Wednesday, June 22, 2022

அக்னிபாத்

அக்னிபாத்  





'அக்னிபாத் இளைய சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். கொள்கையற்ற எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரம் மக்களிடம் செல்லாது.' - கட்சி மாநாட்டு மேடையில்,  அக்னிபாத் எதிர்ப்பாளர்களை  தலைவர் விளாசிக்கொண்டிருந்தார்.

'அக்னிபாத்னா என்னங்க?' - தலைவர் யாரோ பொய் பரப்புறதா சொல்றார். 

'எனக்கும் சரியா தெரியல. அவர்  கர்நாடகாகாரர் தானே? பிசிபேளாபாத் மாதிரி ஏதாவது இருக்கும். எப்படியும் சாப்பிடும்போது பாத்துக்கலாம்.'

'அப்ப.. சாப்பாடு ஐட்டத்துல ஒரு கை பாத்துரவேண்டியதுதான். சீக்கிரம் போயிருவோம். இல்லன்னா போன மாநாடு மாதிரி கெடைக்காம போயிரும்.'

'சை.. மிலிட்டரிக்கு ஆள் எடுக்கிறது, அக்னிபாத். அது சாப்பாடு இல்ல' - கொஞ்சம் விவரம் தெரிந்தவர் சொன்னார்.

'இளைஞர்களுக்கு கிடைக்கவிருக்கும்  ஒரு அற்புத வேலை வாய்ப்பு  இந்த மிலிட்டரிக்கு ஆள் எடுக்கும் அக்னிபாத்  முறை.  நான்கே வருடத்தில் லட்சக்கணக்கான பணத்துடன் ஓய்வு பெற்று விடுவார்கள். பதினேழரை வயதிலிருந்து இருபத்து மூன்று வயது வரை வயது  வரம்பு.' - தலைவர் திட்டத்தை விவரித்துக்கொண்டிருந்தார்.

'ஓய்.. ஓம் பையன் இந்த வருஷம் பிளஸ் டூ முடிக்கிறான்தானே. தலைவர்கிட்ட சொல்லி சேத்து விட்டுரு.'

'சேத்து விட்டுட்டு..? இருபத்தோர் வயசுல,  நல்லா மிலிட்டரி சரக்க போட கத்துகிட்டு வருவான். மிச்ச இருக்கிற வருஷத்துக்கெல்லாம் எவன் சோறு போடுவான்?'

'வேற வேல கெடைக்காதா, என்ன?'

'கெடைக்கும்னா, அங்கேயே வச்சுக்க மாட்டாங்களா? இருபத்தஞ்சு சதவீதம் மட்டும் வச்சுகிட்டு மத்ததை கழிசடைனு அவங்களே கழிக்கும்போது, இங்கே யார் வேலை குடுப்பாங்க?'

'என்னமோ போங்க. தலைவர் பேச்ச கேப்போம்.'

இந்த தலைவனும், தலைவன் என்ற குறிகட்டி, மேயும் வறள் பசுதான்..

கொற்ற பசு குறி கட்டி மேயினும் வறள் பசுவே!

***  ***  ***

விருந்துக்கு வந்த ஒருவர் தவறாமல், தற்செயலாக வருவதுபோல், விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  அறைக்கு வந்து சென்றனர். பார்த்த சில பெண்களின் மார்பகங்கள் விம்மி இறங்கியதைப்பார்க்கும்போது, பொறாமையின் உச்சிக்கே சென்று வந்தவர்களைப்போல் தோன்றினார்கள்.

விருந்துக்கு தேவையான அனைத்து பாத்திரங்களும், கிண்ணங்களும் தங்கத்தாலும், வெள்ளியாலும் மின்னிக்கொண்டிருந்தது, விருந்து மேடையில்.  இவைகள் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. விருந்துக்கு தலைமை ஏற்கும், நெப்போலியனின் இருக்கைக்கு நேராக வைத்திருந்த கிண்ணங்களும், தட்டுகளும், ஸ்பூன்களுமே அனைவரின் எண்ணத்தை ஆக்கிரமித்திருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் புதிய கண்டுபிடிப்பான அலுமினியத்தால் செய்யப்பட்ட உணவு கிண்ணங்களே அவைகள். நெப்போலியனுக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டிருந்தது.

இன்றைக்கு, ஒருவரின் வறுமை நிலையை சொல்ல வேண்டுமானால் , அவரின் சொத்து ஒரு அலுமினிய தட்டும், ஒடுங்கிய டம்ளரும் என்று சொல்லுகிறோம்.

ஒரு அரசனுக்கு நிகரான நெப்போலியன் தன்னை தனித்து காட்ட, தன்னையே கீழ்மை படுத்திக்கொண்ட கதை இது.

கொற்ற பசு குறி கட்டி மேயினும் வறள் பசுவே!

***  ***  ***

'நீ போட்டுட்டியா?'

'இல்ல. ஆனா ரெண்டு போட்ட மாதிரி செர்டிபிகேட் வாங்கிட்டேன்.'

'பூஸ்டர் வேற போடணுமாம்'

'விட்றா.. இன்னொரு செர்டிபிகேட் வாங்கிட்டா போச்சு.'

'ஜனநாயக நாட்டில் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி கட்டாயம் என்பது சட்ட விரோதம்.' - என்பது ஒரு சாராரின் வாதம். 

'முகக்கவசம் போடாமல் பொது இடங்களில் நடமாடக்கூடாது. தடுப்பூசி போடவில்லை என்றால் பயணங்கள் சாத்தியமில்லை.' - இது அரசாங்கத்தின் நிலைப்பாடு.

இதைவிட பெரிய கூத்து உலக சுகாதார நிறுவனம். 2019-ல் தொற்று ஆரம்பித்தபோது அது பரவக்கூடியதல்ல என்று அறிவித்தது. நிலைமை சீர்கேடடைந்த பின்னர் எந்த மாற்றம் வந்தாலும் மக்களை பயமுறுத்தும் வண்ணம் அறிவிப்பை வெளியிடுகிறது. அது இன்னும் முடிந்தபாடில்லை. உண்மை நிலை யாருக்கும் தெரியாது.

தடுப்பூசி போட்டவர்களும் தொற்றுக்கு உள்ளாகிறார்கள். ஊசி போட்டவுடன் இறந்தவர்கள் பற்றி பெரிதாக ஒன்றும் செய்தி வெளி வரவில்லை.

ஆக மொத்தம், கூட்டி கழித்துப் பார்த்தால் வரக்கூடிய முடிவு '0' தான்.

உலகிற்கே அறிவுரை சொல்லக்கூடிய, உலக சுகாதார நிறுவனமும் வறள் பசு தானே!

கொற்ற பசு குறி கட்டி மேயினும் வறள் பசுவே!

***  ***  ***

'மற்றைய மாநிலங்களை கணக்கில் கொள்ளும்போது, குறைந்தது பதினைந்து ஆண்டுகள் முன்னோடியாக திகழ்கிறது தமிழக கல்வி முறை. புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்பதால் தமிழகம் பின்னோக்கி செல்ல வேண்டி இருக்கும்.' - அரசு வக்கீல் தனது வாதத்தை நீதியரசரிடம் எடுத்துரைத்தார்.

ஒரே நாடு, ஒரே கல்விமுறை எனத்திட்டமிடும்போது கல்வியில் வளர்ச்சி பெற்றுள்ள மாநிலங்களை கணக்கில் கொண்டு புதிய கல்வி முறையை கொண்டு வந்திருக்க வேண்டும். பின்தங்கிய மாநிலங்களை தாங்கி பிடிக்க கொண்டு வரும் புதிய கல்வி முறை நிச்சயம் எதிர்ப்பை சந்திக்கத்தான் செய்யும்.

இன்றைக்கும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் அறிவித்து தமிழகம் கல்லூரிகளுக்கு அட்மிஷன் போட்டுக்கொண்டிருக்கையில், C B S E தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகள் தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், கல்வியின் தரத்தில் வறண்ட மாநிலங்களை கணக்கில் கொண்டு  தேசிய கல்வி கொள்கையை வகுக்கும்  தலைவர்,  பெரிய பொறுப்பிலிருந்தாலும், தன்னுடைய அதிகார  வரம்பிற்குள்தானே திட்டமிட முடியும்.

புதிய தேசிய கல்வி திட்ட தலைவர்  என்ற பதவியை கொண்ட இவரும் ஒரு வறள் பசுவே.

கொற்ற பசு குறி கட்டி மேயினும் வறள் பசுவே!

***  ***  ***

கற்ற பசுக்கள் கதறித் திரியினும் 
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் 
முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போது 
மற்றைப் பசுக்கள் வறள்  பசுதானே.

                                                                                        - திருமந்திரம் 2015











No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...