Friday, August 30, 2019

ஒண்ணுமொண்ணும் ரெண்டு உன்மேலாசையுண்டு

ஒண்ணுமொண்ணும் ரெண்டு
உன்மேலாசையுண்டு



கேள்வி: ஒண்ணும் ஒண்ணும் என்ன?

                   'ஒன் பிளஸ் ஒன்னு டூ மாமா' - கூட்டல்

                    'ஓரோண் ஒண்ணு' - பெருக்கல், வகுத்தல்

                   'ஒண்ணும் ஒண்ணும் பதினொண்ணு' - பார்த்தல்

                   'நீ பாதி நான் பாதி கண்ணே!' - பங்காளர்கள்

                  'ஒண்ணுமே தெரியல ஒலகத்திலே' - கழித்தல்

எது சரியான பதில் என்பது கேள்வியல்ல. பதில் சொல்லவே கேள்வி என்றெண்ணாமல், கேள்வி சரியானதா என்று கேட்கும் காலத்தில் நம் தலைமுறை.


வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூரும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்க்
கரையில்லை எந்தை கழுமணி யாறே.
                                                                       திருமந்திரம்-249


ஒண்ணு:  மலையிடை நின்றிருக்கும் வானீர்,  அருவியாக வழிகிறது என்றுரைக்க தேவை இல்லை.

இன்னொண்ணு: நம்முள்ளே [யோகத்தால், தலை உச்சியில்] ஊறுகின்ற
நுண்ணிய தெளிந்த நீரான வானீர், நுரையோ, அழுக்கோ இல்லாமல்,  நம் பாவங்களை கழுவுகிறது.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
                                                                            திருக்குறள்-20

ஒண்ணு: நீரின்றி அமையாது உலகம்.

இன்னொண்ணு: யாராயிருந்தாலும், தலையாகிய  வானத்தில் யோக நிலை இல்லாவிட்டால், வானீர்  ஒழுகாது.

'அதாண்ணே இது' - இனிமேல் யாரும் இன்னொண்ணு எங்கேன்னு கேக்காதீங்க. அப்படித்தான், மேற்சொன்ன குறளுக்கு, பொருள் எழுதி உள்ளார்கள்.

பின் குறிப்பு: யாரும் திருக்குறள் தேர்வில் இந்த பொருள் எழுதி, மதிப்பெண் கிடைக்கவில்லை என்று  குறை கூற வேண்டாம்.




Sunday, August 25, 2019

இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ

இலக்கணம் மாறுதோ
இலக்கியம் ஆனதோ


'அன்புடைய ஆசிரியர் அவர்களுக்கு, தங்கள் தினசரி மற்றும் பதிப்புகளில்
'கருப்பு' என்பது  'கறுப்பு'  என்று அச்சாகி வருவதை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன்.'

இதற்கு பதில் வரலாம், வராமலும் போகலாம்.

தமிழ் எழுத்துக்கள்,  வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் என்னும் மூன்று பிரிவுகளாக உள்ளதின் அவசியம், அவர் அறிவு நிலைக்கு எட்டாமலும் இருக்கலாம்.

ஆனால், தமிழ் எழுத்துக்களின் முக்கியம் பற்றி அறிய முற்படுபவர்            கண்டிப்பாக திருமூலரின், திருமந்திர மாலை பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

எண்வகை கன்மங்கள் 45 வகையின் விரிவாக 323 மந்திரங்கள் தமிழ் எழுத்துக்களின் அடிப்படையில், கணிக்கப்பட்டிருப்பது தமிழுக்கு  இருக்கக்கூடிய அறிவியல் ரீதியான சிறப்பாக அமைந்திருக்கிறது.

சொல்லிய எட்டுக்குந் தோன்றிய துருவமும்
நல்லறை எட்டினில் நாடும் இலக்கமும்
நல்ல பதினாறறைமுதல் நாலினிற்
சொல்லும் பகவத தோன்ற விட்டதே.
                                                         - திருமந்திர மாலை


மொத்தம் நான்கு எழுத்துக்கள்: ப க வ த

வெறும் நான்கு வரிப்பாடல்களில், எழுத்துக்களின் நுண்ணிய பங்களிப்பில், ராசிகள், நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் மந்திரங்கள் பற்றிய தெளிவான
விளக்கங்கள்.

எழுத்துக்களின் வரிசை முறையில் எண்களின் பங்களிப்பும் சேர, ஒரு மாயா ஜாலமே நடத்துகிறது திருமந்திர மாலை.

இந்த சிறப்பு தொடர வேண்டுமானால், எழுத்துப்பிழை வராமல் எழுத கற்றுக்கொள்வதே தமிழுக்கு நாம் ஆற்றும் மிகப்பெரிய தொண்டாக அமையும் என்பது திண்ணம்.






Thursday, August 22, 2019

மனதின் அக்ஷரம் மந்திரம்

மனதின் அக்ஷரம் மந்திரம்





மாணவர் மன்றம் தமிழ் தேர்வு நடந்து கொண்டிருந்தது.

தமிழில் எழுதவும்: AUSTRALIA 

            1. ஆஸ்திரேலியா
            2. அவுஸ்திரேலியா
            3. ஆஸ்ட்ரேலியா

'சார்.. தமிழில் இல்லாத எழுத்தில் எப்படி எழுதுவது?. எப்படி எழுதினாலும் 'ஸ்' எழுத்து இல்லாமல் எழுத முடியவில்லை. அவுத்திரேலியா என்று எழுதலாமா?'

பெயர் சொல்லை தமிழ்ப்படுத்தினால் அபாயம். HOMEBUSH என்ற பெயரை எப்படி தமிழில் எழுத முடியும் என்று சிந்தித்து பாருங்கள்.

ஹோம்புஷ் என்பதை எப்படி தமிழாக்கம் செய்வது?

கிரந்த [ஆதி] தமிழ் எழுத்துக்களை எப்படி  சிறப்பு தமிழ் எழுத்துக்கள் என்று சொல்வது?

ஐம்பத்தொரு அக்ஷரங்களில் ஒன்றாக இருந்த,  தமிழில் சிறப்பு எழுத்துக்களாக அறியப்பட்ட எழுத்துக்கள், ஏதோ ஒரு கால கட்டத்தில் தமிழ் இழந்துவிட்ட எழுத்துக்கள், இன்று வடமொழி எழுத்துக்களாக  நமக்கு சொல்லிக்  கொடுக்கப்பட்டு வருகிறது.


திருமந்திரம் 2866

காயம் பலகை கவறுஐந்து கண்மூன்றாய்
ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம்
ஏய பெருமான் இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பு அறியேனே.

                                                                         

ஐம்பத்தோர் அக்கரம் என்பது ஐம்பத்து ஒன்று  அக்ஷரங்கள். இதுவே உடலில்  முழுமையாக உறைந்துள்ளது என்பது பாடலில் நமக்கு வேண்டிய பொருள்.

சரியான அக்ஷரங்களை, முறையாக பயன்படுத்தினால், அது  தெளிவான மந்திரங்களாக  உடலின் நாளமுள்ள, நாளமில்லா சுரப்பிகளை தூண்டும் கிரியாவூக்கியாகவும்  அமையும்.

இனி, அக்ஷரங்களின் பலனைப்பார்ப்போம்.

நமச்சிவாய, நமட்சிவாய, நமசிவாய, நமசிவய, நமக்ஷிவய - இவற்றில் எது சரியான பஞ்சாக்ஷர மந்திரத்தை குறிக்கிறது?

நமக்ஷிவய என்பதே சரியான பதில்.

திருமூலர் திருமந்திர மாலை என்னும் நூலில், முன்னூறு பாடல்களில் மந்திரங்கள் எழுதுவதற்கான சூத்திரங்களை வழங்கி இருக்கிறார். அந்த மந்திரங்கள்  இந்த ஐம்பத்தொரு அக்ஷரங்களை மூலமாக கொண்டு எழுதப்பட்டு இருக்கிறது.  

எதனால் இந்த ஐம்பத்தொரு அக்ஷரங்கள்,  ஏனைய எழுத்துக்களிலிருந்து  வேறுபட்டு நிற்கிறது?

எழுத்துக்கள் புறத்தொடர்பிற்காக, வார்த்தைகளாக  உச்சரிக்கப்படுகிறது. அக்ஷரங்கள் அகத்தொடர்பிற்காக மனதால் அர்ச்சிக்கப்படுகிறது. இதனாலேயே மனத்தால் உச்சரிக்கப்படும் அக்ஷரங்கள் மந்திரம் எனப்பட்டது.

மனதின் அக்ஷரம் மந்திரம்.

*** *** ***








                 







  

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...