Thursday, August 30, 2018

இளமையில் கல்

இளமையில் கல் 







Image result for python in water images


ஆர்கானிக் கெமிஸ்ட்ரி புத்தகம் தலைக்கு வைக்க கொஞ்சம் வாகாக இருந்தது. வயல் வரப்பு கொஞ்சம் மேடாக இருந்தாலும் சமமாக இல்லை. அதை சரி கட்ட புத்தகம் ஒத்தாசை செய்தது. கெமிஸ்ட்ரி பாடம் எடுத்தது சரியான முடிவுதான் என்று தன்னைத்தானே மெச்சிக்கொண்டான்.

இப்ப நல்ல தெளிவா தெரியுது கொய்யா மரம். அணில் அங்கும் இங்கும் தாவிக்கொண்டிருந்தது. அப்படின்னா, கண்டிப்பா கொய்யாப்பழம் இருக்கணும். மனசுக்குள் கணக்குப்போட்டான். கண்கள் மரம் முழுக்க அலை பாய்ந்தது. பழுப்பேறிய இலைகளும், முற்றாத காய்கள் மட்டும் பார்வைக்கு பட்டது.

இரண்டாமாண்டு கல்லூரி படிப்பு. ஆண்டிறுதித் தேர்வு படிப்பு விடுமுறை நாட்கள். வீட்டில் குளிர் சாதனம் கிடையாது; அட, ஒரு மின் விசிறி  கூட இல்லை. எனவே தோட்டம், வயல் என்று கிளம்பி விடுவான் புத்தகங்களை  சுமந்து கொண்டு. 

உச்சி வெயில் உக்கிரம் தணிகின்ற மாலை நேரம். மேற்கு மலைத்தொடர்ச்சியின் அடிவாரத்தில்  உள்ள ஒரு சின்ன கிராமம் அது. ஆறோ, அணைக்கட்டோ இல்லை என்றாலும் தண்ணீருக்கு கவலை இல்லாத வற்றாத கிணறுகள். கரும்பு, நெல் வயல்களும், தென்னந்தோப்புகளும் மிகவும் செழிப்பாக வளர்ந்து பலன் தரக்கூடிய பூமி அது.

'உஷ்..உஷ்.' - மிக அருகில் கேட்கும் சத்தம் அவன் காதுகளுக்கு வித்தியாசமாக படவில்லை. கூட வந்த நண்பனின் குறட்டை சத்தம் அது என்று தெரியும் அவனுக்கு. கொஞ்சம் பெருமை கூட.. நானாவது இவ்வளவு நேரம் புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தேன். அவனோ, வந்தவுடன், இடத்தை சரி செய்தவன்தான்; இன்னும் நல்லா தூங்கிக்கொண்டிருக்கிறான்.

'ஒரு கொய்யாப்பழம் கூட கண்ணுல மாட்ட மாட்டேங்குதே ' - கவலையுடன் கொஞ்சம் மேலே பார்த்தான். தென்னை மரங்களில்  சட்டிகள் காய்த்து தொங்கியது.

'யாருடா அது, தினமும் கள்ள குடிச்சிட்டு வெறும் சட்டிய விட்டுட்டு போறது' - காலையில் தோப்புக்காரன் சத்தம் போட்டது நினைவில் ஆடியது. நாங்கள் மரம் ஏறவில்லை என்பதாலோ, கள்ளு குடிக்கும் அளவுக்கு வளரவில்லை என்பதாலோ அவர்களுக்கு விடுக்கப்பட்ட கேள்வியாக தெரியவில்லை. ஆனாலும் சட்டியை பார்த்ததும், அவனுக்கு அந்த கேள்வி  நினைவில் வந்து போனது.


'டேய்.. இங்க பாரு'- கையில் கரும்புடன் ஓடி வந்த நண்பனைப்பார்த்தான்.

'நீ தூங்கலியா?'

'தூங்கி எந்திரிச்சி  மொகம் கழுவ போனேன். இந்தா கரும்பு'

அப்படின்னா.. அந்த 'உஷ்.. உஷ்' சத்தம்?

கரும்பின் இனிப்பில், சந்தேகம் மறந்து, கரைந்து விட்டது.

மொபைல், டிவி எல்லாம் இல்லாத நல்ல  காலம் அது. மாலை நேரத்தில், வாலிபால் விளையாடுவார்கள்.

படித்த வரை போதும். விளையாட போகலாம் என்று கிளம்பினார்கள். கிணற்று மேட்டில் இருந்த பாதாம் மரம், பழங்களுடன் அவர்களை தடுத்து நிறுத்தியது.

பிறகென்ன.. கிடைத்த கற்களை எடுத்து பழம் பறிக்க எறிந்தார்கள். கல்லை பொறுக்கும் போதுதான் பார்த்தான், கிணற்றுக்குள் வித்தியாசமான நீரலைகள்.

'டேய்.. பார்ரா.. பாம்பு.. பெருசுடா..'

அப்படின்னா, உஷ்.. உஷ்.. சத்தத்துடன் தலை மாட்டை கடந்துபோனது இதுவா?

பழத்துக்கு பொறுக்கிய கற்களை  கிணற்றுக்குள் வீசினார்கள்.

முப்பதடி ஆழத்தில் இருந்த பாம்பின் மேல் இவர்கள் வீசும் கல் பட வாய்ப்பு ரொம்பவுமே கம்மிதான்.


திடீரென்று கிணற்றில் தாக்குதல் நடப்பதை தெரிந்துகொண்ட, அந்த மலைப்பாம்பு, வந்த வழியில் திரும்ப, வளையை நோக்கி தலையை தூக்கி வைத்தது.

'பாத்தியா.. சரியா அடிச்சிட்டேன்' -  குறி பார்த்து வீசாத கல் இலக்கை சரியாக தாக்கி, அதன் வாழ்வை முடித்து வைத்தது.

கடமையை செவ்வனே செய்து முடித்து விட்ட எக்களிப்புடன் விளையாட சென்றார்கள்.

இளமையில் கல்.

பின்னூட்டம்:

'உனக்கு நகராஜ்னு பேர் வச்சதே நாக தோஷம் இருக்குன்னுதான். இப்ப இத வேற பண்ணிட்டு வந்து நிக்கிறே' - அம்மா திட்ட ஆரம்பித்தார்கள், நான்  பாம்பை கொன்ற செய்தியை கேட்டு.

'அய்யா, வாழைத்தோட்டத்து அய்யா மன்னிச்சிருங்க பையனை. அறியாம செஞ்சுட்டான். உங்க சந்நிதிக்கு வந்து பையனுக்கு மொட்டை போடுறோம்.' - கையோடு அம்மா பாவ நிவர்த்தி வேண்டுதல் செய்தார்கள். 

அதற்கு பின்னர் நடந்ததுதான் அதிசயம். ஒவ்வொருமுறை உணவின்போதும் ஏதோ ஒரு வகையில் மொட்டை கொடுப்பதற்கான நினைவூட்டல் வந்து கொண்டே இருந்தது. ஓட்டலில் சாப்பிட்ட ரோஸ்டில் கூட ரோமம் வந்தது. ஒரு மூன்று வருடம் கழித்து மொட்டை கொடுத்த பின்னால் எந்த நினைவூட்டலும் இல்லை.

*** *** ***








No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...