தமிழின் பெருமை
தமிழின்பால் பற்று கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் அன்பான வணக்கம்.
'என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே'
மண்ணுலகில் தான் படைத்த மனிதர்களுக்கு இறை நிலையை, இறையின் தன்மையை உணர்த்த எண்ணிய இறைவன் தேர்ந்தெடுத்த மொழி தமிழ்.
நன்றாக தவம் செய்யுங்கள். நல்ல தவம் செய்தவருக்கு மறுபிறவி கிடையாது என்று அடித்து சொன்ன திருமூலருக்கு அச்சம்,
'உங்களுக்கு எப்படி இப்பிறவி கிடைத்தது முற்பிறவியில் தவம் செய்யவில்லையா?' - என்று யாராவது கேட்டு விட்டால்?
'இல்லையப்பா. நான் நன்றாக தவம் செய்துதான் இறைவனடி சேர்ந்தேன். ஆனால் இறைவன், மூலன் உடல் சேர்ந்து, மனித வாழ்வின் பொருளறிய தமிழில் என்னை பாடு என்று மறுபடியும் என்னை படைத்துவிட்டான்.' - என்கிறார் திருமூலர்.
பின்னை நின்றுஎன்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ்ச் செய்யுமாறே.
இறை மொழி தமிழ் மொழி.
அடுத்ததாக வரும் நம் உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவர் தன் முதல் பாடலிலேயே தமிழின் தொன்மையை நிறுவுகிறார்.
இந்த உலகம், அண்டம், பேரண்டம் அனைத்துமே ஆதி பகவனை முதன்மையாக கொண்டு இயங்குகிறது, தமிழில் அனைத்து எழுத்துக்களுக்கும் முதன்மையாக அகரம் விளங்குவதைப்போல்.
அகர முதல எழுத் தெல்லாம்
ஆதிபகவன் முதற்றே உலகு.
இங்கே தமிழ் எழுத்தையும் ஆதி இறையையும் இணைப்பதோடல்லாமல், இறைவனின் மொழியும் தமிழ்தான் என்றாகிறது அல்லவா?
அடுத்த கேள்வி.. அகரத்தில் ஆரம்பித்து தமிழில் மொத்த எழுத்துக்கள் எவ்வளவு?
ஒவ்வொருவரும் ஒரு எண்ணிக்கை சொல்வோம். ஆனால், மொத்தம் முப்பது எழுத்துக்கள் என்று சொல்கிறது, தமிழுக்கு இலக்கண வரம்பிட்ட தொல்காப்பியம்.
எழுத்து எனப் படுப
அகரம் முதல் னகர இறுவாய்
முப்பஃ து என்ப
சார்ந்து வரல் மரபின் மூன்றலங் கடையே.
அகரம் முதலான உயிரெழுத்துக்கள் 12.
னகரம் இறுதியான மெய்யெழுத்துக்கள் 18.
மொத்தம் 30.
மற்ற எழுத்துக்கள் எல்லாம் என்ன என்ற கேள்வி வருகிறதல்லவா? அவைகளை மூன்று சார்பெழுத்துக்கள் என்கிறது எழுத்ததிகாரம்.
அவைதாம்
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன
இந்த முப்பது எழுத்துக்களை கொண்ட தமிழ்தான் தமிழினத்தின் தன்மான அடையாளம். உயிரும் மெய்யும் சேர்ந்து வரும் உயிர்மெய் எழுத்துக்கள், வார்த்தைகளின் ஒலிக்காக, உச்சரிப்புக்காக வருவதால் அவை கணக்கில் கொள்ளப்படவில்லை.
ஒலியின் வரி வடிவம் எழுத்து என்பதை சரியாக நிறுவி உள்ளது தமிழ். இன்று உலகளாவிய அளவில் தொடர்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தில் ஒலியை நிறுவ எழுத்துக்களின் கூட்டினை கொண்டே உச்சரிப்பு மற்றும் பொருள் கொள்ள வேண்டி உள்ளது.
உதாரணத்திற்கு குரு என்ற வார்த்தையை எடுத்துக்கொண்டால், தமிழில் இரண்டே எழுத்தில் எழுதி விடலாம். ஆனால் குரு என்ற ஒலியை எழுத ஆங்கிலத்தில் நான்கு எழுத்துக்கள் தேவைப்படுகிறது.
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு
முன்தோன்றிய மூத்த குடி.
இங்கே தமிழின் தொன்மையை விட அருமையான செய்தி ஒன்றிருக்கிறது. வாளோடு என்ற சொல்தான் அது. இதில் என்ன வியப்பு இருக்கிறது, தமிழனின் வீரத்தை குறிக்கத்தான் என்கிறீர்களா?
ஆமாம்.. ஆனால் அதற்கும் கொஞ்சம் மேலே..
வாள் எதனால் செய்யப்படுகிறது. இரும்பினால் தானே? இரும்பு என்ற உலோகத்தை கற்காலத்திலேயே அறிந்திருந்தான் தமிழன். இரும்பை உபயோகிக்கவும் தெரிந்திருந்தான் என்பதுவும் பெருமைதானே.
இலக்கணத்தை தாண்டி தமிழ் இலக்கிய உலகம் அளப்பரியது.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாரதியார் உலகிற்கு பறை சாற்றியபோதும்,
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று பாரதிதாசன் உருகியபோதும்,
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலக அரங்கில் மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் எடுத்துரைத்த போதும்,
தமிழ் சரியாக உச்சரிக்க முடியாவிட்டாலும், விடாமல் குறளை மனப்பாடம் செய்து உரையில் சேர்க்கும் பாரதப் பிரதமரும்,
தொடர்ந்து தமிழுக்கு மணிமகுடம் சூட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
மகிழ்ச்சியோ, துக்கமோ பல நூறு பக்கங்களில் சொல்லி விளங்க வைக்க வேண்டிய ஆய்வினை ஒன்றே முக்கால் அடியில் வழங்க, நீதி அரசர் ஆறுமுக சாமி தன் ஆய்வில் இந்த குறளை உபயோகிக்கிறார்.
காலாழ் களரில் நரியிடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு
அரசியல் அரங்கில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரண ஆய்வறிக்கையில், மேற்கோள் காட்டப்பட்ட திருக்குறள் இது.
போரில் கண்ணுக்கு நேராக வரும் வேலினை தடுத்து எதிர்த்து நிற்கும் பலம் கொண்ட யானை, மாறுகால் எடுத்து வைக்க முடியாத புதை சேற்றில் மாட்டிக்கொண்டால், சாதாரண நரியால் வீழ்த்தப்பட்டுவிடும்.
தமிழின் பெருமையை வெவ்வேறு கோணங்களில் சொல்லிய அனைத்து போட்டியாளர்களையும் வாழ்த்தி விடை பெறுகிறேன்.
நன்றி, வணக்கம்.