பிறக்கு முன்னே இருந்த
உள்ளம் இன்று வந்ததடா..
இறந்த பின்னே வரும்
அமைதி வந்து விட்டதடா..
இன்று நாம் இறைநிலை தியானம் செய்வோம்.
அமைதியான இடத்தில வசதியாக அமர்ந்து கண்களை மூடி மனதினை ஒரு நிலைப்படுத்துங்கள்.
பூமியில் நீங்கள் பிறந்த தினத்தை நினைவில் கொண்டு வாருங்கள்.
அங்கிருந்து ஒரு வருடம் பின்னோக்கி காலப்பயணம் செல்லுங்கள்.
பிறக்கு முன்னர் எங்கிருந்தோம்?
எங்கிருக்கிறீர்கள் இப்பொழுது?
இறந்த பின்னர் எங்கு செல்வோம்?
இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை காண முயல்வோம் இன்று.
அம்மாவின் வயிற்றில் சேருமுன்னர், நிச்சயம் அந்த ஊரில்தான் நீங்கள் இருந்திருக்க முடியும்.
எப்படி இருந்தீர்கள்?
காற்றில் ஜோதியாக கலந்து, ஒரு காரணப்பொருளாக இருந்திருக்கிறீர்கள் என்று திருமந்திரம் சொல்கிறது.
திருமந்திரம்-388
நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைப்பிறப் பாமே.
நீரினை ஆதாரமாக கொண்டு இயங்கும் சுவாதிஷ்டான சக்கரத்தில் கலவி இன்பம் உண்டாகும் வேளையில் உடலில் இறைக்கனலின் ஜோதி உண்டாகும். அந்த ஜோதியில் ஒலி வடிவான சிவமும், ஒளி வடிவான சக்தியும் புதிய உயிரினை உண்டாக்கி நீரினைத் தாங்கி இயங்கும் இந்த பூமியில் பிறக்க வைப்பார்கள்.
ஒரு சந்தேகம்.
காற்றில் கலந்திருந்த உயிர், தந்தையை கடத்தியாக கொண்டு எவ்வாறு ஒரு காரியப்பொருளாக தாயை சென்றடைந்தது?
இறையருள், எங்கெங்கும் வியாபித்திருப்பதோடல்லாமல், உயிருடன் இருக்கும் மனிதனை எப்பொழுதும் சூழ்ந்திருக்கும். பெற்றோரின் புலனுணர்வுகள் ஐக்கியமாகும் தருணத்தில், அகவிழிப்பு நிலையும், புறவிழிப்பு நிலையும் ஒன்றிய நிலையில் உயிர்களின் பரிமாற்றம் வாயு நிலையில் நடைபெறுகிறது.
இப்படியாக பிறந்த நாம், உடலை ஆதாரமாக கொண்டு இந்த மண்ணில் உயிர் வாழ்கிறோம்.
இறக்கும்போது, இந்த உயிர் எப்படி பிரிகிறது? அது எங்கே செல்கிறது?
திருமந்திரம்-134
புரையற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரையற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.
புரை விடப்படாத பாலில் உள்ள நெய்போல் உடலில் இருப்பது உயிர் என்பதை உணரக்கூடிய ஞானிகளின் உடம்பை நீங்கி செல்லும் உயிர், வாயுவாகி பரம்பொருளின் ஜோதியில் கலந்து விடும்.
ஜோதியில் உதித்த உயிர் ஜோதியில் கலந்து விடுகிறது.
அப்ப.. நாமெல்லாம்?
புளிய மரமோ, முருங்கை மரமோ தலை கீழாக தொங்க வேண்டியதுதான், அடுத்த பிறப்பு வரை.
அப்புறம்..
அப்புறமென்ன.. இதே சங்கிலித்தொடர்தான், நம்முடலிலும் பரமன், உயிராக உள்ளான் என்ற ஞானம் வரும்வரை.
அது சரி, அதென்ன தலைப்பு, அற்றதொன்றழிவற்றது?
இல்லாத ஒன்றை அழிக்க முடியாது.
அழிவற்ற ஒன்று இறைநிலை.
இறைநிலை என்று ஒன்று இல்லை என்று சொல்பவர்களுக்கு, இல்லாத ஒன்றுதான், ஆனால் அழிக்க முடியாத ஒன்று என்று சொல்லலாம்.
+++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++ +++