Sunday, October 6, 2019

நான் யார்?




நான் யார்? நான் யார்? நீ யார்?


'சித்திரகுப்தா, நம் கணக்கில் ஏதோ பிழை இருக்க வேண்டும். மானிடர்களின் வாழ்நாளில் இருபது, முப்பது வருடங்களுக்கு முன்னரே, உயிரை எடுத்து வருகிறோம்.'

'இல்லை பிரபு. இப்பொழுதெல்லாம் உயிரை எடுக்கும் வேலை நமக்கில்லை. அவர்களாகவே வந்துவிடுகிறார்கள்.'

'ஏனப்பா, அவசரமாக வந்தாய்? இன்னும் இருபத்தேழு ஆண்டுகள் உன் கணக்கில் இருக்கிறதே!' - வரிசையில் நின்றிருந்த ஒளியுடலை பார்த்து கேட்டார் எமதர்மன்.

'சுவாமி, நான் யார்?'

பூமியில் தகனமாகிக்கொண்டிருந்த அவனது உடலை பார்த்தார், எமதர்ம ராஜா. ஓ,  இங்கே நின்று கொண்டிருப்பது யார்?

'சுவாமி, நான் யார்?'- மீண்டும் கேட்டது ஒளியுடல்.

மனித உடல், ஒளி உடல், தன் பாசக்கயிற்றில் சிக்கி உள்ள உயிர். இதில் எது இவன்?

'நீ யார்?' - எம தர்மனின் பாசக்கயிற்றில் சிக்கி இருந்த அவனது  உயிரை பார்த்து ஒளியுடல்  கேட்டது.

விடையில்லாத கேள்விகள்.

'இனி உன்னுடைய மனித ஆயுள் முடியும்வரை இப்படியே ஆவியாக இருக்க வேண்டியதுதான்.' என்று தீர்ப்பளித்த எமதர்மன், மீண்டும் கேட்டான்.

'ஆவியை பார்த்திருக்கிறாயா?'

'திருமணம் ஆயிருச்சு..'

'மனதில் அச்சம் இல்லையா?'

'பழகிருச்சு'


ஐவருக்கு ஒருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யை  காத்து வருவார்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரெ.
                                                          - திருமந்திரம் 188

ஐம்புலன்கள் உடலில், உயிருடன் சேர்ந்திருக்கும். [முறையற்ற அல்லது அளவுக்கதிகமாக புலனுகர்வு செயல்களால்] புலன்கள் உடலை விட்டு அகன்றுவிடும் நேரத்தில், உயிரும் உடலை விட்டு நீங்கிவிடும்.

நான் யார்? நான் யார்? நீ யார்?




Saturday, October 5, 2019

உடல்


உடல் 
நீ கொண்டு வந்ததென்னடா, மீசை முறுக்கு!

'அம்மா, காப்பி வழு வழுன்னு குடிக்க முடில'- பாதி தூக்கத்தில் எழுப்பி கொடுக்கப்பட்டதை குடித்துக்கொண்டே சொன்னான் பாலு.

அவன் குடிப்பது காப்பியில் கலந்த விளக்கெண்ணெய் என்பதை சொல்லாமல், 'பேசாம குடி. எல்லாரும் ஒண்ணும் சொல்லாம குடிச்சிட்டாங்க பாரு'.

'எப்ப பாரு புளிய மரமே கதி. மரத்தின் துளிர்விடும் இலைய திங்க ஆரம்பிச்சா, பூ, பிஞ்சு, காய், பழம், கொட்டைனு எதையும் விடுறதில்ல. வயித்தில புழு வந்து தூக்கத்தில், பல்ல நெரிக்கிறது, வலியில மொணங்குறது.'- மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.

ரொம்பவும் முத்தாத புளியங்காய் புடுங்கி, பச்சை மொளகா, உப்பு சேத்து, கொட்டையோட வச்சு, அம்மிக்கல்லில் அரைச்சு தின்னா, நாலு நாளைக்கு நாக்குல எரிச்சல் இருக்கும், நாக்குத்தோல் உறிஞ்சு போய்.

புளியங்கொட்டைக்கு நெறய வேல இருக்கு. ஒருபக்கம் நல்ல தேச்ச, ஆறு கொட்டைகளை வச்சு தாயம் விளையாடலாம். தண்ணி காய்ச்சும் அடுப்புல, சாம்பலுக்கு அடில கொட்டைய போட்டுட்டா, அத தோல  எடுத்துட்டு சாப்பிடலாம். ஆனா அவ்வளவு சுலபம் இல்ல, சாப்ட்டு முடிக்கிறது. அல்லது இருக்கவே இருக்கு, கல் உரலில் போட்டு குத்தி, தோலெடுத்துட்டு ராத்திரில உப்பு தண்ணில ஊறப்போட்டுட்டா, காலைல சாப்பிடலாம்.

'எப்படித்தான் திங்குதுகளோ. யார் சொல்லிக்குடுத்தாங்க, இப்படி  திங்கிறத'

இந்த விளக்கெண்ணெய் காப்பி, வருடத்திற்கு ஒருமுறை வீட்டில்  அத்தனை பேருக்கும் உண்டு. உடலில் சேர்ந்துள்ள விஷ சத்துக்கள் இயற்கையாக வெளியேற இதைவிட சிறந்த மருத்துவ முறை உண்டா என்று தெரியாது.

'குதிரையில் தூரப்பயணம் செல்லும் மனிதர்கள், எப்படி குதிரையை பராமரிப்பார்களோ,  அதே அளவு நம் உடலை நாம் பராமரிக்க வேண்டும்.' - ஷீரடி சாய்பாபாவின் அருளுரைகளில் ஒன்று இது.

நம் உடம்பே இறைவன் எழுந்தருளியிருக்கும் கோவில். உடம்பை பராமரிப்பது அந்த இறைவனுக்கு செய்யும் தொண்டு என்கிறார் திருமூலர்.


உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.
                                                                            -திருமந்திரம்

கொண்டு வந்ததொன்றுமில்லை. கொண்டு செல்வதொன்றுமில்லை.

'சார், எங்கே போறீங்க?'

'போடா, வெளக்கெண்ண'


Tuesday, October 1, 2019

அக்டோபர் இரண்டு

அக்டோபர் இரண்டு
Image result for old indian coins images

மஹாத்மா
வாழ்க வளமுடன்!
              ***


'முருகேசு, பாருடா..'- கைகளை விரித்து துள்ளிக் குதித்துக்கொண்டு வந்தாள்  பாரு என்கிற பார்வதி.

'ஆமாம், நீ பாருதான்'- அவள் கைகளில் இருந்த ஓட்டைக்காசை  பார்த்து, 'ஏதுடி, உனக்கு  காலணா?' என்று வியந்தான்.

'மாமா குடுத்தாரே.. இன்னிக்கு எனக்கு பொறந்த நாளாம்'- சொல்லும்போதே மகிழ்ச்சி பொங்கியது அவளுக்கு.

'ஜவ்வு மிட்டாய் வாங்கலாமா.. இல்லை கம்மர்கட் வாங்கலாமா?'- அவனுடன் பகிர்ந்துகொள்வதில் சந்தோஷம் என்பதை அவளுடைய  ஆர்வம் காட்டியது.

அவனுடைய மனமோ, 'மூன்று பைசா என்பது அரையணா. ஓரணா ஆறு பைசா. நாலணா இருபத்து நான்கு பைசா. ஆனா, நாலணா இருபத்தைந்து பைசாவா வருதே'- என்று கணக்கு போட்டு கொண்டிருந்தது.

இது இயல்பாக நடக்கும் செயல்போல் அவன் சிந்தனையில்  தோன்றினாலும், அவனுக்குள் இருக்கும் ஜீவாத்மாவின் அறிவு நிலையே இந்த எண்ணத்தின் அடி உரம்.


பாரப்பா ஆதாரம் ஆறாதாரம்
பரிவான ஆதார மடத்துக்குள்ளே
நேரப்பா அக்கினிதான் ஜீவாத்மாவே
நிறைந்துநின்ற வாய்வதுதான் பரமாத்மாவாய்ப்
பேரப்பா பெருகி நின்ற கடத்தினுள்ளே
பிளமாக நின்று திருவிளையாட்டாடி
காரப்பா ஆகாசஞ் சாக்ஷியான
கருணையுடன் நின்றுதடா கருவாய்க்காணே.
                                            - அகத்தியரின் சௌமிய சாகரம் 24

ஆறு ஆதாரங்களுடன் அமைந்துள்ள மனித உடலில், ஜீவாத்மாவாக அக்கினி. அக்கினியை உயிர்ப்புடன் வைத்திருக்கும், நாம் சுவாசிக்கும் வாயுவாக  பரமாத்மா. 

ஜீவாத்மா அன்பும், அஹிம்சையும் கொண்டு நமக்கு தொண்டு செய்யும்போது மஹாத்மாவாக போற்றப்படுகிறது.

வாழ்க மஹாத்மா.. வளர்க அவர்தம் தொண்டுள்ளம் உலகத்தோரிடம்..





கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...