வந்தது தெரியும்
போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
- கவியரசு கண்ணதாசன்
மனித வாழ்வின் ஆரம்பமாக உயிர் வந்தது தெரியும்.
உயிரின் ஆதி பிறப்பு தெரியுமா?
யாருக்குமே தெரியாது.
எங்கிருந்தோ வந்தாய்..
எங்கேயோ போய்க்கொண்டே இருக்கிறாய்..
எங்கே சென்றடைவாய்?
இதுவும் யாருக்கும் தெரியாது.
எலும்புக்கும், சதைக்கும் மருத்துவம் உண்டு.
உயிருக்கு மருத்துவம் உண்டா? உயிரின் மகத்துவத்தை பகுத்தறிந்தோர் உண்டோ?
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
உயிரின் அளவை சொல்லும் திருமூலர், அதன் ஆதி பிறப்பையும், பயணிக்கும் தன்மையையும், இறைமைக்கு ஒப்பாக்குவதால், நாம் தள்ளி நின்றே உயிரை கவனிக்க வேண்டியவராகிறோம்.
ஆனால், உயிரின் உள்ளொளியை நம்மால் காண முடியும் என்று அறுதியிட்டு சொல்கிறார்.
காண கிலாதார் கழிந்தோடிப் போவார்கள்
நாண கிலாதார் நயம் பேசி விடுவார்கள்
காண கிலாதார் கழிந்த பொருளெல்லாம்
காண கிலாதார் கழிகின்ற வாறே.
- திருமந்திரம் 761
உயிரின் உள்ளொளியை காணாதவர்களின் உள்ளொளியும் அவரைப்போலவே மறைந்துவிடும். வெட்கம் கெட்டவர்கள் இவர்கள், எதற்கும் உதவாத சாத்திரம் பேசி நேரத்தை வீணடிப்பவர்கள்.
உயிரை வளமாக்க, உடலை உரமாக்க சொல்கிறார்.
இருப்பினும், என்புதோல் போர்த்த உடல், உயிருக்கான தற்காலிக புகலிடம் மட்டுமே.
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது
பற்பல யுகங்களாய் தொடரும் உன் உயிர், எத்தனையெத்தனை பரு உடல் பெற்றிருக்கும்? அத்தனையும் உனக்குள் உறையும் உயிருக்கு தெரியுமல்லவா?
உன்னுடலில் இருக்கும் உயிருக்கு முக்காலமும் தெரியும்; பிரபஞ்ச ரகசியம் அனைத்தும் தெரியும்.
உயிரின் கதவை
தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் தரப்படும்
புலன்களின் ஆளுமையில் உள்ள உடலையும், உயிரையும் இணைக்கும் பாலம் உள்ளம். உள்ளத்தில் புலன்வழி வரும் எண்ணங்களை பதப்படுத்தி, உயிர் வழி செலுத்திப்பாருங்கள்.
அங்கே அற்புதக்காட்சியை காணலாம். ஒலியும், ஒளியுமாக உயிரின் திருநடனம் காணலாம்.
காணலு மாகுங் கலந்துயிர் செய்வன
காணலு மாகுங் கருத்தில் இருந்திடில்
காணலு மாகுங் கலந்து வழிசெயக்
காணலு மாகுங் கருத்துற நில்லே.
- திருமந்திரம் 1352
எண்ணங்கள் ஒன்றுபட நின்றிட உயிரின் ஒளியை காண்பதுடன், உயிரின் செயல்கள் மற்றும் நம்மை வழிநடத்தும் தன்மையையும் காணலாம்.
2021 போனால் போகட்டும் போடா..
இனிய ஆங்கில புத்தாண்டு 2022 நல்வாழ்த்துகள்!