மூச்சுக்காற்று
கொஞ்சம் விலகி
நின்ற போதும்
இந்த இதயம் தாங்கவில்லை
அமைதி.. அமைதி.. அமைதி..
அமைதியாக, வசதியான இடத்தில் அமரவும்.
ஒரு நிமிடம் உங்கள் மூச்சுக்காற்றை உற்று கவனியுங்கள்.
அமைதியான சூழ்நிலையில் இருப்பதால், மூச்சுக்காற்று சீராக உள்ளும், புறமும் சென்று வந்து கொண்டிருப்பதை உணர முடியும்.
உள்ளே சென்றதும், வெளியேறுவதும் அதே காற்றா அல்லது முன்னர் சுவாசித்த காற்றா? சுவாசித்த காற்றில் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது?
உள்ளிழுத்த காற்றில் ஆக்சிஜன் எனப்படும் பிராண வாயு, பிரதானமாக இருந்தது. வெளியேறும் காற்றில் கார்பன்-டை-ஆக்சைட் என்னும் அபான வாயு பிரதானமாக இருக்கிறது.
அறிவியல் ரீதியாக பார்த்தால், கார்பனை எரிக்க ஆக்சிஜனை உபயோகப்படுத்தினால், அது கார்பன்-டை-ஆக்சைடாக மாறும்.
Carbon + Oxygen = Carbon dioxide
அதாவது, நாம் உள்வாங்கிய காற்றில் இருந்த ஆக்சிஜன் நம் உடலுக்குள் எரிக்கப்பட்டிருக்கிறது. எங்கே எரிப்பு நடந்திருக்க சாத்தியமிருக்கிறது?
அடிப்படையில், ஒரு பொருளை எரிக்க நெருப்பு வேண்டும். அது, மனித உடலுக்கு அகக்கனல், புறக்கனல் என்னும் இருநிலையில் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கிறது.
குறிப்பு: இங்கே நான் புறக்கனல் எனக்குறிப்பிடுவது, எப்பொழுதும் நம் உடலை சூழ்ந்திருக்கும் இறைக்கனல் ஆகும். புறத்தில் கிடைக்கும், சூரிய வெப்பம் அல்ல.
அகக்கனல் என்பதை நாம் உண்ணும் உணவை சத்தாக மாற்றும் கனலாக கொள்ளலாம். இது மணிப்பூரகம் என்று அறியப்பட்ட தொப்புள் பகுதியில் உள்ளது. அகக்கனல் எப்படி நம் உடலுக்கு வந்தது என்பதை திருமந்திரம் சொல்வதை பார்ப்போம்:
வேயின் எழுங்கனல் போலஇம் மெய்எனும்
கோயில் இருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயமதாய் எழும் சூரியன் ஆமே.
- திருமந்திரம் 116
மூங்கில்கள் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டு நெருப்பை உண்டாக்குவதுபோல்,
தாயினும் மேலாக கருணை புரியும் இறைவன், நம் உடலில் சூரியனைப்போல் எழுந்து அகக்கனலை கொடுக்கின்றான்.
அகக்கனல் நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை, உடலின் ஒவ்வொரு சிற்றறைக்கும் அதன் தன்மைக்கும், தேவைக்கும் ஏற்ப எடுத்து செல்கிறது. அந்த சத்து, எளிதில் எரியக்கூடிய தன்மையில் கார்போஹைட்ரேட் /குளுக்கோஸ் நிலையில் இருக்கிறது.
மூச்சுக்காற்றில் கிடைக்கும் ஆக்சிஜன் எரிப்பது குளுக்கோஸில் இருக்கும் கார்பனைத்தான்.
Glucose Chemical Compound Structure: C6H12O6
தொடர்ந்து நம் உடலுக்கு வெளியில் இருந்து கிடைத்துக்கொண்டிருக்கும் கனலை, புறக்கனல் என்று சொல்கிறோம். இந்த புறக்கனல் தொடர்ந்து உடலை சூழ்ந்து கனலை வழங்கிக்கொண்டுள்ளது.
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல்
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.
- திருமந்திரம் 117
சூரியனின் ஒளிக்கற்றை பஞ்சை சூழ்ந்து சுட்டெரித்துவிடும். ஆனால், புறக்கனல் எனப்படும் ஒளிக்கற்றை உடலை சூழ்ந்திருந்தாலும் உடலை சுடாது. எந்தப்பொருளும் சூரியன் முன்னர் சுட்டு சாம்பலாவதுபோல், எந்த மாயையும் புறக்கனல் முன் நிற்க முடியாது.
அகக்கனல் சிற்றறையில் சேர்த்து வைத்துள்ள சத்தினை, புறக்கனல் என்னும் நெருப்பு சூழ்கிறது. நாம் உள்வாங்கிய காற்றில் இருந்த ஆக்சிஜன் புறக்கனலுடன் சேர்ந்து அங்கே ஆகுதி நடக்கிறது.
இந்த ஆகுதியில் கிடைக்கும் ஆற்றலினால், நம் உடல் இயங்குகிறது.
உடலின் இயக்கம் 96 தத்துவங்களாக [காரணிகள்] பிரிக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றின் செயல்பாட்டிற்கும், இந்த ஆற்றலே அடிப்படையாக அமைகிறது.
சிந்தனைக்கு:
உடலின் அனைத்து பாகங்களும், ஒரே சீரான வெப்ப நிலையில் இருக்கிறது. இது எப்படி சாத்தியம்? எங்கிருந்து இந்த வெப்பம் உருவாகிறது, எப்படி பயணிக்கிறது?
இறைக்கனல்: 4 தொடரும்..