Saturday, January 18, 2020

கடவுள் - தானிருந்தான் உணர்ந்தெட்டே

கடவுள் - தானிருந்தான் உணர்ந்தெட்டே






நான் ஆத்திகனானேன்
அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன்
அவன் பயப்படவில்லை



'உடல் தன் தேவையை அடையாமல் இருக்க முடியாது.'

'வெகுதூரம் பயணம் செய்யும் ஒருவன் தன் குதிரையை எப்படி பராமரிப்பானோ, அப்படி உடலை பராமரிக்க வேண்டும்.'

'அள்ள அள்ளக் குறையாத பொக்கிஷம் என்னிடம் இருப்பதை எடுத்துக் கொள்ள சொல்கிறேன்.'

'பசித்து நிற்கும் ஒரு நாய்க்கு நீ அளிக்கும் உணவு, என் பசியை தீர்க்கிறது.'

தன்னுடைய தேவைக்கு கூட அன்பர்கள் அளிக்கும் பொருட்களை சேமிக்காது, உடனே தேவையானவர்களுக்கு கொடுத்து விடும் பேரன்பை மனதில் கொண்டிருந்த ஷீரடி சாய்பாபா அவர்களின் சாய் சத் சரிதத்திலிருந்து நான் புரிந்து கொண்ட அருள் வார்த்தைகள், மேலே குறிப்பிட்ட சொற்றொடர்கள்.

உலகில் எந்த மூலையில் இருந்தாலும் காலில் கயிறு கட்டி குருவியை இழுப்பதுபோல் இழுத்து உலக நன்மைக்கு பேரருள் வழங்கும் சாய்பாபா அவர்கள் என்னையும் இழுத்து அருள் வழங்கியுள்ளார் என்பதை நாளும் உணர்கிறேன்.

அதீதத் துரியத்தில் இயங்கி உலகெலாம் இன்றும் பேராசி வழங்கும் ஷீரடி சாய்பாபாவின் பொற்பாதங்களில் சங்கமிக்கும் அருள் பெற வேண்டுவோம்.


அதீதத் துரியத்து அறிவனாம்  ஆன்மா
அதீதத் துரியம் அதனால் புரிந்தால்
அதீதத்து எழுந்து அறிவாகிய மானன்
முதிய அனலில் துரியத்து முற்றுமே.
                                                                     - திருமந்திரம் 2199


அதீதத்துரியமாகிய பேருறக்க நிலையில், உயிர் மிக்க அறிவுடையதாக இருக்கும். தொடர்ந்து இந்நிலையில் உயிர் நிற்க இயலுமாயில், சுடர்விட்டெழும் ஆருயிரின் அறிவுச்சுடர் ஞானக்கனல் எனப்படும் நிலையை அடையும். இதுவே சீவாக்கினியில் உயிர் பேருறக்கம் கொண்டு பரம்பொருளை அடையும் நிலை.


உரிய நனா துரியத்தில் இவனாம்
அரிய துரிய நனவாதி மூன்றில்
பரிய பர துரியத்தில் பரனாம்
திரிய வரும் துரியத்தில் சிவமே.
                                                                     - திருமந்திரம் 2273


துரியம் என்னும் பேருறக்கத்தில், நனவு, கனவு மற்றும் உறக்கம் என்றடையும் போது, உயிர் பரம் என்னும் பரம்பொருள் தன்மையை அடையும். இதன் அடுத்த நிலையில், உயிர் பரம்பொருளுடன் கலந்து இறைவனாகவே விளங்கும்.

ஆதி யோகி சிவன். முதற் சித்தர் என  உணர்த்தப்பட்டவர் சிவன். எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்து நிற்கும்  பரம்பொருளுடன் ஒன்றி நின்றவன் சிவன். நம் வாழ்நாளில், மிக அருகில், நம்முடன் வாழ்ந்தவர் ஷீரடி சாய்பாபா என்னும் சிவன்.

அப்படியெனில், பரம்பொருள் என்பது யார்?

எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய்
இருந்துதிரு விளையாட் டெய்தியும் பின்னர்
அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகியு நின்ற
ஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே.
                                                                   - பாம்பாட்டி சித்தர் பாடல் 9


அனைத்து உயிர்களையும், அனைத்து உலகங்களையும் படைத்து, அவைகளை ஆட்டுவிக்கும் பரம்பொருளே, அனைத்து உயிர்களாகவும், அனைத்து உலகங்களாகவும் ஆகி பேரானந்தமாய் நின்றான்.

இதுவே இறைவனின்  எட்டாவது குணம்.

அவன் திருவடிகளை பணிந்து  நிற்பதே பேரின்பம்.







Monday, January 13, 2020

கடவுள் - ஏழும்பர்ச் சென்றனன்

கடவுள் - ஏழும்பர்ச் சென்றனன்





என் காதுக்கு மொழி இல்லை
என் நாவுக்கு சுவை இல்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கும் உறக்கம் இல்லை


'சார், உங்களுக்கு ஒரு கவர் வந்திருக்கு. ட்யூ  அம்பது பைசா' - என்று சொன்ன போஸ்ட்மேனிடம், காசைக்கொடுத்து வாங்கிப் பார்த்தேன்.

தபால் கார்டு பத்து பைசா, இன்லேண்ட் லெட்டர் பதினைந்து பைசா மற்றும் கவர் இருபத்தைந்து பைசா ஸ்டாம்ப் ஒட்டினால் போதும். 

எனக்கு வந்த தபால் கவர்  ஸ்டாம்ப் ஒட்டாததால்,  ஒட்டியிருக்க வேண்டிய ஸ்டாம்ப் இருபத்தைந்து பைசா மற்றும் பெனால்டி இருபத்தைந்து பைசா ஆக ஐம்பது பைசா ட்யூ.

ஆனால், மூணு பத்து பைசா ஸ்டாம்ப் ஒட்டி இருக்கே!

'சார், போஸ்டல் ஸ்டாம்புக்கு பதிலா ரெவின்யு ஸ்டாம்ப் ஒட்டி இருக்காங்க'

அது ஒரு தீபாவளி வாழ்த்து அட்டை. அனுப்பியவர் பெயர் இல்லை. சுவாரசியமே இங்குதான் ஆரம்பிக்கிறது.

அனுப்பியவரை துப்பறிந்து, மனம் பரிமாறிய நேரத்தில் அவள் வாழ்வில் தந்தையை இழந்த துக்கம்.

தொடர்ந்த இன்னொரு துக்கம், அவளுக்கு திருமணம்.

'எங்கிருந்தாலும் வாழ்க' - என்று அவள் திருமணத்தில் பாடி விட்டு பேசாமல் இருக்க முடியவில்லை.

சோகம்.. சோகம்.. சோகம்..

MGR-க்கே காதல் தோல்வியா, என்னும் அளவுக்கு சோகம்.

'ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது'- என்று தாடி விடாத விஜயகாந்தாய்   நாட்களை  ஓட்டினேன்.

ஐம்புலன்கள் தரும் இன்பத்தை அறியும் மனம், அவை ஒன்றுமே வாழ்வில் முக்கியம் இல்லை என  வாடி நின்றது.

ஐம்புலன்களை அறிந்து, மாயையை கடந்து, தவ நிலையில் துரியத்தை அடைய, துறவை ஏற்கும் அளவிற்கு வாழ்க்கையில் பிடிப்பற்ற வெறுப்பு.

துறவற தவ வாழ்வில், கடவுளின் ஏழாம் குணமான துரியம் என்னும் பேரொளி, பேருறக்கத்தில் மனிதன் அடைய முடியும் என்றால், இல்லற வாழ்விலும் இது ஒரு மார்க்கமோ என்ற மயக்கம் மனதினில் ஆடியது.


சத்தி சிவன் விளையாட்டால் உயிராகி
ஒத்த இருமாயா கூட்டத்து இடைஊட்டிச்
சுத்தம் அதுஆகும் துரியம் பிரிவித்துச்
சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே.
                                                                 - திருமந்திரம் 1771


சக்தி, சிவன் இருவரின் விளையாட்டான உலகும், உலகத்தில் தோன்றி உள்ள உயிர்க்கூட்டமும். மாயா மலம், கன்ம மலம் என்னும் இரு மாய நிலையிலிருந்து பிரிந்து, அறிவுடன் கூடி சித்தி நிலையில் பேருறக்கம்  கொள்ளும். இவ்விடத்தில், உயிர் சிவ நிலையை அடையும்.

அதீதத் துரியத்து அறிவனாம் ஆன்மா
அதீதத் துரியம் அதனால் புரிந்தால்
அதீதத்து எழுந்து அறிவாகிய மானன்
முதிய அனலில் துரியத்து முற்றுமே.
                                                                 - திருமந்திரம் 2199


தவ நிலையில் ஆறு ஆதாரங்களை கடந்து, அதீதத் துரியமாகிய பேருறக்க நிலையில், உயிர் மாயையிலிருந்து விடுபட்டு, அறிவுடையதாயிருக்கும். இப்படியே உறுதியாக அறிவோடு பொருந்தி பேருறக்க நிலையிலே நிற்க இயலுமானால், சுடர்விட்டெழும் ஆருயிரின் அறிவுச்சுடர்  ஞானக்கனல் எனப்படும் நிலை அடையும். இதுவே சீவாக்கினியில் சீவன் அடங்கும் பேருறக்கம்.

சித்தர்களே தங்கள் சித்தத்தில் துரிய நிலை எய்தியவர்கள் என்பதால் இவர்கள் சித்தர்கள் என அறியப்படுகிறார்கள்.

நல்ல ஆரோக்கியமான உடலில் மட்டுமே ஐம்புலன்களும் சிறப்பாக செயல்படும். இல்லறத்தார் ஐம்புலன்களின் இன்பத்தை அனுபவித்து, அவ்வழியில் இறை நிலை எய்த, உடலின் மேம்பாட்டிற்காக மூன்று வழிகளை பாடல்களின் மூலம் அறிவித்து சென்றிருக்கிறார்கள்.

1. மந்திரம்
                      ஐம்பத்தொரு  அக்ஷரங்களை உடலின்  ஒலியாக பிரித்து, உயிரோடும், மனதோடும் உறுதியாக  ஒன்றி நிற்க மந்திரங்கள். ஓம், நமக்ஷிவய மற்றும் பல.

2. யோகம் 
                      பிராணாயாமம் என்னும் மூச்சு பயிற்சியின் மூலம், உடலினை இயக்கும் பத்து வகையான வாயுக்களை சீராக வைத்திருத்தல், இன்னும் பல யோக முறைகள்.

3. மருந்து 
                       உட்கொள்ளும் உணவு, ஒவ்வாமையினாலோ, வேறு காரணங்களினால் விஷத்தன்மை பெற்று உடலில் தங்கி நோய் உண்டாக்கினால், அதனை நீக்கி  உடல் புத்துணர்வு பெற இயற்கை சித்த மருந்து வகைகள்.

மாயையை விட்டு விலகி நிற்கும் ஆற்றலே, இறைவனின் ஏழாம் குணமாக திகழ்கிறது.




Thursday, January 9, 2020

கடவுள் - ஆறு விரிந்தனன்

கடவுள் - ஆறு விரிந்தனன்









ஆறு மனமே ஆறு அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு



'நீ பேசும் வார்த்தையில் இருந்து வரும்  ஒலியை பிரித்து, ஒலியை வரி வடிவமாக கொண்டுவருவது எழுத்து' - கபிலர்,  'எழுத்து என்றால் என்ன?' என்று கேட்ட பறம்பு மலைத் தலைவன் வேள் பாரியின் தளபதிகளில் ஒருவனான நீலனுக்கு விளக்கினார்.

'ஒலி என்றால் என்ன?'
'ஒலி எப்படி உருவானது, எங்கிருந்து வருகிறது?'

ஆதியோடு அந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி அதனில் பரந்தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரையதன்  பால்திகழ் நாதமே.
                                                                  - திருமந்திரம் 381


பராபரம்  - சிவன்.    பராபரை - சக்தி.

சிவனுடன் [ஒளியுடன்], சக்தி இணைந்த நிலையில், பிறந்தது நாதம் என்னும் ஒலி. ஒளி/ஒலியில் தோன்றியதே  அணுக்களும் சகல உயிர்களும். அணுக்களின் கூட்டே, மனிதன் வாழும் அண்டமும், பேரண்டமும். எனவே, இந்த விதிக்கு  மனித உடல்  விலக்கல்ல.

உடலின்  உள்ளியக்கம் ஒலியினால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஐம்பொறிகளில் ஒன்றான, காது  உணரக்கூடிய ஒலியினை, வரி வடிவமாக்கி எழுத்து என வகைப்படுத்தி அறிந்து உள்ளோம்.

உடலினுள்  இயங்கக்கூடிய ஒலியினை,  எழுத்துக்கள் வடிவில், அக்ஷரம் என்று வகைப்படுத்தி உள்ளனர் நம் முன்னோர்கள். அதனை  கிரந்த எழுத்துக்கள் என்றும், ஆதி தமிழ்  எழுத்துக்கள் என்றும் நாம் அறிந்து வைத்துள்ளோம். ஐம்பத்தி ஒன்று என்ற எண்ணிக்கையை கொண்ட இந்த அக்ஷரங்கள், மூலாதாரத்திலிருந்து, ஆக்கினை வரை, ஆறு ஆதாரங்களின்  அடித்தளமாக அமைந்துள்ளது.

ஆறு ஆதாரங்களும், ஐம்பத்தியொரு அக்ஷரங்களும்:

1 மூலாதாரம்  -  [வ, ச, ஷ, ஸ] - 4 
2 சுவாதிட்டானம்  - [ப3, ப4, ம, ய, ர, ல] - 6
3 மணிபூரகம் - [ட3, ட4, ண, த, த2, த3. த4, ந, ப, ப2] - 10
4 அனாகதம் - [க, க2, க3, க4, ங, ச, ச2, ஜ, ஜ2, ஞ, ட, ட2] - 12
5 விசுத்தி - [அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ரு, ரூ, லு, லூ, ஏ, ஐ, ஓ, ஒள, அம், அஹ] - 16
6 ஆக்கினை - [ஹ, ள] - 2
                                                                                                                         - போகர் 7000

ஒவ்வொரு அக்ஷரமும் ஒவ்வொரு தாமரை மலர் இதழ்களாக, ஆறு ஆதார சக்கரம்தோறும்  உவமைப்படுத்தப்பட்டுள்ளது. ஐம்பத்தியோராவது அக்ஷரமாக 'க்ஷி' தலையின்  உச்சியில் நிற்கிறது.

மேல்என்று கீழ்என்று இரண்டறக் காணுங்கால்
தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும்
பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரம்
கார்ஒன்று கற்பகம் ஆகி நின்றானே.
                                                                                 - திருமந்திரம் 1706


'தான்' என்று ஒளி உடலுடன் தன்மயமாகும் நிலையும், 'நான்' என்று திட உடலாய் மனிதன்  உணரும் தன்மையும் ஆறு ஆதாரங்களின் குணத்தினால் உண்டானது. ஆறு ஆதாரங்களையும் ஒன்றாக காணும் பரம்பொருள், பேரண்டமாக நிலைத்து நிற்கிறான்.

ஆறு அந்தமும் கூடிஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் மற்றும் குறிக்கொள்மின்
ஆரிய அக்கரம் ஐம்பதின் மேலாக
ஊறிய ஆதாரத்துஓர் எழுத்து ஆமே.
                                                                                  - திருமந்திரம் 1709


ஆறு ஆதாரங்களுடன் அமைந்த இவ்வுடல், ஐம்பத்தியொரு அக்ஷரங்களை கொண்டிருந்தாலும், அவற்றின் அடித்தளம், 'ஓம்' என்னும் பிரணவத்தை  ஆதாரமாய் ஏற்று நிற்கிறது.

இதுவே இறைவனின் ஆறாம் குணமாகும்.

*** ***



கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...