணும் எவருமே சிவ யோகியே!

இல்லறத்தாருக்கும் வானீர் அமுதம் பருக வாய்ப்பிருப்பதை நாம் தெரிந்து கொண்டு வழிமுறைகளை முறையாக பின்பற்றினால், நமக்கும் வானீர் விருந்து சாத்தியமே.

*** ***  ***

எரிதழலில் வித்து 

உறவின் போது சேகரித்த விந்துவை வற்ற செய்ய வேண்டும். பின்னர் அதனை நெற்றிப்புருவ மத்தியில்  கொண்டு செல்ல வேண்டும். பின்னர் குளிர செய்ய வேண்டும்.

முதலில் வித்தினை எப்படி வற்ற செய்வது என்று பார்க்கலாம்.

மூலாதாரத்தில் இருந்து வெளிப்படும் அனலைக்கொண்டு விந்துவை வற்ற செய்ய வேண்டும். இதற்கு பிராணாயாமம் என்று சொல்லப்படும் மூச்சுப்பயிற்சி அவசியம்.

மூச்சுப்பயிற்சியின் போது இடது நாசி வழியாக குளிர்ந்த காற்றும், வலது நாசி வழியாக வெப்பக்காற்றும் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இந்த வெப்பக்காற்று, பிராண விந்துவாகி, உடலில் சேகரித்து வைத்துள்ள விந்துவை எரிக்கும். இவ்வாறு எரிந்து  ஒளி வடிவம் பெரும் விந்துவானது அக்னி நாடி வழியாக புருவ மத்தியில் உள்ள சுழுமுனையை அடையும்.

குளிர்ச்சியான சுழுமுனை அனலில், அக்னி நாடி வழியாக வந்த ஒளி அலைகள், அமிர்தத்  துளிகளாக மாறும். 

திருமந்திரம் - 1951

அண்ணல் உடலாகி அவ்அனல் விந்துவும் 
மண்ணிடை மாய்க்கும் பிராணன் ஆம்விந்துவும் 
கண்ணும் கனல்இடைக் கட்டிக் கலந்துஎரிந்து 
உண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே.

நீரை சுமந்த மேகம் வானத்தில் குளிரடைந்து மீண்டும் பூமிக்கே மழையாக பொழிவது போல், சுழுமுனை அடைந்த விந்து அமிர்தமாக மாறி அண்ணாக்கில் கசிய ஆரம்பிக்கும்.
                                                                     

*** *** ***

சுவாசக்காற்றே அமிர்த ஊற்று 

நாம் சுவாசிக்கும் காற்றானது, ஆக்சிஜன் எனப்படும் பிராண வாயுவை பிரதானமாக உடலுக்கு கொண்டுசெல்கிறது என்பதை அறிவோம். பிராண வாயுவை மட்டுமல்ல, அதனுடன் இன்னும் ஒன்பது வாயுக்களை சேர்த்து தசவாயுக்கள், என்னும் பத்து வகை வாயுக்களை  உடலுக்குள் செலுத்துகிறது என்கின்றனர் நம் சித்தர்கள்.

குறிப்பாக, அகத்தியர் தனது சௌமிய சாகரம் பாடல்களில் இதனை தெளிவாக சொல்கிறார். பத்து வாயுக்களையும் இரண்டாக பகுத்து, ஓரைந்து வாயுக்கள் வெப்பமேற்றும்  காற்றாகவும், மீதமைந்து குளிரேற்றும்  காற்றாகவும் உட்செல்கிறது என்கிறார்.

தச வாயுக்கள்:

1. பிராணன் 2. அபானன் 3. உதானன் 4. சமானன் 5. வியானன் 

6. நாகன்  7. கூர்மன்  8. கிரிகரன் 9. தேவதத்தன் 10. தனஞ்செயன்

வெப்பத்தன்மை கொண்ட ஐந்து வாயுக்கள்:

1. பிராணன் 2. அபானன் 3. உதானன் 4. சமானன் 5. வியானன் 

சௌமிய சாகரம் 

வளியான வாய்வினிட வழிதான் மைந்தா 
மார்க்கமுடன் சொல்லுகிறேன் மனதாய்க் கேளு 
நெளியாத பிராணனுடன் அபானன் தானும் 
நிசமான உதானனுடன் சமானன் மைந்தா 
அளியாத வியானனுடன் ஐந்துமப்பா 
அரகரா தேய்வுடனே வாய்வு மாச்சு 
சுளியாத தேயு வாயுவைத்தான் கண்டால் 
சுகமாக பூத வாயுவைத் தான் கேளே. 

                                                    

குளிர்ந்த காற்றின் தன்மை கொண்ட ஐந்து வாயுக்கள்:

1. நாகன்  2. கூர்மன்  3. கிரிகரன் 4. தேவதத்தன் 5. தனஞ்செயன்

சௌமிய சாகரம் 

கேளப்பா நாகனொடு கூர்மன் மைந்தா 
கிரிகரனும் தேவதத்தன் தனஞ்செயனாம் ஐந்தும் 
ஆரப்பா ஐம்பூத வாயுவென்பார் 
ஆச்சரியந் தச வாய்வை அறிந்துகொள்ளு 
காலப்பா தசவாய்வை அறிந்துகொண்டு 
கருணையுடன் சிவயோகக் கருத்தில் நின்றால் 
கோளப்பா ஒன்றுமில்லை எல்லாஞ் சித்தி 
குறிப்புடனே ஆகாச வழிதான் கேளே .

                                                           

தச வாயுக்களின் முக்கிய பணிகளாக, ஐம்புலன்களின் உணர்வு நிலையாக, சுவைத்தல், முகர்தல், பார்த்தல், கேட்டல், நுகர்தல் என்று சொன்னார்கள். கொட்டாவி, தும்மல், விழித்தல், இமைத்தல், கழிவுகளை வெளியேற்றும்  உணர்வு/தன்மை, விந்து பாய்ச்சுதல்  போன்ற செயல்களையும் இவைகளே காரணிகளாக  உள்ளன  என்பதையும் விளக்கினார்கள்.

மூச்சுப்பயிற்சியின் போது சூரிய நாடியில் வரும் வெப்ப வாயுவானது மூலாதார பிரணவ கனலுடன் கலந்து, கலவியின் போது  வெளியேறாமல் உடலில் தங்கிய விந்து மற்றும் சுரோணிதத்தை வற்ற செய்து அக்னி நாடியில் ஒளி அலைகளாக  சேர்க்கிறது. அக்னி நாடி இதனை சுழிமுனைக்கு எடுத்து சென்று அமிர்தமாக மாற்றுகிறது. இப்படி பெருக்கெடுக்கும் அமிர்தத்தை சிவயோகியர் உண்டு சிவ போகத்தில் திளைத்திருப்பர்.

விந்து ஜெயம் என்பது சாதாரண காரியமல்ல. 

இல்லறத்தார், துறவறத்தார், ரிஷிகள்   மற்றும் மானிடராய் பிறப்பெடுத்த தேவர்கள் என்று யாருமே வெல்ல முடியாதது பெண்ணாசை. இரண்டு உடல்கள் கலக்கும் நேரத்தில், மோகத்தில் வித்தினை செலுத்தாமல் நிறுத்தி வைப்பது என்பது சாத்தியமா என்றால்  அவரவர் சோதித்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.

அது சிவ யோகிகளுக்கு  சாத்தியப்பட்டிருக்கலாம். நாமும் சிவ யோகி ஆவதில் எந்த தடையும் இல்லை என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

*** *** ***

பெண் விந்து ஜெயம் 

ஆண்களுக்கு  மட்டும் விந்து ஜெயம் பற்றி கூறி இருக்கிறார்கள். பெண்களுக்கு இதில் பங்கில்லையா? அவர்கள் ஆண்கள் பெரும் பயனை அடையமுடியாதா  என்று கேட்க தோன்றுகிறதில்லையா?

சித்தர்கள், ஞானிகள், குருமார்கள் என அனைவரும் பெண்களை மட்டம் தட்டி எழுதுகிறார்கள்.  'காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவை சாத்தடி' - என்று பெண்களை பேராசை பிடித்தவர்களாகவும், தங்கள் உடல் அழகால் ஆண்களின் மனதை திசை மாற்றுபவர்கள் என்றும், அயல் வளவில் மாற்றானுடன் உறங்கி கணவனுடன் வாழ்பவள் என்றும் பல வழிகளில் கேவலமாக எழுதி விட்டு சென்றிருக்கிறார்கள்.

பெண்ணைப்பற்றி திருமூலர் சொல்வதைப்பார்ப்போம்.

 திருமந்திரம் - 180 

விரும்புவர் முன்என்னை  மெல்லியல் மாதர் 
கரும்பு  தகர்த்துக்  கடைக்கொண்ட நீர்போல் 
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்  
கரும்பொத்துக்  காஞ்சிரம்  காயும் ஒத்தேனே.

                                                                

இளமை நிலையாமை பற்றி விளக்கும்போது, பெண்கள் ஆண்களை உயிருக்கு உயிராக காதலிப்பதும், இளமை நீங்கியதும் அவர்கள் விலகுவதையும் விளக்கவே இப்பாடல். இங்கே இளமை நீங்குவது என்பது, தான் இன்புற்று தன் இணையையும்  இன்புற  வைக்கும் உடல் ஆற்றல் நீங்குவது என்றுதான் கொள்ளவேண்டும்.  ஏனெனில், பட்டத்தரசிகள் கூட வயதில் முதிர்ந்த ரிஷிகளை அடைந்துதான் பாண்டவர்களும், துரியோதன  சகோதரர்களும் பெற்றெடுத்தார்கள்  என்பது புராணம் சொல்லும் பாடம் நமக்கு. இன்றைக்கும், சாமியார் வேடம் போட்டு எழுபத்து நான்கு வயதில் பதினாறு வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து சட்டத்தின் பிடியில் சிக்கித்திணறும் போலிகளை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனவே வயது என்பது இளமையை தீர்மானிக்கவில்லை. விந்துவின் ஆற்றலே இளமையை தீர்மானித்து வெற்றி கொள்கிறது.

பெண்களும், ஆண்களுக்கு இணையாக விந்து ஜெயம் கொள்ளும் வழிதனை காட்டுகிறார்.

திருமந்திரம் - 815 

பொழிந்த இருவெள்ளி பொன்மண் அடையில்
வழிந்து உள்இருந்து  வான்முதல் அங்குக் 
கழிந்தது போகாமல் காக்க வல்லார்க்குக் 
கொழுந்துஅது  வாகும் குணம்அது தானே.
                                                           

[வெள்ளி - விந்து, ஆணின் வித்து;  பொன் - சுரோணிதம், பெண்ணின் வித்து]

மண்ணாலான உடலில் விந்துவும், சுரோணிதம் எனும் இரு வித்துக்கள் விளைந்த வண்ணம் உள்ளது. அதனை சந்திர மண்டலமான நெற்றிக்கு எடுத்து செல்ல வேண்டும். உடலில் இருந்து வெள்ளியும்/பொன்னும்  கழிந்து வீணாகாமல் காக்க முடிபவர்களுக்கு அதுவே உடலினை காக்கும் மூலிகை மருந்தாகும்.

 திருமந்திரம் 1956

மேலா  நிலத்தெழு விந்துவும் நாதமும்                                                                                                     கோலால் நடத்திக்  குறிவழியே சென்று                                                                                                     பாலாம் அமிர்துண்டு பற்றறப்  பற்றினால்                                                                                           மாலானது மாள மாளும் அவ் விந்துவே.                                                                                                                                            

மூல அனலில் வற்றிய வித்துவை, சுழினைக்கோலை நடத்தி செல்லும்  கருவியாக  கொண்டு,  அக்னி நாடி வழியே நெற்றிக்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கே வித்துவானது அழிந்து  அமிர்தப்பாலாக மாறி நிற்கும். இதனை அருந்தி, அதன்மேல் பற்றில்லாமல்  அவ்வழியைப்பற்றினால், மானிட வாழ்வில் உண்டாகும் மாயைகள் அனைத்தும் மாண்டுவிடும். விந்து மறைந்து உடலில் விதைக்கப்பட்டு விடும்.

இதற்கு பிராணாயாம பயிற்சி இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

பிராணாயாம பயிற்சியின் போது  எட்டு நிலைகள் உண்டாகும்.

1. உயிரணுக்கள் உடலின் மத்தியிலே தங்கி, வற்றி  வியர்வையாக மாறும். 

2. உயிரணுக்கள் கீழ் நோக்கி செல்லும் உந்துதல்  இழந்து தங்கி விடும்.

3. ஒளி அலைகளாக மாறுவது மூன்றாம் நிலை.

4. உடல் லேசாக மாறும்.

5. பருவத்து பெண்ணினைப்போல் உடல் மெருகு பெரும்.

6. குண்டலினி மேலே உயரும்.

7. உடல் வானத்தில் பறக்கக்கூடிய நிலை உண்டாகும்.

8. தூரத்தில் உள்ள பொருட்களைப்பார்க்க முடியும். 

இவ்வாறு உயிரணுக்கள் மீண்டும் உடலில் கலப்பதால், தலையில் எட்டு திசைகளில் உண்டாகும் ஒலிதனை கேட்கலாம். கர்ம வினைகள் நீங்கி, நாடிகள் சுத்தி அடையும்.

*** *** ***

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் 

வித்துவானது தூய வெள்ளியை போன்ற வெண்மையும், அதனுள்ளே ஓம் என்னும் பிரணவ ஒலியும் சீராக ஒலித்துக்கொண்டிருக்கும்.  இது உடலின் உள்ளும், வெளியிலும் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.

திருமந்திரம் - 1929 

புறம்அகம் எங்கும் புகுந்தொளிர் விந்து 
நிறம்அது வெண்மை நிகழ்நாதம் செம்மை 
உறமகிழ் சத்தி சிவபாதம் ஆயுள் 
திறனொடு வீடளிக்கும் செயல் கொண்டே.

                                                       

வெண்மையான விந்துவில் சீரான பிரணவ நாதம் ஒலிக்கும் உடலின் ஆயுளும் கூடி நிற்கும். இறை அருளால் வீடு பேரும் கிட்டும்.

எதற்கு இந்த வழி நமக்கு சொல்லப்பட்டு உள்ளது? 

இல்லறத்தார் வாழ்வின் பெரும்பகுதியை வாழ்க்கையின் பாதையை கடப்பதிலே செலவழித்து விடுகிறோம். தன்னைப்பற்றி சிந்திக்கும் காலம் வரும்போது, உடலில் ஆற்றல் இல்லாமல் போய்விடுகிறோம்.

திருமந்திரம் - 2023

ஆக மதத்தன ஐந்து களிறுஉள
ஆக மதத் தறியோடு அணைகின்றில 
பாகனும் எய்த்து  அவைதாமும் இளைத்தபின் 
யோகு திருந்துதல் ஒன்று அறியோமே.

                                                            

ஐம்புலன்கள் என்னும் யானைகள், கட்டுக்கடங்காமல் ஆடியதால், புலன்கள் செயலிழந்து, பாகனின் உடலும் ஓய்ந்தபின் அவனுக்கு  யோக வழிகளில் நடப்பது என்பது சாத்தியமில்லை. எனவே, உடலில் ஆரோக்கியம் உள்ள போதே நம்மைப்பற்றி சிந்தித்து, உடலையும் மனதினையும் தொடர்ந்து நல்ல நிலையில் வைத்திருக்க முயல்வோம்.

வித்தினை உடலில் விதைக்கும் கலையை முயன்று பார்க்கலாம்.

முயற்சி திருவினை ஆக்கும்.

திருமூலர் காட்டும் மனித குலத்துக்கான, குறிப்பாக இல்லறத்தாருக்கு வழங்கும்  மாபெரும் வழிகாட்டுதல் இது.

***  ***  *** 




வீர. நாகராஜ் 

என்னைப்பற்றி 

தமிழ் கற்பதில் ஆர்வமானவன். 

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, இன்றும் அறிவியல் கண்டறியாத உண்மைகளை, தனது பாடல்களின் மூலம் உலகிற்கு எடுத்துரைத்த   திருமூலர் எனக்கொரு ஆச்சர்யம்.

'வாழ்வின் பொருளென்ன? நீ வந்த கதையென்ன?' - தெளிவாக்கும் திருமந்திரம் தமிழின் பொக்கிஷம்.

நான் புரிந்து கொண்டவகையில் எழுதி உள்ளேன். மாற்று பொருள் இருப்பினும் ஏற்பதில் எனக்கு மகிழ்ச்சியே! 

உள்ளே 


*** ***  ***

உடம்பினுள்ளே உத்தமன் 

மனிதனின் ஆன்மீக முன்னெடுப்பிற்கு முழு முதல் ஆதாரமாக இருப்பது அவனது உடல். உடலின் ஆரோக்கியமே மன ஆரோக்கியம். மனம் அமைதியாக இருக்கும் அளவில் மட்டுமே ஆன்மீக வழிகளில் முன்னேற்றம் காணலாம்.

எனவே, உடம்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது அடிப்படை தேவைகளில் தலையானது.

திருமந்திரம் - 725

உடம்பினை  முன்னம்  இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன் 
உடம்பினுளே உத்தமன் கோயில் கொண்டானென்று 
உடம்பினை யான்இருந்து  ஓம்புகின் றேனே.  

                                                            


வித்தினை எரிக்கும் பட்சத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்காகவும், அது செல்லும் பாதையை செப்பனிட்டு இலக்கை அடையவும் வழி சொல்லி இருப்பதை பார்ப்போம்.

காயகற்ப பயிற்சியின் போதும், வித்தினை மீண்டும் விதைக்கும் முயற்சியின் போதும் மூலாதாரத்தில் வெப்பம் மிகுதியாக உண்டாகும். இதனால் பலவித மூல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. 

வெப்பத்தை சீராக்க அகஸ்தியர் சொல்லும் எளிய இயற்கை வழிதனை பார்ப்போம்.

  

மூல சுத்தி 

ஊதையிலே துன்பமென்ற வினைகள் நீங்கும் 
        ஊதுகொண்ட நஞ்சதுவும் உள்கொள் ளாது
போதையிலே மூலமதிற் காந்தி யுண்டாம் 
        பொருந்திநின்ற காந்தியிலே கடுப்பு கண்டால்
ஆதரவாய் கத்தாழஞ் சாறு வாங்கி 
        அதுக்குநிகர் ஏரண்டத் தயிலம் விட்டுச்
சாதகமாய் நடுவிரலில் தோய்த்துக் கொண்டு 
        தன்மையுடன் மூலமதில் சுழத்தி யாட்டே.
860

   

[சுழுனை நின்று ஓம் என்று] ஊதையிலே


ஆட்டையிலே துர்மலங்கள் விஷநீ ரெல்லாம்
        அப்பனே கீழ்நோக்கி அகன்று போகும் 
நாட்டையிலே பூரணத்தை நாடிச் செல்லு
        நடுக்கமுடன் மயக்கங்கண் டாலமுரி கொள்ளு
மூட்டையிலே பசிதாகங் கண்டால் மைந்தா
        முறையோடே பாலுடனே அமுது கொள்ளு 
தாட்டிகமாய்  முன்போலே அமுரி கொள்ளு 
        தனிமிளகு போயமுரி தன்னிற் கொள்ளே. 861 


அமுரி - சிறுநீர் 


கொள்ளையிலே கபநீர்கள் கழன்று  போகும் 
        கொடிதான சூட்டுடனே மயக்கங் கண்டால் 
அல்லவே சொல்லுகிறேன் மைந்தா கேளு 
        அப்போதே மூதண்டக் கிழாயங் கேளு 
செல்லவே அந்திசந்தி யாறு வேளை 
        தீர்க்கமுடன் கொண்டிடவே மேகம் போகும் 
சொல்லவொண்ணாச் சூட்டுடனே மேகந்  தீர்ந்தால் 
        சுருதியுள்ள வாசியது  துலங்கும் பாரே. 862

மூதண்டக் கிழாய - ஒரு கைப்பிடி அருகம்புல்லை ஒரு லிட்டர் நீரில் கொதிக்க விடவும். 25 கிராம் அளவு மிளகு சேர்க்கவும். பாதியாக சுண்ட வைக்கவும். இறுதியாக 10 கிராம் வெண்ணை போட்டு இறக்கி வையுங்கள். இதை மூன்று நாளைக்கு, காலை, மாலை என ஆறு வேளை அருந்தவும். மேகம் -  வாய், பிறப்புறுப்பு, குதம் இவற்றில் தோன்றும் தொற்று நோய் .

சிலருக்கு, இயல்பாகவே கபம் சம்பத்தப்பட்ட நோய்கள் இருக்கும். இதுவும் நம் வித்தினை விதைக்கும் முயற்சிக்கு தடையாக இருக்கலாம். அதற்கும் அகஸ்தியர் காட்டும் இயற்கை முறை வைத்தியம் இதோ!

கபசத்துரு கரிசாலை நெய் 

தானென்ற சுழுனை வளி  ஏறச்
        சாதகமாய் இன்னமொரு பாகங் கேளு  
வீணென்ற கபமகல மைந்தா கேளு 
        விபரமுடன் கரிசாலைச் சாறு வாங்கிக்  
கோனென்ற குருவருளால் ஆவின் நெய்யைக்
        கூர்மையுடன் இடைசரியாய்க்  கலந்து காய்ச்சி
நானென்ற ஆணவத்தை யகலத் தள்ளி 
        நன்மையுடன் நெய்யதனை வடித்துக் கொள்ளே. 1113

கரிசாலை - கரிசிலாங்கண்ணி      ஆவின் நெய்  - பசுவின் நெய்      இடைசரியாய் - சம அளவில் 



வடித்ததொரு நெய்யதனை மைந்தா கேளு 
        மார்க்கமுடன் தற்சனையு மத்திமையுங் கூட்டிக் 
கடுத்ததொரு நெய்யதனைத் தொட்டு நீயும் 
        கண்டமதிற் சுத்திவிடு கபநீ ரெல்லாம்
தொடுத்துமிகத் தான் வடித்துசுத்த மாகும்
        சுத்தமுடன் மண்டலம்நீ தொகுத்துப் பார்த்தால்
பிடித்தகபக்   கட்டறுத்து  ஆறா தாரம்
        பெரிதான தூலமது சூட்ச மாச்சே. 1114    

தற்சனை - ஆள்காட்டி விரல்  மத்திமை - நடு விரல்  கண்டம் - கழுத்து   மண்டலம் - 48 நாட்கள் [சித்த மருத்துவப்படி]  



ஆச்சப்பா சூட்சமதாய் இருந்துகொண்டு 
        அப்பனே கரிசாலை நெய்யில் மைந்தா 
பாச்சப்பா பெருவிரலில் தோய்த்து அந்தப் 
        பதிவான அண்ணாக்கைப் பதிவாய்ச் சுத்து 
காச்சப்பா  இப்படியே  பத்து விசை சுத்து
        கபாடமதில் நின்ற கபங்  கழன்று போகும் 
மூச்சப்பா ஒடுங்கிநின்ற அண்ட வாசல் 
        மூடிநின்ற திரைய கன்று வழிசெல் வாரே. 1115

அண்ணாக்கு - உள் நாக்கு தொட்டுக்கொண்டிருக்கும் மேற்பகுதி 

இதனுடன் இன்னொரு வழியையும் சொல்கிறார் அகஸ்தியர்.

குமரி திரிகடுகு லேகியம் 

தானான மவுனமதுக் குறுதி யான 
        தன்மையுள்ள கற்பமொன்று சொல்லக் கேளு 
தேனான கத்தாழஞ் சோறெ டுத்துத்
        தீர்க்கமுடன் தான்கழுவிச்  செம்மை யாக  
ஊனான திரிகடுகைப் பொடித்து மைந்தா 
        உத்தமனே தானெடுத்து வைத்துக் கொண்டு 

கோனான சத்குருவை தியானம் பண்ணிக் 
        குருவான கற்பமென்று குவிந்து போற்றே. 1107   

கதிரிகடுகு - சுக்கு  மிளகு, திப்பிலி

போற்றிமனப் பூரணமாய் மைந்தா நீயும் 
        புகழான குமரிதிரி கடுகு மொன்றாய்ப்
பார்த்திபனே பீங்கான்தன்   தாளி சேர்த்துப் 
        பத்தியுடன் தேனதனை  பதிவாய் விட்டுச்
சேர்த்துநன்றாய்த் தான்கிளரி  ரவியில் மைந்தா 
        தீர்க்கமுடன் நவநாள்தான் வைத்தெ டுத்து 
ஆத்துமத்தின் செயலறிந்து அந்தி சந்தி 
        அரகரா மண்டலமாய் கொண்டு தேறே.  1108

குமரி - கற்றாழை    ரவி - சூரியன்  நவ - ஒன்பது  அந்தி சந்தி - காலை மாலை 

உடம்பினுள்ளே உத்தமன் குடி கொண்டானென்று மனதில் கொண்டு உடம்பினை நாம் போற்றுவோம்.

***  ***  ***


நீரினுள் காற்றை ஒளித்தற்று 

காற்றினை கண்ணால் கண்டவர் உண்டோ?

காற்றினை நீரினுள் ஒளித்து வைக்க முடியுமா? 

முடியாதுதானே? 

அவ்வளவு அரிதானது வித்தினை அது விளைந்த மரத்திலே விதைப்பேன் என்பது.

ஆனால், நீரினை காற்றில் ஒளித்து வைக்க முடியுமா?

முடியும். 

நீரைத்தழுவும் ஒவ்வொரு முறையும் தன்னுள் தண்ணீரை முகர்ந்து செல்கிறது காற்று. வெப்பம் கூட கூட, நீர் காற்றுக்குள் வேகமாக சங்கமமாகிறது. மேகமாகிறது. மேகக்கூட்டமாகிறது.

அப்படியானால், மேகத்தை பார்க்க முடிந்தவர்கள், நீர் சுமந்த காற்றினை கண்டவர்கள்தானே.

சூல் கொண்ட மேகங்கள்  மழையாக, வானீராக  மீண்டும் நிலத்தில் சங்கமிக்கிறது.

இதே சூத்திரம்தான் மனித உடலுக்குள்ளும் நடக்கிறது. 

பிராணாயாமத்தின் போது, உடலில் சேகரிக்கப்பட்ட  வித்து எரிக்கப்பட்டு சுழு முனைக்கு கொண்டு  செல்லப்படுகிறது. அங்கே, துரியாதீத தவத்தின் அருளால், சூல் கொண்டு அமிர்தமாக அண்ணாக்கில் கசிகிறது.

நீரினில் காற்றை ஒளித்தால் என்ன? காற்றினில் நீரை ஒளித்தால் என்ன?

நமக்கு தேவை வித்தினில் அதை விளைந்த மரத்திலே விதைப்பது. 

முயற்சி திருவினை ஆக்கட்டும்.

*** ***  ***

போகர் 7000

உண்மையெட்டு பருவமுண்டு, பிராணாயத்தி லொளியாமல்சொல்‌லுகிறேன் வந்து கேளு, வெண்மை மத்தி நின்று முத்தி வேர்வையாகு மிக்கநின்ற  தம்பிக்கும்சண்டாம்பட்சம்‌,  தின்மையற்ப ற தீபமர மூன்றாம் பட்சம்செடந்  தானும்லெகுவாகும்‌ நாலாம்பட்சம்‌, பெண்மையொத்து பிசகாசிக்கு மஞ்சாம்பட்சம்‌ பேரானகுண்டலி மேலாறிலாமே.

ஆறவே வாகாய கெவுனமார்க்க மதிகமாந்‌ தூரதிஷ்டிய றியப்பண்‌ ணும்‌, ஏற வேயெ ட்டினுட பெருமைகேளு ஏற்றமாங்கேசரத்தில்‌தி சை நாதங்கள்‌, நாறவே நல்வினையுந்  தீவி னையும்நீறாம நயந்த பின்பு நாடியுத்தி தானுமாகும், ஊறவே காமப்பாலுடம்போடே கலக்கு முவந்துமே பிராணாயமுறைத்துப்பாரே.


பொருள்:

பிராணாயாமத்தினால் எட்டு நிலைகள் உண்டாகும்.

1. உயிரணுக்கள் உடலின் மத்தியிலே தங்கி, வற்றி  வியர்வையாக மாறும். 

2. உயிரணுக்கள் கீழ் நோக்கி செல்லும் உந்துதல்  இழந்து தங்கி விடும்.

3. ஒளி அலைகளாக மாறுவது மூன்றாம் நிலை.

4. உடல் லேசாக மாறும்.

5. பருவத்து பெண்ணினைப்போல் உடல் மெருகு பெரும்.

6. குண்டலினி மேலே உயரும்.

7. உடல் வானத்தில் பறக்கக்கூடிய நிலை உண்டாகும்.

8. தூரத்தில் உள்ள பொருட்களைப்பார்க்க முடியும். 


இவ்வாறு உயிரணுக்கள் மீண்டும் உடலில் கலப்பதால், தலையில் எட்டு திசைகளில் உண்டாகும் ஒலிதனை கேட்கலாம். கர்ம வினைகள் நீங்கி, நாடிகள் சுத்தி அடையும்.



No comments:

Post a Comment

மும்மலங்கள்

மும்மலங்கள் கோயிலைக்கட்டியவன் மனிதன்  சிலைதனை வடித்தவன் மனிதன்  உண்டியலை வைத்ததும் மனிதன்  பூட்டினைப்  போட்டதும்  மனிதன்  - சேருகின்ற காசுக்...