Thursday, May 23, 2024

இழப்பதற்கொன்றுமில்லை

இழப்பதற்கொன்றுமில்லை



இழப்பதற்கொன்றுமில்லை 

உயிரின் அளவை, ஒரு பசுவின் மயிரை ஒரு லட்சம் கூறாக வெட்டினால், அதில் ஒரு கூறு என்று சொன்ன திருமூலர் இறையின் அளவையும் சொல்கிறார். 

ஒரு பொருளை இதற்குமேல் பாகுபடுத்தி பார்க்க முடியாது என்னும் மிக சிறிய அளவை அணு என்று சொல்கிறோம். அணுவின் பாகங்களாக எலக்ட்ரான், நியூட்ரான் மற்றும் புரோட்டான் என்று ஆய்வு செய்து அறிவித்திருப்பது அறிவியல். இதில் நியூட்ரான் மற்றும் புரோட்டான் இருக்குமிடம் நியூக்ளியஸ் அதாவது அணுவின் கருமையம். இந்த கருமையத்தை ஆயிரம் கூறுகளாக்கினால், அதில் ஒரு கூறின் அளவுதான்  இறை.

உயிரையும், இறையையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் உயிர் என்பது பருப்பொருள். இறை என்பது நுண் பொருள். இந்த நுண்பொருள் எப்பொழுதும் பருப்பொருளை தனது காந்த எல்லை தொடர்பில்  வைத்திருக்கிறது. உரிய  நேரத்தில் பருப்பொருளை பூமியில் உடலெடுக்கவும்  வைக்கிறது.

வானத்தில் இருந்து இறங்கி வரும் இறை என்னும் நுண்பொருள், பருப்பொருளான உயிரை அதன் வினைப்பயனைக் கணக்கில்   கொண்டு  உடலெடுக்க தகுதியான   பெண்ணின் கருவறைக்குள்  வைக்கிறது.

விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு 

தன்னுடைய குளிர்ந்த பாதங்களை உயிருக்கு காவலாக உயிரின்  தலையில் வைக்கிறது.

தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து

ஒப்பற்ற பேரொளியாய் திகழும் அந்த நுண்பொருள், உடலில்   கண்களுக்கு நடுவில் நிற்கிறது. 

உயிர் இறை நிலையை பற்றி இருக்கும் உண்மையை உணரும் தருணத்தில்,  ஆணவம், கன்மம், மாயை என்னும்  மும்மலங்களை  அகற்றி அருள்கிறது.

உண்ணின் றிருக்கியோ  ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்றுக் காட்டி களிம்பு அறுத்தானே.

நாம் பூமியில் பிறப்பெடுத்ததும் இந்த முறையில்தான்.

நமக்கு கிடைத்திருக்கும் உடல், முந்தைய பிறவிகளில் நாம் செய்த நன்மை, தீமைகளின் மிச்சம் என்றாகிவிட்டது. நம் புருவ மத்தியில் இறைவன் குடி கொண்டிருக்கிறான் என்றும் புரிந்து கொள்கிறோம். நம் உயிர் தொடர்ந்து இறை நிலையின் காந்த எல்லைக்குள்  ஒன்றி இருக்கிறது.

இறை எவ்வாறு உயிருடன் கலந்து  உடலில் இருக்கிறது என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறார் திருமூலர்.

புருவ மத்தியில் இறைவன் இருந்தால், அப்படியே அவனை அங்கே நிலை நிறுத்திக்கொள்ளலாமே என்று தோன்றலாம். அது முடியாது என்பதை திருமந்திரம் விளக்குகிறது.

நீர் நிரம்பிய குடங்களை வெயிலில் வைத்தால், ஒவ்வொரு குடத்திலும் சூரியனின் பிம்பம் தெரியும். சூரியனை குடத்திற்குள் அடக்கி விடலாம் என்று குடத்தை மூடி வைத்தால், குடத்துக்குள் சூரியன் அடங்காது.

கடங்கடந்  தோறும் கதிரவன் தோன்றின்  
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான் 

அவ்வண்ணமே,  விஷத்தை அருந்திய  இறைவன், உயிருடன் இணைந்து  ஒவ்வொரு உடலிலும் குடி கொண்டிருக்கிறான். 

விடங்கொண்ட கண்டனு மேவிய காயத்
தடங்கிட நின்றது அப்பரி சாமே. 

கண்களால் பார்க்க இயலாத நுண் பொருள் இறை; பருப்பொருள் உயிர். ஆனால், நுண் பொருள் பருப்பொருளை கட்டி வைத்திருக்கிறது. கட்டுவதற்குண்டான கயிறு இங்கே இறை காந்தம். 

இறைவன் உயிரோடும், உயிர் தங்கியிருக்கும் உடலோடும் எவ்வாறு கலந்திருக்கிறான் என்று பார்ப்போம்.

சூரியனின் மின்காந்த அலைகளை பஞ்சின் மீது  குவிப்பதால் தீப்பொறிகள் உண்டாகி நெருப்பு பற்றிக்கொள்ளும். ஆனால், எப்பொழுதும் மின்காந்த அலைகளோடு உயிரை பற்றி இருக்கும் இறைக்கனல், உயிரை சுடுவதில்லை. மாறாக, சூரியனின் முன்னர் பஞ்சு  சுட்டெரிக்கப்படுவது போல்,  உயிர் இறையை  அணுகும்போது, உயிரைப் பற்றியுள்ள பாசம் என்னும் மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை சுட்டெரிக்கப்படும்.

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.

நவத்துவாரங்களும், எண்ணற்ற வியர்வை துவாரங்களும் நம்  உடலில் இருக்கிறது. இந்த ஓட்டைப்படகில் தங்கி  உயிர் எவ்வாறு பயணம் செய்கிறது என்று பார்ப்போம்.  உயிர் என்னும்  பருப்பொருளை உடலுடன் கட்டி வைத்திருப்பது பிராண வாயு என்னும் காற்று.

அதை திருமூலர் உறுதி செய்வதையும் அறிந்து கொள்ளலாம். 

சுவாசத்தின் பொழுதில் உடலுக்குள் செல்லும் காற்று வெளியேறி விடும். இந்த காற்று பன்னிரண்டு அங்குல தூரம் பயணித்து திரும்பும். பயணிக்கும் தூரத்தின் அளவு  எட்டு விரற்கடை அளவாக  குறைந்தால்,  உயிர் உடலை விட்டு நீங்கிவிடும். அதுவே, நான்கு விரற்கடை அளவு அதிகரித்தால், இறைவனின் பாதங்களை தரிசித்து, ஐந்தெழுத்து  மந்திரத்தின் உண்மை புலப்படும்.

கூடம்  எடுத்து குடிபுக்க மங்கையர்  
ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம் 
நீடுவர் எண்விரல் கண்டிப்பர்  நால்விரல் 
கூடிக் கொளில்கோல அஞ்செழுத் தாமே.

உயிர் உடலை விட்டு நீங்காமல் கட்டி வைத்திருப்பது காற்று என்பது உறுதியாகிறது.

இறை, உயிர் மற்றும் காற்று மூன்றுமே அருவமான பொருட்கள். உடல் இயங்குவதற்கு தேவையான கருவிகளும் இவையே.

*** *** ***

நாம் கேட்கவேண்டிய  ஒரு கேள்வி. 

இறை, உயிர், காற்று இவற்றை தெரிந்து கொள்வதால் என்ன பலன்?

இறந்தபின்னர் கிடைக்கும் மோக்ஷமோ, சுவர்கமோ நமக்கு தெரியாத ஒன்று. அதைப்பற்றி பேசுவதால் பலனொன்றுமில்லை. வாழும்போது நன்மை கிடைக்குமானால் அது நமக்கு கிடைக்கும் பாக்கியம் தானே!

நாம் வாழும் இந்த பூமியே சொர்கமானால், வேண்டாமென்று சொல்ல முடியுமா என்ன?

முதலில் உலகை நோக்கிய நம் எண்ணங்கள் சீர்படும். மனம் அமைதி நிலை அடையும். இளம் பருவத்தில் ஆசைப்பட்டதெல்லாம், சுவைபட அனுபவித்து மகிழ ஆரோக்கியமான உடலிருக்கும். இப்பொழுது வாழும் வாழ்க்கையே சொர்கமாகி விடும்.

எனவே, இன்னும் ஒரு படி மேலே சென்று, இறை, உயிர், காற்று நம் உடலில் எவ்வாறு செயல் படுகிறது என்று தெரிந்து கொள்வோம்.

அதற்கு இரண்டு முக்கியமான தீர்மானங்கள் தேவை. தீர்மானம் எடுப்பதோடு நில்லாமல் அவற்றை  வைராக்கியத்துடன் செயல் படுத்தவும்  வேண்டும்.

ஒன்று, நம்பிக்கை. மற்றொன்று பயிற்சி.

நம்பிக்கை என்றால் காலையில் செம்மையாக  ஆரம்பித்து மாலையில் வெளிறிப்போவதல்ல. 'இவர்  என்  தந்தை, இவர்  என்  தாய்' என்று எப்படி உயிருள்ளவரை நம்புகிறோமோ அது மாதிரியான நம்பிக்கை.

இன்னும் சொல்லப்போனால், உணர் மனம் நம்புவதை உள் மனம் கேள்வி கேட்காமல் அப்படியே  உள்வாங்கும் நம்பிக்கை. தொடர்ந்து செல்லும் நம்பிக்கை அலைகளை உள் மனம், ஆழ் மனதிற்கு எடுத்து செல்லும் அளவிற்கான தீவிர நம்பிக்கை.

இரண்டாவது, நம்பிக்கையுடனான  பயிற்சி.

ஆரம்பிக்கும்போது பயிற்சியின் தன்மை எவ்வளவு வீரியத்துடன் இருந்ததோ அதே அளவு, சற்றும் குறையாமல் இறுதி வரை பயிற்சி. நான் இறுதி வரை என்று சொல்வது, நாம் மேற்கொள்ளும் பயிற்சி நம் வாழ்க்கை முறையாக மாறும் வரை.

இங்கே இழப்பதற்கு ஒன்றுமில்லை.

இனி பயிற்சி முறைக்கு செல்வோம்.

அமைதியான இடத்தில் அமர்ந்து கொள்ளலாம்.

கண்களை மூடி சுவாசத்தை மட்டும் கவனிக்கலாம்.

உள்செல்லும் காற்றில்  பத்து வகையான வாயுக்கள் இருக்கிறது. அதில் பிரதானமான  பிராண வாயுவை மட்டும் கவனத்தில் கொள்வோம்.

பிராணனை உடலில் நிலை நிறுத்துவது இந்த வாயு. அதாவது ஒவ்வொரு முறை காற்றை உள்ளிழுக்கும்போதும் பிராண வாயு உடலில் உள்ள உயிரை சந்தித்து வேதியல் வினை புரிந்து கரியமில வாயுவாக வெளியே வருகிறது.

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமானால், சந்திர நாடி, சூரிய நாடி வழியாக நாம் சுவாசிக்கும் காற்று அக்னி நாடி என்னும் சுழு முனை நாடியில் சந்திக்கிறது. சுழு முனை நாடி என்பது குண்டலினி இருக்கும் மூலாதாரத்தில்  இருந்து சுழு முனை வரையாக புருவ மத்தியில்  நிற்கிறது.

அதாவது, நம் சுவாசக்காற்றில் உள்ள பிராண வாயு  நேரடியாக சந்திர மண்டலம் என்னும் புருவமத்தியில் சென்றடைகிறது. இங்குதான் இறையின் குளிர்ந்த தாள்கள் இருக்கிறது. ஒவ்வொரு உயிர் பிறப்பின்போதும் இறைவனின் இருப்பிடமாக நாம் அறிந்ததும்  இந்த இடம்தான்.

அஷ்டமா சித்திகள் எனப்படும் எட்டு சித்திகள், அஷ்டாங்க  யோகத்தால் மட்டும் கிடைத்திடாது. அதற்கு அஷ்டாங்க யோகத்தின் ஒரு அங்கமான, பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சியில் பிராணனை அணுகும் முறையை அறிந்திருக்க வேண்டும். அவ்வளவு எளிதாக பிராண வாயு நடு நாடியான சுழு முனை நாடியில் ஒடுங்கி நிற்காது. மூலாதாரத்திலிருந்து எழும் உயிர்க்கனல் சுழுமுனை நாடி வழியாக சந்திர மண்டலம் என்னும் புருவ மத்திக்கு இந்த பிராண வாயு நடு நாடியில் கரைந்து  செல்ல வேண்டும். இவ்வாறு செல்வதால் சந்திர மண்டலத்தில் ஊரும் அமிர்தத்தை உண்டு, எட்டு வகை சித்திகளை அடையலாம்.

எட்டாகிய சித்தி ஓரெட்டி யோகத்தால் 
கிட்டாப் பிராணனே செய்தால் கிடைத்திடும் 
ஒட்டா நடுநாடி மூலத்து அனல்பானு 
விட்டான் மதியுண்ண வும்வரும் மேலதே.

நமக்கு வேண்டியது எல்லாம், மூலாதாரத்தில் பிராண வாயுவை சேர்க்க வேண்டியதுதான்.

மீண்டும் நாம் சுவாசத்திற்கு வருவோம்.

ஒவ்வொருமுறை நாம் சுவாசிக்கும்போதும் பிராண வாயு உயிரை சந்தித்து இறைவனின் பாதங்களை தரிசித்து வருவது உறுதியாகிவிட்டது. 

புருவ மத்தியில் மனதை செலுத்தி, சுவாசிக்கும் காற்றில் இறைவனை சந்திக்கும் இந்த அதிசய நிகழ்வின் சுழற்சியை  மட்டும் கவனிப்போம்.

நம் உணர் மனம் காற்றின் சுழற்சியை சுவாசித்தலின் ஒரு அங்கமாக மாற்றிவிடும்நாளடைவில் இது நம் உடலின்  அனிச்சை செயல்களில் ஒன்றாகிவிடும்.   

இதற்குமேல் நடக்கும் அதிசயங்கள், அவரவர் கேட்டு வந்த வரம்.

இழப்பதற்கொன்றுமில்லை 
அறியாமையைத்தவிர.. 

*** *** ***










Tuesday, May 14, 2024

எனக்குள் இருவர்

எனக்குள் இருவர் 


 

'ஒரு நாள் தோனிக்கு கோயில் காட்டுவார்கள்'- சக கிரிக்கெட் விளையாட்டு வீரரின் பாராட்டு தோனிக்கு. 

'அங்கே அவர் சென்னையின்  கடவுளாக இருப்பார்'

மக்கள் குடியரசுத்தலைவர் என்பதோ மக்கள் திலகம் என்பதோ அவர்களின் சமுதாய பங்களிப்புக்கு  இயல்பாக  கிடைக்கும் தனி மரியாதை.

இவர்கள் மக்களின் மனதில் மாறாத அன்புடன் என்றும்  நினைவு கூறத்தக்க மானிட மாணிக்கங்கள்.

இந்த மன நிலையை ஒன்று,  தமிழ் மக்கள் எவ்வளவு மூடத்தனமாக இருக்கிறார்கள் என்று பேசலாம்; அல்லது,  அன்பை வெளிப்படுத்தும்  அவர்களின்  பண்பாட்டின்  வெளிப்பாடாகவும்  பார்க்கலாம்.

நிகழ்ச்சிகளை  பல காலமாக  திட்டமிட்டு, நுழைவு சீட்டுகளை பலமடங்கு விலைக்கு விற்று,  பல நிகழ்ச்சிகள்  ஊரே வெறுத்தொதுக்கும்படி  அரங்கேறும்   அதே சென்னையில்தான்,  ஜல்லிக்கட்டு போராட்டம் ஆரம்பித்தது. 

போராட்டத்திற்கு தலைவரோ,   அமைப்போ என்று எதுவும்  இல்லாமல், போராட்டம் பல மாவட்டங்களில் மட்டுமல்ல, பல மாநிலங்கள், பல நாடுகள் எனப்பரவி  வெற்றி ஈட்டி தந்ததை  நாம் யாரும் மறந்திருக்க முடியாது.

மக்களின் எழுச்சிக்கு முன்னால், சமுதாயமே ஒருங்கிணைந்து நின்றது  இந்த போராட்டத்தில்தான். 

இது தமிழ் மண்ணின் தனிக்குணம்.

இனி இங்கே பெறப்பட்ட மன உணர்வுகளை மட்டும்  பார்ப்போம்.

ஒன்றை தீவிரமாக விரும்பவோ, நம்பவோ செய்கிறோம். அதில், முழுமையாக செயல்படுவது மேல்மனம் மட்டுமே.  நம் வாழ்க்கை முழுவதும் மேல்மனத்தின் அரசாட்சியிலே முடிந்து விடுகிறது.

ஆழ்மனம் என்ற  ஒன்றுண்டு. அதன் இயல்பு நிலை ஆனந்தம். அதை அறிந்து கொள்ள நாம் அரிதாகவே முயல்கிறோம்.

இறை ஏற்பாளரானாலும் சரி, மறுப்பாளரானாலும் சரி அனைவருக்கும்  ஆழ்மனம் என்ற ஒன்றுண்டு. ஆழ்மனம் நம் ஆளுகைக்கு உட்பட்டதல்ல. 

ஆழ்மனமே  நம் உயிர். அதுவே ஆன்மா. அதுவே நம் ஜீவன்.

அதன் அளவைக்கூட திருமூலர் அறுதியிட்டு சொல்கிறார்.

திருமந்திரம் 2011

மேவிய சீவன் வடிவது சொல்லிடில் 
கோவின்மயிர் ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால் 
ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே. 

பசுவின் ஒரு ரோமத்தை முதலில் நூறாக கூறிடுங்கள். அதில் ஒன்றை எடுத்து, அதனை ஆயிரம் கூறாக வெட்டினால் அதில் கிடைக்கக்கூடிய ஒரு கூறு ஜீவனின் அளவாகும். 

அதாவது, பசுவின் ஒரு  ரோமத்தை  ஒரு லட்சம் பாகங்களாக வெட்டினால் அதில் கிடைக்கும் ஒரு பாகம் உயிரின் அளவு.

நீங்கள் கேட்கலாம், உயிரின் அளவைத்தெறிந்து ஆகப்போவது என்ன என்று. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

திருமந்திரம் 2008

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை 
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு 
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு 
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

அணுவுக்குள் அணுவாக அமர்ந்திருக்கும் இறைவன், அணுவுக்குள் பருப்பொருளாய் இருக்கும் கருமையத்தில்,  ஆயிரத்தில் ஒரு பாகமாக  இருக்கிறான். அணுவில் நுழைந்து மையத்தை அடையும் பயிற்சி உள்ளவர்கள், அங்கு உறையும் இறைவனை அடையலாம்.

உயிரின் அளவை சொன்ன திருமூலர், இறைவனின் அளவையும் சொல்லி விட்டார். 

உயிரும், இறையும்  உடலுக்குள், உனக்குள்ளே  இருப்பவை.

ஆழ்மனத்தை அடைவது சாத்தியம் என்று அஷ்டாங்க யோக வழி முறைகளையும் சொல்லுகிறது திருமந்திரம். சமாதி நிலையில், ஆழ்மனம் இறைவனுடன் ஐக்கியம் ஆகி ஆனந்த நிலைக்கு சென்றுவிடும்.

இனி  ஆன்மாவை அறிய முடியுமா, இறைவனை அடைய  முடியுமா  என்பதை  அவரவர் எடுக்கும்  ஆன்மீக முயற்சியே  தீர்மானிக்கும்.


*** *** *** *** ***








Tuesday, May 7, 2024

காலக்கணக்கு

காலக்கணக்கு 


அனுபவம் என்றால் என்ன? 

அனுபவத்தால் கிடைப்பதென்ன?

அனுபவிப்பவன், அனுபவிக்கப்படும் பொருள் எங்கு சென்றடைகிறது?

அனுபவமும் அவனே.. அனுபவிப்பவனும் அவனே.. அனுபவிக்கப்படும் பொருளும் அவனே..

இங்கே நீ ஒரு கருவி மட்டுமே.

லாப நஷ்டம் மட்டுமே, அனுபவித்ததற்கு கருவியாய் நின்ற உன் காலக்கணக்கில் சேர்கிறது. 

அனுபவிக்கும் கருவியாகிய உங்களுக்கு  ஒரு  கடமை மட்டும் இருக்கிறது. அனுபவிக்கும் பொருளையோ, காரியத்தையோ தேர்ந்தெடுக்கும் கடமை அது. சரியானதை தேர்ந்தெடுத்தால் நல்வினையாக உங்கள் காலக்கணக்கில் வரவு வைக்கப்படும். முறையற்றதை தேர்ந்தெடுத்தால் அது தீவினையாக செலவு வகையில்  சேர்ந்துவிடும்.

சித்திரகுப்தன் உங்கள் காலக்கணக்கை தணிக்கை செய்து உங்களுக்கு சேர வேண்டியதை கச்சிதமாக செய்து விடுவார்.

சின்ன அமில சோதனை மூலம்,  இப்பிறப்பில் உங்கள் காலக்கணக்கின்  நிலையை  தெரிந்து கொள்ளலாம்.

இந்த பிறவியில் உங்களுக்கு அமைந்த மனைவி, செல்வம், குழந்தைகள் என்று வருவது இரண்டாம் நிலையில். முதலில் வருவது உங்கள் உடல் மற்றும் உலக வாழ்வை அனுபவிப்பதற்கு தேவையான ஆரோக்கியம்.

ஒரு உதாரணத்திற்கு  உங்கள்  வாழ்க்கைத்துணையை எடுத்துக்கொள்ளுங்கள்.

வாழ்க்கைத்துணையுடன் வாழும் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

கண்ணிமைக்கும் ஒவ்வொரு வினாடியும் மகிழ்ச்சியை மனதில் கொண்டுவந்தால், காலக்கணக்கில் நிறைய சேமிப்புடையவர் நீங்கள். ஒரு முறை சுவாசித்து, மறுமுறை சுவாசிப்பதற்குள் அடி மேல்  அடி  விழுந்தால் இன்னும் உங்கள் காலக்கணக்கு நேர்ப்படவில்லை என்று அர்த்தம்.

இதைத்தான் சொர்கமும், நரகமும் நம் வசம் என்று சொல்வது.

திருமந்திரம்

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் 
மடக்கொடி யாரோடு மந்தணம் கொண்டார் 
இடப்பக்கமே  இறை நொந்தது  என்றார் 
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.

சுவையாக சமைத்து வைத்திருந்த உணவினை உண்டு முடித்தார். கொடி போன்ற இடையினைக் கொண்ட அழகிய மனைவியுடன் உறவும் கொண்டார். மார்பின் இடது பக்கம் கொஞ்சம் வலிக்கிறது என்று படுத்தார். படுத்தவர் அப்படியே உயிரிழந்தும் போனார். 

அறுசுவை உணவு உண்ட சந்தோசம், மனைவியுடன் இணைந்த இன்பம், இதயத்தில் ஏற்பட்ட வலியின் துயரம் அனைத்தும் அவர்  அனுபவித்தவை.

உடலை விட்டு உயிர் நீங்கியபின், அந்த அனுபவங்கள்  சென்றதெங்கே? 

மீண்டும், காலக்கணக்கை கணக்கிட்டுப்பாருங்கள். எப்படி கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்துப்பார்த்தாலும் ஒரே விடைதான் வரும்.

வாழ்வில் ஒவ்வொரு அடி  மேலே விழும்போதும், நான் சொன்னதை நினைத்துப்பாருங்கள், உங்கள் காலக்கணக்கு நேராகிக்கொண்டிருக்கிறது என்று. பலத்த அடி, தாங்க முடியாது என்று தற்கொலை போன்ற தவறான முடிவிற்கு செல்லக்கூடாது. நீங்கள் மட்டுமே அனுபவித்து தீர்க்க வேண்டிய கணக்கு இது. ஒருவேளை, தவறான முடிவை எடுக்கும் பட்சத்தில், அடுத்த பிறவியில் எங்கு விட்டு சென்றீர்களோ, அங்கிருந்தே அதை அனுபவித்து சரி செய்ய வேண்டி இருக்கும், ஜாக்கிரதை.

இதை நான் நகைச்சுவைக்காக சொல்லவில்லை. அந்த அடி, நீங்கள் அரிதில் பெற்ற செல்வமாக இருக்கலாம், வேலையாக இருக்கலாம் அல்லது பிள்ளைகளாக இருக்கலாம். முக்கியமாக உங்கள் ஆரோக்கியமாக கூட இருக்கலாம்.

இந்த அனுபவங்களையும், யார் நடத்திக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கே சொந்தம் என்று இறைவனுக்கே  அர்ப்பணித்து விடுங்கள்.

மனம் மென்மையாகும்  அனுபவத்தைப்பெறுவீர்கள்.

*** *** ***















Monday, May 6, 2024

கள்ளக்கடல்

கள்ளக்கடல்  


தமிழக மற்றும் கேரள கடற்கரை வாழ் மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை.

திடீரென கடல் அலைகள் சுமார் ஒரு மீட்டரிலிருந்து ஒன்றரை மீட்டர் அளவிற்கு வழக்கத்திற்கு அதிகமாக பொங்கி வரலாம். யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம்.

அலைகள் உயர்வதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாமல் வருவதால் இதற்கு  கள்ளக்கடல் என்று பெயர்.

நம்முடலிலும் எந்தவித அறிவியல் ஆய்வுக்கும் கட்டுப்படாத கள்ளக்கடல் ஒன்று  இருக்கிறது.

திருமூலர் அதனை நமக்கு தெளிவாக விளக்கி சொல்கிறார்.

திருமந்திரம் 

வரையிடை நின்றிழி வான்நீர் அருவி 
உரையில்லை  உள்ளத்தகத்து நின்றூரும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர் 
கரையில்லை எந்தை கழுமணி யாறே.

மலை முகடுகளில் பொழியும் மழை நீர் அருவியாக, ஆறாக மாறுகிறது என்று சொல்லி விடலாம். ஆனால் உள்ளத்துக்குள்ளே நுட்பமாக  ஊறும் நீரைப்பற்றி சொல்லில் விவரிக்க  முடியாது. இறைவன் என்னை கட்டி வைத்திருக்கும் இடத்தில்  ஊறும்  இந்த  தெளிந்த ஆறுக்கு, மற்ற  ஆறுகளைப்போல் நுரை இருக்காது, அழுக்கிருக்காது, கரைகளும் இருக்காது.

*** *** ***

Thursday, May 2, 2024

முடிவில்லா ஆரம்பம்

முடிவில்லா ஆரம்பம்





படைத்தவன் இறைவன் 
கொடுத்தவன் தந்தை 
சுமந்தவள் அன்னை 
யாருடைய   பிள்ளை?
 

ஓம் ஆதியில் பிறந்து திகழ்ந்து கொண்டிருக்கும் பிரபஞ்ச ஆதார  நாதம். 

அ + உ + ம் என்பது ஓம் என்ற நாதத்தின் அடைவெழுத்துகளாகும்.

அகாரம் முதலெழுத்தாக வருவது. அகாரத்தில் எழும் ஓசை முதலில் வருவது. இதுவே ஆதி பகவானின் ஆதார ஒலி.

உ  மற்றும் ம் என்பது அகரத்திற்கு சக்தியளிக்கும் ஒலி. இவை ஆதிபகவானுடன்  இரண்டறக் கலந்து  நிற்கும் சக்தியை குறிப்பது.

முழு நம்பிக்கையுடன் ஓங்கார நாதத்தை கண்களுக்கிடையில் மனத்தால் எண்ணிப்பார்ப்பவரின்  உள்ளம் நிறையும் வண்ணம் மனத்தின்  ஆரம்பமும், முடிவும்  தெரியும்.

திருமந்திரம் 

விளங்கு நிவிர்த்தாதி மேவும் அகராதி 
வளங்கொள் உகார மகாரத்துள் விந்து 
களங்கம்இல் நாதாந்தம் கண்ணின்உள் நண்ணி 
உளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே. 

திருவள்ளுவரும் தன் முதல் குறளில் இதையே வலியுறுத்தி சொல்லுகிறார்.

ஓம் என்னும் நாதத்தின் முதல் எழுத்தான அகரம், உலகில்  ஆதிபகவனுடன் முதலில் தோன்றியதாகும்.

திருக்குறள் 

அகர முதல எழுத் தெல்லாம்  
ஆதிபகவன் முதற்றே உலகு. 

இப்ப சொல்லுங்க. பாடல்கள் தரும் மொழி பெரிதா? அல்லது நாதம் என்னும் இசை பெரிதா?

சினிமா பாடல்கள் இசை அமைத்தவனின்  உரிமை என்றால் பாட்டுக்களை  எழுதியவனின்  உரிமை எங்கே போகும்? 

திரைப்படம் எடுத்தவன் ஒருவன் 
மொழியை பிழிந்தெடுத்தவன் கவிஞன் 
காற்றை சுரம்பிரித்தவன் இசைக்கலைஞன்
குரலால் கட்டிப்போட்டவன்  பாடகன்  
நடிப்பால் மயங்கவைத்தவன் நடிகன் 
யாருக்கு சொந்தமிந்த பாட்டு?

'நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்..' - இது யார் பாட்டு?

எம்ஜியார்  பாட்டு.

எனக்கு தெரிந்ததெல்லாம் எம்ஜியார் பாட்டு, சிவாஜி பாட்டு, ரஜினி பாட்டு இப்படித்தான்.

*** *** ***

பாடலின் வரிகள் நரம்பை முறுக்கேற்றுகிறது. பின்னணிப்பாடகரின் குரல் காதுக்கு தேனாக பாய்கிறது. பாடி நடித்தவரின் அர்ப்பணிப்பு காலங்களை கடந்து நிற்கிறது. இசை அப்படியே உள்ளத்துக்குள் ஊடுருவி செல்கிறது.

வேறென்ன வேண்டும்?



கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...