மனநோய்
புல்லாங்குழலில்
காற்று நுழைந்தால்
புதுப் புது இசையாகும்
பொருள்:
'பக்தி நிலை' என்பது ஒருவகை மனநோய் என்று மனநோய் நீக்கும் வல்லுநர்களின் கருத்தை படித்தபோது கோபமும், ஆற்றாமையும் ஏற்பட்டது. தீவிரமாக அதை சிந்தித்த பொது ஆயாசமாக இருந்தது, உண்மையோ என்று. நம் முன்னோர்கள், மனித இன மேன்மைக்காக விட்டு சென்ற பொக்கிஷங்கள் இதற்குள் அடங்கினால், நாம் எல்லோருமே மனநோயாளிகளோ என்ற அச்சமும் தொற்றிக்கொண்டது.
'ஒன்றி'ன் மீது ஏற்படும் ஈர்ப்பு என்பது, புறச்சூழல்களால் புலன் வழி செய்திகளை மனம் அறிந்து, அந்த 'ஒன்றி'ன் மீது தொடரும் எண்ணங்களால் ஏற்படுகிறது.
இந்த ஈர்ப்பு என்பது புலன்களும், மனமும் பின்னும் மாய வலை. எண்ணங்களே இதன் தேவ தூதர்கள். இதன் அடிப்படை, ஜீவ சக்தி எனப்படும் இறை நிலை.
இனி என் வாழ்க்கையில் உணர்ந்ததை, நடந்ததை நடந்தபடி சொல்கிறேன்:
பத்து வயதில், வெள்ளியங்கிரி மலை ஏறும்பொழுது எல்லாம் விளையாட்டாக இருந்தது. ஏழாவது மலை ஏற ஆரம்பிக்கும்போது விடிகாலை, சித்ரா பௌர்ணமி நிலா விடை பெற்று விட்டாள். கருக்கல் என்னும் காரிருளில், செங்குத்தான மலையில் தவழ்ந்து ஏறியது இன்னும் நினைவில் இருக்கிறது. மனமென்னும் புல்லாங்குழலில் காற்று நுழைந்தது அன்று தெரியவில்லை.
வாழ்க்கை, அடுத்த நாற்பது வருடங்களை சுழன்றடித்த போது, ஆணவம் தலைக்கேறி இருந்தது. முறுக்கோடு மலை ஏறிய நான், இறங்கும்போது வாழ்வின் இறுதி நாள் இதுவோ என்றுணரும் வண்ணம் கொடும் வெயிலில், சுடும் வெயிலில் விழுந்த புழுவாய் துடித்து, தப்பித்து மலை இறங்கினேன்.
விட்டதா புல்லாங்குழலில் நுழைந்த காற்று. அடுத்த ஐந்து வருடத்தில், தவறுகளுக்கெல்லாம் மன்னிப்பு கோரிய வண்ணம் மீண்டும் மலைப்பயணம். மன 'அமைதி' அல்லது 'சாந்தி' என்பதை மலை உச்சியில், சூர்யோதயத்தில், அவன் காலடியில் உணர்ந்து கொண்டேன்.
உட்புகுந்த காற்று, புல்லாங்குழலில் இருந்து வெளியில் வந்தால்தானே இசை. கடந்து விட்ட இன்னொரு ஐந்து வருடங்களில் எவ்வளவோ மாற்றங்கள், எல்லாம் வாழ்க்கைப் பாடங்கள்.
இந்த முறை, முழு வைராக்கியம். முப்பத்து மூன்று வயதிற்குள், ஏழு குழந்தைகளை பெற்று, கணவன் விலகி, எந்த பொருளாதார பின்புலம் இல்லாத பெண்ணால், குழந்தைகளை நன்மக்களாக்க முடியுமென்றால், இது ஒரு பொருட்டே அல்ல என்ற வைராக்கியம். அவளின் ஓராண்டு நினைவு தினத்தில் அவளுக்கு தரும் ஆன்ம மரியாதையாக செய்கிறேன் என்ற அர்ப்பணிப்புடன், தனி ஒருவனாக, மலை ஏறினேன்.
காட்டி விட்டான் நெற்றிக்கண்களில் 'ஒளி', அதிகாலை 3 15 மணிக்கு, அவன் சன்னிதானத்தில். புல்லாங்குழலில் நுழைந்த காற்று இசையாக வெளிவருவது இயல்புதானே.
No comments:
Post a Comment