Wednesday, January 25, 2023

அகரம் தமிழுக்கு சிகரம்

அகரம் தமிழுக்கு சிகரம் 








அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

பொருள்:

 ஆதி பகவான்  அகரம் முதலான எழுத்துக்களை முதலில் உலகில் படைத்தான்.

                                         ----------------------------------------------------------

உன்னலரும் பரசிவன்ற னருளாலே நாத
        முதிக்கு மிகுங் குடிலைதனில் விந்துவரு நாதந் 
தன்னிலதி  னொளிவளருஞ் சதாசிவரா மவரிற் 
        றயங்கவரு மீசர்வித்தை தனையளிப்ப  ரதனான் 
மன்னுவரிவ் வகையைவர் வாய்மையினான் முன்னே 
        வந்திடுமென் றுரைசெய்த விந்துவழா வகையே 
முன்னுதவு சூக்குமாதி யொருநான்கு மென்று 
        மொழிந்திடுவ றருங்கலைகள் முதிர்ந்து ளோரே. 

                                                                                         - சிவப்பிரகாசம் 21

பரமசிவனது  சத்தியின் வியாபாரத்தால் சுத்த மாயையிலே நாதம் தோன்றும். நாதத்தில் விந்து தோன்றும்.

நாதம் என்பது உலகம் பிறக்கும்போது உண்டான  ஓங்கார ஒலி.

வாக்குக்களாலாவது வன்னம் [எழுத்து]. அதாவது ஒலியால் வருவது எழுத்து. அல்லது ஒலியின் வரி வடிவம் எழுத்து.

'ஓம்' என்று எழுதுவது ஓங்கார ஒலியின் வரி வடிவம்.

ஆதியோடு அந்தம் இலாத பராபரம் 
போதம தாகப்  புணரும் பராபரை 
சோதி அதனில் பரந்தோன்றத் தோன்றுமாம் 
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே.
                                                          - திருமந்திரம் 381 

ஆதி இறைவனோடு இரண்டறக்கலந்திருக்கும் பராசக்தியின்  ஜோதியில் நாதம் ஒலிக்கும். இந்த ஓங்கார நாதத்தை மூன்று எழுத்துக்களாக பிரிக்கலாம்.

ஓம் = அ +உ +ம் 

ஓர்எழுத் தாலே உலகெங்கும் தானாகி 
ஈர்எழுத்  தாலே இசைந்துஅங்கு இருவராய் 
'மூ'எழுத் தாலே முளைக்கின்ற சோதியை 
மா எழுத்தாலே மயக்கமே உற்றதே.                                                                                                                                                                                       - திருமந்திரம் 885

முதல் எழுத்து அ.

அகரத்தில் ஆரம்பிக்கிறது மற்ற எழுத்துவகைகள்.

நாத விந்துக லாதீ நமோநம 
வேத மந்த்ரசொ ரூபா நமோநம 
ஞான பண்டித ஸாமீ நமோநம.. வெகுகோடி                                                                                                                                                                           -திருப்புகழ் 170 

நாதமும், விந்துவும் ஆதியில் தோன்றியவை.

இப்பொழுது, திருக்குறளின் பொருளை மீண்டும் படித்துப்பார்ப்போம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

பொருள்:

ஆதி பகவான்  அகரம் முதலான எழுத்துக்களை முதலில் உலகில்  படைத்தான்.

***  ***  ***

திருக்குறள்  முதல் பாடலிலே ஆன்மீகத்தின் உச்சம் தொட்டிருப்பது ஆச்சர்யம் என்றால்,

கடவுளின் எட்டு குணங்களை முதல் பாடலிலே பாடி உச்சம் தொட்டது திருமந்திரம்.

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந்தான்  உணர்ந் தெட்டே.
                                                                                              - திருமந்திரம் 1

***  ***  ***

நாம் இதுவரை முதல் திருக்குறளின் பொருளை எப்படி படித்தோம் என்று பார்ப்போம்:

மு.வ விளக்கம்: 

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. 

சாலமன் பாப்பையா விளக்கம்: 

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

கலைஞர் விளக்கம்: 

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

ஜி. யு. போப் விளக்கம்: 

A, as its first of letters, every speech maintains;
The 'Primal Deity' is First through all the world's domains

ஒவ்வொரு மொழியும் 'அ'-வை முதல் எழுத்தாக கொண்டுள்ளது; உலகம் ஆதி பகவானை முதன்மை தெய்வமாக கொண்டுள்ளது. 

*** *** ***

சமீபத்திய செய்தி:

தமிழக ஆளுநர்,  'திருக்குறளுக்கு பொருளுரை எழுதிய ஜி. யு. போப், திருக்குறளில் இருந்த ஆன்மீக அறிவை தவிர்த்து விட்டார்'- என்று கருத்து தெரிவித்தார்.

இந்த கருத்து உண்மையா என்று கற்றறிந்தோர் மட்டுமே சொல்ல இயலும். அரசியல்வாதிகளின் அறிவு அரசியலுக்கு மட்டுமே, திருக்குறளுக்கு உதவாது.

மீண்டும் அறிவு சார்ந்த பெரியோர் முனைந்தால் திருக்குறளின் பொருளை ஆன்மீக சிந்தனையோடு உலகிற்கு வழங்கலாம்.

*** *** ***







Tuesday, January 24, 2023

மஹா சமாதி பயிற்சி அனுபவம்

மஹா சமாதி பயிற்சி அனுபவம்

வீடுவரை உறவு..

என் பெயர்   எனக்கு மறந்து விட்டது..

இப்பொழுது என்னை பிணம் என்கிறார்கள்.

அத்தான் என்றவளும், அப்பா என்றவனும், சார் என்றவர்களும் என் பெயரை மாற்றி விட்டார்கள். பிணம் என்பது மட்டும் பொதுப்பெயராகிவிட்டது. யார் இறந்தாலும் ஒரே பெயர் பிணம்தான்.

ஊரே கூடி நின்று அழுகிறார்கள். 

இன்னும் கொஞ்ச நேரம்  நான் இங்கே தங்கி கொள்ளலாம்.  நான் ஆசை ஆசையாக பார்த்து பார்த்து கட்டிய வீட்டில், எவ்வளவு கெஞ்சினாலும் தங்க முடியாது. நேற்றுவரை என் தயவில் இருந்த  யாரும் எனக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள்.  சுடுகாட்டில் என்னை சாம்பலாக்கி விடுவார்கள். எங்கே மீண்டும் உயிர்த்தெழுந்து வந்துவிடுவேனோ என்று நீரிலும்  கரைத்து விடுவார்கள்.

அவர்களும் நீரில் தலை முழுகி என் நினைப்பை மறந்துவிடுவார்கள்.

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்  
பேரினை நீக்கிப் பிணம்என்று  பேரிட்டுச் 
சூறைஅம் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு 
நீரினில் மூழ்கி நினைப்பு அழிந்தார்களே.
                                                                        - திருமந்திரம் 145 

யார் சிரித்தால் என்ன?

நான் ஏன், எதற்கும் கவலைப்பட வேண்டும். 

இனி என் உடலை காகம் சாப்பிட்டால் என்ன? பிணத்தை கண்டு பழி சொல் சொன்னால் என்ன? என் வாயில் பால் ஊற்றினால் என்ன? என் மரணத்தை அறிந்தவர்கள் புகழ் வார்த்தைகள் சொன்னால்  எனக்கென்ன? ஆகப்போவது ஒன்றுமில்லை, உடம்புக்குள் இருந்து அது செயல்பட தேவையான அருள் வழங்கிய ஜீவன், சிவன் என் உடலை  விட்டு நீங்கிய பின்னால்.


காக்கை கவரில்என் கண்டார் பழிக்கில்என்
பாற்றுளிப் பெய்யில்என்  பல்லோர் பழிச்சில்என் 
தோற்பையுள் நின்று தொழில்அறச் செய்தூட்டும் 
கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே.
                                                                        - திருமந்திரம் 167

நேற்று எனக்கு மாலையும், மரியாதையும். எனக்கு வெண்கொற்றக்குடை இருந்தது. குதிரையும் எதிரியை வெல்லும் வாளும் என்னுடன் இருந்தது. என்னுடைய படைகள் என்னை புடை சூழ இருந்த போதே, என்னுயிர் என்னை விட்டு பிரிந்து விட்டது. என்னுடலில் அடைந்து  இருந்த உயிர் ஊர்வலம் சென்றுவிட்டது.

யாராலும் என்னைக்காக்க முடியவில்லை.

இன்றைக்கு எனக்கு தேர்  இல்லை பாடை மட்டும்தான்.

குடையும் குதிரையும் கொற்றவாளும் கொண்டு 
இடையும் அக்காலம் இருந்து நடுவே 
புடையு மனிதனார் போகும் அப்போதே 
அடையும் இடம்வலம் ஆருயிர் ஆமே.
                                                                   - திருமந்திரம் 166

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்.. 

சமாதி ஆகிவிட்ட  என்னால் இனி இறை அடி சேர முடியாது. சுத்த வெளியில் அவனுடன் சங்கமிக்கும் வழி இல்லை. என்னுடலில் ஆறு ஆதாரத்தில் நின்றியங்கிய ஐம்புலன்களின் ஆதிக்கம் மறைந்து விட்டது. மீண்டும் என்னுடலில் இவை சேர முடியாது.  என்னுடலில் இறைக்கனல், அகக்கனல் மற்றும் புறக்கனல் சேராமல்  தடுப்பணை போட்டு விட்டது.

காடுபுக்கார் இனிக் காணார் கடுவெளி 
கூடுபுக்கு ஆனவை ஐந்து குதிரையும் 
மூடுபுக்கு ஆனது ஆறுஉள ஒட்டகம் 
மூடுபுகா விடின் மூவணை ஆமே.
                                              - திருமந்திரம் 2893

யோக நிலைகளில் இறுதியானது சமாதி. 

இனி, சமாதி நிலை தேவை இல்லை இறையுடன் இணைந்து விடுவீர்கள்.

இறையுடன் இணைந்து இறை நிலை எய்தி விட்டால் அறுபத்து நான்கு கலைகளும் கைவந்த கலை ஆகி விடும்.


சமாதி செய்வார்க்குத் தகும்பல யோகம் 
சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில் 
சமாதிதான் இல்லை தான்அவன் ஆகில் 
சமாதியில் எட்டுஎட்டுச் சித்தியும் எய்துமே.
                                                          - திருமந்திரம் 631

என் மரணத்தை நானே அனுபவித்தேன். 

மரணம் என்னும் பேரிழப்பை அனுபவித்தேன். என்னை நான் இழந்தேன்.

அட்டாங்க யோகத்தை வகைப்படுத்திய திருமூலர் சமாதியை எட்டாவது அங்கமாக வைத்தார். முதல் அங்கமே முடியாமல் தவிக்கும் சாதாரண வாழ்க்கை வாழும் என்னைப்போன்ற சாமானியர்களுக்கு இந்த பயிற்சி  மறுபிறப்பு.

உலகமே கொண்டாடும் ஏசுவின் பிறந்த நாளான இன்று எனக்கு மறு பிறப்பு.

புத்தம் புதிய அனுபவம்.

இந்த அற்புதமான அனுபவத்தை வழங்கிய குரு ராஜசேகர் அய்யாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அதிக விளம்பரம் இல்லாத, தேவை இல்லை.. தேன் கூட்டிற்கு தேனீக்கள் தானாக வந்து சேரும் உங்கள் அமிர்தஹாரா டிரஸ்ட் அமைப்பிற்கு.

வாழ்க உங்கள் சமுதாய தொண்டு. 

வளர்க உங்கள் புகழ் வையகமெங்கும்.

நன்றி.. வணக்கம்.

*** *** ***

       


 













Wednesday, January 4, 2023

காசேதான் கடவுளப்பா

காசேதான் கடவுளப்பா 


வரவுக்குமேலே செலவுகள் செய்தால்
அவனும் குருடனும் ஒன்றாகும் 


மனிதனுக்கு வாழ்க்கை ஏன் போராட்டமாகவே அமைந்துவிட்டது?

வாழ்வின் ஒவ்வொரு அங்கமும் எதனால் தீர்மானிக்கப்படுகிறது?

பணம். பணம்தான்  எதையும் தீர்மானிக்கிறது.

வேலைக்கு சென்றால் கிடைக்கும் வருமானம் ஒரு எல்லைக்குள் நின்று விடுகிறது. பற்றாக்குறை என்பது பரமபத விளையாட்டாகிவிட்டது.

சம்பளம் வாங்கி பரமபத ஏணியில் ஏறினால், அடுத்த கட்டமே சீறும் பாம்பின் வாயில் சிக்கி ஏறிய இடத்திலிருந்து பின்னோக்கி நகர வேண்டியதாக இருக்கிறது.

ஏதாவது, ஒரு தொழில் செய்து வருமானம் ஈட்டலாம் என்றால், போட்ட முதலை எடுப்பதே பெரும்பாடாகிவிடுகிறது. 

ஆன முதலில் அதிகம் செலவானால் 
மானம் அழிந்து மதிகேட்டுப் - போனதிசை 
எல்லார்க்கும்  கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் 
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.
                                                                       - நல்வழி 25

போட்ட முதல் போய்விட்டால், மீண்டும் தொழில் செய்யும் ஆர்வமும் கருகிவிடும். மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இந்த நியதி உடலுக்கும் பொருந்தும்.

உடலின் முதல் உயிர் சத்து. அதிகம் செலவழித்தால் எல்லாம் போச்சு. முதலில் ஆரோக்கியம் போகும். இரண்டாவது வாழ்வில் பிடிப்பு நீங்கி வெறுப்பு உண்டாகும்.

காலம் கடந்தவன் காண் விந்து செற்றவன் 
காலம் கடந்தழிந்தான் விந்து செற்றவன் 
காலங்களில் விந்து செற்றுற்ற காரிகை 
காலின் கண் வந்த கலப்பறியாரே.
                                                                - திருமந்திரம் 1954 

விந்துவின் சக்தியை வெல்ல முடியாமல் போனால், அழிவு நிச்சயம். வெல்ல முடிந்தால் காலத்தையும் வெல்லலாம். சில சமயங்களில் விந்து வென்று பெண்ணுடல் கலக்கும் காலத்தில், அவளிடம் இருந்து உயிருடன் கலக்கும் வாயுவை அறியமாட்டார்கள், என்கிறார் திருமூலர்.

நாம் பல இடங்களில் படித்தும், கேட்டும் இருக்கிறோம்.   அரசர்கள் இளம் பெண்களை அந்தப்புரத்தில் வைத்து, அவர்கள் வழியாக தாங்கள் இழந்த உயிர் சக்தியை மீண்டும் பெற பல வகை யோகங்கள் செய்திருக்கிறார்கள் என்று. பின்னர் அவர்களுடன் கூடி மேலும் மேலும் உயிர் சக்தியை இழந்திருக்கிறார்கள்.

ஒவ்வொருமுறை உறவின்போதும், பெண்ணின் சுரோணிதத்தில் உருவாகும்  வாயுவானது ஆணின் தனஞ்சய வாயுவுடன் சேர்கிறது. இளம்பெண்களின் வாயு வலிமையையும், பேரிளம் பெண்களின் வாயு இன்பத்தையும், முதிர் பெண்களின் வாயு நோயையும் ஆண்களுக்கு தர வல்லது.  

சரி, விந்து எப்படி வெற்றி கொள்கிறது என்று பார்ப்போம்.

மனித உடலின் இயக்கம் முப்பத்தியாறு தத்துவங்களின் அடிப்படையில் இயங்குகிறது. அதில் சுத்த தத்துவம் எனப்படும்  சிவ தத்துவம் ஐந்தைப்பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

விந்து சக்தி, நாத சக்தி.

இதில் நாத சக்தி, ஞான சக்தியாக சிவமாக விளங்குகிறது. விந்து சக்தி பராசக்தியாக, கிரியா சக்தியாக செயல்படுகிறது.

மூன்றாவதான இச்சா சக்தி மூன்று நிலைத்தன்மை பெறுகிறது.

ஒன்று, ஞான சக்தி மிகுந்து, கிரியா சக்தி குறைந்த சுத்த வித்தை.
இரண்டாவது, ஞான சக்தி குறைந்து, கிரியா சக்தி மிகுந்த ஈசுவரம்.
மூன்றாவது, இரண்டு சக்திகளும் சமமாக இயங்கும் சதாசிவம். 

சுத்த வித்தை அறிந்தவன் ஞானி. ஈசுவரம் மிகுந்தவன் போகி. சதாசிவம் கற்றவன் யோகி.

நாமெல்லாம் ஈசுவர நிலையிலிருந்து, அதாவது போக வாழ்விலிருந்து, யோக வாழ்விற்கும், ஞான வாழ்விற்கும் செல்ல முயன்று கொண்டிருக்கிறோம்.

முயற்சி வெற்றி அடைய  என்ன செய்யலாம்?

பார்க்கின்ற மாதரை பாராது அகன்றுபோய்  
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்  
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே 
சேர்க்கின்ற யோகி சிவ யோகிதானே.
                                                                - திருமந்திரம் 1937


நீ பார்க்கின்ற அல்லது உன்னைப் பார்க்கின்ற பெண்ணை பாராமல் செல்ல வேண்டும். பெண்ணை பார்த்ததால் உள்ளத்தில் ஏற்பட்ட ஆசை என்னும் கிரியா சக்தியை நெற்றி நடுவில் வைத்து சேர்த்து எரித்து விடவேண்டும்.

எப்படி எரிப்பது என்ற கேள்வி வருகிறதல்லவா?

எளிமையாக சொல்கிறேன். பிராணாயாமம் செய்யுங்கள் போதும். அதைத்தான் திருமூலரும் சொல்லி இருக்கிறார்.

உங்களுக்கு ஏற்பட்ட ஆசை உணர்வை விழிப்புணர்வோடு மூலாதாரத்திற்கு கொண்டு செல்லுங்கள். 

மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்.

சூரிய நாடியில், வலது நாசி வழியாக  செல்லும் காற்று, கண்ணாசையை எரித்து, நெற்றி நடுவிற்கு எடுத்து சென்று விடும். இதை செய்வது நாடு நாடியில் நின்றியங்கும் தனஞ்செய வாயு.


*** *** ***








 


கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...