Wednesday, March 9, 2022

முக்கனல்

முக்கனல் 

புதிய சூரியனின் 
பார்வையிலே..
உலகம் விழித்துக்கொண்ட
வேளையிலே..    


இந்த அனுபவம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதா?

அதிகாலை நடைப்பயிற்சி செய்யும்போது கிடைக்கக்கூடியது.

காலை ஆறுமணி வாக்கில் பூங்காற்று வீசும். அதுவும் ஒரு ஐந்திலிருந்து பத்து நிமிடம் மட்டுமே. அதை தென்றல் என்று சொல்லி ஒதுக்கி விட முடியாது. அதனினும் மென்மை மற்றும் மேன்மையானது.

நடைப்பயிற்சியில் ஏற்படும் களைப்பை களைந்து உடனடி உற்சாகத்தை தரக்கூடியது. ஒவ்வொரு நாளும் இந்த அனுபவத்திற்காகவே காலை நடைப்பயிற்சியில் எனக்கு ஆர்வம் அதிகம்.

லேசாக வியர்த்திருக்கும் உடலுக்கு, அந்த காலை இளங்காற்று சுகமாக இருக்கும்.

உழைப்பில் ஈடுபடும்போதோ, வெளியில் வெப்பம் அதிகமானாலோ  வியர்த்து, உடல் வியர்வையை வெளியேற்றுகிறது.

இது எதனால், எப்படி  என்று பார்ப்போம்.

சாதாரணமாக உடலின் வெப்ப நிலை சற்றேறக்குறைய 98.6 F டிகிரி அல்லது 36.4 C  டிகிரி அளவில் இருக்கும். இந்த உடலின் வெப்பத்தில் மாற்றம் ஏற்பட்டால் உடல் தன் வெப்ப சமனத்தன்மை பெறுவதற்கு சில காரியங்களை செய்யும். அவற்றில் ஒன்று வியர்வை.

அது தவறும் பட்சத்தில், அதிக வெப்ப நிலை என்பது காய்ச்சலாகவும், குறைந்த வெப்ப நிலை  உடலில் ஜன்னியாகவும் அறிகிறோம்.

சரி, உடலின் வெப்பம், உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை சீராக எப்படி இருக்கிறது. வயிற்றில் [மணிப்பூரகம்] வெப்பம் உண்டாகிறதென்றால், உச்சந்தலைக்கோ, உள்ளங்காலுக்கோ செல்வதற்குள் குளிர்ந்து விடாதோ?

அவ்வண்ணமே, சூரியனில் உண்டாகும் வெப்பம், சூரியக்கதிர்களாக உறைபனிக்கும் மிகக்குறைந்த வெப்ப மண்டலத்தை கடந்தும் பூமிக்கு எப்படி வெப்பம் கொடுக்கிறது. விமானப்பயணத்தின்போது கவனித்திருக்கலாம், விமானம் உயரப்பறக்கும்போது, வெளி வெப்பநிலை மைனஸ் 50 டிகிரிக்கும் கீழே இருக்கும். இந்த வெப்ப நிலை உறைபனிக்கும் குறைவானது. இக்குளிர் வெளியை கடக்கும்போது  குளிர்வடைந்த சூரியக்கதிர்கள், எப்படி வெப்பம் பெற்று பூமிக்கு வெப்பத்தை கொடுக்கிறது?

அவை எப்படி சாத்தியம் என்று  பார்ப்போம்.

உடலில் உள்ள ஒவ்வொரு சிற்றறையும்,  சக்தியை   எரிக்கும் கொதிகலனாக இருக்கிறது. சிற்றறையில் உள்ள சக்தியானது அங்கேயே எரிக்கப்படும்போது  உடலுக்கு தேவையான வெப்பம் சமச்சீராக கிடைக்கிறது.

அதே போன்று, சூரியக்கதிர் பூமி மண்டலத்தை அடையும்பொழுது, புவிஈர்ப்பு காந்த மண்டலத்துடன் சேர்ந்து  வேதி மாற்றம் பெற்று  வெப்பத்தை கொடுக்கிறது. புவி ஈர்ப்பு அதிகம் உள்ள பூமத்திய ரேகை பிரதேசங்களில் வெப்பம் கூடுதலாக உள்ளது.

உயிர்கள் இந்த மண்ணில் வாழ மூன்று வகையான வெப்பம் உடலுக்கு  தேவைப்படுகிறது. அவைகளை, உயிர்க்கனல், இறைக்கனல் மற்றும் புறக்கனல் எனப்பிரித்தறியலாம்.

1. உயிர்க்கனல் 

உயிர்க்கனலை மூலக்கனல் என்றும் அறியலாம். மூலாதாரத்தில் இருந்து எழும் நெருப்பானது மணிப்பூரகத்தில் வெளிப்பட்டு நாம் உண்ணும் உணவை ஜீரணிக்க உதவுகிறது. மேலும் உணவில் இருந்து கிடைக்கும் ஏழு வகை சத்துக்களை உடலின் அதனதன் பகுதிகளுக்கு அனுப்பி வைக்க உந்துதலாகவும் இருக்கிறது. 

மூலாதாரத்தில் நெருப்பை யார் வைத்தது?

வேயின் எழுங்கனல் போலஇம் மெய்எனும் 
கோயில் இருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும் 
தோயமதாய்  எழும் சூரியன் ஆமே. 

                                                                                   - திருமந்திரம் 116

மூங்கில்கள் உரசிக்கொள்ளும்போது நெருப்பு உண்டாகும். அவ்வண்ணமே மனித உடலில் ஜீவாத்மாவாக குடிகொண்டுள்ள பரமாத்மா, கடலில் இருந்து எழும் சூரியன் போல, தாயின் பரிவுடன் மும்மலங்களை அகற்றி, உயிர்க்கனலாக எழுகிறான்.

2. இறைக்கனல் 

உடலில் உயிர் இருக்கும்வரை மூச்சுக்காற்றின் மூலம்  இறைக்கனல் உடலில் பாய்ந்துகொண்டே இருக்கும். இக்கனலே, உயிர்க்கனல் உடலின் சிற்றறைகளில் சேமித்து வைத்த சக்தியை எரிக்க உதவும் நெருப்பு பொறி ஆகும். இறைக்கனலின் தன்மையால் சக்தி எரிக்கப்பட்டு உடல் இயங்குவதற்கான ஆற்றல் கிடைக்கிறது.

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே 
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா 
சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல் 
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.

                                                                                  - திருமந்திரம் 117

குவிக்கப்பட்ட சூரியக்கனல் பஞ்சை எரித்துவிடும். ஆனால், உடலை எப்பொழுதும் சுற்றிவரும்  இறைக்கனல் உடலை எரிப்பதில்லை. [மாறாக உணவில் இருந்து சிற்றறையில் சேமிக்கப்பட்ட சத்தினை எரிக்கும் பொறியாக அமைகிறது.] இவ்விறைக்கனலின் தன்மையை உணர்ந்து கொண்டவர்களின் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள், சூரியக்கனல்  குவியலின்  முன்னர் இருக்கும்  பஞ்சு எரிவதுபோல் எரிந்துவிடும்.

3. புறக்கனல் 

புறக்கனல் என்பது  சூரியனில் இருந்து பூமிக்கு கிடைக்கும் வெப்பம் ஆகும். இந்த வெப்பமானது, இடத்திற்கேற்பவும், காலத்திற்கேற்பவும் மாறுபடுகிறது.

நம் உடல் சூரிய வெப்ப  நிலைக்கேற்ப  தன்னைத்தானே சமச்சீர் நிலையில் வைத்துக்கொள்கிறது. வெளியில் வெப்பம் அதிகமானால், உடலில் உள்ள நீர் வியர்வையாக மாறி உடலை குளிர்விக்கிறது. அதே சமயம், குளிர் அதிகம் உள்ள காலத்தில், சிற்றறைகளில் உண்டாகும் வெப்பம் கூடுதலாகி உடலை வெப்பமாக வைத்துக்கொள்கிறது.

அங்கிமிகாமை வைத்தான் உலகு ஏழையும் 
எங்குமிகாமை  வைத்தான் உடல் வைத்தான் 
தங்கிமிகாமை வைத்தான் தமிழ்ச்  சாத்திரம் 
பொங்கிமிகாமை வைத்தான் பொருள் தானுமே.

                                                                                  - திருமந்திரம் 87

ஏழுலகைப் படைத்த இறைவன் எங்கும் வெப்பத்தை தேவையான அளவு  வைத்தான். அவ்வண்ணமே உடலைப்படைத்த இறைவன், அதிகமான வெப்பம் உடலில் தங்காமல் இருக்குமாறு பார்த்துக்கொண்டான். இவற்றின் பொருளை அறிந்துகொள்ள, தமிழ் சாத்திரம் என்னும் திருமந்திரத்தையும் தேவையான பொருள் தரும்படி  அளவுடன்  படைத்தருளினான்.









கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...