Thursday, June 23, 2022

முற்ற பசு

முற்ற பசு 


மனம் தளர்ந்திருந்தான் கோவலன். கைகளில் கண்ணகியின் காற்சிலம்பு.

மதுரையின் வீதிகளில் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான். அவனை அறியாமலே வந்து நின்ற இடம் பூவிலை சூட்டிய மகளிர் தெரு. மாலை வேளைகளில் ஆடலும், பாடலுமாக சொர்க பூமியாக திகழும் கணிகையர்  வீதி.

அரசினால் அங்கீகரிக்கப்பட்ட, மனித உணர்வுகளை மதித்து நடக்கும் ஒரு பண்புமிக்க  சமுதாய  நாகரிகத்தின் ஒரு பகுதியே இவ்விடம். அவர்களும் இல்லற வாழ்வில் உள்ளவர்களுக்கு எந்த மாறுபாடும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்த சமுதாய மாற்றங்களில் ஒன்றாக, இறைவனுக்கு தொண்டு செய்யும் பெண்களாக, இறைவனையே  மணந்து, ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கியவர்களும் சமுதாயத்தில் ஒரு அங்கமாகவே வாழ்ந்திருந்தார்கள்.

காலப்போக்கில் இவை எல்லாம் கலைந்து, உயர்ந்த நாகரிகமாக கருதப்பட்ட வழக்கு முழுமையாக ஒழிந்து போனது. 

ஆனால்,  அதுவே இன்று சமுதாயத்தின் சாபக்கேடாக மாறி,  மனம் திரிபுற்ற  நிலையில், பல்வேறு பாலியல் குற்றங்கள் நடக்க காரணமாகி நிற்கிறது.

உடல் தன் தேவையை அடையாமல் இருக்க முடியாது. இது இரு பாலார்க்கும் பொருந்தும் இயற்கை விதி. பெரும்பாலாக பெண்கள் இதனை ஒரு சேவையாக செய்யாவிட்டாலும், தங்கள் வாழ்வின் பொருளாதார தேவைக்காக செய்கிறார்கள். மேற்கத்திய நாடுகள் இதனை சட்டப்படியான தொழில்களில் ஒன்றாக ஏற்று, அதற்கான பதிவுகள், லைசென்ஸ், ஆரோக்கிய நடைமுறைகள் என்று முறைப்படுத்தி இருக்கிறார்கள்.

நாமோ, நம்முடைய கலாச்சாரத்தையும் கை விட்டு, மேற்கத்திய கலாச்சாரத்தையும் ஏற்க முடியாமல் திரிசங்கு சொர்கத்தில் சிக்கிக்கொண்டுள்ளோம்.

'பாலியல் தொழில் செய்வது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். அதனை சட்டப்படி குற்றமாக கொள்ளக்கூடாது'. - சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண்களை விடுவித்து இந்திய நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு, ஒரு சமுதாய  மறுமலர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

மனித சமுதாயம் கூட்டமாக வாழ ஆரம்பித்த போது, டிமாண்ட்/சப்ளை நடுநிலை இல்லாதபோது துவங்கப்பட்ட ஆதி தொழில் இது. கணவனை இழந்த நிறைய அபலைப்பெண்களுக்கு, இத்தொழிலே  குழந்தைகளை, வயதானவர்களை காக்கும் வழிமுறையும் ஆகிப்போனது.

கடந்த மே மாதம் 26-ம் தேதி உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில், 'பாலியல் தொழில் சட்டப்படி செய்யும் தொழில், எனவே  பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். இணங்கி  இத்தொழிலை செய்யும் நபர்கள் குற்றவாளிகள் அல்ல.' - என்று கூறி இருக்கிறது.

இந்த தீர்ப்பை தனிப்பட்ட நீதியரசரோ அல்லது ஒரு குழுவோ வழங்கி இருக்கலாம். இந்த ஒரு தீர்ப்பு, லட்சக்கணக்கான மக்களுக்கு நன்மை வழங்கக்கூடிய, அவர்கள் 'தவறு செய்கிறோம்' என்ற குற்ற உணர்ச்சியில் இருந்து விலக்கக்கூடிய  உன்னதமான தீர்ப்பு.

முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போது  முற்ற பசுவாக.

***  ***  ***

கற்ற பசுக்கள் கதறித் திரியினும் 
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் 
முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போது 
மற்றைப் பசுக்கள் வறள்  பசுதானே.

                                                                                        - திருமந்திரம் 2015



 

Wednesday, June 22, 2022

அக்னிபாத்

அக்னிபாத்  





'அக்னிபாத் இளைய சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். கொள்கையற்ற எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரம் மக்களிடம் செல்லாது.' - கட்சி மாநாட்டு மேடையில்,  அக்னிபாத் எதிர்ப்பாளர்களை  தலைவர் விளாசிக்கொண்டிருந்தார்.

'அக்னிபாத்னா என்னங்க?' - தலைவர் யாரோ பொய் பரப்புறதா சொல்றார். 

'எனக்கும் சரியா தெரியல. அவர்  கர்நாடகாகாரர் தானே? பிசிபேளாபாத் மாதிரி ஏதாவது இருக்கும். எப்படியும் சாப்பிடும்போது பாத்துக்கலாம்.'

'அப்ப.. சாப்பாடு ஐட்டத்துல ஒரு கை பாத்துரவேண்டியதுதான். சீக்கிரம் போயிருவோம். இல்லன்னா போன மாநாடு மாதிரி கெடைக்காம போயிரும்.'

'சை.. மிலிட்டரிக்கு ஆள் எடுக்கிறது, அக்னிபாத். அது சாப்பாடு இல்ல' - கொஞ்சம் விவரம் தெரிந்தவர் சொன்னார்.

'இளைஞர்களுக்கு கிடைக்கவிருக்கும்  ஒரு அற்புத வேலை வாய்ப்பு  இந்த மிலிட்டரிக்கு ஆள் எடுக்கும் அக்னிபாத்  முறை.  நான்கே வருடத்தில் லட்சக்கணக்கான பணத்துடன் ஓய்வு பெற்று விடுவார்கள். பதினேழரை வயதிலிருந்து இருபத்து மூன்று வயது வரை வயது  வரம்பு.' - தலைவர் திட்டத்தை விவரித்துக்கொண்டிருந்தார்.

'ஓய்.. ஓம் பையன் இந்த வருஷம் பிளஸ் டூ முடிக்கிறான்தானே. தலைவர்கிட்ட சொல்லி சேத்து விட்டுரு.'

'சேத்து விட்டுட்டு..? இருபத்தோர் வயசுல,  நல்லா மிலிட்டரி சரக்க போட கத்துகிட்டு வருவான். மிச்ச இருக்கிற வருஷத்துக்கெல்லாம் எவன் சோறு போடுவான்?'

'வேற வேல கெடைக்காதா, என்ன?'

'கெடைக்கும்னா, அங்கேயே வச்சுக்க மாட்டாங்களா? இருபத்தஞ்சு சதவீதம் மட்டும் வச்சுகிட்டு மத்ததை கழிசடைனு அவங்களே கழிக்கும்போது, இங்கே யார் வேலை குடுப்பாங்க?'

'என்னமோ போங்க. தலைவர் பேச்ச கேப்போம்.'

இந்த தலைவனும், தலைவன் என்ற குறிகட்டி, மேயும் வறள் பசுதான்..

கொற்ற பசு குறி கட்டி மேயினும் வறள் பசுவே!

***  ***  ***

விருந்துக்கு வந்த ஒருவர் தவறாமல், தற்செயலாக வருவதுபோல், விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  அறைக்கு வந்து சென்றனர். பார்த்த சில பெண்களின் மார்பகங்கள் விம்மி இறங்கியதைப்பார்க்கும்போது, பொறாமையின் உச்சிக்கே சென்று வந்தவர்களைப்போல் தோன்றினார்கள்.

விருந்துக்கு தேவையான அனைத்து பாத்திரங்களும், கிண்ணங்களும் தங்கத்தாலும், வெள்ளியாலும் மின்னிக்கொண்டிருந்தது, விருந்து மேடையில்.  இவைகள் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. விருந்துக்கு தலைமை ஏற்கும், நெப்போலியனின் இருக்கைக்கு நேராக வைத்திருந்த கிண்ணங்களும், தட்டுகளும், ஸ்பூன்களுமே அனைவரின் எண்ணத்தை ஆக்கிரமித்திருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் புதிய கண்டுபிடிப்பான அலுமினியத்தால் செய்யப்பட்ட உணவு கிண்ணங்களே அவைகள். நெப்போலியனுக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டிருந்தது.

இன்றைக்கு, ஒருவரின் வறுமை நிலையை சொல்ல வேண்டுமானால் , அவரின் சொத்து ஒரு அலுமினிய தட்டும், ஒடுங்கிய டம்ளரும் என்று சொல்லுகிறோம்.

ஒரு அரசனுக்கு நிகரான நெப்போலியன் தன்னை தனித்து காட்ட, தன்னையே கீழ்மை படுத்திக்கொண்ட கதை இது.

கொற்ற பசு குறி கட்டி மேயினும் வறள் பசுவே!

***  ***  ***

'நீ போட்டுட்டியா?'

'இல்ல. ஆனா ரெண்டு போட்ட மாதிரி செர்டிபிகேட் வாங்கிட்டேன்.'

'பூஸ்டர் வேற போடணுமாம்'

'விட்றா.. இன்னொரு செர்டிபிகேட் வாங்கிட்டா போச்சு.'

'ஜனநாயக நாட்டில் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி கட்டாயம் என்பது சட்ட விரோதம்.' - என்பது ஒரு சாராரின் வாதம். 

'முகக்கவசம் போடாமல் பொது இடங்களில் நடமாடக்கூடாது. தடுப்பூசி போடவில்லை என்றால் பயணங்கள் சாத்தியமில்லை.' - இது அரசாங்கத்தின் நிலைப்பாடு.

இதைவிட பெரிய கூத்து உலக சுகாதார நிறுவனம். 2019-ல் தொற்று ஆரம்பித்தபோது அது பரவக்கூடியதல்ல என்று அறிவித்தது. நிலைமை சீர்கேடடைந்த பின்னர் எந்த மாற்றம் வந்தாலும் மக்களை பயமுறுத்தும் வண்ணம் அறிவிப்பை வெளியிடுகிறது. அது இன்னும் முடிந்தபாடில்லை. உண்மை நிலை யாருக்கும் தெரியாது.

தடுப்பூசி போட்டவர்களும் தொற்றுக்கு உள்ளாகிறார்கள். ஊசி போட்டவுடன் இறந்தவர்கள் பற்றி பெரிதாக ஒன்றும் செய்தி வெளி வரவில்லை.

ஆக மொத்தம், கூட்டி கழித்துப் பார்த்தால் வரக்கூடிய முடிவு '0' தான்.

உலகிற்கே அறிவுரை சொல்லக்கூடிய, உலக சுகாதார நிறுவனமும் வறள் பசு தானே!

கொற்ற பசு குறி கட்டி மேயினும் வறள் பசுவே!

***  ***  ***

'மற்றைய மாநிலங்களை கணக்கில் கொள்ளும்போது, குறைந்தது பதினைந்து ஆண்டுகள் முன்னோடியாக திகழ்கிறது தமிழக கல்வி முறை. புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்பதால் தமிழகம் பின்னோக்கி செல்ல வேண்டி இருக்கும்.' - அரசு வக்கீல் தனது வாதத்தை நீதியரசரிடம் எடுத்துரைத்தார்.

ஒரே நாடு, ஒரே கல்விமுறை எனத்திட்டமிடும்போது கல்வியில் வளர்ச்சி பெற்றுள்ள மாநிலங்களை கணக்கில் கொண்டு புதிய கல்வி முறையை கொண்டு வந்திருக்க வேண்டும். பின்தங்கிய மாநிலங்களை தாங்கி பிடிக்க கொண்டு வரும் புதிய கல்வி முறை நிச்சயம் எதிர்ப்பை சந்திக்கத்தான் செய்யும்.

இன்றைக்கும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் அறிவித்து தமிழகம் கல்லூரிகளுக்கு அட்மிஷன் போட்டுக்கொண்டிருக்கையில், C B S E தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகள் தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், கல்வியின் தரத்தில் வறண்ட மாநிலங்களை கணக்கில் கொண்டு  தேசிய கல்வி கொள்கையை வகுக்கும்  தலைவர்,  பெரிய பொறுப்பிலிருந்தாலும், தன்னுடைய அதிகார  வரம்பிற்குள்தானே திட்டமிட முடியும்.

புதிய தேசிய கல்வி திட்ட தலைவர்  என்ற பதவியை கொண்ட இவரும் ஒரு வறள் பசுவே.

கொற்ற பசு குறி கட்டி மேயினும் வறள் பசுவே!

***  ***  ***

கற்ற பசுக்கள் கதறித் திரியினும் 
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் 
முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போது 
மற்றைப் பசுக்கள் வறள்  பசுதானே.

                                                                                        - திருமந்திரம் 2015











Tuesday, June 21, 2022

வறள் பசு

வறள் பசு 


இருப்புக்கொள்ளவில்லை சரவணனுக்கு.

'என்னைப் பிடிக்காமல் போய் விட்டால்..?' - பலமுறை பார்த்தும் திருப்தி அடையாமல் மீண்டும் மீண்டும் தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டான். மீசையில் அங்கங்கு நரைத்திருந்த முடிகளை திருத்திய  பின்னரும், புதிதாக ஏதும் தெரிகிறதா என்று ஆராய்ந்தான்.

காலையில் புரோக்கர் வாட்சப்பில்  அனுப்பி இருந்த  பெண்ணின் படத்தை டெஸ்க்டாப் இமேஜாக மாற்றி வைத்திருந்தான். படத்தை பார்க்க பார்க்க, சுமாராக தேர்வெழுதிவிட்டு தேர்வு முடிவுகளை தேடும் மாணவனின் நெஞ்சத்தின் படபடப்பு.

கன்னிகா.. கன்னிகா.. கன்னிகா..

'பார்க்குமிடமெல்லாம் கன்னிகா. - நான் சுவாசிக்கும் காற்றே கன்னிகா.' - இது நிஜம்தானா என்று பலமுறை தனக்குள்ளே கேட்டுக்கொண்டான்.

'முப்பத்தாறு வயசு' என்பதை  பெண்ணின் வீட்டார் பெரிதாக  சொல்வார்களோ. 'ஆனா வயசுக்கேத்த வேலையும், சம்பளமும் இருக்கே.' என்று தன்னைத்தானே தேற்றிக்கொள்ள முயற்சித்தான்.

அவனுடைய அத்தனை தேறுதல்களும், பெண்ணின் படத்தை பார்த்ததும் காணாமல் போனது. 

'இவளுக்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தேனோ?'- சுண்டி இழுக்கும் கண்களில் ஆழ்ந்திருக்கும்போது  மொபைல் அழைத்தது.

'ஹலோ சரவணன் சார். பொண்ணுக்கு உங்கள புடிச்சிருக்காம்.' - நேராக மேட்டருக்கு வந்தார் புரோக்கர்.

'புடிக்காம என்ன.. பேங்க்ல மேனேஜர்.. மாசம் எழுபதாயிரம் சம்பளம்.. வேற என்ன வேணும் பொண்ணுக்கு..' - எண்ண ஓட்டத்தை தடை செய்தது, புரோக்கரின் தொடர்ந்த குரல்.

'ஆனா, ஒரு சின்ன ப்ராப்ளம். பொண்ணு இப்பதான் ஜாப்ல சேந்து பத்து மாசம் ஆகுது.'

'அதனாலென்ன ப்ராப்ளம்? வேலைய விட்டுரலாம்தானே' - எந்த தடையையும் உடைத்து நொறுக்க தயாராக இருந்தான் சரவணன்.

'அதில்ல சார். பொண்ணு பெங்களூர்ல வேலைக்கு சேரும்போது மூணு வருஷம் பாண்ட்ல கையெழுத்து போட்டிருக்கா..'

'பாண்ட் பிரேக் ஆச்சுன்னா, பத்து ரூபா திருப்பி கட்டணும்' 

புரோக்கரின் பத்து ரூபா என்பது பத்து லட்சம் என்பது புரிந்தது சரவணனுக்கு.

'அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேண்டி.. அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாரேண்டி' - முணுமுணுத்தான் சரவணன். காஜல் அகர்வால் சாயல் பெண்ணுக்கு இருப்பதாக நினைத்துக்கொண்டான்.

'நீங்க பொறுப்ப ஏத்துக்குவீங்களான்னு பொண்ணு ரொம்ப தயங்கி தயங்கி கேட்டுச்சு. அவளுக்கு உங்கள கட்டிக்கணும்னு ரொம்ப ஆசை'.

எதுக்கு சம்பாரிக்கிறோம். நல்ல வாழ்க்கை அமையத்தானே. இந்த பெண் கிடைத்தால் இதை விட என்ன சந்தோசமான வாழ்க்கை கிடைத்துவிடப்போகிறது பணத்தை வைத்து.

'இன்னிக்கு நீங்க சரி சொல்லிட்டு, அமௌன்ட் அனுப்பி வச்சீங்கன்னா, பொண்ணுட அம்மா அப்பாகிட்ட பேசிறலாம். சாயந்தரம் நல்ல நேரம் இருக்கு. மருதமலை கோவில்ல வச்சு கல்யாணத்த முடிச்சிரலாம்.'

சரவணனுக்கு யோசிக்க கூட நேரம் கொடுக்கவில்லை புரோக்கர்.

'டின்னர் முடிச்சிட்டு, தாஜ்ல ஸ்பெஷல் ரூம் புக் பண்ணிரலாம்.'

'நானும், கன்னிகாவும்  மட்டும் தனியாக. அதுவும் தனி அறையில்'. மின்னலைப்போல் தாக்கிய இன்ப அதிர்வுகளால் நிலைகுலைந்தே போய் விட்டான் சரவணன்.

'சரவணன் சார்.. பொண்ணுக்கு உங்க வாட்சப்  நம்பர் குடுத்திருக்கேன். பேங்க் டீடெய்ல்ஸ் அனுப்புவா. பணம் அனுப்பிட்டு கன்பார்ம் பண்ணுங்க. கல்யாண ஏற்பாடு பண்ணிர்றேன்'.

கையிலிருந்த ஆறு லட்சம் கன்னிகா பேங்க் அக்கௌண்டுக்கு அனுப்பியாச்சு. மீதம் ஒரு மாதத்திற்குள்  கொடுப்பதாகவும் ஏற்பாடு.

அதன் பின்னர் நடந்ததெல்லாம் வெறும் கனவில் நடப்பதுபோல் நடந்தேறியது.

***  ***  ***

இதோ, இத்தனை வருடம் காத்திருந்த வசந்தம் வெகு அருகில். தாஜ் அறையின் குளிர்ச்சியை  தாண்டி வியர்த்தது சரவணனுக்கு.

'ஏங்க, இங்க சரக்கு கிடைக்குமா? ஆடர் பண்ணுங்க' - கன்னிகாவின் குரலில் வந்த முதல் செய்தியை கேட்டு, புரிந்து கொள்ள முடியாமல் விழித்தான் சரவணன்.

'என்ன.. சரக்கா?'

'ஆமாங்க, இன்னிக்கு ரொம்ப அலைச்சல் நமக்கு. சரக்கிருந்தா ரொம்ப நல்லா  இருக்கும்.' - என்ற கன்னிகா தன் மொபைலில் ஏதோ வீடியோ கிளிப்பை தேடினாள்.

'ஆ.. இதோ கெடச்சிருச்சு. பாருங்க இந்த பிராண்ட் ஆர்டர் பண்ணுங்க' - தன் அக்காவுடன் குடிக்கும்போது எடுத்த  விடீயோவை காட்டினாள்.

இதுவரை இன்ப மயக்கத்தில் இருந்த சரவணனுக்கு, தலையில் செங்குத்தாக இடி இறங்கியது.

ஒரு பீடியோ, சிகரெட்டோ, குடியோ எதுவுமே பழக்கம் இல்லாத சரவணன் பதறிப்போனான்.

'இதெல்லாம் தப்புமா. இதுவரைக்கும் நீ எப்படியோ. இனிமேல் நாம் புதுசா வாழ்க்கையை ஆரம்பிப்போம்.'  

இப்படி சொன்ன சரவணனின், சொட்டையாக தயாராக இருந்த  தலையை வெறித்து பார்த்த படியே சொன்னாள், கன்னிகா, 'சரி. ரொம்ப டயர்டா இருக்கு. எனக்கு வேற பீரியட்ஸ் ஆயிருச்சு. தூங்குவோம்' - என்று சொன்னபடியே ரெஸ்ட்ரூம் போனாள்.

திரும்பி வந்தவள் பெட்ஷீட் இழுத்து  போர்த்தி படுத்துக்கொண்டாள். அவளிடம் இருந்து வந்த ஒருவித பழ வாசனை, என்னவென்று சரவணனுக்கு தெரியவில்லை.  

***      ***     ***

நேற்றைய இரவில் நடந்ததை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்ட மாதிரி தெரியவில்லை, கன்னிகாவின் நடவடிக்கைகளில்.

சந்தோசமாக பேசிக்கொண்டு சரவணனுடன் ஷாப்பிங் மால் சுற்றினாள். சரவணனும் சளைக்காமல் அவள் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தான். வாழ்வின் முதன்முறையாக காஸ்மெடிக்ஸ், பியூட்டி ப்ராடக்ட்ஸ், டிரஸ் என ஐம்பதினாயிரத்துக்குமேல் செலவு செய்தான்.

அவள் அருகாமை பிரமிப்பிலிருந்து மீளாமல் சரவணனிருக்க,  அவனுடன் இறுக்கமாக இணைந்து நடந்துகொண்டாள் கன்னிகா.

'எனக்கு எஸ்கலேட்டர்னா பயம். என் பிரண்ட்ஸ் கூட கிண்டல் பண்ணுவாங்க. நீங்க எஸ்கலேட்டர்ல போங்க. நான் படியில் ஏறி வர்றேன்.' - அவனை  நான்காவது மாடி கடைக்கு அனுப்பி வைத்தாள்.

'நாலு மாடி ஏறி வர பத்து நிமிஷம் ஆகுமா. அரை மணி நேரம் ஆச்சு. இன்னும் மேல வரலையே' - இப்பொழுதுதான் சரவணனுக்கு எங்கோ தவறு நடந்த மாதிரி ஒரு பிளாஷ்.

எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை கன்னிகா.

அறையில்  வைத்து விட்டு வந்த  நகைகளும்,  பணமும் அவளைப்போலவே காணாமல் போயிருந்தது. நல்ல வேளை, அறை சாவியை வரவேற்பறையில் கொடுத்து விட்டு போயிருக்கிறாள்.

 ***  ***  *** 

'சார். இது எங்க கண்ட்ரோல் ஏரியா இல்ல. நீங்க அந்த பொண்ணு ஊர்ல போய் கம்ப்ளைண்ட் குடுங்க' - சரவணனின் முறையீட்டை ஏற்க மறுத்து, நூறு  கிலோமீட்டர் தள்ளி இருந்த காவல் நிலையத்தை கை காட்டினார் நிலைய காவல் அதிகாரி.

இனி மீதமுள்ள வாழ்க்கை கன்னிகாவுடன் வாழ்ந்த இரண்டு நாள் நினைவுகளும், காவல் நிலையமும்தான் சரவணனுக்கு.

*** ***  ***

இது ஒரு உண்மை கதை. 

20-06-2022 அன்று செய்திகளில் பரபரப்பாக வந்தது. கதைக்களம் சிறுகதைக்கேற்ப மாற்றம் பெற்றிருந்தாலும், கதைக்கரு உண்மை நிகழ்வு.

தான் கற்ற கல்வியோ, உலக அனுபவ அறிவோ எதுவும் உதவவில்லை சரவணனுக்கு.

தனக்கே உதவாத கல்வியை வைத்துக்கொண்டு எவ்வளவு கதறினாலும், யாருக்கும் உதவாத வறள் பசு போன்றவர்களே இவர்கள்.

கற்ற பசுக்கள் கதறித் திரியினும் வறள்  பசுதானே.. 

***  ***  ***

கற்ற பசுக்கள் கதறித் திரியினும் 
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் 
முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போது 
மற்றைப் பசுக்கள் வறள்  பசுதானே.

                                                                                        - திருமந்திரம் 2015











கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...