Tuesday, June 4, 2019

காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்

காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம் 

காத்து பட்டாலே
கரையாதோ கற்பூரம்
கரையுது எம்மனசு
உன்னாலே

பொருள்:

'எந்தாலி அறுக்கிறதுக்குனே வருதுங்க'- வார்த்தைகள் நேராக மனதை துளைக்க, கண்டக்டரிடம் ஒன்றும் சொல்லாமல், பஸ் சீட்டில் ஓரமாக அமர்ந்தாள் சுப்பாத்தா.

வடவள்ளியிலிருந்து மருதமலை செல்லும் அதிகாலை பேருந்து. மருதமலை ஏறும்  படிக்கட்டுகளில் நீர் மோர், மாங்காய், வெள்ளரிக்காய் வியாபாரம் சுப்பாத்தாவிற்கு. வழக்கமான இடத்தில்  கடையை ஆரம்பிக்க இதுதான் சரியான நேரம்.

'அவந்தான் என்ன செய்வான். மொத பஸ்ல அஞ்சு ரூவா டிக்கிட்டுக்கு நூறு ரூவா குடுத்தா?'- ஆனா 'தாலி அறுக்கிறது' என்ற வார்த்தை வெள்ளை சேலை கட்டி இருந்தவளை, வெகுவாக பாதித்தது.

கணவனை இழந்த பெண்கள், பூவையும், பொட்டையும் இழப்பதுடன் வண்ண நிற சேலை கட்டுவதும் மறுக்கப்படுகிற சமுதாயம் சுப்பாத்தாவினுடையது.

மூன்று குழந்தைகளை, கொடுத்துவிட்டு அல்ப ஆயுசில், தம்பியண்ணன்  போய் சேர்ந்ததில் இருந்து வெள்ளை சேலைதான்.

*** ***

'டேய், தம்பியண்ண நம்ம சுப்பு கழுத்துல தாலி கட்டிட்டாண்ட..'- ஊரெல்லாம், தண்ணி புடிக்க போன சுப்புலட்சுமி கழுத்துல மஞ்சக்கயிறு கட்டினது தான் பேச்சாக இருந்தது.

அவன் ஒரு ரெக்கவெட்டு. பொயிலையும், வெத்தலையும் போட்ட வாயில் மஜித் பீடி. பத்தாதற்கு,  பட்டணம் மூக்குப்பொடி. பட்டசாராயமும், மட்ட ஊறுகாயும் தான் தன் உலகம் என்றிருந்தவனுக்கு, சுப்பு மேல இயல்பாகவே ஆசை இருந்தது, தாய்  மாமன் என்ற வகையில்.

'அட, இன்னிக்கு நம்ம சுப்புவ  பொண்ணு பாக்க வர்றாங்க. வீட்டோட இரு'ன்னு அவன் அக்கா  சொன்னதும் ரோஷம் தலைக்கேறி, புல்  மப்புல வந்து தாலிய கட்டிட்டு, மண்ணில் உருண்டு விட்டான்.

ஆனது ஆயிருச்சு. சொந்த மாமன்தானே, ஊரும் ஒதுங்கி, அவள் வாழட்டும் என்று உறங்கிய நேரத்தில், நெஞ்சு முட்ட துக்கத்துடன், குறட்டை விட்டு தூங்கும் மாமனையே பார்த்து காற்று படாமலே, கற்பூரமாய்  கரைந்து கொண்டிருந்தாள் சுப்புலட்சுமி.

என்ன நடக்குதுன்னு என்று விளங்குமுன்பே, தாலி கட்டிய தன் கடமை முடிந்து விட்ட கர்வத்தில் தூங்கிவிட்டான்.

ஒவ்வொரு முறையும் மலரும் பெண்மை, இருபத்தியொரு இதழ்கள் விரிய மலர்கிறது. நாளொரு இதழாக மூடி, இருபத்தியொரு நாட்களில் மூடி, மீண்டும் மலர தயாராகும் பெண்மை, இன்று கேட்பாரற்று கிடக்கும் வேரில் பழுத்த பலாவாக. 

ஆனால், பழி என்னவோ பெண்மைக்குத்தான்.

கைப்பிடிநாயகன் தூங்கையிலேயவன் கையையெடுத்து
அப்புறந்தன்னில் அசையாமல் முன் வைத்தயல் வளவில்
ஒப்புடன் சென்று துயினீத்துப் பின்வந் துறங்குவளை
எப்படி நானம்புவேன் இறைவாகச்சி யேகம்பனே.
                                                                                                              - பட்டினத்தார் 

அயல் வளவு செல்லாமலே, கொஞ்சம் தெளிவாக இருந்த நாட்களில் கணவனுடன் சேர்ந்தே, மூன்று குழந்தைகளுக்கு தாயாகி விட்டாள்.

***  ***
மஞ்சள் நீராட்டு விழாவில், பெற்றோர்கள் கொண்ட அளவிலா சந்தோசம், ஊரெல்லாம் அழைத்து கொண்டாடிய விதத்தில் தெரிந்தது. அதுவரை, 'மாமா, மாமா' என்று  அவன் பின்னால்  ஓடிக்கொண்டிருந்த சுப்பு, அவனைப் பார்த்ததும் தலை குனிந்தது, வெட்கத்தினால் அல்ல, சொந்த அண்ணனை பார்ப்பது போலத்தான். ஆனால், தம்பியண்ணனுக்கு தலை கால் புரியவில்லை.

*** ***

'தாய் மாமன, கூப்பிடுங்கப்பா. பாப்பாவை மடியில் வெக்கட்டும்'- சுப்பு லட்சுமிக்கு மொட்டை அடித்து, காது குத்தும் விழாவில், தம்பியண்ணனை  அழைத்தார்கள்.

*** ***

கோயிலுக்கு செல்லும்போது 'இந்த தொட்டில் உனக்கு கட்டினது'- அம்மா காட்டிய போது, 'அப்ப நான் இந்த மரத்தில் இருந்து  இறங்கி வந்திருப்பேன்' என்று நினைத்துக்கொள்வாள் குட்டி சுப்பு.

*** ***

'ஆத்தா.. மருதமல வந்துருச்சு, எறங்காத்தா'- சில்லறையை கையில் வைத்துக்கொண்டு எழுப்பிய கண்டக்டர் கைகளில் சரிந்தது சுப்பாத்தாவின் தலை.

*** ***
மனித உடலின் நிலையற்ற தன்மையை விளக்கும் பாடல் இது. 

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரோடு மந்தணங்  கொண்டார் 
இடப்பக்க  மேஇறை நொந்தது  என்றார் 
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே. 

                                                                                       - திருமந்திரம்  

வீட்டில் நன்கு சமைத்து வைத்திருந்தார்கள். நன்றாக உண்டுவிட்டு, மனைவியிடம் உறவு கொண்டார். 'நெஞ்சு வலிக்குது' என்று படுத்தவன் அப்படியே உயிரை விட்டான்.

தம்பியண்ணனும், சுப்பாத்தா மட்டும் விதி விலக்கா என்ன?








No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...