Wednesday, November 8, 2023

ராஜாதி ராஜா

ராஜாதி ராஜா 


க்ளென் மாக்ஸ்வெல் 

'ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் மாதிரி கடைசி ஆள் வரைக்கும் நின்னு அடிச்சாங்க..' 

இது நகைச்சுவைக்காக எழுதப்பட்ட திரை வசனம். 

நேற்று [07-NOV-2023] நடந்த ஒருநாள் உலக கோப்பை போட்டியில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரே நடந்த போட்டியில், அது நகைச்சுவை அல்ல உண்மை என்று  உலகிற்கு நடத்தி காட்டி விட்டார்கள்.

போட்டியின் ஆரம்பத்தில், வர்ணனையாளர்கள் உட்பட, அரங்கமே ஆப்கானிஸ்தான் பக்கம்தான். சமூக வலைத்தளங்களிலும் அவர்களுக்கு சாதகமான கருத்துக்கள்தான்.

அதிசயமாக எனக்கு மட்டும், ஆஸ்திரேலியா உப்பை சாப்பிடுவதாலோ  என்னவோ, அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற மன ஈர்ப்பு இருந்தது. நூறைத்தாண்டாது என்ற நிலை வந்தபோது கூட, மேலே சொன்ன வசனம் மனதில் வந்து போனது.

ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று பொதுவான குணங்கள் உண்டு. சாத்துவீகம், ராஜஸம் மற்றும் தாமஸம். முதல் மற்றும் இறுதி குணங்கள் அனைவரையும் முன்னிலைப்படுத்தினாலும், இடை குணமான ராஜ குணம் மட்டுமே போற்றப்படுகிறது.

ராஜ குணத்திற்கு மட்டுமே போராடும் தன்மை இருக்கிறது. அதற்கு சாதகமாக இருப்பது கன்மேந்திரியங்கள் என்னும் கால்கள், கைகள், வாய், கருவாய் மற்றும் எருவாய்.

ஆஸ்திரேலியாவிற்கு போராட்டம் ஆரம்பித்தவுடன், களமிறங்கிய விளையாட்டு வீரருக்கு,  கால்கள் தள்ளாட ஆரம்பித்து விட்டது. ஏற்கனவே ஒரு விபத்தில் சிக்கியதால் உடல் அவருடைய கட்டுப்பாட்டில் இல்லை. உடலில் உள்ள தசை நார்கள் எல்லாம் முழுக்கதவடைப்பு. உதவிக்கு நின்றது கைகளும் அந்த ராஜ குணம் மட்டுமே.

திருமந்திரம் 245

வேந்தன் உலகை மிகநன்று காப்பது 
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர் 
பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தாங்கொள்ளப் 
பாய்ந்த புலியன்ன  பாவம் அகத்தானே.

புலியைப்போல் பாய்ந்து தன் நாட்டின் வெற்றியை தேடித்தந்தது இந்த ராஜ குணம். 

ஆட்டம் இழந்த முதல் ஏழு வீரர்கள் சந்தித்த அதே ஆடுகளம் மற்றும் அதே  பந்து வீச்சாளர்கள். வெற்றியின் விளிம்பில் நின்றிருந்த எதிரணி பந்து வீச்சாளர்களின் வேகம் இன்னும் கொஞ்சம் அதிகமாக வெளிப்பட்டது.

அவனுக்கு வெற்றி, தோல்வி பற்றி சிந்திக்க நேரமில்லை. வலியை போக்க வழியுமில்லை. கூட ஆடும் வீரரின் முழு ஒத்துழைப்பு மட்டுமே  தேவை.

ஒன்றே ஒன்றை  மட்டும் கவனம் கொள்ள வேண்டி இருந்தது. இது நாள் வரை பயிற்சி செய்த ஆட்டத்தை மட்டும் ஆடினால் போதுமானது. ஓட்டத்தை ஓடி எடுக்க முடியாது. நூற்றி முப்பது கிலோமீட்டர் வேகத்தில் வரும் பந்தை, உடலை வளைத்தோ, குனிந்தோ அடிக்கவும்  முடியாது. தலைக்கவசம் கூட பாரமே. அதையும் கழற்றி  வைத்தாயிற்று. 

பந்தை கணிக்க வேண்டியது, எல்லைக்கோ, எல்லை தாண்டியோ அடிக்க வேண்டியது மட்டுமே முடியும். அதாவது நான்கு அல்லது  ஆறு ஓட்டங்கள் மட்டும் அடிக்க  முடியும். 

சாதனையாளர்கள் பயிற்சியினால் மட்டும் இதை சாத்தியப்படுத்துகிறார்கள் என்று சொல்வது அறிவீனம். இவ்வளவு இக்கட்டான சூழலில் அவர்களின் உண்மை  அறிவு அபரிமிதமாக செயல்பட ஆரம்பிக்கும்.

திருக்குறள் 373

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் 
உண்மை யறிவே மிகும்.

காந்தாரா திரைப்படத்தில் இறுதியில் கதாநாயகனின் சண்டைக்காட்சியும், தேவராட்டமும் எளிதில் மறக்க கூடியதல்ல. அதற்கு ஒரு படி மேலே சென்று, நேற்று  ஆடிய ஆட்டம், கிரிக்கெட் வரலாற்றில்  ஒரு ஆழிப்பேரலை.

ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்த ஒவ்வொருவருக்கும் மயிர்க்கால் சிலிர்த்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எதிரணி வீரர்கள் இத்தகைய ஆட்டத்தின் அங்கமாக இருந்தோம் என்பதே பெரும் பெருமையாக கொள்வார்கள்.

எது எப்படியோ, விளையாட்டில் ஆர்வம் கொண்டு பயிற்சி செய்யும் இளைய சமுதாயத்திற்கு இந்த  ஒரு நாள் ஆட்டம் நல்ல தூண்டுகோலாக அமையும் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இருக்காது.

*** *** ***












Tuesday, November 7, 2023

நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு - LGBT

நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு LGBT



பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை                                                                                                                                                                               - திருமந்திரம் 

'அந்தக்காலத்திலேயே இப்படியா?'

'ஆணோடு ஆண் புணர்ந்தால் மட்டும் மேதமையோ ? சாமி சரணம் !'

முகநூலில் ஒருவர் 'பெண்ணோடு பெண் புணரும் பேதைமை..! - திருமந்திரம்'  எனப்பதிவிட, படித்தவர்களின்  கருத்துகள்.  இன்னும் பலவிதமான  கருத்துகள், அவரவர் அறிவு நிலைக்கேற்ப.

ஆணவம்

உள்ளதொன்றை உள்ளதென்று உணரா மனம். 

உறக்கத்தில் தன்னைச்  சுற்றி உள்ள எதையும், தன்னையும்  மனம் உணர்வதில்லை.

பகுத்தறிவுவாதிகள் உறக்கத்தில், ஆணவ நிலையில் உள்ளவர்கள்.

அகங்காரம் 

உள்ளதொன்றை உள்ளவாறு அறியா மனம்.

கண்டு, கற்று, கேட்டு, ஆராய்ந்து  ஒன்றை முழுமையாக அறியாமல், தானும் மயக்க நிலையில் வாழ்ந்து, மற்றவரையும்  மயக்க நிலையில் வழி நடத்துவது.

ஆன்மீகவாதிகள் தானும் மயங்கி தன்னை சார்ந்தவர்களையும் மயக்க நிலைக்கு தள்ளும் அகங்கார மாயையில் வாழ்பவர்கள்.

இவ்வாறான ஆணவம் மற்றும் அகங்காரம் மிக்கவர்கள் இடையேதான் சகலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், உண்மை நிலை உணராமல்.

திருமந்திரம்-1159

பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை 
பெண்ணிடை யாணும் பிறந்து கிடந்தது 
பெண்ணுடை யாணென் பிறப்பறிந் தீர்க்கின்ற 
பெண்ணுடை யாணிடைப் பேச்சற்ற வாறே.

பெண்ணாக பிறந்திருந்தாலும் அவள் உடலின் உணர்வில்  குறித்த அளவு ஆண் தன்மையும்  இருக்கிறது.  பெண்ணாக பிறந்து ஆண் தன்மை அதிகம் உள்ள பிறப்பினை அறிந்து, தன்னை ஈர்க்கின்ற பெண்ணை அடைகின்றபோது அவர்கள் உறவில் முழுமையடைகிறார்கள். எனவே, பெண்ணோடு பெண் உறவு என்று பேசுவது அறிவீனம் ஆகும்.

அறிவியலும் ஆய்ந்து அறுதியிட்டு சொல்ல முடியாத தீர்வை நான்கு வரிகளில், போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிறார் திருமூலர்.

சரி, LGBT என்றால் என்ன?

L  -  Lesbian [பெண்ணொரு பெண்ணுடன் உறவில் இருப்பது]

G - Gay [ஆணொரு ஆணிடம் உறவில் இருப்பது] 

B - Bisexual [ஆண், பெண் இருவரிடமும் உறவில் இருப்பது] 

T - Transgender [ஆண்மையும், பெண்மையும் திரிபுற்ற உடலில் இருப்பது] 

'LGBT உறவில் இருப்பது சட்டத்திற்கு சம்மதமே. அவர்கள் திருமண உறவில் இருப்பது சட்டத்திற்கு ஏற்புடையதல்ல.' - இது சமீபத்திய இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்.

வழக்கை LGBT பாலார் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் மட்டும் இந்த திருமந்திரப் பாடலை சொல்லி, நீதியரசருக்கு விளங்க வைத்திருந்தால், தீர்ப்பு வேறு மாதிரி வந்திருக்கும்.

இன்னும், அவகாசம் இருக்கு. பாடலை எடுத்துரைத்து, நீதி மன்றத்தின்  அகங்காரத்தை அகற்றினால்,  'நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு'  என்று கேட்கலாம்.

*** *** ***





கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...