நான் புதுமையானவன்
உலகை புரிந்து கொண்டவன்
'கொடம்புளி போட்டு மீன் தலைக்குழம்பு, மீன் வறுவல், மீன் சில்லி இன்னும் மீன் பொரியல் செஞ்சு தர்றேன்'- மீனாவின் மீதிருந்த காதலை விட மீன்தான் சுரேஷின் மனதில் மின்னலடித்தது.
'தவத்தில் சிறப்பு என்னன்னு பார்த்தா, அஷ்டமா சித்திகளும் வசமாயிரும். உடம்பு பொன்போல மிளிரும். முடி கருப்பா எப்பவும் இருக்கும்.. ' - இப்படியாக பரமானந்த குருவின் தெய்வீக உரை போய்க்கொண்டிருந்தது.
'இன்னிக்கு நெறஞ்ச அமாவாசை. யாராவது மீன் சாப்பிடுவாளா? வெண்டக்கா சம்பார்தான். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க'- புதுப்பொண்டாட்டி மீனாவின் வார்த்தைகளை மீறவா முடியும்.
'ஆழ்ந்த தவ நிலையில் குண்டலினி புருவ மத்தியில், நெற்றியில் வருவதோ, உச்சந்தலையில் துரியத்தில் நிற்பதோ கற்பனையே தவிர நிஜமல்ல'- ஆன்மீகத்தை சந்தைப்பொருளாக்கி காசு பார்க்கும் சத்குரு, நேரடித்தொலைக்காட்சியில் விவரித்துக்கொண்டிருந்தார்.
'அச்சச்சோ.. புது வருஷத்தன்னிக்கு யாராச்சும் மீன் கேப்பாளா. நீங்க கேக்கறேள். இன்னொரு நாள் வைச்சுக்கலாம்.'- முழுகாமல் இருக்கும் மனைவியிடம் கோபம் கொள்ள மனமில்லாமல் போனது சுரேஷுக்கு.
'உலக மக்கள் என்னை தொடர்வதை விட வேறேதும் கதியில்லை. நான் பத்து நிமிடம் அதிகம் தூங்கினால், சூரிய உதயமும் பத்து நிமிடம் தாமதப்படும். அனைத்து விலங்குகளுடன் பேச நான் கண்டுபிடித்திருக்கும் சாப்ட்வேர் விரைவில் புழக்கத்துக்கு வரும்.'- அள்ளி வீசிக்கொண்டிருந்தார், அடிவருடிகளின் பின்னணி இசையோடு, ஆனந்த குரு.
'வேண்டாம்ப்பா. அம்மா கோச்சுப்பா.'- சிக்கன் பர்கர் கேட்ட மகனுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தான் சுரேஷ்.
'ஒண்ணும் பெருசா இல்ல. மூச்சு விடுறதில கொஞ்சம் திணறல் ஏற்பட்டு சிவபதம் அடைந்து விட்டார். அவர் விட்டு சென்ற பிராணாயாம பயிற்சியை நாம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.'- சீடர்களுக்கு குரு விட்டு சென்ற பாதையை விளக்க ஆரம்பித்தார் தலைமை சீடர்.
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே.
திருமந்திரம் - 1680
லௌகிக வாழ்விலும் சரி, ஆன்மீக வாழ்விலும் சரி நாம் குருட்டாட்டம்தானே ஆடிக்கொண்டிருக்கிறோம்.
இறந்தவனை கொல்ல முடியாது; மனதில்
நுழையாதவனை வெளியேற்ற முடியாது.
இறந்தவனை கொல்வதும், நுழையாதவனை
வெளியேற்றுவதும் குருட்டாட்டமே!