Wednesday, July 26, 2023

காமம் உயிரின் ஒட்டுண்ணி

காமம் உயிரின் ஒட்டுண்ணி



காமம்.

காமம் என்ற புத்தகத்தின் முதல் அத்தியாயம் பெண்.

இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருகண் 
நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து.

                                                                             - திருக்குறள் 1091

காண்போரை அப்படியே விழுங்கி உண்ணக்கூடிய கண்களையுடைய இவள் பார்வையில் இரண்டு செயல்களை நடத்திக்காட்டும் நோக்கம் உள்ளது. ஒன்று  அவளைக் கண்ட தலைவனை  காம நோய்க்குள்ளாக்குவது. மற்றொன்று    காம நோய்க்கு உள்ளான தலைவனுக்கு   மருந்தாக அமைந்து அவனது காம நோயைத் தீர்ப்பது.

மொத்தத்தில் காமம் என்றால் பெண், பெண் சார்ந்த உணர்வுகள், உறவுகள். பெண்ணிடம் பெரும் இன்பம். 

இவை  மட்டும்தானா காமம் என்பதன் பொருள்?

இல்லை. நிச்சயமாக இல்லை.

காமம் என்றால் இச்சா சக்தி. ஒன்றின்மேல் இச்சை, அது பெண்ணின் மீது கொள்ளும் காதலாக இருக்கலாம், குழந்தையின் மேல் வைக்கும் பாசமாக இருக்கலாம், மனை, மாடு என்று பொருட்களின் மீது கொள்ளும் பற்றாக இருக்கலாம்.

இந்த இச்சா சக்தி உயிரோடு கலந்து இருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை மனிதனை தொடர்ந்து இயங்க செய்யும் பேரியக்க இச்சா சக்தியே காமம்.

நின்ற பராசத்தி நீள்பரன் தன்னோடு 
நின்றறி ஞானமும் இச்சையு மாய்நிற்கும் 
நின்றறியும் கிரி யாசத்தி நண்ணவே 
மன்றன  வற்றுள் மருவிடுந் தானே.

                                                                          - திருமந்திரம் 1136

சிவத்தை தன்னுள் கவர்ந்திருக்கும்  சக்தி, ஞானமும் இச்சையுமாக இயங்குவாள். இங்கு உருவாகும் கிரியா சக்தி என்னும் ஆக்க செயல்கள் உடலின்  அனைத்து செயல்களுக்கும் ஆதாரமாக இருக்கும். 

இச்சை சார்ந்த காமம், கிரியா சக்தியால் செயலாக உருவாகும் நிலை இது.

காமம் எவ்வாறு மனிதனிடம் உண்டாகிறது?  ஒருவருக்கொருவர் எப்படி  மாறுபடுகிறது என்று இனி பார்க்கலாம்.

மண்ணில் உடலெடுத்த புத்தன், இயேசு, காந்தி போன்ற மஹான்களும்கூட  காமத்திலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள் அல்ல.  நாம் புனிதமாக கொண்டாடும் அத்தனை குருமார்களும், ஏன்?  சித்தர்களும்கூட   இந்த இயற்கை  விதிக்குள் அடங்கியவர்களே.

இந்த  இயற்கை விதியை சற்று கூர்ந்து கவனிப்போம்.

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் 
பதியினைப் போல்பசு பாசம் அனாதி 
பதியினைச் சென்று  அணுகாப் பசுபாசம் 
பதிஅணுகில் பசு பாசம் நிலாவே.

                                                           - திருமந்திரம் 115

இப்பாடலில், பதி என்பது ஆதியில் தோன்றிய இறையைக் குறிக்கும். பசு என்பது மண்ணில் பிறக்கும் உயிரினை சுட்டுகிறது. பாசம் என்பது உயிரினை கட்டி வைத்திருக்கும் தளையை, அதாவது காமத்தை குறிக்கிறது.

இங்கே, இறை தனியாகவும், உயிரும் காமமும் இணையாக  காட்டப்படுகிறது. இம்மூன்றும் ஆதியில் சுயம்புவாக தோன்றியவைகள். உயிர், காமத்தின் பிடியில்  கட்டுண்டு இறையை சென்றடைய முற்படுவதில்லை. ஒருவேளை, முயற்சி செய்து இறையை சென்றடைந்தால், உயிரும் காமமும் இறையுடன் கலந்துவிடும்.

உயிரும் காமமும் இணைந்து பயணிப்பவை. ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை. உடலில் உயிர் உள்ளவரை காமமும் அதனுள் கரைந்திருக்கும்.

இன்னொரு கோணத்திலிருந்தும் இந்த உண்மையை நாம் உறுதி செய்து கொள்ளலாம். உயிர்கள் மண்ணில் தனக்கான உடலில்  பிறப்பெடுக்கும்வரை ஆகாயத்தில்  இருக்கின்றது. 

பஞ்ச பூதங்களில் ஒன்றான, ஆகாயம்  உயிர்களுக்கு வழங்கும் குணங்கள் ஐந்து. அவை முறையே, 1. காமம் 2. குரோதம் 3. லோபம் 4. மதம் 5. மாச்சரியம்  என்பவை ஆகும். எனவே, உயிர்கள் வானத்திலிருந்து மண்ணில் பிறக்கும்போது இந்த ஐந்து குணங்களையும் தன்னோடு இணைத்துக்கொண்டே வருகிறது.

இதையே, திருமந்திரப்பாடல் 113 உறுதி செய்கிறது.

விண்ணின்று இழிந்து வினைக்குஈடாய் மெய்கொண்டு 
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து 
உண்ணின்று உருக்கிஓர் ஒப்பிலா ஆனந்தக்  
கண்நின்றுக்  காட்டி களிம்புஅறுத் தானே.

வானத்திலிருந்து உயிரை கொண்டுவரும் இறைவன், அந்த உயிரின் விதிக்கேற்ப உடலைத்தருகிறான். அந்த உடலுக்கு தன்னுடைய குளிர்ச்சியான  பாதங்களை தலை உச்சியில் வைத்து, உடலுக்குள் பேரொளியாய் திகழ்கிறான். முந்தைய பிறவிகளின் நினைவுகளை  அடியோடு அழித்தும்  விடுகிறான்.

உயிரோடு காமம் கலந்திருக்கும் உண்மையை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டுமானால், நாம் சுத்த தத்துவங்கள் எனப்படும் சிவ தத்துவங்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சிவ தத்துவங்கள் உயிரையும், உயிரை இணைக்கும் இச்சா  சக்தியையும் மிக விரிவாக நமக்கு எடுத்துரைக்கிறது.

சிவ தத்துவங்கள் ஐந்தும் உயிரில் ஒன்றியிருப்பவை. அவை முறையே, நாதம், விந்து, சுத்த வித்தை, ஈஸ்வரம் மற்றும் சதாசிவம்.

நாதம் என்பதை, ஞானமாக, ஓம் என்னும் பிரணவ ஒலியாக கொள்ளலாம். விந்து என்பதை கிரியா சக்தியாக ஒளியாக கொள்ளலாம்.  கிரியா சக்தி எப்பொழுதும் இச்சா சக்தியுடன் இணைந்து இயங்குகிறது. 

இந்த இச்சா சக்திதான், காமமாக வெளிப்படுகிறது.

ஞானம் மிகுந்து  கிரியா சக்தி குறைந்திருப்பது சுத்த வித்தை. கிரியா சக்தி மிக்கிருப்பது  ஈஸ்வரம். இரண்டும் சம நிலையில்  இருப்பது  சதாசிவம்.

காமம் உடலில் தானாக இயங்காது. அதன் அடிப்படை ஆசை. ஆசையின் அஸ்திவாரம் பாசம் அல்லது பொருட்கள். ஆசை காமத்தின் தூண்டுகோல். பெண்ணின் மீது ஆசை. பெற்ற பிள்ளைகளின் மீது ஆசை. மனை, மாடு என பொருட்களின் மீது ஆசை. ஆசையின் கிரியாஊக்கி ஐம்புலன்கள்.

ஆசை காமத்தின் தூண்டுகோல் எனில் ஆசை எவ்வாறு உண்டாகிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 

ஐம்புலன்களின் வேலையே அதுதானே என்கிறீர்களா?  சரிதான்.

ஐம்புலன்களின் மூலம் பெறப்படும் செய்திகள் ஆசையாக மாறுவதையும் கவனிக்கவேண்டும். 

கண்ணெதிரே ஒரு அழகிய பெண் தோன்றுகிறாள்.

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும் 
ஒண்தொடி கண்ணே உள.

                                                                                           - திருக்குறள் 1101

அவளைக் கண்களால் கண்டு மகிழவும், அவள் பேசுவதை காதால் கேட்டு கிறங்கவும், அவள் அதரங்களை சுவைத்தறியவும், அவளை மூச்சுக்காற்றால் முகர்ந்து உயிரை உயிர்ப்படைய செய்யவும்  மேலும் அணைத்து உறவில் உடல் சுகம் பெறவும் என ஐம்புலன்களும் அனுபவிக்கும் இன்பம், கவர்ந்திழுக்கும்  குணங்கள் பெண்ணிடமே உள்ளது.

பெண்ணைக்கண்டவுடன் முதலில், புலனுணர்வுகள்  அவளைக்கண்ட செய்தியை உயிருக்கு அனுப்புகிறது. செய்தி ஆசையாக மாறி காம நிலைக்கு எடுத்து செல்கிறது. 

குறிப்பு: காமத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது. இரு பாலினமும் காமத்தை சமமாகவே  எதிர்கொள்கிறது.

இது எவ்வாறு ஒரு மனிதனிடம் நிகழ்கிறது?

கண்கள் பார்த்தவுடன், கண்களின் பொறிவாயிலாக செயல்படும் நாடிகள் இந்த செய்தியை மனதிற்கு கொண்டு செல்கிறது. வலது கண் வாயிலாக  புருடன் என்னும் நாடியும், இடது கண் வாயிலாக  காந்தாரி என்னும் நாடியும் உள்ளது. நாடி என்றால் செய்தியை கடத்திச்செல்லும் கடத்தி என்று வைத்துக்கொள்ளவும்.

மனம் அவள் அழகானவள் என்ற செய்தியை உயிருக்கு தெரிவித்தவுடன், அவளை அடையும்  ஆசை உண்டாகிறது. இடையில் மாயை என்னும் தத்துவம் இருக்கிறது. ஆசை என்னும் மயக்க நிலையில் உள்ள உயிர், மாயை இடை நிற்பதைக்கூட அறியாமல்  ஒதுக்கித்தள்ளி விடுகிறது.

இந்த ஆசையே காமத்தின் ஆணி வேர். 

இங்கே செயல்படுவது, இச்சா சக்தி மிக்கு ஞான சக்தி குறைந்த ஈஸ்வர நிலை. பொதுவாக சாதாரண மக்கள் எனப்படும் நாமெல்லோரும் ஈஸ்வர நிலையில் இருப்பவர்களே.

ஆசை காமமாக மாறி, செயல்படும் நிலைக்கு செல்வது அவரவர் குணாதிசயத்தை பொறுத்தது. ராஜஸ  குணம், சாத்வீக குணம் மற்றும் தாமஸ  குணம் என்னும் மூன்று குணத்திற்கு ஏற்ப காமம் செயல்படும். காலம், நியதி என்ற வித்யா தத்துவங்கள் இவர்களின் குணத்திற்கேற்ப காமத்தை முன்னிறுத்தும்.

பெண்ணைப்பார்த்தவுடன் உயிருக்கு செய்தி சொன்ன மனதிற்கு, கட்டளை வருகிறது காமத்திடமிருந்து, 'அவளை அடைய வேண்டும்' என்று.

மீண்டும் ஒருமுறை நிலைமையை சீர்தூக்கி பார்க்கும் வாய்ப்பு மனதிற்கு கிடைக்கிறது. மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி என நான்கு நிலைகளில் செயல்படும் மனம், காமம் என்று வந்துவிட்டால் உடனடி செயல்பாட்டில் இறங்கிவிடுகிறது. இங்கே அறிவு நிலை மங்கி விடுகிறது.

மனதிலிருந்து பிறக்கும் ஆணை, ஞானேந்திரியங்கள் எனப்படும், மெய், வாய், கண், மூக்கு, தோல்-க்கு சென்றடையும். கூடவே கர்மேந்திரியங்கள் எனப்படும் கால்கள், கைகள், வாய், கருவாய், எருவாய் செயல்பட ஆணைகள் சென்றடையும்.

மேலே, விளக்கியதிலிருந்து காமத்தை வென்றவர் யாருமில்லை, வெல்லப்போகிறவர் யாருமில்லை  என்ற இயற்கை விதி புரிந்திருக்கும் என எண்ணுகிறேன்.

இதில், ஆச்சர்யம் என்னவென்றால் யாரெல்லாம் கிரியா சக்தியை விழித்தெழச்செய்து ஆக்கபூர்வமாக செயலாக்கம் நடத்துகிறார்களோ, அவர்களுக்கு அதே அளவான இச்சா சக்தி எனும் காம உணர்வும்  இருக்கும். காமத்தை கட்டுக்குள் வைத்திருப்பதும், கட்டவிழ்த்துவிடுவதும்  அவர்களின் பிறப்பின் குணாதிசயமே அன்றி வேறல்ல.

அப்படியானால், காமம் இல்லாமலே இருக்க முடியாதா என்ற கேள்வி வருகிறது. ஆமாம், காமம் இல்லாமல் இருந்தால் அது ஜடப்பொருளுக்கு சமம். யாரும் ஜடமாக இருப்பதை விரும்ப மாட்டார்கள் மண்ணில் உயிரோடு இருக்கும்வரை. 

ஆனால், காமத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

அதற்கு மீண்டும் சிவ தத்துவத்தை நினைவு கொள்வோம்.

ஞானம் அதிகமாகவும் கிரியா சக்தி குறைவு நிலை சுத்த வித்தை. ஞானம் குறைவாகவும் கிரியா சக்தி அதிகமாகவும் உள்ள நிலை ஈஸ்வரம். இரண்டும் சமமாக உள்ள நிலை சதாசிவம்.

 கிரியா சக்தியின் அளவை குறைப்பதன் மூலம் நாம் காமத்தின் வெளிப்பாட்டை கட்டுக்குள் கொண்டுவரலாம். அதாவது, எந்த ஊக்கம் தரும் செயலோ, முயற்சியோ செய்யாமல் இருந்தால் போதும், கிரியா சக்தியின் அளவு குறைந்துவிடும்.  இது இம்மாதிரியான எதிர்மறை விளைவுகளையே உண்டுபண்ணும்.

இது சரியான வழி அல்ல.

சரியான வழி ஞான சக்தியை அதிகரிப்பதுதான். 

ஞானம் என்னும் சிவ சக்தி, உடலைப்பொருத்த மட்டில் உயிர் அல்லது பிராணன் என்றாகிறது. நாம், பிராண சக்தியை அதிகரிப்பதன் மூலம் காமத்தின் தன்மையை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

எனக்கு தெரிந்த வரையில், முறையாக பிராணாயாமம் செய்வது ஒரு வழி என்றால் இரண்டாவது வழி காயகல்ப பயிற்சி. முறையான குருவிடம் பயிற்சி பெறுவதன் மூலம் இது நம் அனைவருக்கும் சாத்தியமே.

*** *** ***

பின் குறிப்பு: தமிழில் ஆர்வம் உள்ளவர்கள், திருக்குறள், திருமந்திரம் மற்றும் சித்தர் பாடல்கள் மூலம் நம் பிறப்பின் பொருளறிய ஆர்வம் இருப்பின், தமிழ் குடில் என்னும் முகநூல் குழுவில் இணையலாம்.









 

 


Friday, July 7, 2023

ஊடல் கொண்ட பெண்மை


ஊடல் கொண்ட பெண்மை 




திருக்குறள்: 1287

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் 
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

பொங்கி வரும் காட்டாற்று வெள்ளத்தில் குதிக்கும் ஒருவர், எப்படியும் வெள்ளத்திலிருந்து மீண்டு வரும் வழியை அறிந்து வெள்ளத்தில் குதிப்பார்.

அவ்வண்ணமே,

தலைவன் முன்னிலையில், எப்படியும் தன்னுடைய ஊடல் பொய்த்து விடும்,  என்று தெரிந்தும், தலைவி ஏன் ஊடல் கொள்ள வேண்டும்?

 

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...