நெல் முளைத்தெழ, உமியுடன் இருக்க வேண்டும். உமியைப்போன்றவர்களே நம் பெற்றோர்கள்.
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி ஏற்ற கருமம் செயல்.
- அவ்வையார் மூதுரை 11
பேராற்றல் கொண்ட இறைவனுக்கும், அவன் படைப்பிற்கு உறுதுணையாய் நின்றவர்கள் பெற்றோர்கள். நெல்லுக்குள் அரிசியாய், நம் உயிரினை, உடலுடன் படைத்தவன் இறைவன்.
திருமூலரும் வித்தினில் இருந்து முளை விடும் தன்மையை சொல்லுகையில், முளை விட்டபின் முளையும் வித்தும் வேறு வேறல்ல, இரண்டும் ஒன்றே என்கிறார்.
வித்தினில் அன்றிமுளை இல்லை அம்முளை வித்தினில் அன்றி வெளிப்பாடு மாறில்லை வித்தும் முளையும் உடனன்றி வேறல்ல அத்தன்மை யாகும் அரனெறி காணுமே.
- திருமந்திரம் 1932
இவ்வாறாக உடலினைப் படைத்த இறைவன், நமக்குள் அடுத்த தலைமுறைக்கான வித்தினைப் படைக்கிறார்.
அன்னம் பிராணன் என்றுயார்க்கும் இருவிந்து தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச் சொன்னமாம் உருத்தோன்றும் எண் சித்தியாம் அன்னவர் எல்லாம் அழிவற நின்றதே.
- திருமந்திரம் 1966
நம் உடலில் உள்ள வித்தினில் ஒன்று அன்னம், மற்றொன்று பிராணன். அதாவது, நெல்லாகிய வித்தில் உள்ள உமியும், அரிசியும் போன்றதே இது.
உடலில் லட்சக்கணக்காக உருவாகும் இவ்வித்து, எப்பொழுதும் எதிர்ப்பாலினத்தை நோக்கியே கவரப்பட்டிருக்கும். உடலில் இவ்வித்தை சேர்க்க வல்லார்க்கு, உடல் தங்கத்தைப்போலிருக்கும்; அஷ்டமா சித்திகளும் கைகூடும்.
பெற்றோர்கள் கூடுகையில், மின்னலிழைப்போல் உடலில் இன்ப அதிர்வுடன், உடல் முழுதும் உள்ள உயிர் வித்துக்கள் பாய்ந்து செல்லும். அப்படி வித்துக்களை வீணாக்காமல், அஷ்டாங்க யோகம் மூலம், சந்திர மண்டலம் என அறியப்படும் சுழுமுனைவரை ஏற்றம் தரவல்லோர்க்கு, எந்நாளும் மின்னலைப்போன்ற ஒளி இன்பம் நம் உடலுக்குள் சுடர் விட்டிருக்கும்.
விளங்கொளி மின்ஒளி ஆகிக் காந்து துளங்கொளி ஈசனைச் சொல்லும் எப்போதும் உளங்கொளி ஊனிடை நின்று உயிர்க்கின்ற வளங்கொளி எங்கும் மருவி நின்றானே.
- திருமந்திரம் 2687
பின்குறிப்பு:
இதனை எழுத எந்த இறையருள் எனக்கு ஊக்கம் கொடுத்ததோ, அதே அருள்தான் உங்களையும் படிக்க வைத்திருக்கிறது.
தவறு என்பது தவறிச் செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது தவறு செய்தவன் திருந்தப்பார்க்கணும் தப்பு செய்தவன் வருந்தியாகணும்
'மண்ணில் பிறந்து, மண்ணில் வளர்ந்ததை உண்டு, மண்ணுக்குள் மறையும் மனிதன், அணுவிலிருந்து அண்டம் வரை இயங்கும் இறைவனை, உண்டதின் கழிவை சுமக்கும் தன்னையொத்த மனிதனாக உருவகப்படுத்தியது தவறா? இல்லை தப்பா?'
தவறாய் இருந்தால் திருத்த வேண்டும். தப்பாய் இருப்பதால் வருந்தும் மக்களை மேலும் குழப்பாமல் நல்வழி காட்ட வேண்டும்.
மணவாழ்வில் இன்பம் பெறவும், நல்ல குழந்தைகளை பெற்றெடுக்கவும், உடலில் சேர்ந்துள்ள உணவின் கழிவுகளைக் அகற்றி, கடைபிடிக்க வேண்டிய வழிதனை காட்டுகிறார் திருமூலர்.
கலக்குநாள் முன்னாள் தன்னிடைக் காதல் நலத்தக வேண்டின் அந்நாரி உதரக் கலத்தின் மலத்தைக் தண் சீதத்தைப் பித்தை விலக்குவன செய்து மேல் அணைவீரே.
- திருமந்திரம் 1955
காதலில் இன்பத்தைப்பெற, கூடுமுன்னர் உடலில் உண்ட உணவின் கழிவுகள் நீங்கப்பெறுதல் வேண்டும்.
மந்த புத்தியுடைய, ஊமையான, கண்ணற்ற மக்களை யார்தான் பெற விரும்புவார்கள். மேலும் தொடரும் 482, 483, 484 பாடல்களில் நன்மக்களை பெற்றெடுக்கும் உபாயங்களை தெரிவிக்கிறார் திருமூலர்.
மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சென்றும் மல்கும்புழுக் கூட்டின்மேல் வண்ணத் தோலென்றும் சலக்குழிக் குள்ளேநாற்றஞ் சார்ந்த சேறென்றும் தானறிந்து தள்ளினோமென் றாடாய் பாம்பே.
- பாம்பாட்டி சித்தர் பாடல் 59
இந்த மனித உடலானது மேற்கூறிய தன்மைகளை பெற்றிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றாயினும், இறைவனை மனித உருவில் படைத்து, தானுண்ணும் உணவினையும் படைப்பது சரியா, தவறா, தப்பா?