அறம் செய விரும்பு
தருமம் செய்யவும் விருப்பத்துடன். இதைத்தான் நமக்கு சொல்லி தந்தார்கள்.
ஆனால்,
அறம் என்றால் என்ன?
அறம் என்றால் என்ன? என்ற வினா எழுப்பினால் அதற்கு விடை காண்பது கடினமானது. அறம் என்ற சொல்லின் பொருள் என்ன? ‘அறு’ என்ற வினைச்சொல் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல். இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்னும் சொல்லிற்குப் பின்வருமாறு விளக்கம் கூறலாம்.
மேலும் படிக்க கீழ்கண்ட இணைய பக்கத்திற்கு செல்லவும்:
https://www.tamilvu.org/courses/degree/c012/c0121/html/c012111.htm
அறம் எனப்படுவது நியம பண்புகளை வாழ்வின் வழியாக கொண்டு இயமத்திடை நிற்றல் ஆகும்.
நியம பண்புகள்:
1. தூய்மை - உள்ளத்தில் தூய்மை
2. அருள் - கருணை உள்ளம்
3. ஊண் சுருக்கம் - அளவறிந்து உண்ணல்
4. பொறை - பொறுமையாக இருத்தல்
5. செவ்வை - நேர்மையுடன் நடத்தல்
6. வாய்மை - உண்மை பேசுதல்
7. நிலைமை - நடுவு நிலை நிற்றல்
8. காமம் - அளவற்ற இச்சை
9. களவு - பிறர் பொருளை அபகரித்தல்
10. கொலை - உயிர்களை கொல்லுதல்
தூய்மை அருள்ஊண் சுருக்கம் பொறை செவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றுஇவை
காமம் களவு கொலைஎனக் காண்பவை
நேமி ஈர்ஐந்து நியமத்தன் ஆமே.
- திருமந்திரம் 556
இயமம் எனப்படுபவை,
1. கொல்லான் - பிற உயிர்களை கொல்ல மாட்டான்
2. பொய் கூறான் - உண்மைக்கு புறம்பாக பேச மாட்டான்
3. களவிலான் - பிறர் பொருள்களை கவர மாட்டான்
4. எண்குணன் - தன் நல்ல எண்ணம் போன்ற குணத்தை கொண்டவன்
5. நல்லான் - பேசவும், பழகவும் நல்லவன்
6. அடக்கம் உடையான் - அடக்கத்துடன் நடந்து கொள்பவன்
7. நடுச்செய்ய வல்லான் - பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்ப்பு சொல்பவன்
8. பகுந்துண்பான் - தனக்கு கிடைத்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துண்பவன்
9. மாசிலான் - குற்றமற்றவன்
10. கள் [இல்லான்] - மது அருந்தாதவன்
11. காமம் இல்லான் - மித மிஞ்சிய இச்சைகளை வளர்த்துக்கொள்ளாதவன்
கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கள்காமம்
இல்லான் இயமத் திடைநின் றானே.
- திருமந்திரம் 554
திருக்குறளில் உள்ள அறன் வலியுறுத்தல் [31-40] பாடல்கள், மேற்குறிப்பிட்ட பொருளுடன் விளங்கிக்கொள்ள சிறப்பாக உள்ளது.
அறவழியில் வாழ்பவனுக்கு, பொறாமை, பேராவல் அதாவது காமம், கோபம் கொண்டு வெகுண்டெழுதல் மற்றும் கடு மையான வார்த்தைகளை கொண்டு பேசுதல் அவன் அறவாழ்வின் எதிரிகளாகும்.
அழுக்காறவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்.
- குறள் 35
பேசாமல் மனதளவில் எந்த குற்ற எண்ணம் இல்லாமல் இருப்பதே தலை சிறந்த அறமாகும்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
- குறள் 34