Monday, November 4, 2019

முடத்தெங்கு



காற்றடிக்கும் திசையினிலே
காற்றாடி போகுமப்பா..
போகுமிடம் சேருமிடம்
யாரறிய கூடுமப்பா..





'இது ரொம்ப எளிமையான சவால்.  அருமையான,  வைரங்களால் இழைக்கப்பட்ட காலணி சிறியதாக இருப்பதால், காலை கொஞ்சம் செதுக்கி அணிந்து கொள்ள சொல்லுங்கள்' - பேரரசர் துக்ளக்கின் தீர்வை  கேட்டு அரசவை அதிர்ச்சி அடைந்தது.

டமில், தமில், டெமில், தமிள்... தமிழை செதுக்கி விட்டோம்!

'என்னை விட இந்தக்காலணிகள் மதிப்பு வாய்ந்ததாக இருப்பதால் அதனை தலையில் அணிவதே  சரி.' - முல்லா, தன்னுடைய செய்கைக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார்.

தாய் மொழி தமிழ், மொழிகளுக்கெல்லாம் தாய். தமிழன்டா, தமிழச்சிடா...

'அரசே, காலணியை குழந்தையாக இருக்கும்போதே மாட்டிவிட்டால் போதும். சிறிது, பெரிதென்ற பேச்சுக்கே இடமில்லை'- தெனாலி ராமன் பதிலால் கிருஷ்ண தேவராயர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

ஆதி மொழி அப்படியே இருக்கட்டும், சிந்திக்கவோ, வளரவோ  விட மாட்டோம்.

'மருமகனுக்காக  சமைத்ததை, மகனுக்கு பரிமாறி  வயிறெரியும் தாயும் உண்டானால் அவளும் முடத்தெங்குதான்' - வாய்விட்டு சத்தமாக படித்துக்கொண்டிருந்தான் சேகர்.

தன்னுடைய வீட்டு எல்லையை தாண்டி வளைந்து, நீருற்றி வளர்த்தவருக்கு பலன் தராமல், அடுத்தவருக்கு பலன் தரும் தென்னை மரமே, முடத்தெங்கு.

'கழற்பெய் குடமே மடற்பனை முடத்தெங்கு
குண்டிகைப் பருத்தியோ டிவையென மொழிப.'
 
இதனுட்  1கழற்பெய்குடமாவது  கொள்வோனுணர்வு  சிறிதாயினுந் தான்
கற்றதெல்லாம் ஒருங்குரைத்தல். 2மடற்பனை யென்பது  பிறராற் கிட்டுதற்கு
அரிதாகி  இனிதாகிய  பயன்களைக் கொண்டிருத்தல். 3முடத்தெங்கென்பது
ஒருவர்  நீர்வார்க்கப்  பிறர்க்குப்  பயன்படுவதுபோல  ஒருவர்  வழிபடப்
பிறர்க்கு  உரைத்தல். 4குண்டிகைப் பருத்தியென்பது  சொரியினும்  வீழாது
சிறிதுசிறிதாக     வாங்கக்    கொடுக்குமதுபோலக்   கொள்வோனுணர்வு
பெரிதாயினுஞ் சிறிது சிறிதாகக் கூறுதல்.
                                                                      - சிறப்புப்பாயிரம் [தொல்காப்பியம்]


நாங்க படிக்கும்போதும் சொல்லித்தந்தாங்க. எனக்குதான், மண்டைல  ஏறல.

தமிழில் எழுத்துக்கள்:
   உயிர் எழுத்துக்கள்: 12
மெய்யெழுத்துக்கள்: 18

உயிர் மெய்யெழுத்துக்கள்: 216
உயிர் மெய்யெழுத்துக்கள் கூட்டெழுத்துக்களே அன்றி தனி எழுத்துக்கள் அல்ல.


தமிழில் மொத்த எழுத்துக்கள் 30.

எழுத்து எனப்படுப 
அகரம் முதல் னகர இறுவாய்  
முப்பஃது என்ப 
சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே.

                                                                                -எழுத்ததிகாரம் [தொல்காப்பியம்] 

தமிழ் கற்க முப்பது எழுத்துக்களே போதும் என்று, தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்வோம்; எடுத்து செல்வோம்.


சிறப்பு 
எழுத்துக்களை படித்தாலே வார்த்தை வந்துவிடும். 

  ன்  பு  -  எழுத்து
அன்பு  - சொல்
அன்பு -  பொருள்

O  V  E - ஆங்கிலத்தில் எழுத்துக்களை படித்தால் சொல்லோ, பொருளோ வராது.
















Sunday, October 6, 2019

நான் யார்?




நான் யார்? நான் யார்? நீ யார்?


'சித்திரகுப்தா, நம் கணக்கில் ஏதோ பிழை இருக்க வேண்டும். மானிடர்களின் வாழ்நாளில் இருபது, முப்பது வருடங்களுக்கு முன்னரே, உயிரை எடுத்து வருகிறோம்.'

'இல்லை பிரபு. இப்பொழுதெல்லாம் உயிரை எடுக்கும் வேலை நமக்கில்லை. அவர்களாகவே வந்துவிடுகிறார்கள்.'

'ஏனப்பா, அவசரமாக வந்தாய்? இன்னும் இருபத்தேழு ஆண்டுகள் உன் கணக்கில் இருக்கிறதே!' - வரிசையில் நின்றிருந்த ஒளியுடலை பார்த்து கேட்டார் எமதர்மன்.

'சுவாமி, நான் யார்?'

பூமியில் தகனமாகிக்கொண்டிருந்த அவனது உடலை பார்த்தார், எமதர்ம ராஜா. ஓ,  இங்கே நின்று கொண்டிருப்பது யார்?

'சுவாமி, நான் யார்?'- மீண்டும் கேட்டது ஒளியுடல்.

மனித உடல், ஒளி உடல், தன் பாசக்கயிற்றில் சிக்கி உள்ள உயிர். இதில் எது இவன்?

'நீ யார்?' - எம தர்மனின் பாசக்கயிற்றில் சிக்கி இருந்த அவனது  உயிரை பார்த்து ஒளியுடல்  கேட்டது.

விடையில்லாத கேள்விகள்.

'இனி உன்னுடைய மனித ஆயுள் முடியும்வரை இப்படியே ஆவியாக இருக்க வேண்டியதுதான்.' என்று தீர்ப்பளித்த எமதர்மன், மீண்டும் கேட்டான்.

'ஆவியை பார்த்திருக்கிறாயா?'

'திருமணம் ஆயிருச்சு..'

'மனதில் அச்சம் இல்லையா?'

'பழகிருச்சு'


ஐவருக்கு ஒருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யை  காத்து வருவார்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரெ.
                                                          - திருமந்திரம் 188

ஐம்புலன்கள் உடலில், உயிருடன் சேர்ந்திருக்கும். [முறையற்ற அல்லது அளவுக்கதிகமாக புலனுகர்வு செயல்களால்] புலன்கள் உடலை விட்டு அகன்றுவிடும் நேரத்தில், உயிரும் உடலை விட்டு நீங்கிவிடும்.

நான் யார்? நான் யார்? நீ யார்?




Saturday, October 5, 2019

உடல்


உடல் 
நீ கொண்டு வந்ததென்னடா, மீசை முறுக்கு!

'அம்மா, காப்பி வழு வழுன்னு குடிக்க முடில'- பாதி தூக்கத்தில் எழுப்பி கொடுக்கப்பட்டதை குடித்துக்கொண்டே சொன்னான் பாலு.

அவன் குடிப்பது காப்பியில் கலந்த விளக்கெண்ணெய் என்பதை சொல்லாமல், 'பேசாம குடி. எல்லாரும் ஒண்ணும் சொல்லாம குடிச்சிட்டாங்க பாரு'.

'எப்ப பாரு புளிய மரமே கதி. மரத்தின் துளிர்விடும் இலைய திங்க ஆரம்பிச்சா, பூ, பிஞ்சு, காய், பழம், கொட்டைனு எதையும் விடுறதில்ல. வயித்தில புழு வந்து தூக்கத்தில், பல்ல நெரிக்கிறது, வலியில மொணங்குறது.'- மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.

ரொம்பவும் முத்தாத புளியங்காய் புடுங்கி, பச்சை மொளகா, உப்பு சேத்து, கொட்டையோட வச்சு, அம்மிக்கல்லில் அரைச்சு தின்னா, நாலு நாளைக்கு நாக்குல எரிச்சல் இருக்கும், நாக்குத்தோல் உறிஞ்சு போய்.

புளியங்கொட்டைக்கு நெறய வேல இருக்கு. ஒருபக்கம் நல்ல தேச்ச, ஆறு கொட்டைகளை வச்சு தாயம் விளையாடலாம். தண்ணி காய்ச்சும் அடுப்புல, சாம்பலுக்கு அடில கொட்டைய போட்டுட்டா, அத தோல  எடுத்துட்டு சாப்பிடலாம். ஆனா அவ்வளவு சுலபம் இல்ல, சாப்ட்டு முடிக்கிறது. அல்லது இருக்கவே இருக்கு, கல் உரலில் போட்டு குத்தி, தோலெடுத்துட்டு ராத்திரில உப்பு தண்ணில ஊறப்போட்டுட்டா, காலைல சாப்பிடலாம்.

'எப்படித்தான் திங்குதுகளோ. யார் சொல்லிக்குடுத்தாங்க, இப்படி  திங்கிறத'

இந்த விளக்கெண்ணெய் காப்பி, வருடத்திற்கு ஒருமுறை வீட்டில்  அத்தனை பேருக்கும் உண்டு. உடலில் சேர்ந்துள்ள விஷ சத்துக்கள் இயற்கையாக வெளியேற இதைவிட சிறந்த மருத்துவ முறை உண்டா என்று தெரியாது.

'குதிரையில் தூரப்பயணம் செல்லும் மனிதர்கள், எப்படி குதிரையை பராமரிப்பார்களோ,  அதே அளவு நம் உடலை நாம் பராமரிக்க வேண்டும்.' - ஷீரடி சாய்பாபாவின் அருளுரைகளில் ஒன்று இது.

நம் உடம்பே இறைவன் எழுந்தருளியிருக்கும் கோவில். உடம்பை பராமரிப்பது அந்த இறைவனுக்கு செய்யும் தொண்டு என்கிறார் திருமூலர்.


உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.
                                                                            -திருமந்திரம்

கொண்டு வந்ததொன்றுமில்லை. கொண்டு செல்வதொன்றுமில்லை.

'சார், எங்கே போறீங்க?'

'போடா, வெளக்கெண்ண'


Tuesday, October 1, 2019

அக்டோபர் இரண்டு

அக்டோபர் இரண்டு
Image result for old indian coins images

மஹாத்மா
வாழ்க வளமுடன்!
              ***


'முருகேசு, பாருடா..'- கைகளை விரித்து துள்ளிக் குதித்துக்கொண்டு வந்தாள்  பாரு என்கிற பார்வதி.

'ஆமாம், நீ பாருதான்'- அவள் கைகளில் இருந்த ஓட்டைக்காசை  பார்த்து, 'ஏதுடி, உனக்கு  காலணா?' என்று வியந்தான்.

'மாமா குடுத்தாரே.. இன்னிக்கு எனக்கு பொறந்த நாளாம்'- சொல்லும்போதே மகிழ்ச்சி பொங்கியது அவளுக்கு.

'ஜவ்வு மிட்டாய் வாங்கலாமா.. இல்லை கம்மர்கட் வாங்கலாமா?'- அவனுடன் பகிர்ந்துகொள்வதில் சந்தோஷம் என்பதை அவளுடைய  ஆர்வம் காட்டியது.

அவனுடைய மனமோ, 'மூன்று பைசா என்பது அரையணா. ஓரணா ஆறு பைசா. நாலணா இருபத்து நான்கு பைசா. ஆனா, நாலணா இருபத்தைந்து பைசாவா வருதே'- என்று கணக்கு போட்டு கொண்டிருந்தது.

இது இயல்பாக நடக்கும் செயல்போல் அவன் சிந்தனையில்  தோன்றினாலும், அவனுக்குள் இருக்கும் ஜீவாத்மாவின் அறிவு நிலையே இந்த எண்ணத்தின் அடி உரம்.


பாரப்பா ஆதாரம் ஆறாதாரம்
பரிவான ஆதார மடத்துக்குள்ளே
நேரப்பா அக்கினிதான் ஜீவாத்மாவே
நிறைந்துநின்ற வாய்வதுதான் பரமாத்மாவாய்ப்
பேரப்பா பெருகி நின்ற கடத்தினுள்ளே
பிளமாக நின்று திருவிளையாட்டாடி
காரப்பா ஆகாசஞ் சாக்ஷியான
கருணையுடன் நின்றுதடா கருவாய்க்காணே.
                                            - அகத்தியரின் சௌமிய சாகரம் 24

ஆறு ஆதாரங்களுடன் அமைந்துள்ள மனித உடலில், ஜீவாத்மாவாக அக்கினி. அக்கினியை உயிர்ப்புடன் வைத்திருக்கும், நாம் சுவாசிக்கும் வாயுவாக  பரமாத்மா. 

ஜீவாத்மா அன்பும், அஹிம்சையும் கொண்டு நமக்கு தொண்டு செய்யும்போது மஹாத்மாவாக போற்றப்படுகிறது.

வாழ்க மஹாத்மா.. வளர்க அவர்தம் தொண்டுள்ளம் உலகத்தோரிடம்..





Friday, September 20, 2019

வரி

வரி

















பெற்றவர்கள் பட்ட கடன்
பிள்ளைகளை சேருமடி


பொருள்:

'ஏங்க, புள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும், இந்த மாசம். மறந்துறாதீங்க'

'சார்,  உங்க EMI  ரெண்டு மாசம் பெண்டிங்  இருக்கு.  வர்ற மாசம் க்ளியர் பண்ணிருங்க. இல்லன்னா வண்டி சீஸ் பண்ணிருவாங்க '

'பேங்க் மேனேஜர் பேசுறேன், நகைக்கடன் வச்சு ஒரு வருஷம் ஆச்சு. நகையை திருப்பிக்கிங்க. இல்லன்னா  வட்டி மட்டும் கட்டி, மறு லோன் போட்டுக்குங்க. ஏலத்துக்கு போகாம பாத்துக்குங்க.'

நல்ல கம்பெனியில், பொறுப்பான சேல்ஸ் மேனேஜர் வேலை, லோகநாதனுக்கு. இன்சென்டிவ் சேர்த்து மாசம் எப்படியும் சம்பளம் ஐம்பதாயிரம் தேறும்.

சம்பள நாளோ, மாத கடைசியோ வித்தியாசமில்லாமல் பொருளாதார வறட்சி. அனைத்து மத்திய தர மக்களிடம் இதே நிலை.

'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' - இதை இப்படி  சொல்லணும் இனிமேல் - ' இலங்கை வேந்தன் போல் கலங்கினான் லோகநாதன்'.

எங்கே தவறு நிகழ்கிறது?

வாங்கும் சம்பளத்தில், கட்டாய ஓய்வூதிய சேமிப்பு. வருடாந்திர வருமான வரி. இத்தோடல்லாமல், வாங்கும்  பொருளுக்கும், சேவைக்கும் வரி. அத்தனையும் மீதமுள்ள வருவாயில் இருந்துதான் கொடுக்க வேண்டும்.
குறைந்தது அறுபது சதவீதம் வரிக்கணக்குகளில் போக, மீதம் நாற்பது சதவீதம் மட்டுமே நம் கைகளில், அனைத்து செலவினங்களுக்கும்.

நம் பிள்ளைகளுக்கு நாம் என்ன விட்டு செல்ல முடியும், கடனைத்தவிர?

நல்ல அரசாளும் மன்னன், குடிமக்களின் வருமானத்தில், ஆறில் ஒரு பங்கு மட்டுமே வரியாக பெற்று அரசு நடத்த வேண்டும். எண்பத்து மூன்று சதவீதம் உழைப்போர்  கைகளில்.

இதுவே அடிப்படை சாசனமாக கொண்டு அரசு இயங்கிட வேண்டும்.

திறந்தரு முத்தியுஞ் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறியே ஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலஞ் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுக்கு ஆறிலொன்று ஆமே.
                                                                      - திருமந்திரம் 244

அறநெறியில் நிறைந்து வாழும் மக்களுக்கு முக்தியும், செல்வமும் வந்து சேரும். நல்ல நீர் நிறைந்த இந்த பூவுலகில், தொழில் செய்து, உழைத்து வாழ்வோரிடம் ஆறிலொரு பங்கே, மன்னன் வரியாக பெற வேண்டும்.

உணவு

உணவு

கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்

பொருள்:

'டாட்.. டோன்ட் யூஸ் பிங்கர்ஸ்' - அப்பாவுக்கு உத்தரவு போட்டாள், ஒரு வாரமாக பிளே ஸ்கூல் போகும்,  ஷிவானி. பள்ளியில் ஆசிரியை சொல்லிக்கொடுத்ததை அப்பாவுக்கு சொல்லிக்கொடுக்கிறாள் மகள், கையில் எடுத்து சாப்பிடுவது, சுகாதாரக்கேடு என்று.

'மாப்ளே.. பிரியாணிய கூட ஸ்பூன்ல சாப்பிடுறாண்டா.   உப்புமான்னா கூட பரவாயில்ல, கருமத்த வாயில வெக்க முடியாது. பாரின்  போயிட்டு வந்து இவன் பண்ற அலப்பறை தாங்க முடியலடா.'

ஒரு பொருள் உண்ணத்தக்கதா அல்லது தவிர்க்க வேண்டியதா என்பதை கண்டறிய மனிதன் என்ன உத்தியை கையாண்டான்? விலங்குகள் உண்ட கனிகள், கிழங்குகள் மற்றும் பறவைகள் உண்ட தானியங்களை தானும் உண்ண  ஆரம்பித்தான்.

எப்பொழுது உணவை வியாபாரப்பொருளாக மாற்றினானோ, அன்றைக்கு மாறியது உணவே விஷமாக. முதலில் விளைச்சலை அதிகரிக்க, ஹைபிரிட் முறையை ஆரம்பித்தான். மண்ணையும், விளைச்சலையும் ரசாயன உரங்களாலும், உயிர்கொல்லி தெளிப்பான்களாலும் நிறைத்து, சத்தற்ற மகத்தான விளைச்சலை கண்டுபிடித்தான். ஆசை அதனினும் பெருக, மரபணு மாற்று விளைச்சலை கொண்டு வந்து சுத்தமாக உண்ணும் உணவையே  விஷமாக மாற்றிவிட்டான்.

மனிதன் உண்ணும்  உணவை, புழு, பூச்சிகளே கூட உண்பதில்லை. உடலில் உள்ள நல்ல நோயெதிர்ப்பு பாக்டீரியாக்கள் அழிவதால், புற்று நோய், புற்றீசலாய் பரவி நிற்கிறது.

நாம் உட்கொள்ளும் உணவு, எப்படி உடலுக்கும், மனதுக்கும் உறுதுணையாய் உள்ளது என்பதை திருமூலர் சொல்வதை கேட்போம்:

அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம்
பொருந்தும்  உடல்மனம்  போம்மலம் என்னத்
திருந்தும் உடல் மனமாம் கூறு சேர்ந்திடு
இருந்தன முன்னாள் இரதம் அதாகுமே.
                                                                       - திருமந்திரம்

மறை பொருள்:

நாம் உண்ணும் உணவு, மூன்று பகுதியாகும். அவை, உயிரிருக்கும் உடல், உடலிருக்கும் மனம், வெளியேறும் கழிவு என மூன்று பகுதி. திருத்தமுள்ள மனமும், உடலும் ஆகிய இரண்டும் இருக்கும் தன்மை அவை முன் உண்ட உணவின் சத்தினாலேயே ஆகும்.



Sunday, September 15, 2019

கண்கள் உறங்கிடுமா - காதல் கண்கள் உறங்கிடுமா


தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா - காதல்
கண்கள் உறங்கிடுமா


'சொல்லித்தொலையேண்டா' -  நிலவொளி வீசும் மாலையும், இரவும் சந்திக்கும் வேளையில், சசியின் முகம் சந்திரகாந்தக்கல்லாக மாறி இருந்தது.

மூன்று வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை முன்னூறு வார்த்தைகள் அவன் பேசியும், அத்தனையும் அர்த்தமற்றதாக இருந்தது சசிக்கு.

'ஏழு வண்ணங்களில் பகலில் ஜொலிக்கும் இந்த உலகம், கருப்பு வெளுப்பாக இருந்தாலும், நிலா வெளிச்சத்தில் மனதிற்கு எவ்வளவு உற்சாகம் தருகிறது.' - சசியின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே பேசினான். அதில் மின்னும் கண்ணீர் முத்து, அவன் காலடியில் இருந்த நிலத்தில் பட்டு, தான்   வழுக்கி செல்வது போல் உணர்ந்தான்.

ஊடலும், ஊடலினுட்பொதிந்த இளங்கோபமும், அது கொண்டுவரும் கண்ணீரும்தானே ஆண்களை அடியோடு சாய்க்கும் பெண்களின் பிரம்மாஸ்திரங்கள்.

அவர்களுக்குள் இருந்த  இடைவெளி, மனதிலும்  சரி, பெஞ்சிலும் சரி, குறையாதா  என்ற ஏக்கத்தில் அவனை ஆவலுடன் பார்த்தாள்.

'சசி, முழு நிலவின் ஒளியில், நட்சத்திரங்கள் களை  இழந்து போகிறது பார்த்தாயா?' - பூங்காவின் பெஞ்சில் இருந்து, நீரில்பட்டு தெரியும் நிலவும்,
நிலவு போன்ற அவள் முகமும் அவனை கவிஞனாக்கிக்  கொண்டிருந்தது.

'போடா, நீயும் உன் நிலவும்..'-கோபம் தலைக்கேறியது  சசிக்கு.

பிரிவை சொல்ல அவன் உறவை சொல்லவில்லை. மன முறிவை சொல்லவும், அவன் உறவுக்குள் நிலவவில்லை.

ஆனால், தன் வாழ் நாள் முழுவதிலும் ஏதோ கட்டத்தில் துக்கம் பீறிடும் வேளையில், இன்றைய இந்த பொழுது அவளுக்கு ஆறுதல் அளிக்கும் அருமருந்தாக அமையப்போகிறது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நிலவு வளரும் நாட்களில் நட்சத்திரங்கள் ஒளி குன்றுகிறது;
தேயும் நாட்களில் நட்சத்திரங்கள் பிரகாசமாக ஒளிர்கிறது.

தாரகை மின்னும் சசிதேயும் பக்கத்துத்
தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்
தாரகை பூவில் சகலத்து  யோனிகள்
தாரகை தாரகை தானாம் சொரூபமே.
                                                                  திருமந்திரம்-860


மூலாதாரத்தில் உள்ள உயிர் நிலையே அனைத்து  உயிர்களுக்கும்,   என்றும் ஒளிரும் நட்சத்திரம். உடல் வளரும் இளம்பிராய  நாட்களில், நட்சத்திரத்தின் ஒளி  உணர்வு நிலையில் மனிதனுக்கு தெரிவதில்லை. உடல் வளர்நிலை முடிந்து, தேய்வு நிலை தொடங்கும்போது, உயிர் ஒளிவிடத்தொடங்குகிறது.

இறைவன் தன்னுள் உயிராக உறைகிறான் என்ற எண்ணம் உண்டாகி, வீடு பேறு  நோக்கி நகரத்தொடங்குகிறான்.

இந்நிலை எய்தப்பெற்றவர்கள் முற்பிறவியில் நன்வினையாற்றியவர்கள்; பாக்கியசாலிகள்.



கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...