Friday, June 14, 2019

மயக்கம்

மயக்கம் 

மாலைப்பொழுதின்
மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி

பொருள்:

'அய்யா, இவளுக்கு தினமும் சாயந்திரம் காய்ச்சல் வர்ற மாதிரியா?'

தலைவனை பிரிந்த தலைவி பசலை நோய் படர்ந்து மாலையில் கடும் வெம்மையில்  வாடுகிறாள் என்று இலக்கிய வகுப்பெடுத்துக்கொண்டிருந்த
தமிழ் அய்யாவை பார்த்து, பக்கத்து இருக்கை  விஜயாவை சுட்டிக்காட்டி கேட்டாள்  கமலா.

'அதெல்லாம், வயசு போனவங்களுக்கு இல்லை'- தலையில் குட்டுவது போல் எரிச்சலுடன் பதில் சொன்னார் தமிழய்யா, 'உங்கள சொல்லி குத்தமில்லை, வகுப்பெடுக்க சொன்ன உங்க மன்றத்தை சொல்லணும். ஒண்ணு, ரெண்டு  பெத்து போட்டுட்டு, ஜாலியா வந்து என்ன வறுத்தெடுக்குதுங்க'- என்று மனதில் நினைத்துக்கொண்டே.

'இன்னுமா வரல?'- விஜயாவை பார்த்து முணுமுணுத்துக்கொண்டே உட்கார்ந்தாள், கோவை குசும்பு அவள் கண்களில் மின்னியது.

மாலை மயக்கத்தை தொடர்ந்து, இலக்கியம் இரவை நோக்கி பயணித்தது.

பறம்பு மலையில் முருகன், வள்ளியுடன் இணைந்து  கார்த்திகை நட்சத்திரங்களுக்கு பெயர் சூட்டிக்கொண்டிருந்தார்.

இரவும், நிலவும், வானமும், நட்சத்திரங்களும் அதனுடன் பயணிக்கும் காதலும்  இல்லாத இலக்கியமேதும் உண்டா?

உடலும், உள்ளமும் புத்துயிர் பெற சரியான உறக்கம் இரவில் அவசியம். அறிவியலும், இரவில் உறங்குவதன் தேவையை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறது.

'அய்யா, நைட் லைப் தெரியலன்னு சொல்றீங்க. சுத்த வேஸ்ட்..' - இது சந்தியா   போட்ட குண்டு, ஒன்பதரை மணிக்கு தூங்க போயிருவேன்னு  பேச்சினூடே சொன்னதற்கு.

குறைந்தது இருபது வருஷம் தூங்கி இருக்கிறேன், எட்டு மணி நேரம் நாள் வீதம் கணக்கு போட்டால், இந்த அறுபது வயது வாழ்வில்.

வாழ்வின் முதல் இருபது  வருஷம் அறிவு வளர்ச்சிக்கு.  [60-20=40]

கடுமையான உழைப்புக்கு  இன்னொரு முப்பது  வ்ருஷம். இதில் பத்து வருடம் தூக்கம்.                                                                                                   [40-10=20]

அடுத்த பத்து வருடம் உழைப்பு, தூக்கம், நோய், ஓய்வு. இந்த வகையில் ஐந்து வருடம் தீர்ந்தது.                                                                                  [20-5=15]

பத்திலிருந்து பதினைந்து வருடம் வாழ்வதற்குத்தான் இந்த போராட்டம்.  

உணர்வோடு வாழ்ந்ததை கணக்குப்போட்டால், ஒரு நாள் கூடாது தேறாது.

பேதைமை.

*** ***

'நான் சுத்த வேஸ்ட்தான்'

இனிமேல் இரவு நேரம் கண்விழித்து வாழ்நாட்களை அனுபவிப்பேன்.

வேள் பாரி முதல் பாகம் படிச்சு முடிச்சிட்டு தான் தூங்கணும்னு சபதம் போட்டு படிக்க ஆரம்பித்தேன். கண்கள் சொக்க, புத்தகத்தை மூடிட்டு, பெட்ல விழுந்து கைபேசி எடுத்து நேரம் பாத்தேன்.

நேரம் இப்பொழுது, சரியாக ஒன்பது மணி இருபத்தி ஒன்பது நிமிடம்.

'போங்கடி, நீங்களும் உங்க நைட் லைப்பும், எனக்கு  தூக்கம்தான் முக்கியம்.'

இரவை பற்றிய இன்னொரு சிறப்பு செய்தி:

கூட்டல் பதினெட்டு மற்றும் தமிழ் ஆற்றல் உள்ளவர்களுக்கு மட்டும், திருமூலர் சொல்வது,

செய்யும் அளவில் இருள்நண் முகூர்த்தமே
எய்யும் கலைகாலம் இந்து பருதிகால்
நையும் இடத்துஓடி நன்காமநூல் நெறி
செய்க வலம்இடம் தீர்ந்து விடுகவே.

                                                                                  - திருமந்திரம் 
















No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...