Tuesday, November 12, 2019

குரு வழி நாடல்


நான் புதுமையானவன்
உலகை புரிந்து கொண்டவன்


'கொடம்புளி போட்டு மீன் தலைக்குழம்பு, மீன் வறுவல், மீன் சில்லி இன்னும் மீன் பொரியல் செஞ்சு தர்றேன்'- மீனாவின் மீதிருந்த காதலை விட மீன்தான் சுரேஷின் மனதில் மின்னலடித்தது.

'தவத்தில்  சிறப்பு என்னன்னு பார்த்தா, அஷ்டமா சித்திகளும் வசமாயிரும். உடம்பு பொன்போல மிளிரும். முடி கருப்பா எப்பவும் இருக்கும்.. ' - இப்படியாக பரமானந்த குருவின் தெய்வீக உரை போய்க்கொண்டிருந்தது.

'இன்னிக்கு நெறஞ்ச அமாவாசை. யாராவது மீன் சாப்பிடுவாளா? வெண்டக்கா சம்பார்தான். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க'- புதுப்பொண்டாட்டி மீனாவின் வார்த்தைகளை மீறவா முடியும்.

'ஆழ்ந்த தவ நிலையில் குண்டலினி புருவ மத்தியில், நெற்றியில் வருவதோ, உச்சந்தலையில் துரியத்தில் நிற்பதோ கற்பனையே தவிர நிஜமல்ல'- ஆன்மீகத்தை சந்தைப்பொருளாக்கி  காசு பார்க்கும் சத்குரு, நேரடித்தொலைக்காட்சியில் விவரித்துக்கொண்டிருந்தார்.

'அச்சச்சோ.. புது வருஷத்தன்னிக்கு யாராச்சும் மீன் கேப்பாளா. நீங்க கேக்கறேள். இன்னொரு நாள் வைச்சுக்கலாம்.'- முழுகாமல் இருக்கும் மனைவியிடம் கோபம் கொள்ள மனமில்லாமல் போனது சுரேஷுக்கு.

'உலக மக்கள் என்னை தொடர்வதை விட வேறேதும் கதியில்லை. நான் பத்து நிமிடம் அதிகம் தூங்கினால்,  சூரிய உதயமும் பத்து நிமிடம் தாமதப்படும். அனைத்து விலங்குகளுடன் பேச நான் கண்டுபிடித்திருக்கும் சாப்ட்வேர் விரைவில் புழக்கத்துக்கு வரும்.'- அள்ளி வீசிக்கொண்டிருந்தார், அடிவருடிகளின்  பின்னணி இசையோடு, ஆனந்த குரு.

'வேண்டாம்ப்பா. அம்மா கோச்சுப்பா.'- சிக்கன் பர்கர் கேட்ட மகனுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தான் சுரேஷ்.

'ஒண்ணும்  பெருசா இல்ல. மூச்சு விடுறதில கொஞ்சம் திணறல் ஏற்பட்டு சிவபதம் அடைந்து விட்டார். அவர் விட்டு சென்ற பிராணாயாம பயிற்சியை நாம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.'- சீடர்களுக்கு குரு விட்டு சென்ற பாதையை விளக்க ஆரம்பித்தார்  தலைமை சீடர்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா  குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே.
                                                            திருமந்திரம் - 1680

லௌகிக வாழ்விலும் சரி, ஆன்மீக வாழ்விலும் சரி நாம் குருட்டாட்டம்தானே  ஆடிக்கொண்டிருக்கிறோம்.

இறந்தவனை கொல்ல முடியாது; மனதில்
நுழையாதவனை வெளியேற்ற  முடியாது.
இறந்தவனை கொல்வதும், நுழையாதவனை
வெளியேற்றுவதும் குருட்டாட்டமே!










Wednesday, November 6, 2019

அறிவிலார்

இது பொறுப்பதில்லை தம்பி
எரிதழல் கொண்டு வா



ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

அதிகாரம்:  நீத்தார் பெருமை          குறள் எண்: 25


மு.வ உரை:
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின் வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.
கலைஞர் உரை:
புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

என்னுரை:
ஐந்து புலன்களின் இச்சைகளை கட்டுக்குள் வைத்திருப்பவனின் ஆற்றல் எத்தகையது என்றால், அகன்ற வானத்தில் வாழும் தேவர்களின் அரசனான இந்திரனது வாகனமான யானை ஐராவதத்தின் ஆற்றலுக்கு ஒப்பானது ஆகும்.

இந்திரன்-அகலிகை:
அழகில் மிக உயர்ந்தவளாக இருக்கின்ற அகலிகை மேல் இந்திரனுக்கு ஆசை உண்டாகிறது. அவள் ஆற்றங்கரையில் இருக்கும் சமயம் தன்னுடைய விருப்பத்தினை வெளியிட்டு அகலிகையின் கோபத்திற்கு ஆளாகிறான். தன் கணவன், கௌதம முனிவரை  தவிர  பிறரை நினையாமல் வாழும் கற்புக்கரசியாக அகலிகை இருந்ததால், ஒருநாள் கௌதமர் ஆற்றங்கரைக்கு செல்லும் நேரம், கௌதமராக உருமாறி அகலிகையை அடைகிறான்.

இந்திரனா ஐந்தவித்தான்?

அஞ்சும் அஞ்சும் அடக்கு என்பர் அறிவிலார் 
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை 
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு 
அஞ்சும் அடக்க அறிவு அறிந்தேனே.
                                                     -திருமந்திரம் 2033

வானத்து தேவர்களாலும் அடக்க முடியாத, ஐம்புலனிச்சையை அடக்கு, அடக்கு என்று சொல்வது அறியாமையே ஆகும்.

சாணியும்  வண்ணமும்   நீருண்ணும், உண்ணா  
எழுத்தாணி கொண்ட வண்ணம். 








Monday, November 4, 2019

முடத்தெங்கு



காற்றடிக்கும் திசையினிலே
காற்றாடி போகுமப்பா..
போகுமிடம் சேருமிடம்
யாரறிய கூடுமப்பா..





'இது ரொம்ப எளிமையான சவால்.  அருமையான,  வைரங்களால் இழைக்கப்பட்ட காலணி சிறியதாக இருப்பதால், காலை கொஞ்சம் செதுக்கி அணிந்து கொள்ள சொல்லுங்கள்' - பேரரசர் துக்ளக்கின் தீர்வை  கேட்டு அரசவை அதிர்ச்சி அடைந்தது.

டமில், தமில், டெமில், தமிள்... தமிழை செதுக்கி விட்டோம்!

'என்னை விட இந்தக்காலணிகள் மதிப்பு வாய்ந்ததாக இருப்பதால் அதனை தலையில் அணிவதே  சரி.' - முல்லா, தன்னுடைய செய்கைக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார்.

தாய் மொழி தமிழ், மொழிகளுக்கெல்லாம் தாய். தமிழன்டா, தமிழச்சிடா...

'அரசே, காலணியை குழந்தையாக இருக்கும்போதே மாட்டிவிட்டால் போதும். சிறிது, பெரிதென்ற பேச்சுக்கே இடமில்லை'- தெனாலி ராமன் பதிலால் கிருஷ்ண தேவராயர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

ஆதி மொழி அப்படியே இருக்கட்டும், சிந்திக்கவோ, வளரவோ  விட மாட்டோம்.

'மருமகனுக்காக  சமைத்ததை, மகனுக்கு பரிமாறி  வயிறெரியும் தாயும் உண்டானால் அவளும் முடத்தெங்குதான்' - வாய்விட்டு சத்தமாக படித்துக்கொண்டிருந்தான் சேகர்.

தன்னுடைய வீட்டு எல்லையை தாண்டி வளைந்து, நீருற்றி வளர்த்தவருக்கு பலன் தராமல், அடுத்தவருக்கு பலன் தரும் தென்னை மரமே, முடத்தெங்கு.

'கழற்பெய் குடமே மடற்பனை முடத்தெங்கு
குண்டிகைப் பருத்தியோ டிவையென மொழிப.'
 
இதனுட்  1கழற்பெய்குடமாவது  கொள்வோனுணர்வு  சிறிதாயினுந் தான்
கற்றதெல்லாம் ஒருங்குரைத்தல். 2மடற்பனை யென்பது  பிறராற் கிட்டுதற்கு
அரிதாகி  இனிதாகிய  பயன்களைக் கொண்டிருத்தல். 3முடத்தெங்கென்பது
ஒருவர்  நீர்வார்க்கப்  பிறர்க்குப்  பயன்படுவதுபோல  ஒருவர்  வழிபடப்
பிறர்க்கு  உரைத்தல். 4குண்டிகைப் பருத்தியென்பது  சொரியினும்  வீழாது
சிறிதுசிறிதாக     வாங்கக்    கொடுக்குமதுபோலக்   கொள்வோனுணர்வு
பெரிதாயினுஞ் சிறிது சிறிதாகக் கூறுதல்.
                                                                      - சிறப்புப்பாயிரம் [தொல்காப்பியம்]


நாங்க படிக்கும்போதும் சொல்லித்தந்தாங்க. எனக்குதான், மண்டைல  ஏறல.

தமிழில் எழுத்துக்கள்:
   உயிர் எழுத்துக்கள்: 12
மெய்யெழுத்துக்கள்: 18

உயிர் மெய்யெழுத்துக்கள்: 216
உயிர் மெய்யெழுத்துக்கள் கூட்டெழுத்துக்களே அன்றி தனி எழுத்துக்கள் அல்ல.


தமிழில் மொத்த எழுத்துக்கள் 30.

எழுத்து எனப்படுப 
அகரம் முதல் னகர இறுவாய்  
முப்பஃது என்ப 
சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே.

                                                                                -எழுத்ததிகாரம் [தொல்காப்பியம்] 

தமிழ் கற்க முப்பது எழுத்துக்களே போதும் என்று, தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்வோம்; எடுத்து செல்வோம்.


சிறப்பு 
எழுத்துக்களை படித்தாலே வார்த்தை வந்துவிடும். 

  ன்  பு  -  எழுத்து
அன்பு  - சொல்
அன்பு -  பொருள்

O  V  E - ஆங்கிலத்தில் எழுத்துக்களை படித்தால் சொல்லோ, பொருளோ வராது.
















கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...