Tuesday, January 21, 2025

கதிரொளியில் உயிரலைகள்

கதிரொளியில் உயிரலைகள் 






அணுவினுள் ஆற்றலாய் நின்றியங்கும்
அணுவினும் நுண்ணிய பருப்பொருளே  
உயிரினை உடலுடன் ஒன்றிணைக்கும் 
உயரழுத்த  மின்காந்த அலைகள்


அணு, அறிவியல் கண்டறிந்த மிகச்சிறிய பருப்பொருள். அணுவை பகுத்தறிய முடியும் என்ற அறிவியலாளர்களின் ஆய்வுகள், அணுவைப்பற்றிய ஆராய்ச்சியை மேலும் தொடர ஆர்வத்தை தூண்டியது. அணுவினுக்குள் நியூக்ளியஸ் என்னும் கருப்பொருளும், அதனை சுற்றிக்கொண்டிருக்கும் எலக்ட்ரான் என்னும் சார்பொருளும் இருப்பதை கண்டறிந்தார்கள். இதையே நாம், சூரியனை நியூக்ளியசாக கொண்டு சுற்றும் கிரகங்களை எலெக்ட்ரான்கள் என்று  கற்பனை செய்து கொள்ளலாம். 

இத்தோடு அறிவியல் ஆய்வு நிற்கவில்லை. எலெக்ட்ரானின் சுழற்சியை ஆராய முற்பட்டார்கள். சுழற்சிக்கு தேவையான ஆற்றலை குவாண்டம் என்று பெயரிட்டு மேலும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். குவாண்டம் என்றால் ஆற்றலின் ஒரு அளவுகோல். எலெக்ட்ரானின் சுழற்சி எவ்வாறு செயல்படுகிறது என்று பார்த்ததில் இரண்டு உண்மைகள் தெரிய வந்தது.

வரைமுறைப்  படுத்தமுடியாத வேகத்தில் நியூக்ளியசை சுற்றும்  எலக்ட்ரான்கள், ஒரு நிலையில் பருப்பொருளாகவும், மற்றொரு நிலையில் அலைகளாகவும் செயல்படுவதை உறுதி செய்திருக்கிறார்கள். 

அதாவது, எலெக்ட்ரான்கள் மின்காந்த அலைகளாக  நியூக்ளியசை சுற்றிக்கொண்டிருக்கிறது. இங்கே குவாண்டம் என்னும் இறை ஆற்றல் நியூக்ளியசையும், எலெக்ட்ரானையும் இணைக்கும்  ஆற்றலாய் விளங்குகிறது.

இனி, நம் உடலுக்கு வருவோம். உடலுடன் உயிர் இணைந்தே செயல்படுகிறது, நியூக்ளியசும் எலெக்ட்ரானும் போல. இங்கே குவாண்டமாக செயல்படும் ஆற்றல் இறை ஆற்றல். மின்காந்த அலைகளாக உடல் முழுவதும் உயிருடன் இணைந்து செயல்படுகிறது.

அதாவது, உடலை உயிருடன் கட்டி இருக்கும் மின்காந்த அலைகளே இறைவன்.

ஒவ்வொருவர் உடலிலும் இவ்வாறாக இறைநிலை செயல்படுவதை  திருமூலர் மிகத்தெளிவாக நமக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சொல்லி சென்றிருக்கிறார்.

திருமந்திரம் - 2002

கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே. 

நீர் நிறைந்த குடங்களை சூரிய ஒளியில் வைத்தால், அனைத்து குடங்களிலும் சூரியனின் பிம்பம் தெரியும். குடத்தில் மூடி வைத்துக்கொள்ளலாம் என்றால் சூரியனை  குடத்தில் அடக்க முடியாது.

விஷத்தை உண்ட இறைவனும் அனைத்து உயிர்களின் உடலில் தோன்றி இருப்பதும், நீர் நிறைந்த குடத்தில் தோன்றிடும் சூரியன் போலத்தான்.

மின்னலைகளாக, ஒப்பற்ற ஆனந்த ஒளிக்கற்றை ஆற்றலாக,  நம் உடலில் இருப்பது இறைவன்.


*** *** *** *** *** 

இறைநிலை தியானம் 

மனதை புருவ மத்தியில் நிறுத்தி, திரிவேணி சங்கமமாக உடல், உயிர் மற்றும் இறை ஒன்று கூடுவதை கவனிப்போம். 

அகத்தை திறக்கும் திறவுகோல் உள்ளம். உள்ளமே நம்முடலையும், உடலுடன் உயிர் இணைந்து  இருப்பதையும் உணர்கிறது. 

உடல் நிலத்தின் பண்புகளால் ஆனது. நிலத்தில் கிடைக்கும் உணவினைக்கொண்டே தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.

உயிர் உருவான நாளிலிருந்து உடலுடன் இணைந்து செயல்படுகிறது. உயிரை காற்றிலுள்ள பிராண வாயு பாதுகாக்கிறது. உயிர், உடலின் ஒவ்வொரு சிற்றறையிலும் உடல் இயக்கத்துடன் இயைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

உடலும், உயிரும் இணைந்து செயல்பட்டாலும், இணைப்பு ஆற்றலைப்பற்றி அறியாமல் இருக்கிறது மனம். குவாண்டம் அறிவியல் மூலம், இரண்டையும் இணைப்பது இறை நிலையிலுள்ள மின்காந்த அலைகள் என்று அறிந்து கொண்டோம்.

மனதை புருவ மத்தியில் நிறுத்தி, திரிவேணி சங்கமமாக உடல், உயிர் மற்றும் இறை ஒன்று கூடுவதை கவனிப்போம். 

முதலில் உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உண்மைகளை ஒவ்வொன்றாக கவனத்தில் கொள்வோம்.

பஞ்சபூதங்கள் - 5:

உடலைப் பெற்றுத்தந்தது நிலம். உடலில் நீரோட்டமாக உள்ளது சக்தி பரிமாற்றம். வெப்பமே அனைத்து உடல் காரியங்களுக்கும் அடிப்படை காரணியாக இருக்கிறது. காற்று உயிரை நிலை நிறுத்தும் பணியை செய்கிறது. ஆகாயம் உடலின் சிற்றறைகளில் உள்ள உயிரை இணைக்கும் அலை வரிசையாக உள்ளது. இவ்வாறாக பஞ்சபூதங்களின் செயல் தொடர்ந்து நம் உடலில்  செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஞானேந்திரியங்கள் - 5: 

உடல் இயக்கத்திற்கு தேவையான அவசியங்களை கண், காது, மூக்கு, வாய் மற்றும் மெய் உண்டாக்கித்தருகிறது.

கர்மேந்திரியங்கள் - 5:

ஐம்புலன்கள் உண்டாக்கும் அவசியங்களை நடத்தி தருவது, கால், கை, வாய், கருவாய் மற்றும் எருவாய் எனப்படும் கர்மேந்திரியங்கள்.

தன்மாத்திரைகள் - 5:

ஐம்புலன்களால் உண்டாகும் பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல் மற்றும் நுகர்தல் போன்ற உலக அனுபவங்களை உணரச்செய்கிறது.

மேலே குறிப்பிட்டவை எல்லாம் உடலுடன், உயிர் அனுபவிக்கும்  உண்மைகள். 

அந்தக்கரணங்கள் - 4:

உலக வாழ்வின் அனுபவத்தை உடலுக்கும், உயிருக்கும்  கொடுப்பது அந்தக்கரணங்கள் எனப்படும் மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி.

இந்த 24 உண்மைகளும் ஆன்ம தத்துவங்கள் என்றும் அறியலாம். இதில் முக்கியமாக மனம். மனமே அனைத்துக் காரியங்களுக்கும் முன்னிலை வகிக்கிறது.

மனதை புருவ நெற்றியில் நிலைப்படுத்தி, மின்காந்த அலைகளான இறை ஆற்றலை பெறுவதாக தியானம் செய்வோம்.

முதலில், புருவ நெற்றியில் உங்களுக்கு பிடித்த தெய்வத்தின் உருவத்தை தியானிக்க ஆரம்பியுங்கள். அந்த பரு உருவம் மறைந்து மின்னலைகளாக மாறும் வரை தொடர்ந்து தியானம் செய்து வாருங்கள்.

*** *** *** *** ***

கொஞ்ச நாட்களில் இந்த தியானத்தின் பலன்களை நீங்களே மற்றவர்களுக்கு சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள்.

இறைநிலை தியானம் உங்களுக்கு சீராக அமைய வாழ்த்துகள்.

*** *** *** *** **


  





ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...