Saturday, June 27, 2020

எமதர்பார்

எமதர்பார் 



ஒரு தவறு செய்தால்
அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும்
விட மாட்டேன்


காணொளி:
https://www.youtube.com/watch?v=Mu9oQL3d31A

வார்டு கவுன்சிலரைக்கண்டால் பயம். அவன் கொடி கட்டி செல்லும் காரைக் கண்டால் பயம். அடைமொழி இல்லாமல் பேரை சொல்லவும்  பயம். பேரோடு 'சார்' சொல்லாவிட்டால் பயம். புதிதாக சேர்ந்திருக்கும்  'ஜி' சொல்லாமல் விட்டாலும்  பயம். அரசு அதிகாரிகளை கண்டால் பயம். இவர்களை மொய்க்கும் காவலரைக் கண்டால் பயம். அவர்கள் கையில் உள்ள லத்தியை கண்டால் அதிக  பயம். காவல் நிலையம் என்னும் கொலைக்களம் சென்றால்,  எமனையே நேரில்  கண்ட  பயம்.

இதுதான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் சாதாரண குடி மக்களின் நிலை. அரசியலமைப்பு சட்டத்தில், படிக்காதவன் வயது வரம்பின்றி, அரசாளலாம், நூற்றி முப்பது கோடி மக்களின்   நலன் சார்ந்த முடிவை எடுக்கலாம்.

உண்மை அறிவு என்று சொல்லக்கூடிய நுண்ணறிவும், நுண்ணிய நூல் பல கற்று பெறக்கூடிய அறிவும், அனுபவத்தால் பெற்ற அறிவும், நல்வழி காட்டி நின்ற குருவின் வழி அறிவும், உலக நிகழ்வு அறிவும் கொண்ட தலைவன் ஒருவனே நம்மை காக்க முடியும்.

'கம்ப ராமாயணத்தை வழங்கிய சேக்கிழார்', 'யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே'- போன்ற அற்புத அறிவு  வாய்க்கப்பெற்றவர்களை தலைவர்களாக பெற என்ன தவம் செய்தாளோ தமிழன்னை!

கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனின் காலன்  மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான்  கொல்என்பான்
நல்லாரைக்காண காலன் நணுகநில் லானே.
                                                                             - திருமந்திரம் 238

படிப்பறிவற்ற மக்களாட்சி செய்யும் அரசியல்வாதியும், அவன் ஆணைக்கு அடிபணிந்து பணிபுரியும் காவலர்களும், மக்களின் உயிரை தன்  பாசக்கயிற்றால் எடுக்கும் எமனுக்கு ஒப்பானவர்கள். ஆனாலும், படிப்பறிவற்ற அரசியல்வாதியைவிட எமன் மிகவும் நல்லவன். ஏனென்றால், படிப்பறிவற்ற அரசியல்வாதி ஆராய்ந்து மக்களுக்கு நல்லது செய்ய மாட்டான்,  மக்களின் உண்மை நிலை ஆராயாமல் கொன்று குவிக்க சொல்வான். ஆனால், எமனோ நல்லவர்களை கண்டமட்டில், அவர்தம்  அருகில்கூட  சென்று நிற்க மாட்டான்.

Saturday, June 6, 2020

பரமரகசியம்

பரமரகசியம் 


ரகசியம் பரமரகசியம் 
இது நமக்குள் 
இருப்பது அவசியம்


 



'மண்ணில் உயிர்ப்பெடுத்த மறுகணமே அன்னை மடி அறியும் பரம ரகசியம் யார் சொல்லி தந்தார் கன்றினுக்கு? மனிதனாய் பிறந்ததனால், பிறவியின்  திசையறியாமல் தத்தளிக்கும் எனக்கு அருள் செய்வாய்' -  என்று வேண்டி நின்ற எனக்கு, கீழ்க்கண்ட அத்தியாயம் படிக்க உத்திரவு கிடைத்தது.

'முந்தைய, ஜன்மங்களிலுள்ள  நல்வினைகளால் நாம் இவ்வுடம்பைப் பெற்று இருக்கிறோம். பக்தியையும், விடுதலையையும் இவ்வுதவியை கொண்டு பெறுவது தகுதியுடையதாகும். எனவே, எப்போதும் நாம் சோம்பலின்றி இருக்க வேண்டும். நமது குறிக்கோளையும் நோக்கத்தையும் பெறுவதில் நாம் எப்போதும் விழிப்பாய்  இருக்க வேண்டும்.'

                                                                             -  ஸ்ரீ சாய் சத் சரித்திரம் 
 
இதே கேள்வி எனக்கு மட்டுமல்ல, மண்ணில் மனிதனாய் பிறந்து, தன்னுணர்வு எய்தப்பெற்ற பேரருளாளர்கள் மனதிலும் தோன்றியதில் ஆச்சர்யம் கொண்டேன். 

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பெண்டிர்  எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
என்செய்வேன்கச்சி ஏகம்ப நாதனே.

                                                                       - பட்டினத்தார் பாடல் 83

இதோ, திருமூலர் மனிதப்பிறவியின்,  பரம ரகசியத்தின் முடிச்சை அவிழ்க்கும் வழியை நமக்கு காட்டுகிறார்.

நான்பெற்ற  இன்பம் பெறுக இவ்வையகம் 
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் 
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் 
தான் பற்றப்பற்றத் தலைப்படும் தானே.

                                                                       - திருமந்திரம் 85

இலை மறை, காய் மறையாக மறைத்து வைக்கப்பட்டுள்ள விண்ணுலகம்  செல்லும் வழி நான் அறிந்து கொண்டு, அடையும் இன்பத்தை, உங்களுக்கும் சொல்கிறேன் கேளுங்கள் மனிதர்களே!
உடலின் உணர்வுகள் விழிப்பு நிலையில் இருக்க, 'ஓம் நமக்ஷிவய' எனும் மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வாருங்கள். தானாகவே உங்கள் பிறப்பின் பரம ரகசியம் அறியத்தலைப்படுவீர்கள்.   




கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...