Tuesday, September 30, 2025

பயணம் முடிந்துவிடும்

பயணம் முடிந்துவிடும் 

NEWS: 

Accenture lays off more than 11,000 employees: CEO Julie Sweet says we are "exiting" employees on a compressed timeline, people where reskilling, based on our experience, is not a viable path for the skill we need.

மற்றவர்கள் உங்களை மாற்றுவது சாத்தியமல்ல. நீங்களாக, மாறுவதை தெரிந்து, மாறிக்கொள்ளுங்கள்.

புதிய பயணத்தை தொடங்குங்கள்.

திருமந்திரம் - 177

கிழக்குஎழுந் தோடிய ஞாயிறு மேற்கே 
விழக்கண்டும் தேறார் விழிஇலா மாந்தர் 
குழக்கன்று மூத்து எருதாய்ச் சிலநாளில் 
விழக்கண்டும் தேறார் வியன்உல கோரே.

காலையில் கிழக்கே உதிக்கும் கதிரவன் மாலையில் மேற்கே மறைவதை தினமும் காண்கிறீர்கள். மாற்றத்தை கண்கூடாக பார்த்தும் பாராமல் இருக்கிறீர்கள். எருதின் கன்று வளர்ந்து பருவமடைந்து, வாழ்நாள் முடிந்து நம் கண் முன்னரே மறைவதை பார்த்தும் மாற்றத்தின் தன்மையை உணராமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.

எந்தவொரு பயணமும் மாறி மாறி ஒரு நாள் முடிந்துவிடும் என்பதை  உணர்ந்து கொள்ளுங்கள். வாழும் நாட்களை விழிப்புணர்வோடு வாழுங்கள்.






Saturday, September 27, 2025

காமதேனு

காமதேனு 


திருமந்திரம் - 2015

கற்ற பசுக்கள் கதறித் திரியினும் 
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் 
முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போது 
மற்றைப் பசுக்கள் வறள்  பசுதானே.

தமிழகம் ஏன் ஏனைய மாநிலங்களில் இருந்தோ, மற்ற நாடுகளில் இருந்தோ தனித்து  தெரிகிறது? இறைத்தலங்கள் நிறைந்து காணப்படுகிறது. நாளுக்கு நாள் இறை உணர்வாளர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். 

இங்குதானே, இறை  மறுப்பாளர்களும், அவர்களின் போதனைகளும் நிறைந்து வழிகிறது. இவர்களின் போக்கும், செயல்களும் தாங்கள் மிக்க அறிவுடையவர்கள் மற்றவர்கள் இழி பிறவிகள் என்னும் அளவிற்கு தங்களை முன்னிலைப்படுத்துகிறார்கள்.

'கடவுள் இல்லை ' - என்றால் பகுத்தறிவாளன். உண்டு என்றால் சுயமாக சிந்திக்கும் திறனற்ற பழமைவாதி. 

இந்த பகுத்தறிவாளர்கள்தான் தான்  கற்ற பசுக்கள். கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசும் தங்கள் பங்கிற்கு இறை மறுப்பை சிரமேற்கொண்டிருப்பதும் தமிழகத்தில்தான். மக்களின் தேர்தல் வாக்குகளுக்காகவும், கோயில்களின் சொத்துகளுக்காகவும், தினம் தினம் உண்டியலில் சேரும் செல்வத்திற்காகவும், இவர்கள் செய்யும் குட முழுக்குகளும், விழாக்களும் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் கொற்ற பசுக்கள். நெற்றியில் அதிகாரம் என்னும் குறியை கட்டி  மேய்பவர்கள். 

ஆனால், தன்னுள் நிரம்பி நிறைகுடமாக உள்ள ஒருவர் போதும். உலகையே தன் பக்கம் இழுத்து, சமுதாயத்திற்கு தேவையானதை செய்ய.

இந்த முற்ற பசுவின் ஒரு குடம் பால் போதும். ஏனைய பசுக்கள், பால் வற்றிய வறள் பசுக்களே.

அப்படிப்பட்ட ஒருவர்தான் இவர். சமுதாய ஊடகத்தின் இன்ப்ளூயன்சர்.









                                                                                      

Tuesday, September 16, 2025

ஆசை நூறுவகை

 ஆசை நூறுவகை 



திருமந்திரம் - 2033

அஞ்சும் அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் 
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை 
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு 
அஞ்சும் அடக்கா அறிவு  அறிந்தேனே.


புலன்களால் உண்டாகும் ஆசையை அடக்கினால் மட்டுமே யோக  வாழ்வை  அடைய  முடியும் என்று அறிவற்றவர்கள்தான் சொல்வார்கள். புலனாசையை, வானில் வாழும் தேவர்களாலும், அடக்க முடியாது. அதற்கு தேவர்களும் விதி விலக்கல்ல. அடக்க இயலா காமத்துடன் சென்று, முனிபத்தினியான அகலிகையின் சாபம் பெற்றவன் தேவர்களின் கோமான்  இந்திரன். புலன்களை அடக்குவதால் இன்னொரு கோளாறும் உண்டு;   நாமும் ஜடப்பொருள்களைப்போல் ஆகி நம் வாழ்வும் இயந்திர  வாழ்வாகி விடும்.

எனவே, புலனாசையை அடக்காமல், புலன்களின் இயக்க உண்மையை அறிவதே யோக வாழ்விற்கு வழிகாட்டியாகும்.

புலன்களின் உண்மைத்தன்மை அறிந்து யோக வாழ்விற்கு வழி காட்டும் திருமூலரின் திருமந்திரத்தை நாம் தொடர்வோம்.


 

Sunday, September 14, 2025

புலனறிவே யோகம்

புலனறிவே  யோகம் 


திருமந்திரம் - 2023

ஆக மதத்தன ஐந்து களிறுஉள
ஆக மதத் தறியோடு அணைகின்றில 
பாகனும் எய்த்து  அவைதாமும் இளைத்தபின் 
யோகு திருந்துதல் ஒன்று அறியோமே.

ஐந்து மதம் கொண்ட யானைகள் இருக்கின்றன. அவைகள் அமைதியாக அதன் கட்டுத்தறியோடு இணைந்து இருப்பதில்லை. இதனால் யானைகளை பராமரிக்கும் பாகனும் ஓய்ந்துபோய், யானைகளும் சக்தி இழந்து இளைத்தபின் மீண்டும் பழைய வாழ்விற்கு திரும்ப முடியாது.

ஐம்புலன்களால் உண்டாகும் வேட்கையை அடக்க முடியாமல் தறிகெட்டு அலைவது  உடல். முதுமையில் உடல் ஓய்ந்த நிலையில் புலன்களின் வேட்கை குறைந்து சுகமான  யோக வாழ்வை தேடினாலும் அடைய முடியாது. 

நம் உடலில் ஆற்றல்  உள்ள போது,  புலன்வழி போகாமல், யோக வாழ்விற்கு  பயிற்சி செய்ய வேண்டும்.



ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...